Tuesday, 20 July 2010

அன்பாக இருக்க பொது குடும்ப விதிமுறைகள் 8

விதி 1:
குடும்பத்தை  நேசி
உட்பிரிவு  i) குடும்பத்தை மட்டும் நேசி
விதி  2:
நட்பு கொள்
உட்பிரிவு i) அங்கீகரிக்கப்பட்ட நட்பு மட்டும்
                ii) 'ஆத்திர அவசரத்துக்கு உதவ' மட்டும்
                iii) சம பால் நட்பு மட்டும்
விதி 3:
திருமண உறவு கொள்
உட்பிரிவு i) சாதீய உறவுக்குள் மட்டும்
விதி  4:
மக்கட் பேறு கொள்
உட்பிரிவு  i) உடமையுறவு மட்டும்
விதி 5:
பெற்றோர்  பேண்
உட்பிரிவு  i) தம் மக்கள் பள்ளி செல்லும் மட்டும்
விதி  6:
பணியிட உறவு கொள்
 உட்பிரிவு i) தாமரை இலை நீராக மட்டும்
                 ii) சொறிந்தால் சொறியப்படும் மட்டும்
விதி 7:
 சமூக உறவு கொள்
 உட்பிரிவு i) செல்வர் உறவு மட்டும்
விதி 8:
 யாதும் ஊரே யாவரும் கேளிர்
 உட்பிரிவு i) உலக தத்துவம் மட்டும்.
!!!!!!!!

Saturday, 17 July 2010

மொழி


மொழி
தன் இருப்பைக்
கலைத்துக் கொள்வதொரு
மனப் பிறழ்வில்-
ஒரு  துயரம்
ஒரு  மகிழ்வு-
ஒரு தாங்கவொணா
கணம்
கனம் கொண்ட
மொழியின்  இருப்பு
விஸ்வரூபம் பெறுகிறது
கானின்
வான் மறைத்த கிளைகளோடும்
பருத்த தண்டுகளோடும்
அது
தாவரச் செறிவின்
பசிய ஒளிர்வில்
மூடுண்டு விரிகிறது.
சிள்வண்டு சிறகசைப்பும்
நிசப்தம்  கொத்தும்
பறவை சப்தங்களும்
மன  வெளியை
நிறைத்துப் பரவ
அடர்ந்திருக்கும் சருகுகளில்
புதைந்து நடக்க
மோகம் கொள்கின்றன
கால்கள்...
பின்னும்
மொழியொரு
தீராக் கானகம்!

Tuesday, 13 July 2010

அந்தி மந்தாரைபட்டுப் பூச்சிகளும் டேபிள் ரோஜாக்களும்
சூழ்ந்திருந்த ஒரு மன வனத்தில்
சிறுமியாக அலைந்திருந்தேன்
அணில்,காக்கா பிள்ளைப் பேச்சும்
மணத் தக்காளி, நெய்த்தக்காளிப் பழ வாசனையும்
தண்டவாளத் தொலைவின் புதர்ச் செடிகள் ஒளித்திருந்த
பொன் வண்டும் மின்மினிப் பூச்சியும்
தீப்பெட்டியில் சேகரித்த மினுங்கு நாட்கள்...
ஓயாதழைக்கும் அம்மாவை உதாசீனப்படுத்தி
மழை அமைத்த சிறு குளங்களில்
பாதம் அளைந்து கொண்டிருந்த போதே
வந்துவிட்டிருந்தது கன்னிமை.
கூந்தலைப் பற்றி தூக்கி
கம்பிகளற்ற வாழ்வு சிறையில்
குழந்தைமையின் சுதந்திர சிறகுகள் உதிர
கூட்டுப் புழுவாக்கும் விசித்திர உருமாற்றம்
பெண் வாழ்வில்.
எப்போதாவது எதிர்ப்படும் மழையில் கூட
தோன்றி மறையும் குமிழ்களின்
நிலையாமை காணும் மனம்.
வயதேற ஏற வாழ்தலின் வழியில்
இரசிப்பின் விழி மெல்லக் கண்களை
மூடிக் கொள்கிறது.
தூரத்தில் சிறுமிகள்
போகன்வில்லாப் பூக்களின்
வெண்ணிற சிறு மலர்களை
மூக்குத்தியாக்கி மகிழும் காட்சி...
கண்களை அங்கே நட்டு
மீட்டெடுக்க முடியாப் பருவத்தின் உயிர்ப்பு
நெஞ்சை நிறைக்க மெல்ல முணுமுணுக்கிறேன்
அந்தி மந்தாரை ஐந்து மணிக்குப்
பூக்கும் அதிசயம் காண
குத்துகாலிட்டு அமர்ந்திருக்கும்
யோகியாக
நானும் ஒரு நாள் இருந்தேன் அங்கே.

சைக்கிள்

ஒரு பெண்ணாக சைக்கிள் எனக்கு தந்த நம்பிக்கையை வெவ்வேறு தளங்களில் நட்டுச் செல்லும் ஒரு எளிய முயற்சி இந்த சைக்கிள் எனும் எழுதுதளம். நன்றி