Tuesday, 28 September 2010

d/bகாற்றில்
தத்தி பறக்கும்
வெள்ளை காகிதம்
சேர்வது  எவ்விடம்...
வானில் இருந்து
யார் வரையும்
கோடுகள்
இம்மழை...
கோலிப் பளிங்கின்
கண்ணாடி உலகுள்
வடிவங்கள் எப்படி...
d - ஐ b - போலவும்
b - ஐ d - போலவும்
எழுதினால் என்ன...
வேகமாக ஓடாமல்
எதற்காக சாலைகளில்
மெதுவான இந்த நடை...
கடலின் அலைகள்
எதையோ சொல்ல வந்து
ஏதும் சொல்லாததேன்...
வண்ணங்களால்
வசீகரிக்கப்பட்டு
பந்தை சுழற்றும்
சிறுமி
வண்ணங்களை
எண்ண எண்ண
வளர்கின்றன நிறங்கள்.

13 comments:

Vel Kannan said...

இந்த கவிதை பற்றிய எனக்கு சில சந்தேங்கள் உள்ளது.
விரும்பினால்உங்களின் mailid தரவும்
எனது mailid : rvelkannan@gmail.com

சுந்தர்ஜி. said...

கவிதை.இதுதான் நவகவிதை.இப்படித்தான் இருக்கவேண்டும் நேர்த்தியாக.ஆனாலும் என் கவிதையை நீங்கள் சமயங்களில் எழுதிவிடுவது ஆனந்தமாகவும் கொஞ்சம் கை தவற விட்ட ஏமாற்றமாகவும்.

சைக்கிள் said...

சந்தேகங்களை இந்த தளத்திலேயே நீங்கள் பதிவு செய்யலாம் திரு.வேல்கண்ணன்.அவற்றை மதிக்கவும், பதில் அளிக்கவும் விரும்புகிறேன்.Mail-id பற்றி யோசித்து சொல்கிறேன்.நன்றி.

சைக்கிள் said...

நன்றி திரு.சுந்தர்ஜி.ஏமாற்றுவது உங்கள் privilege மட்டும் அல்லவே :)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அழகிய புதிர்களால் ஆனா குழந்தைகளின் உலகு..அழகு

Vel Kannan said...

சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்த கவிதை குறித்த வடிவம், அதன் புரிதலின் எளிமையை குறைத்தாக கருதுகிறேன் என் போன்ற வாசகனுக்கு.
அதனால் இப்படியாக இருந்தால்....

காற்றில் தத்தி பறக்கும்
வெள்ளை காகிதம் சேர்வது
எவ்விடம்...

வானில் இருந்து
யார் வரையும் கோடுகள்
இம்மழை...

கோலிப்பளிங்கின் கண்ணாடி
உலகுள் வடிவங்கள்
எப்படி...

d - ஐ b - போலவும்
b - ஐ d - போலவும்
எழுதினால் என்ன...

வேகமாக ஓடாமல்
எதற்காக சாலைகளில்
மெதுவான இந்த நடை...

கடலின் அலைகள்
எதையோ சொல்ல வந்து
ஏதும் சொல்லாததேன்...

வண்ணங்களால்
வசீகரிக்கப்பட்டு பந்தை
சுழற்றும் சிறுமி வண்ணங்களை
எண்ண எண்ண வளர்கின்றன
நிறங்கள்.

(மேற்சொன்னதை, தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். தயவு செய்து ...)

சைக்கிள் said...

வரிகளை வேறு விதமாகப் பிரிக்கும்போது வேறு அனுபவம். நான் பிரித்து எழுதியிருப்பது வாசிக்கவும், அதனால் ஏற்படும் எண்ணங்களை உணரவும் ஆன space கொடுப்பதற்கு.முதல் மூன்று வரிகளை நிறுத்தி வாசித்தால் ஒரு அனுபவம்.
சேர்த்து வாசித்தால் ஒன்று. எனது தேர்வு முதலில் சொன்னது. 'என் போன்ற வாசகனுக்கு' என்று சிறுபத்திரிக்கைகளில் எழுதும் திரு.வேல்கண்ணன் சொன்னால் எப்படி? எனினும் கருத்துக்கு நன்றி. Style(writing) maketh a man (woman too) - என்றொரு மேற்கோள் இருக்கிறது. இது என் எழுத்துமுறை. தவிர இந்த எளிமையாக எழுதுதல் என்ற கருத்து குறித்து எனக்கு முரண்பாடு இருக்கிறது. சீக்கிரம் அதுபற்றி ஒரு பதிவு எழுதுவேன். நீங்கள் இதுபோல ஆண்களுக்கும் கருத்து சொல்லும் நபர் எனில் உங்கள் பங்களிப்பை வரவேற்கிறேன்.

சைக்கிள் said...

பகிர்வுக்கு நன்றி திரு.திருநாவுக்கரசு.

வேல் கண்ணன் said...

1.
தெளிவு: நீங்கள் பெண் என்பதை உங்களின் பின்னூட்டம் மூலமாகத்தான் அறிகிறேன்.
வாழ்த்துகள். எழுத்தாளர் அம்பை. நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவரை பெண் எழுத்தாளர் என்றால்,சற்று உரிமையுடன்
கடித்து கொள்வார்கள்'என்றாவது ஆண் எழுத்தாளரை 'ஆண் எழுத்தாளர்' என்று தனிப்பட்டு சொல்லி இருக்கீர்களா.
பின் எதற்கு பெண்கள் எழுதினால் மட்டும் 'பெண் எழுத்தாளர்' என்று சொல்லுறீங்க' என்பார்கள் .. இந்த கருத்துடன் நான் முழுவதுமாக ஒத்து போகிறேன்.
2.//தவிர இந்த எளிமையாக எழுதுதல் என்ற கருத்து குறித்து எனக்கு முரண்பாடு இருக்கிறது//
எனக்கும். பிரமிளின் இந்த வரிகள் :
'சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது'

படித்த போது எதுவும் புரியவில்லை. (ஒரு வேலை புரியாமல் எழுதுவது தான் கவிதையோ ... என்று கமென்ட் வேறு அடித்திருக்கிறேன் )
பின் நாட்களில் அந்த வரிகளை நான் உணரும் போது என்னை பாடாய்படுத்தியது. படுத்துகிறது. இது பற்றிய உங்களின் பதிவை நானும் ஆவலுடன்
எதிர்பார்கிறேன். வாழ்த்துகள்.
3.
முகம் தெரியாத நபரின் கவிதையை படிக்கும் போதும் அதன் மூலமாக அவரை பற்றிய ஒரு புரிதல் தான் எவ்வளவு சுகம்.
4.
புரியாத கவிதை என்று இங்கு ஒன்றும் கிடையாது. அந்த கவிதையை புரிவதற்கு முயலவில்லை என்பது தான் சரி.
எனக்கு, சிறு வயதில் புரியவில்லை-என்று புறம் தள்ளிய சங்க தமிழ் பாடல்களிலிருந்து நண்பர் நேசமித்திரன் கவிதை வரை மீண்டும் மீண்டும் படித்து தேடி தேடி அர்த்தம் புரிந்து கொள்வது என்பது, அப்படி புரிந்து கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாது. இதனை பலரும் விளக்கி உள்ளனர் என்பதை நீங்கள் அறிவிர்கள்.
5.
//என் போன்ற வாசகனுக்கு' என்று சிறுபத்திரிக்கைகளில் எழுதும் திரு.வேல்கண்ணன் சொன்னால் எப்படி? எனினும் கருத்துக்கு நன்றி//
என்மீது வைத்திருக்கும் கருத்துக்கு மிகுந்த நன்றியும் அன்பும் தோழி ...
சத்தியமாய் இன்றும் என்றும் நான் வாசகன் தான். பயணத்தில் ... மீண்டும் சந்திப்போம் ..
நன்றி

சைக்கிள் said...

1. ''... உங்கள் எழுத்துகளுக்கு.எல்லாவற்றையும் ஒரு மூச்சில் படித்து முடித்தேன்.'' - இதுதான் நீங்கள் துலக்கம் பதிவிற்கு இந்த தளத்தில் எழுதிய முதல் பின்னூட்டம். எனது முதல் பதிவிலும், மதுரை புத்தகத் திருவிழா பற்றிய பதிவிலும் வெளிப்படையாகவே பெண் என்ற அடையாள வெளிப்பாடு இருக்கிறது. அதனால் என் அடையாளம் உங்களுக்குத் தெரியும் என நினைத்தேன். எல்லாவற்றையும் என்பதற்கு 'almost' எனவும் அர்த்தம் இருந்திருக்கலாம் என்பதின் நியாயம் புரிகிறது.ஆனால் பெண்ணாக இருப்பதற்கு வாழ்த்துக்களை ஏற்கும் சூழல் இருப்பதாக பெண்களின் பிரச்சனையை அருகிலிருந்து பார்க்கும் சூழலில் இருக்கும் எனக்குத் தோன்றவில்லை என்பதால் உங்கள் வாழ்த்தை ஏற்க இயலவில்லை.
2. அம்பை அவர்கள் சொன்னது எழுத்து என்று வரும்போது எழுத்தாளர்கள் என பொதுவில் ஆண்களைச் சொல்லிவிட்டு 'பெண் எழுத்தாளர்களில்' என பிரித்துவிட்டு அப்போது மட்டும் பெண்ணைக் குறிப்பிடுவது பற்றியது. (பார்வை: காலச்சுவடு நேர்காணல்கள்: பக்கம் 212). உலகம் முழுவதும் 'பெண் எழுத்து' என்ற பாடப்பிரிவு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இருக்கிறது. ஒடுக்கப்பட்டது ஒடுக்கப்பட்டதின் அடையாளத்துடனே வருவது சரி என்பது என் கருத்தும்.
3.எளிமை என்பது பற்றி நீங்களே விளக்கி விட்டீர்கள். நன்றி.
4. உங்களை எப்போதும் வாசகர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
5. பெண் என்பதனாலேயே எப்படி உடை உடுக்கவும், நடக்கவும்,உண்ணவும், சிரிக்கவும், பழகவும்,படிக்கவும், வண்டி ஒட்டவும் (இன்ன பிற) வேண்டும் வரையிலான -பத்து கட்டளைகள் அல்ல - பல கட்டளைகள் உள்ள சூழலோடு என் வார்த்தைகளை புரிந்துகொள்ளுமாறு உங்களிடம் கேட்கிறேன்.
6. நன்றி. எழுத்துப் பயணத்தில் பார்ப்போம். இன்று அயோத்திக் கவலை வேறு.

Vel Kannan said...

//...என்பதால் உங்கள் வாழ்த்தை ஏற்க இயலவில்லை//
சரிதான். நன்றி
//ஒடுக்கப்பட்டது ஒடுக்கப்பட்டதின் அடையாளத்துடனே வருவது சரி என்பது என் கருத்தும்// உண்மையான வார்த்தைகள்
//பல கட்டளைகள் உள்ள சூழலோடு என் வார்த்தைகளை புரிந்துகொள்ளுமாறு உங்களிடம் கேட்கிறேன்// புரிந்து கொண்டேன்.
//இன்று அயோத்திக் கவலை வேறு// பின்னூட்டம் போடும் இந்தவேளையில் வந்தே விட்டது.
அடேயப்பா.. என்ன மாதிரியான டென்ஷன் தெரியுமா ... சென்னையில் ..?

கமலேஷ் said...

நான் வாசித்த வரை பெரும்பான்மையான கவிதையில் ஒரே வரிகளில் பல பொருளேற்றி அழகா எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்...

இத்தகைய எழுத்துக்கு சொந்தக்காரர்
என்ன பொருளில் சைக்கிள் என்று பெயர் வைத்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே முதல் பதிவான சைக்கிளை படித்தேன்.

பாரதியும், சைக்கிளும் பிடிக்குமென்றால் பிறந்திருப்பது
- ஒரு அக்னி குஞ்சி -
வாழ்த்துக்கள் ...சிறகுகள் விரியட்டும்.

சைக்கிள் said...

நன்றி திரு.கமலேஷ்.