Sunday, 19 September 2010

புத்தகம்-1


புத்தகங்கள் குறித்து எழுத நீண்ட நாட்களாக ஆசை. இன்று ஆரம்பித்தே தீர்வதென்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் எதை எழுத? சுழன்றோடும் நினைவு வெள்ள பெருக்கில் மிதக்கும் செடிகளையா, வானின் நீலம் கரைந்தோடுவதையா, குமிழ்களையா, மனிதர்களையா, பறவைகளையா என்று தெரியவில்லை. தொடர்போடு எழுத முடியும் என்றும் தோன்றவில்லை. எல்லாக் குறைகளோடும், ஆசை எனும் ஒரே பற்றுத் துரும்போடும் கொஞ்சம் கொஞ்சமாக  எழுத விழைகிறேன்.

      எங்கள் கோவில்பட்டி வீட்டின் முன்னறையில் ஒரு நூலகம் இருந்தது. அப்பாவின் நூலகம். அம்மாவின், எங்களின் நூலகம் அல்ல. புத்தகங்களை bind பண்ணுவதில் இருந்து அவற்றை பீரோவில் அடுக்கி பேரேட்டில் எழுதுவது முதல் எல்லா வேலையையும், அப்பாவின் கட்டளையில் நாங்களும்(அண்ணன்கள்,அக்கா), அவ்வப்போது மாட்டிக்கொண்ட அத்தனை பேரும் செய்வோம். மற்றவர்களாவது வெளியில் போவது போல் காணாமல் போய்விடுவார்கள். எனக்கும், அக்காவுக்கும் வேறு வழியில்லை. பசியோடு எப்படா விடுதலை என மணியை பார்த்தபடி இருப்போம். சமயத்தில் அப்பாவுக்குத் தெரியாமல் உள்ளே ஓடிபோய் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளைகளாய் அப்பாவோடு திணறிக்கொண்டே சாப்பிட்டதும் உண்டு. இப்படித்தான் புத்தகங்கள் பசியோடும், பசையோடும், கலிக்கோ என்ற முரட்டு ஒட்டும் துணியோடும் அறிமுகம் ஆகின.

      சிறு வயதில் விளையாட யாரும் இல்லாதபோது முன்னறையில் பார்த்தால் குறிப்பாக இரவுகளில் கொஞ்சம் பெரியவர்கள் - பள்ளி, கல்லூரி வயதில் இருப்பவர்கள் ஆர்வமாக அங்கேயே கீழே உட்கார்ந்து படிப்பார்கள். என்னதான் படிக்கிறார்கள் என ஒரே ஆர்வமாக இருக்கும். அப்படி பார்க்கும்போதுதான் ஒவ்வொரு காமிக் புத்தகத்தின் பின்னாலும் உள்ள விச்சு, கிச்சு என்ற நகைச்சுவை இரட்டையர்கள் என் வாசிப்பை ஆரம்பித்து வைத்தார்கள்.. அவர்களோடு ஒரு குட்டி நாயும் இருக்கும். எந்த காட்சியாக இருந்தாலும் சரி. அந்த நாயின் வாலாவது பூ போல ஓரத்தில் வரையப் பட்டிருக்கும். வேடிக்கையாக இருக்கும். எங்கெல்லாம் நாய் வருகிறது, அது இவர்களின் வேடிக்கை பற்றி என்ன முகபாவம் காட்டுகிறது என பார்ப்பேன். ஒன்றாம் வகுப்பில் படித்ததால் எழுத்துக் கூட்டி வாசிக்க முடிந்தது. அந்த சித்திரக் கதை ஒரு பக்கம்தான் என்பதால் பிரச்சனை இல்லை.

      விச்சு, கிச்சு படிக்கும்போதே கபீஷ் குரங்கு வாலை நீட்டி விட்டது. அது விரும்பும் போதெல்லாம் வாலை நீட்டவும், மடக்கவும் வல்லது. சீக்கிரத்தில்  அதன் தோழர்களான பிந்து என்ற மான், கீச்சு என்ற முயல், பபூச்சா என்ற கரடி, ரங்கையா என்ற வேட்டைக்கார வில்லன் எல்லோரும் என் உலகிற்கு வந்து விட்டார்கள். இன்றும் என் மனதளவில் அவர்கள் வயதேறாமல், குணம் மாறாமல் அப்படியேதான் இருக்கிறார்கள். கீட்ஸ்-இன் 'ode on a Grecian Urn' கவிதையில் ஒரு அஸ்திகலசத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பற்றி                                        ''When old age shall this generation waste,
Thou shalt remain, in midst of other woe
Than ours, a friend to man, to whom thou say'st,
"Beauty is truth, truth beauty, — that is all
Ye know on earth, and all ye need to know." என்று வரும்.  அதுதான் நினைவுக்கு வருகிறது.

      இது ஒரு புறம் இருக்க எனக்கு எப்போதும் மன அமைதியைத் தரக் கூடிய ஒரு காட்சி Johanna Spyri இன் 'ஹெய்டி' யில் உள்ள இந்த  காட்சி - கடும்குளிரான மலையில்  உள்ள ஒரு குடிலின் மேலுள்ள சிறிய மேல்தளத்தில், முரடர் என மற்றவர்களால் அழைக்கப்படும் தாத்தாவால், வைக்கோலால் மெத்தென அமைக்கப்பட்ட படுக்கையில் படுத்தபடி, மிதக்கும் மேகங்களையும், முழுநிலவையும் பெற்றோர்கள் அற்ற அந்த சிறுமி நிம்மதியாகப் பார்த்தபடி இருப்பாள். இந்த புத்தகத்தை முதுகலை படிப்பின் போது  மதுரை காமராசர் பல்கலை நூலகத்தின் வரலாற்றுப் பிரிவில் கண்டெடுத்தேன்! மிக அழகான படங்கள். இப்போது என்னால் அந்த குறிப்பிட்ட பதிப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் பாதிப்பு ஆழமாக என் மனதில் உறைந்து போய் என்னை சமாதானம் செய்வதாய் இருக்கிறது எப்போதும்.

     புத்தகம் படிப்பது சீரியஸ் ஆன, அலுப்பு தருகிற, வேலை போன்ற  ஒன்றாக, பொதுவாகக் கருதப் படுகிறது. ஆனால் அது எவ்வளவு இனிமையான, வண்ணமயமான, நம்பகமான மன உலகை சிறு வயதில் ஏற்படுத்துகிறது என்பது உணரப்படவும், அது போன்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவும் வேண்டும் என்று உறுதியாகத் தோன்றுகிறது.

6 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய குஷி வாலி கபீஷின் சித்திரக்கதைகளை அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.
பூந்தளிர், அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் இப்போது இல்லாதது வருத்தமளிக்கும் விசயமே..
expecting more about books..

சைக்கிள் said...

ஆமாம்.ரத்ன பாலா, பாப்பா மஞ்சரி என பல புத்தகங்கள்.இன்னும் எழுத முயல்வேன்,புத்தகத் தோழர்.

Vel Kannan said...

நான் இன்றளவும் காமிக்சும் படித்து கொண்டு தானிருக்கிறேன். அது தான் என்னை என்னிடம் இருந்து தொலையாமல் பார்த்துகொண்டு இருக்கிறது. நல்லதோர் பதிவு சைக்கிள். இன்னும் கூட நீங்கள் புத்தகத்தை பற்றியும் நீங்கள் படித்த
புத்தகத்தை பற்றியும் எழுதலாம். அதற்க்கேற்ற எளிய நடை உங்களிடம் உள்ளதாக நம்புகிறேன் நான். கோவில்பட்டியா உங்களின் ஊர் ?

சைக்கிள் said...

உண்மைதான்.நன்றி திரு.வேல்கண்ணன்.ஆமாம்.

சுந்தர்ஜி. said...

நல்ல துவக்கம்.எல்லா வேலைகளுமே நமக்கு விருப்பில்லாமல்தான் துவங்கி அதன் ஈர்ப்பு மெதுவாய் நம்மைக் கரைத்து அதன் மாயாலோகத்தில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது.புத்தகங்கள் எனக்குத் தின்பண்டங்கள்.சித்திரக்கதைகள் தான் நம் கற்பனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.நிறைய எழுதுங்கள்.

சைக்கிள் said...

வேலைதான் அந்த வயதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. புத்தகங்கள் அப்போதும் கவர்ந்திழுப்பவையாகவே இருந்தன.புத்தகம் பற்றி தொடர்ந்து எழுதி உங்கள் பொறுமையை சோதிப்பேன். கவனமாக இருங்கள்.