Tuesday, 28 September 2010

d/bகாற்றில்
தத்தி பறக்கும்
வெள்ளை காகிதம்
சேர்வது  எவ்விடம்...
வானில் இருந்து
யார் வரையும்
கோடுகள்
இம்மழை...
கோலிப் பளிங்கின்
கண்ணாடி உலகுள்
வடிவங்கள் எப்படி...
d - ஐ b - போலவும்
b - ஐ d - போலவும்
எழுதினால் என்ன...
வேகமாக ஓடாமல்
எதற்காக சாலைகளில்
மெதுவான இந்த நடை...
கடலின் அலைகள்
எதையோ சொல்ல வந்து
ஏதும் சொல்லாததேன்...
வண்ணங்களால்
வசீகரிக்கப்பட்டு
பந்தை சுழற்றும்
சிறுமி
வண்ணங்களை
எண்ண எண்ண
வளர்கின்றன நிறங்கள்.

Monday, 27 September 2010

மழை

மழை எழுப்பும்
நினைவுகளின் வாசனையில்
கலந்து மறைந்திருப்பது
நீலமும் மஞ்சளும்
கொட்டிப் பூத்திருக்க
பரவச பசுமை
அலையென எழும்பும்
நெருஞ்சியின் அதியழகு.
எலுமிச்சை இலைகளும்
வெண்சிமிழ்பூக்களும்
மணம் பரப்பும்
சிலீர் அழகு.
நீர் மினுங்கும்
கிளை உலுக்கி
தலை நனைக்கும்
சந்தோஷ அழகு.
பள்ளியில் சிறுவயதில்
தேங்கிய மழைநீரில்
மஞ்சள் குருவியொன்று 
உடல் நனைத்து
இறகு சிலிர்த்த
நினைவழகு.
பிரிய நட்போடு
கொட்டும் மழையில்
ஈரம் சொட்ட நடந்த
நாட்கள் அழகு.
ஒரு துளி இடமற்று
தெரு முழுக்க
நீர் தெளித்து
சிறுபூக்கள் உதிர்க்கும்
அந்தி மழையழகு.
எப்படி எனத் தெரியாமல்
அத்தனை பாரங்களையும்
அள்ளிக்கொண்டு போகும்
அதிசய மழையழகு.
சலசலக்கும் சிற்றோடைகள்
இசை அமைக்கும்
ஜலதரங்க அழகு.
தீரும் வாழ்கையின்
தீரா அழகு
மழை எழுப்பும்
மாய உலகு...

Thursday, 23 September 2010

வெள்ளத்தனைய...


நம்முடைய பிரியங்களை
கவனமாகப் பத்திரப்படுத்துகிறோம்
அபகரிக்கிற  கரங்கள் குறித்த
முன் அனுமானங்களுடன்.
நம்முடைய வார்த்தைகளை
அள்ளி வீசுகிறோம்
நம்மை பற்றிய
முற்றுமுடிவான அபிப்ராயங்களுடன்.
நமது அகம்
பரிபூரணம் ஆக  இருப்பதாக
சொல்லிக் கொள்கிறோம்
நமக்கு
அடுத்தவர்கள் குறித்து
நம்மைவிட நன்றாகத் தெரிகிறது.
நமக்கு நம் குறித்த
ஐயமும் இல்லை.
எவ்வளவு  எளிமை
இந்த வாழ்க்கை
எவ்வளவு கணக்கு
நம் மனங்களில்
எவ்வளவு சாதாரணம்
நாம்.

Wednesday, 22 September 2010

புத்தகம்-2: ரத்த உறவு

      யூமா வாசுகியின் ரத்த உறவு  புத்தகத்தைப் பிரித்தால் செவ்வக உள்ளட்டையில்  ஒரு வாடிய சூரிய காந்தி கறுப்புப் பின்புலத்தில் இருக்கும்.. படித்து முடித்து கடைசிப் பக்கத்தைத் திருப்பினால் முழு உள்ளட்டையில், உள்ளங்கையை விடப் பெரிதாக கண்களுக்கு நெருங்கிய கோணத்தில், மஞ்சளாக  மலர்ச்சியாக சூரிய காந்தி பூத்திருக்கும். கதையும் அப்படித்தான். புதினத்தை வாசிக்கும் யாரின் மனமும் அப்படித்தான்  -  ஆரம்பத்தில் வாடியும் பின் மகிழ்ச்சியின் வெளியில் விகாசிக்கவும் செய்யும்.
     குடும்ப உறவுகளின் குரூரத்தையும், அதற்கு சற்றும் குறையாத மனித நேசத்தையும் பேசுபொருளாக்குகிறது ரத்த உறவு.  மங்களம்  பாட்டிக்கு கிட்டு, தினகரன், தனபால்  என்ற மூன்று மகன்கள். தினகரன் - ரமணிக்கு நான்கு பிள்ளைகள் - வாசுகி, ராமதுரை, மாதவன், மாரி. குடியால் தன்னிலை இழக்கும் தினகரன் தன் அத்தனை தோல்விகளுக்கும் வடிகாலாக மனைவியையும், பிள்ளைகளையும்  வன்முறைக்கு உட்படுத்துகிறார். பாட்டி, தினகரன், தனபால், அவரது மனைவி நாகு ஆகியோர் கொடூரத்தை வடிவப்படுத்த ரமணியும், வாசுகியும் கருணையையும், நேசத்தையும் பேசும் வார்ப்புகள் ஆகிறார்கள். ரத்தம் வன்முறையையும், உறவு அந்த வன்முறையின் ஊடாக மலரும் வாழ்க்கையையும் சுட்டும் குறிப்பான்கள்  ஆகின்றன. இதன் ஊடாக பெரியவர்களின் உலகில் உள்ள முரண்கள், முடிச்சுகள், மிருக வெளிப்பாடுகள் இவற்றை  எதிர்கொள்ளும்  குழந்தைகளின்  அக  உலகம் , அதன் சோகம், பயம், பாதுகாப்பின்மை, ஏக்கம், தப்பித்தோடுதல், அதோடு கிடைக்கும் மெல்லிய பற்றுக்கோடுகளைப் பிடித்தபடி செல்லும் அவர்களின் வாழ்வியல் நம்பிக்கை என விரிகிறது கதையுலகு.
      கட்டில், உலக்கை, மிதிவண்டி, மான்கொம்பு - என நீளும்  தினகரனின் வன்முறை, அவரது தாய் மங்களத்தில் இருந்து துவக்கம் பெறுகின்றன. அவளது கணவரை ரமணியின் மூத்த அண்ணன் சந்தர்ப்பவசத்தால் தூணில் கட்டி வைத்ததின் காயம் அவளுள் கனன்று கொண்டே இருக்கிறது.  அதனால், தினகரனை, மனைவி, பிள்ளைகளுக்கு எதிராகத் திருப்பி விட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளை 'சர்ப்பம்' ஆக உருவகப்படுத்துகிறார் கதைசொல்லி. அந்த சர்ப்பத்திற்கு நிறைய வாய்கள். 'எல்லா வாய்க்கும் தாகம்.' சிறுவன் மாரியின் மன உலக வார்த்தைகளில் ''அம்மாவின் ரத்தம் நிறைநாழியில் நிரம்புகிறது. ரத்தத்தில் திளைத்த பாம்பு குபீரென்று எகிறுகிறது. வீடு கொள்ளாமல்  அமர்கிறது சுருள் சுருளாக''.
     தினகரன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய வன்முறையை பாட்டி நுட்பமாக வெளிப்படுத்துகிறாள்: ''இப்புடியா வளந்திய நீங்களுவல்லாம், ஒனக்குந்தான் ஒன்றரை அகப்பை கொழுப்பு தண்டோரா போட்டிருச்சு! பத்தாப்பு பரிட்சையில தோத்துபுட்டு அழுது புளுதுகிட்டு வந்து நின்ன. பிஞ்சு விரலாச்சேனு கொஞ்சம்னாலும் யோசனை பண்ணாரா ஒங்கப்பா? அடுப்பு மோடயில கைய வைக்கச் சொல்லி ஊதாங்குழாயால ஓ வெரல முறிக்கலையா? கொடக்கம்பால அடிச்சி அடிச்சி விரட்டி தொரத்தலையா?'' அன்று வாங்கிய அடியின் ஒடுக்கப்பட்ட நினைவு இன்று மேலெழுப்பப்படுகிறது காரணத்தோடு. அதன் வீச்சு, மாமரத்தில் இருந்து உதிர்ந்த பழத்தை 'திருடிய' குற்றத்திற்காக மகனை சிவப்பெறும்புகள்  கடிக்க மரத்தில் கட்டி வைப்பது முதல் மனைவியின் முதுகில் கட்டிலை எறிவது வரை தொடர்கிறது. பாட்டியின் திட்டம் பலிக்கிறது: ''கொல்லைப் புறத்திலே கறுப்புப் புகை சூழ உட்கார்ந்திருந்த பாட்டியின் முகத்தில்  மந்தகாசப் புன்னகை. மனதில் ஒதுக்கி அசை போட்டு வந்த வெறி தாத்தா இறந்து பல வருடங்களான பின் இன்றுதான் சற்று தணிந்தது."
     உளவியல்  காரணங்களோடு பாத்திரங்கள் படைக்கப் பட்டிருப்பதால்  நூலில் ஒற்றை பரிமாணப் பாத்திரங்கள் இல்லை. தனபாலின் மனைவி நாகு சித்தி, தினகரனைத் தன் கொடூரத்தின் கருவியாக்குகிறாள். தினகரன் குடிப்பதற்காக அவளிடம் பணத்தை வேண்டி பெற வேண்டிய நிலையில் உள்ளார். அவர்களிடையே திருமணம் மீறிய உறவு நிலையும்  உள்ளது. இந்த அவளது வன்முறையின் துவக்கப்புள்ளி, அவள் கணவனின் பிசகிய நடத்தையில் துலக்கம் பெறுகிறது. பாட்டியின் கணவரும் அவளது தங்கையிடம் தொடர்பு வைத்துள்ளார். இந்த காயங்கள் இருவரையும் ஆத்திரத்தோடு பழி வாங்கத் துடிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. பொருளாதார வலுவோ, சமுதாயப் பழியை ஏற்கும்  துணிவோ இல்லாத நிலையில் பெண்களின் துயரம், கணவன் மீதான நியாயமான கோபத்தை வெளிக்காட்ட இயலாத அவலம், மற்றவர்கள் மேல், குறிப்பாக யாரால் பதிலுக்குத் தாக்க முடியாதோ அவர்கள் மேல் ஆத்திரமாக மடைமாற்றம் பெறுகிறது. மாதவனின் கையை ஒடித்து அடுப்பில் வைத்தால் என்ன என்று கேட்டுவிட்டு இயல்பாகத் தன் குழந்தையை 'யாரடிச்சா சொல்லியழு ... ஏஞ் சந்தனமே' எனக் கொஞ்ச நாகுவால் முடிகிறது.
     இந்த புத்தகத்தின் கவிதைகள் குழந்தைகள்தான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய இயல்பில் மலர்கிறார்கள். அக்காவான சிறுபெண் வாசுகி,  மாதவனை சித்திரவதைக்கு உள்ளாகும் அப்பாவை தடுக்க இயலாமல், என்ன செய்வதென்று தெரியாமல்  தொட்டியில் நீர் வழிய, வழிய மீண்டும் மீண்டும் கிணற்றில் இருந்து நீர் எடுத்து ஊற்றுகிறாள். இங்கு தண்ணீர் அவள் கண்ணீரின் குறியீடாகிறது, அதன் ஈரம் தம்பியின் மீதான அவள் பரிவின் உள்ளீடாகிறது. குட்டித் தம்பியும் அண்ணனைத் தேற்ற முயல்கிறான் -
          கட்டுக்களிலிருந்து  விடுபட்டு அண்ணன் வந்தால் அவனிடமிருந்த எம்ஜியார், சிவாஜி படம் அத்தனையும் அண்ணனுக்குக் கொடுக்கச் சித்தமாயிருந்தான்... அவனுக்குக் கிடைக்கிற காசுகளை எல்லாம் அண்ணனிடம் தந்து விடுவான். அண்ணன் எவ்வளவுதான் குட்டினாலும் அவனுக்கு வலிக்கவே வலிக்காது... தம்பிமெதுவாக அண்ணனின் காலை வருடி அழைத்தான் அண்ணே...
இது அண்ணனின் வலிக்குத் தம்பியின் பிள்ளை  மனப் பரிகாரம்.
      வாசுகியின்  மனமோ  அன்பால் ஆனது. அவள் அம்மா விரட்டப்படுகிறாள். பிள்ளைகள் அப்பாவால் அடித்து நொறுக்கப் படுகிறார்கள்.அத்தனை சித்திரவதைக்குப் பின்னும் அவளுக்கு அப்பாவின் மேல் நம்பிக்கை இருக்கிறது.அதனால் தந்தையிடம் பக்குவமாகப் பேச முயல்கிறாள்: 
         நா சொல்றேன்னு கோச்சுக்காதிங்கப்பா... ராத்திரி நீங்க தம்பிங்களப் போட்டு அப்பிடி அடிச்சிருக்கக் கூடாதுப்பா... ரொம்பச் சின்ன புள்ளிங்கப்பா ரெண்டும். செத்துகித்துப்போயிருந்துச்சுன்னா என்னப்பா செய்யுறது. எனக்குக் கூட இடுப்பில பெருசா அடிபட்டிருக்கும் போலருக்குப்பா. வீங்கியிருக்கு, நடந்தா உயிர் போறாப்ல வலிக்குதுப்பா... நீங்க எதையுமே கண்டுக்க மாட்டேங்கறீங்கப்பா. எங்களப்பத்தி நெனச்சிகூடப் பாக்கமாட்டேங்கறீங்க. தம்பிங்க கிழிஞ்ச சட்டைப் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் போகுதுங்கப்பா... எனக்கு முடியலப்பா, பயமா இருக்குப்பா, காப்பாத்துங்கப்பா, இவ்வளவும் பேசறேன்னு தப்பா நெனச்சுக்காதிங்கப்பா  , அம்மாட்ட  கொண்டுபோய்  விட்டுடுங்கப்பா, நாங்க  நல்லபடியா  இருப்பம்பா, மறுபடியும்  குடிச்சுட்டு  வந்து  அடிக்காதிங்கப்பா, எங்களுக்கு  வலி  தாங்கமுடில.   
பின்னும் தினகரன் கொடூரமாக அடிக்கிறார்.  அவள் கண்ணாடித் துண்டுகளை அரைத்து குடிக்கிறாள். அம்மாவின் முயற்சியால் உயிர் பிழைக்கிறாள். அவளது ஆன்ம பலம் அவளை துடிப்போடு இயக்குகிறது. தந்தை காசு கொடுக்காத சூழலில் அவள் அப்பளம் விற்றாள், சாணி தட்டி விற்றாள், பூத் தொடுத்தாள். அப்பா இறந்த பின் அழவும் செய்தாள்.  
      இன்னொரு பிள்ளையான மாதவனின் மன உலகம் விளையாட்டுக்களில் தன் துயரை  மறக்கிறது. பின் ஊரை விட்டு ஓடுவதன் மூலம் தப்பிக்க முயல்கிறது. கதையில் ஒரு முறை நாகு சித்தி அவனை புளித்து நாறும் பழைய சாதத்தை உண்ணுமாறு அதட்டுகிறாள். அவளை மீற முடியாமல் காடி நுரைக்கும் அந்த சோற்றை அவன் இனிப்பு மிட்டாயுடன் உண்ணத் தலைபடுகிறான்.ஒருவகையில் இது அவன் வாழ்வின் குறியீடாகிறது. உறவுகளின் கொடுமையால் வடியும் ரத்தத்தின் புளிப்பினை, விளையாட்டு இனிப்பில் கரைத்து சமன் காண முயல்கிறது அவன் வாழ்வியல் திறன்.
      இறுதியாகத் தம்பி என்றழைக்கப்படும் மாரி கதையின் எல்லா பாத்திரங்களையும் விட புத்துயிர்ப்போடு சித்தரிக்கப் பட்டுள்ளான். அவனது பிரத்யேக குழந்தைப் பருவ உலகமே புதினம் காட்டும் மனித கொடூரத்தின் பாலைக்கு மாற்றாக உள்ளது. பொன் வண்டுகளும், சிகரட் அட்டைகளும், அக்காவுக்காக சேர்த்து வைக்கும் மகிழம் பூக்களும், கொக்கு நகத்தில் போடும் அடையாளத்திற்காய் ஏக்கமும் கொண்டது அவனது எளிய மனம். வீட்டின் வன்முறை அவனது பிஞ்சு மனதை பயமுறுத்துகையில் அவன் தும்பை காட்டிலோ, வீட்டின் பெரிய அலமாரிக்கும், சுவருக்கும் இடையிலோ தஞ்சம் புகுகிறான். அவனது ஆறுதல் அக்காவின் புன்னகை மட்டுமே.
     அப்பா குறித்த தம்பியின்  பயங்கள் நனவிலி மனதிற்கே உரிய நிழல்-ஒளி அழகோடு, வசீகரமான கவிமொழியில், ஓவியரும், கவிஞருமான யூமா.வாசுகியால் உருவகிக்கப் பட்டுள்ளது. அப்பா அவன் நினைவுகளில் அவனை விழுங்கும் கரிய எலியாகவோ, குரலாகவோ, பூச்சியாகவோ பயம் கொள்ள வைக்கிறார். கனவு, நனவில் இன்னும் பயங்கரமாக உள்ளது.தொலைத்த 25 காசைத் திருப்பித் தராவிட்டால் தொலைத்து விடப் போவதாய் மிரட்டும் அப்பாவுக்குப் பயந்து காணாமல் போகிறான். அக்காதான் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். கதவை முன்னெச்சரிக்கையாய் தாளிடுகிறாள். பின்னும் அவன் அப்பா, அவனைக் கொளுத்தப் போவதாய் அலறுகிறார். நடுங்கும் அவன் பிள்ளை உடல் அக்காவிடம் ஐக்கியம் ஆகிறது.
      தம்பிக்கு  இயற்கை மீதான ஈடுபாடு உள்ளது. பிற உயிர்களை நேசிக்கும் அன்பு மனமும் உள்ளது. அவனைப் பார்த்துப் பயந்து பறக்கும் குருவிகள் அவனை வருந்தி அழச் செய்கின்றன. அவை உண்பதற்காக, உடல் அசையாமல், கண் மூடி அமர்கிறான் கையில் சோற்றுத் தட்டை ஏந்தியபடி. அப்பா அடித்ததால் ஏற்பட்ட புண்ணைக் கூட மேல் தோலைப் பிய்த்து பிற சிறுவர்களுக்கு ''என் ரத்தம் காஞ்சிடிச்சு...காக்கா ரத்தம் காயல'' என வேடிக்கை காட்ட முயலும் அதிசய சிறுவன் அவன்.
     தினகரன் குடியால் இறந்து விடுகிறார். எல்லோரும் அழுகிறார்கள். அம்மாவும், அக்காவும், தம்பியை அப்பாவுக்காக அழச் சொல்கிறார்கள். அப்போது அவனது வெளிப்பாடு,  இந்த புதினத்தின் உச்ச வெளிப்பாடு. அவர்கள் சொன்னதை கேட்ட அவன்:
          கொல்லைப்புறத்துக்கு ஓடினான். நீட்டி முழக்கி வகை வகையான தன்மையில் பீப்பி ஊதி கிணற்றையும், மரங்களையும் சுற்றி வந்தான். ஒப்பாரி இரைச்சலுக்கு இணையாக வாசல்படியில் அமர்ந்து ஊதினான். உற்சாகத்துடன் மூச்சை இழுத்துப் பிடித்து ஊதினான்.
மற்றவர்கள் போல அவன் வளர்ந்தவன் அல்ல. இடையறாது கொடுமைப்படுத்திய அப்பாவின் மரணம் அவனுக்கு ஒரு விடுதலையாகத்தான் உள்ளது. அன்பில் இருந்துதான் அன்பு பிறக்கும். வன்முறையில் இருந்து மீண்ட சிறுவனின் இசை  இதையே      குறியீடாகச் சொல்கிறது.
   ரத்த உறவு    புதினம் கலைப்படுத்தும் மனித உறவுகள் புதிர் நிறைந்த மனித இயல்பின் குரூரத்தையும், குழந்தைகளின் பெருங்கருணையையும் பேசுகின்றன. குழந்தைகளின் விளையாட்டும், இயற்கை மீதான ஈடுபாடும், அன்புள்ளமும் பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. அவர்கள் போல பெரியவர்களாலும் தங்களை தங்கள் வலிகளில் இருந்து இயல்பாக மீட்டெடுக்க முடியும்.  இது ஒரு தவிர்க்க இயலாத மறைபிரதியாக கதையில் ஊடு பாய்கிறது. அதோடு குடும்பம் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, சமயங்களில் ஆண்களுக்கு இழைக்கும் வன்முறை மிக அழுத்தமாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது. குடி ஒரு கலாச்சார அங்கமாக கொண்டாடாடப் படுகிற அதே வேளையில், வரம்பற்ற குடியை வன்முறைக்கான விஷயமாக பார்க்கத் தவறும் இந்த பின்நவீன இலக்கிய களத்தில் யூமா வாசுகியின் குரல் தனித்தும், யதார்த்தத்தோடும், சிறப்பான கவிமொழியோடும் ரத்த உறவில் ஒலிக்கிறது.

.                  

Monday, 20 September 2010

உருப்பளிங்கு

எழுத்துக்கள் கசியும்
நிலப்பரப்பெங்கும்
உணர்வுக்கோடுகள்.
மெல்லக்
கிளைபரப்பும்
ஞாபகத்தின்
அல்லி ரேகைகள்
அறிவுமொழி பேசும்
அனுபவங்களூடே.
நேற்று மினுங்கும் 
இன்றின் தடாகத்தில்
இயைந்து அசைந்து
தானே அறியாமல்
தன்னை  மீட்கும்
நனவிலித் தூண்டிலின்
எழுத்து மீன்கள்.
எண்ணங்கள்
வண்ணங்களாய் சிதறும் 
புத்துரு விளையாட்டில்
கற்பனை என்பது 
குறுகிய குளம்
அல்ல
முடிவுசெய்யப்பட்ட
அளவில்
நீர் நிரம்பிக்
கொள்ள.

Sunday, 19 September 2010

புத்தகம்-1


புத்தகங்கள் குறித்து எழுத நீண்ட நாட்களாக ஆசை. இன்று ஆரம்பித்தே தீர்வதென்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் எதை எழுத? சுழன்றோடும் நினைவு வெள்ள பெருக்கில் மிதக்கும் செடிகளையா, வானின் நீலம் கரைந்தோடுவதையா, குமிழ்களையா, மனிதர்களையா, பறவைகளையா என்று தெரியவில்லை. தொடர்போடு எழுத முடியும் என்றும் தோன்றவில்லை. எல்லாக் குறைகளோடும், ஆசை எனும் ஒரே பற்றுத் துரும்போடும் கொஞ்சம் கொஞ்சமாக  எழுத விழைகிறேன்.

      எங்கள் கோவில்பட்டி வீட்டின் முன்னறையில் ஒரு நூலகம் இருந்தது. அப்பாவின் நூலகம். அம்மாவின், எங்களின் நூலகம் அல்ல. புத்தகங்களை bind பண்ணுவதில் இருந்து அவற்றை பீரோவில் அடுக்கி பேரேட்டில் எழுதுவது முதல் எல்லா வேலையையும், அப்பாவின் கட்டளையில் நாங்களும்(அண்ணன்கள்,அக்கா), அவ்வப்போது மாட்டிக்கொண்ட அத்தனை பேரும் செய்வோம். மற்றவர்களாவது வெளியில் போவது போல் காணாமல் போய்விடுவார்கள். எனக்கும், அக்காவுக்கும் வேறு வழியில்லை. பசியோடு எப்படா விடுதலை என மணியை பார்த்தபடி இருப்போம். சமயத்தில் அப்பாவுக்குத் தெரியாமல் உள்ளே ஓடிபோய் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளைகளாய் அப்பாவோடு திணறிக்கொண்டே சாப்பிட்டதும் உண்டு. இப்படித்தான் புத்தகங்கள் பசியோடும், பசையோடும், கலிக்கோ என்ற முரட்டு ஒட்டும் துணியோடும் அறிமுகம் ஆகின.

      சிறு வயதில் விளையாட யாரும் இல்லாதபோது முன்னறையில் பார்த்தால் குறிப்பாக இரவுகளில் கொஞ்சம் பெரியவர்கள் - பள்ளி, கல்லூரி வயதில் இருப்பவர்கள் ஆர்வமாக அங்கேயே கீழே உட்கார்ந்து படிப்பார்கள். என்னதான் படிக்கிறார்கள் என ஒரே ஆர்வமாக இருக்கும். அப்படி பார்க்கும்போதுதான் ஒவ்வொரு காமிக் புத்தகத்தின் பின்னாலும் உள்ள விச்சு, கிச்சு என்ற நகைச்சுவை இரட்டையர்கள் என் வாசிப்பை ஆரம்பித்து வைத்தார்கள்.. அவர்களோடு ஒரு குட்டி நாயும் இருக்கும். எந்த காட்சியாக இருந்தாலும் சரி. அந்த நாயின் வாலாவது பூ போல ஓரத்தில் வரையப் பட்டிருக்கும். வேடிக்கையாக இருக்கும். எங்கெல்லாம் நாய் வருகிறது, அது இவர்களின் வேடிக்கை பற்றி என்ன முகபாவம் காட்டுகிறது என பார்ப்பேன். ஒன்றாம் வகுப்பில் படித்ததால் எழுத்துக் கூட்டி வாசிக்க முடிந்தது. அந்த சித்திரக் கதை ஒரு பக்கம்தான் என்பதால் பிரச்சனை இல்லை.

      விச்சு, கிச்சு படிக்கும்போதே கபீஷ் குரங்கு வாலை நீட்டி விட்டது. அது விரும்பும் போதெல்லாம் வாலை நீட்டவும், மடக்கவும் வல்லது. சீக்கிரத்தில்  அதன் தோழர்களான பிந்து என்ற மான், கீச்சு என்ற முயல், பபூச்சா என்ற கரடி, ரங்கையா என்ற வேட்டைக்கார வில்லன் எல்லோரும் என் உலகிற்கு வந்து விட்டார்கள். இன்றும் என் மனதளவில் அவர்கள் வயதேறாமல், குணம் மாறாமல் அப்படியேதான் இருக்கிறார்கள். கீட்ஸ்-இன் 'ode on a Grecian Urn' கவிதையில் ஒரு அஸ்திகலசத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பற்றி                                        ''When old age shall this generation waste,
Thou shalt remain, in midst of other woe
Than ours, a friend to man, to whom thou say'st,
"Beauty is truth, truth beauty, — that is all
Ye know on earth, and all ye need to know." என்று வரும்.  அதுதான் நினைவுக்கு வருகிறது.

      இது ஒரு புறம் இருக்க எனக்கு எப்போதும் மன அமைதியைத் தரக் கூடிய ஒரு காட்சி Johanna Spyri இன் 'ஹெய்டி' யில் உள்ள இந்த  காட்சி - கடும்குளிரான மலையில்  உள்ள ஒரு குடிலின் மேலுள்ள சிறிய மேல்தளத்தில், முரடர் என மற்றவர்களால் அழைக்கப்படும் தாத்தாவால், வைக்கோலால் மெத்தென அமைக்கப்பட்ட படுக்கையில் படுத்தபடி, மிதக்கும் மேகங்களையும், முழுநிலவையும் பெற்றோர்கள் அற்ற அந்த சிறுமி நிம்மதியாகப் பார்த்தபடி இருப்பாள். இந்த புத்தகத்தை முதுகலை படிப்பின் போது  மதுரை காமராசர் பல்கலை நூலகத்தின் வரலாற்றுப் பிரிவில் கண்டெடுத்தேன்! மிக அழகான படங்கள். இப்போது என்னால் அந்த குறிப்பிட்ட பதிப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் பாதிப்பு ஆழமாக என் மனதில் உறைந்து போய் என்னை சமாதானம் செய்வதாய் இருக்கிறது எப்போதும்.

     புத்தகம் படிப்பது சீரியஸ் ஆன, அலுப்பு தருகிற, வேலை போன்ற  ஒன்றாக, பொதுவாகக் கருதப் படுகிறது. ஆனால் அது எவ்வளவு இனிமையான, வண்ணமயமான, நம்பகமான மன உலகை சிறு வயதில் ஏற்படுத்துகிறது என்பது உணரப்படவும், அது போன்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவும் வேண்டும் என்று உறுதியாகத் தோன்றுகிறது.

Friday, 17 September 2010

துலக்கம்


காரின்
சடசடத்த மழைச் சத்தம்
பச்சையின்
சலசலக்கும் பயிரொலி
மஞ்சளின்
சரசரத்த ஒளி வார்த்தை
நீலத்தின்
பரபரக்கும்  சிறகோசை
வெண்மையின்
சப்தமற்ற சப்தம்...
இனி தோன்றுவதை
நீங்கள் எழுத...
..........................
இப்படி மட்டும்
சொல்கிறது கவிதை
நிறங்களுக்கு
சப்தங்கள் போல்
பிரதிக்கு
வடிவங்கள்.
வாசிப்பிற்கே... 
விரிந்த சிறகுகள்.

Monday, 13 September 2010

வாழ்தல் நிமித்தம்


தீர்மானித்துக் கொண்டேன்
கலங்குவதில்லை...யென.
நம்பிக்கை கொள்ளவோ
தாக்குப் பிடிக்கவோ
ஏதுமில்லையென்ற
தெளிவுக்கு வந்தேன்.
சாகும் முறை குறித்த
குழப்பம்
கொஞ்சமும்  இல்லை.
கடலில் மூழ்குவதென்பது
பால  பாடம்.
(ஆடைகளைக்
கவனமாக
ஊக்குகளால்
இணைப்பது குறித்த
கவிதைகளுக்கு நன்றி!).
எதற்குமொருமுறை
இருக்கட்டுமேயென
இறப்புச் செய்தி 
கேட்கும் முகங்களை
மனத் திரையில்
ஓட விட்டேன்.
எதிர்பாரா ஒரு தருணம்
கேட்டதொரு பெருவிம்மல்.
எந்த முகம்
அந்த முகம்
என விழிக்க
நனைந்திருந்தன
கண்கள்.
சுயம் வெட்க...
ஆரம்பித்தது
வாழ்க்கை குறித்த 
என் அத்தனைச்
சிரிப்புச்
சத்தங்களும்...

Sunday, 12 September 2010

மதுரை புத்தகத் திருவிழாவின் இறுதி நாள்

        மதுரை புத்தகத் திருவிழாவின் இறுதி நாள் இன்று. ஜனவரியில் சென்னையில் வெளிவரும் புத்தகங்கள் ஊர்ந்து, ஊர்ந்து மதுரைக்கு வர செப்டம்பர் ஆகிவிடுகிறது என்றாலும் மகிழ்ச்சி மனதெங்கும் புரளும் புத்தகங்களின் வருகையால்.. கூடவே இன்று வேறு சில சந்தோஷங்களும். 'கூடு' பெண்கள் வாசிப்பரங்கத்தில் இருந்து 2 சிறிய புத்தகங்களைக் கொண்டு வந்தோம். ஒன்று 'யாரேனும் இந்த மௌனத்தை தகர்த்திருந்தால்' என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு -- குழந்தைகள்,  பாலியல் வன்முறைக்கு எதிராக வினையாற்றுவது  குறித்தது. இன்னொன்று 'உடல் வழி(லி)ப் பயணம்' --   மாத விடாய் குறித்த அறிவியல் தகவல்களும், அது குறித்த கவிதைகள், இலக்கிய பதிவுகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்களும்  கொண்டது. 
    'உடல்வழி(லி)ப்பயணம்' புத்தகம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆனது. பெண்ணைப் புரிந்துகொள்ள, மதிக்க ஆணுக்கும் (சகோதரனாக, அப்பாவாக, துணையாக, நட்பாக) தளம் அமைக்க வேண்டும் என நினைத்தோம். பெண்ணுக்கு தன் உடல் குறித்த அறிவும், தீட்டு என்ற கற்பிதத்தில் இருந்து வெளிவரும் பக்குவமும் பெற வேண்டும் என்றும் முயற்சி செய்துள்ளோம். சிறிய புத்தகங்கள் என்ற போதிலும் உழைப்பு அதிகமாக தேவைப்பட்டது.  இன்றுதான் புத்தகங்கள் அச்சிலிருந்து வந்தன. சமூக அக்கறை உள்ள சில தளங்களில் அவற்றை கொடுத்தோம். கூடவே  மழையும் சேர்ந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி. இந்த வேளையில் என்னை இந்த வேலையில் ஈடுபடத் தூண்டிய விஷயத்தை பகிர எண்ணுகிறேன். பொதுவாக 'உங்களுக்குத்தான்(பெண்களுக்கு) எல்லாம் கிடைத்து விட்டதே, இன்னும் ஏன் பெண் சுதந்திரம் பேசுகிறீர்கள்?' என்கிறார்கள்! உண்மை என்னவெனில்  ஒரு கல்லூரி வகுப்பொன்றில்  மாணவிகளிடம் எத்தனை பேர் வீட்டில் ஆண், பெண் பாரபட்சத்துடன் உணவு கொடுக்கப்படுகிறது எனக் கேட்டபோது  அத்தனை பேரும் கை தூக்கினார்கள். வேறு வேறு வகுப்புகளில் கேட்டபோதும் அதே பதில்தான். அதிர்ச்சியும், கோபமும், அவமானமும், கோபமும், சோகமுமாக உணர்ந்தேன். கையை உயர்த்திய கணத்தில் அந்த பெண்கள் தன்னை எவ்வாறு உணர்ந்திருப்பார்கள்? இந்த அவலக்  கேள்வியை இப்பதிவை வாசிக்கும் அப்பாக்களிடமும், சகோதரர்களிடமும் முன்வைக்க விரும்புகிறேன். உங்களுக்கான உலகில் பெண்ணின் இடம் என்ன? அவளுக்கான மரியாதை உங்கள் சுயத்துக்கான மரியாதையும் அல்லவா என்றும்...

Thursday, 9 September 2010

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று


நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று
சில்லிட்டு காத்திருக்கிறது...
சப்தமின்றி விரைகின்றன
நிழலடுக்குப் பறவைகள்
கருநீல வானில்
அசையும் சித்திரங்களாய்.
பந்தெனச்  சுழலும்
உணர்வுக் குவியல்களை
உயர  எறிகிறேன்
உயிர் சினக்க.
அவையோ
பறவைகளோடு பயணித்து
அயர்ந்த வேளை
திரும்பி வீழ்கின்றன
பனித் துளிகளாய்.
செய்வதறியாமல்
திகைக்கும் வேளையில்
உள்ளீடற்று
கரையத் துவங்குகின்றன
மனத் துகள்கள்
இருள் உருகும்
இந்நிசப்த பரப்பில்...

Sunday, 5 September 2010

நினைக்கப் படும்

இன்று ஆசிரியர் தினம். சற்று தயக்கத்தோடு சொல்வதானால் முறைசார் ஆசிரியர்களைவிட வாழ்கையின் பரிசாக வந்த ஆசிரியர்களே கற்றலை இனிமையும் நுண்மையும் கொண்ட ஒன்றாக ஆக்கினார்கள். இதில்  யாரென்று தெரியாதவர்கள் முதல் என்னோடு உரிமையாகச் சண்டை போட்டு கடிந்து பேசி  கற்பித்தவரும் அடக்கம். அவர்களை நன்றியோடு நினைத்து கொள்வதும், கற்றுக்கொண்டதை  பின்பற்றுவதுமே அவர்களுக்கான மரியாதை.கூடவே  முறை சார் ஆசிரியர்களை இதுபோல  இயங்க விடாதது எதுவென  எண்ணுகிறேன். நேரம், சுதந்திரமின்மை, ஒரு எஜமானத் தன்மை, பாடங்களை முடிக்க வேண்டிய நேரக் கெடு, சூழலின் மழுங்க வைக்கும் தன்மை, முன்முடிவுகள்... என நிறையத் தோன்றுகின்றன. இதை எல்லாவற்றையும் மீறி பிரகாசித்த, பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும் உண்டு. அவர்களே இவ்வேளையில் உண்மையாக நினைக்கப்படுகிறார்கள். இரா.நடராஜனின் 'ஆயிஷா' போன்றவர்களை அவர்களே புத்துயிர்க்கிறார்கள்.அவர்களுக்கு இவ்வேளையில் நன்றியும், வாழ்த்துக்களும்...
 

Wednesday, 1 September 2010

தாமரை

தானவிழ்ந்து
ததும்பிய பொழுதினில்
தண்ணீரில்
விரியுமதன் பிரதிபிம்பங்கள்...
நிழலின் இருளில்
துணுக்குற்று அலைபாய்ந்து
தன்னைத்  துகள்களாக்கும்
கலை எழுதும்
நீர்ப்பரப்பெங்கும்.
ஒருங்கு கூடும்
உயிர்த்தேடலின்
கதிர்பொழுதில்
தானறிந்து
தெளியுமொரு தருணம் 
விகசித்திருக்கும்
வானும் காணும்...
பின் முகிழ்த்திடும் 
மகிழ்வின் ஒளிப்பளிங்குகள்
இலை எங்கும்
வெளி எங்கும்.