Tuesday, 24 August 2010

இலை மொழி

முதிர்வில்
இலை
தன் அடையாளத்தை
அகற்றிக் கொள்கிறது 
ஆங்காங்கு
தெரியும்
நரம்புக் கோடுகள்
கண்களை
மூடிக் கொண்டாற்
போலொரு தோற்றம்
வண்ணத்து பூச்சியும
அண்டா விலக்கம்
பூமியின் பரப்பை
நோக்கி
நாளும் குவிந்திடும்
உயிர் இயக்கம்...
போகிற போக்கில்
இலைகளைக்
கிள்ளிச் செல்லும்
மனிதக் கரங்களூடே
நழுவிச் செல்கின்றன
மரணம் குறித்த
இயற்கையின்
இலை வார்த்தைகள்...

Saturday, 21 August 2010

வீடு பேறு


நத்தை ஒன்று
போகிறது
மெல்லுடலில்
பாரிய வீட்டை
சுமந்தபடி.
போகிறதா?
ஆம்.
உன்னை போல்
என்னை போல்
நம்மை போல்.
மெல்ல அது
நகர்ந்து எஞ்சிய
நீர்த்தடங்களில்
வீடு குறித்த
ரகசிய     
கேள்விகளின்  ரசம்                                           
மின்னிக்கொண்டு
இருக்கிறது.

Wednesday, 11 August 2010

மெய்ப்பொருள்


ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி  புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின்  அழகை
கண்களில் நிறைத்தபடி  செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப்  பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள் 
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய 
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப                
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை 
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால் 
வாழ்கையைப் பற்றிச் செல்ல 
பிறிதொரு தேவை  இல்லை.

Sunday, 8 August 2010

பின்ஒரு மழைநாளில்  
பூக்கள் மிதக்கும்
தார்ச்சாலை.
வேகமற்ற பேருந்தின் 
மழைக் கம்பிகள்
ஊடே
வண்ணப் பூக்களும்
பசிய இலைகளும்...
சங்கை ஊதியபடி 
சோர்வாய் ஊர்வலம்  
எங்கும்
மழை சத்தம் தவிர
மௌனம் மட்டும்.

Saturday, 7 August 2010

வாழ்க்கை

 

பாதையோரம்                                                  
கண்ணில் பட்டது
துடிதுடிக்கும் உடலோடு
வண்ணத்துப் பூச்சியொன்று.                                                

கனத்த மனதுடன்
கையில் ஏந்தியபடி
உட்கார்ந்திருந்தேன்                          
பசும்புற்கள் சூழ...

சாவின் வர்ணம்
சிறகுகளிலிருந்து
கைக்கு மாறியிருந்தது
சில நொடிகளில்.

Monday, 2 August 2010

அம்மா

 
அம்மா
என்றால்                       
என்ன
என்றேன்                                                                
வகுப்பறையில்.
ஒரு சிறிய மௌனத்துக்குப்பின்                               
ஒவ்வொரு குரலும்
ஒரு மெழுகுவத்தியைச்
சுட்டியது.
இப்போது வகுப்பறையில்
50 மெழுகுவத்திகள்.
50 பெண்களை
எரித்த நெருப்பில்
தாய்மை சுடர்விட்டது.
எனினும் ஏனோ 
கருகிய சுயங்களின்
சாம்பல் வண்ணத்தில் 
வகுப்பறை முழுதும்
இருளாய்ப்  போனது.

Sunday, 1 August 2010

காத்திருப்பின் கடைசி தினம்

             
காத்திருப்பின்
கடைசி தினம்  -
உதிரக் காத்திருக்கும் 
முதிர்பச்சை இலை
ஏக்கத்தின் 
சாம்பல் விழி 
பேரோசையோடு 
பெய்யும் மழையில்
நனைந்தபடி
நின்றிருக்கும்
உயிர்  நடுக்கம்.
உலகின் 
அத்தனை விழிகளும்
ஒரு விழியாகும்
உத்வேக தவம்.
ஏனோ
யாரும் 
யாரிடமும் 
அவ்வளவு எளிதாகச்
சொல்லிவிட முடியாத 
வார்த்தைகளை
பற்றியபடி சாம்புகிறது
இந்த
காத்திருப்பின்
கடைசி தினம்.
உனக்கும் தெரிந்திருக்கும்
ஒரு கல்லில் 
பலநூறு சிற்றலைகளாய்
பூக்கிறது குளம்
சருகொன்றில்
ஒயில் அசைவுகளை 
உதிர்க்கிறது காற்று
சிறு மேக நகர்வில்
நிலவைப் பெறுகிறது 
மொத்த பூமியும்.