Saturday, 30 October 2010

யானை

கானின் அடர்பச்சை இருளோடு
அறையுள் பிரமாண்டத்தை
கொண்டு வந்திருந்தது யானை.
யாருமற்ற ஒரு நாளில்
யானையும் மெல்ல அசைந்தது.
கால்களை உதறிவிட்டு
உடலை சிலிர்த்தபடி
உயிர்ப்பின் சந்தோஷ கணங்களை
அடிக்குரலோங்கிப் பிளிறிவிட்டு
சின்னக் கண்களால்
அறையை அளந்தது.
ஓரடி எடுத்தாலும்
அறையை விட்டு வெளியேறும்
நிலை அறிந்த யானைக்கு
இப்போது இரு முடிவுகள்.
எந்த முடிவு என்பதோ
முடிவுகள் என்னென்ன என்பதோ
நீங்கள் அறியாததில்லை
வாழ்வின் வாதை தெரியாததுமில்லை.


Tuesday, 26 October 2010

இந்த கவிதையும்

பாலைவனப் பயணிக்கு
சிறுபறவை நிழலும்
வார்த்தையற்ற தனிமையில்
வருடிச் செல்லும் காற்றும்
கதறி அழுகையில்
தனிமையான இடமும்
வெம்மையில் எறும்புகளுக்கு
நீரின் குளிர்ச்சியும்
கசந்த மனதிற்கு
தெருவோரப் பூக்களும்
காலொடிந்த நாய்க்கு
மனிதரிட்ட சோறும்
தவிக்கும் முதுமைக்கு
கைத்தடி பலமும்
நாள்பட்ட வலிக்கு
நானற்ற துயிலும்
ஏதுமில்லா எனக்கு
இந்த கவிதையும்.

புன்னகை


அன்று உலகம்
நீலமாக இருந்தது-
பசுந்தாமரை
இதழ் மலைகள்
சுற்றிச் சுற்றி...
அது இசைவெளி
காற்று மீட்டிய
இசைக்குறிப்புகளாய்
அலையும் தும்பிகள்...
சீராய் காற்றில்
ஆடும் செடிகள் - சிறு பூக்கள் -
இளம் பிராயத்து நினைவென
பறந்தன பட்டாம்பூச்சிகள்...
கண்களெல்லாம் அடர்காடு
அடுக்குகளாய் மரச் செடிகள்
மரச் செறிவெங்கும்
இளம்வெளிச்சம்...
அது  அகவெளி
வெம்மை கனிந்து
செம்பழுப்பு நிலமெங்கும்
படர்ந்திருந்தது புன்னகை
கசிந்திருந்தது மனம்
உலகம் தொலைத்து...

Saturday, 9 October 2010

அங்கே


மேகம் என்று
காகிதத்தில்  எழுத
மழை பொழிந்து
காகிதம் நனைத்தது.
மேசையில் வழிந்த நீரை
ஏந்திப் பிடிக்க
வேகமாகத் தாளெடுத்து
வாளி என்றெழுத
வாளியோ கப்பலாக
கப்பலுக்குப் பெயர் வைக்க
யத்தனித்துத் தொட்டதில்
மந்திர விசையொன்று
அதனுள்ளே வீசியது.
அலை எழும்பும்
அக்கடலின் நடுவே
இப்போதொரு சிறு பயணி.
கப்பல் பயணியைச் செலுத்தும்
வித்யாசத்தை ரசித்துவிட்டு
பிரியா மனதோடு
நிலம் என்று எழுதி
வீட்டிற்குத் திரும்பி விட்டேன்.
என்றாலும்
எங்கும் தண்ணீர் சூழ
தூரத்தில் ஒரு புள்ளி
நகர்வதைக் கண்டால்
காகிதம் கொண்டு
மெல்லக் கையசைப்பேன்
அங்கே பயணிக்கும்
என்னை, உன்னை, நோக்கி.

Thursday, 7 October 2010

இன்று

இன்று நெடுஞ்சாலையில்
ஒரு நாய் அடிபட்டுக் குடல் சரிந்து
இறந்து கிடந்தது
இன்று மன நலமற்றவர் ஒருவர்
ஆடைகளை கிழித்தபடி
தனக்குள் பேசிக்கொண்டிருந்தார்
இன்று தலைவரின் மக'ரின்' மக'ரின்'
பிறந்த நாள் ஆலோகலங்கள்
நகரை அலற வைத்துக் கொண்டிருந்தன
இன்று மாதவிடாய் என்பதால்
வீட்டில் உணவு மறுக்கப்பட்ட பெண்
மயங்கி விழுந்தாள்
இன்று மரங்களில்
பூக்கள் அற்ற வெறுமை
இன்று சாதியின் காரணமாக
அவர் அவமானப்படுத்தப் பட்டார்
இன்று வாழிடத்தில்
தண்ணீர் பத்தடி கீழே
போய்விட்டதாகக் கணிக்கப் பட்டது
இன்று 2.7 அளவுள்ள இடம்
வாமன அவதாரமாய்
மகாபலி எடுக்க முயன்றது.
இன்று இப்படித்தான் இருக்கிறது.

Monday, 4 October 2010

இம்மாலை


ததும்பி வழிந்திருந்தது பொழுது -
யாருமற்ற ஆல மரத்தடியில்
இலைகளும் பறவையொலிகளும்  உதிர
அறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்...
மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்
மணியொலிச் சத்தமும்
அவ்வப்போது வியந்து
நின்று அகலும்
செருப்போசைகளும்
ஆலம்பழத்தின் ஊடே
ஆசுவாசித்திருந்த பறவையும்
வழி தவறி
நம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்
காற்றில் படபடத்த
புத்தகப் பக்கங்களும்
வியந்து ரசித்த
வண்ணச் சிறு பூக்களும்
நினைவுகளின்
நுண்ணெழிற் சித்திரங்கள் ...
பார்க்கவோ பேசவோ
எண்ணவோ எழுதவோ
கூடாத இந்நாளில்
கடந்த பாதைகளின்
புத்தகங்களும் பேச்சுக்களும்
வழித்தடங்களும் மரங்களும்
ஒலிகளும் இலைகளும்
மாடுகளும் மந்தைகளும்
பேரோசையோடு
கடந்து விரைய
உறைகிறது இம்மாலை
பிரிவின் துரு பூசிய
அந்த ஆலம் விழுதுகளில்.

Sunday, 3 October 2010

பகிர்வு: ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை


கதிராடும் சோளத்தில்
காற்றாட, மார்கழியின்
பனிவிலகா இளவெயிலில்,                                
பாட்டெழுதும் மௌனத்தில்
ஆழ்ந்திருந்த சர்ச்சில்                              
ஆள்உயரச் சிலையில்லை
அலங்காரப் படமில்லை.
பாதிரியார் பைபிளுடன்-
பத்துவிரல் ஆர்கனுடன்
காத்திருக்க - வந்தார்கள்
கைப் பிரம்பில்
கால் உணர்வில்
கண் படைத்த பாலகர்கள்.
அவர்கள்
பாட்டெல்லாம் சித்திரங்கள்.
                          - கல்யாண்ஜி