Monday, 29 November 2010

பனிப் பூக்கள்


குளிரால் நிரம்பியிருக்கும் இக்காலை
அறியாமையின் பச்சையம் துளிர்த்திருக்க
பிரியத்தின்  பூக்கள்  உவந்தளிக்கப்பட்ட
முன்னொரு வெயில் ஒளிந்த அதிகாலையாக.

தூய்மையின் புதுச்சாயல்  பொழுதில்
பெறப்பட்டக்  கொத்து மஞ்சள் பூக்களில்
சிறு கண்ணாடிகளைப் பதித்திருந்தது பனி
பிரியத்தின் உற்சாகத்தைப் பிரதிபலித்து.

பின் ஒரு பல்வடிவ  உருக்காட்டியின்
முடிவிலா வசீகர வண்ணங்களோடு
மாறிக் கொண்டே போயின  நாட்கள்...
இன்னதென்று வகை அறியாப் புதிராக.

யாரும் கண்டிராத அதிசய நெய்வில்
உணர்வுகள் கொதித்துத் தெறித்தன 
அன்பின் அதி  நுட்ப மென்னிழைகள்
வலியின்  அடர்த்தியில் தனித்தொளிர.

என்றாலும் அந்த அதிகாலை நினைவுகள்
விளங்கவியலா வாழ்வு  கிளை பரப்பும்
நேசத்தின்  அளப்பரிய முற்றத்தில்
ஆயிரம்  இள மஞ்சள் பூக்களாய்...   

Wednesday, 24 November 2010

ஹேம்லினின் எலிகள்

கொடுங்குற்றமும் தண்டனையும் இனிப்பும்
குழந்தைகளின் புகைப்படங்கள் ஊடாக
சுழன்று கொண்டே போயின முடிவற்று.
தினசரிகளில் வன்பாலுறவும்  குரூரக்கொலையும்
முட்டிப்புரளும்  பெருவன்ம வெள்ளக்காடுகளாய்
இன்றைய தலைப்புச் செய்தியாகிவிட.
ஹேம்லினின்  எலிகளாய் நுகர்வு மந்தையை
மதிமயக்கி  இசை பாடும் பைப்பர் ஊடகங்கள்
காமத்தைப் பொருளாக்கி வக்கிரத்தை விலையாக்கும் -
அறுவடைத் துயரையும் காசாக்கி பையில் போடும்.
சித்திரமாய், நகைச்சுவையாய், கலையாய், எழுத்தாய்
இச்சையைக் கவர்ந்திழுத்து அறிவைப் புறமொதுக்கும்
பெரும் விந்தை சந்தை மாயக் காட்சிகள் நொடிதோறும்...
அத்தனைக்கும் விலை கொடுத்து வீட்டில் இருத்தி
இன்று பிள்ளைகளைப் பறிகொடுத்துப் பரிதவித்து
காரண காரிய தொடர்புக் கவலை துறக்கும் நாம்...
ஆதார இச்சை மனித இயல்பென்றால்
கட்டற்ற இச்சை எதனின் இயல்பு?
காதலற்ற காமம் பிறதின்மேல் வக்கிரமெனில்
காதலும் அன்பும் வாங்குவது எவ்விடம்?
நுகர்வுச் சந்தையில் வாடிக்கையாளர் தேவைக்குப் பொருள்.
யோசிக்கும் நம் தேர்வுக்குப் பொருள்...?

Wednesday, 17 November 2010

புத்தகம்-4: சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல்


           சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம் 14 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பின் தலைப்பான ஒரு துளி துயரம் ஒரு உள்ளடங்கிய முரண்தொனி அமையப் பெற்றது. ஆங்கிலத்தில் அதை understatement எனலாம். ஏனெனில் இந்த 14 கதைகளின் பேசுபொருளும் துயரம்தான், துயரின் வேறுபட்ட வடிவங்கள்தான். ஒரு உறிஞ்சு தாளில் இடப்பட்ட மைத்துளி போல கதைகளில் துயர் விரிந்துகொண்டே  போய் இறுதியில் கடலாக மாறுகிறது. வானம் பொய்த்த விவசாயிகளின், குழந்தைகளின், கைவிடப்பட்ட முதிய பெண்களின், குடும்ப அமைப்பில் நசுக்கப்படும் பெண்களின், வேலை இல்லா ஆண்களின், சாதி வேறுபாடுகளின், வன்மத்தின், வறுமையின் துயரம் அது.
            கதைகளின் பேசுகுரல் பொதுவாக பெண்ணியக் குரலாக, குழந்தைகளின் குரலாக, வஞ்சிக்கப்பட்ட ஒருவரின் குரலாக உள்ளது. பெண்ணியக் குரல் தெளிவாக ஒலிக்கும் கதையாக  கிடந்த கோலம் கதை இருக்கிறது. சமைப்பது, துவைப்பது, தண்ணீர் எடுப்பது, கடைக்குப் போய் வருவது, வீடு பெருக்குவது, விருந்து உபசரிப்பு என பெண் உழைத்துக்கொண்டே இருக்க ஆண் பள்ளி கொண்ட கோலத்தில் இருந்துவிட்டு இரவு மட்டும் பெண்ணை அணுகுவது குறித்தது. கதையின் அழுத்தமான  கட்டம் பெண் 'இதுக்கு மட்டும்தான் நீயா' என சிரிப்பது குறித்தது. அது சிரிப்பல்ல வலி என்பது அவனுக்குப் புரியாமல் போவது அன்றாட நடைமுறையின் ஆழ்ந்த படப்பிடிப்பு. கூரு கெட்டவன் கதையிலும் பெண் ஏமாற்றப் படுகிறாள். குடும்ப மரியாதை கருதி அமைதி கொள்கிறாள்.
          முதிய  பெண்கள் தங்கள் மகன்களால்  வஞ்சிக்கப்படுகிறார்கள். கடைசிக் காலத்தில் உணவும், கவனிப்பும், மரியாதையும் அற்று போகிறார்கள். தீராக்குறை கதையின் மூன்று சகோதரிகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகளால் சுகமில்லை. தள்ளாத வயதில் கூலி வேலை, சுடு சொற்கள், ஒரு வாய் கஞ்சிக்கு மகனிடம் மற்றவர்கள் வழியாக  சிபாரிசு தேடல் என அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. இதே போன்ற சூழலில் உள்ள தாய்மை கதையின் அம்மாவால் இறுதி வரையிலும் பிள்ளைகளைத் தண்டிக்க முடியவில்லை. வெறுத்துபோய் காசு வெட்டி போட நினைத்துக் கோவிலுக்குப் போகும் அவள் இறுதியில் அவர்களின் நல வாழ்விற்காக சாமி கும்பிட்டுவிட்டு வருகிறாள். தாய்மை குணம் என்பது அரவணைப்பாக, வளர்ச்சிக்கானதாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு   அப்படி உள்ள ஒருவருக்கு 'motheror' எனப்  பெயரளிக்கிறது. அவர்கள் உடல்பூர்வமாக பெண்ணாக இருக்க வேண்டியதில்லை. கூரு கெட்டவன் கதையில் வரும் உடையாளை போல மனிதர்களை மன்னிக்கத் தெரிந்தவராக, உதவுபவராக இருந்தால் போதும்.
           குழந்தைகள்  சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் கதைகளில். புற்று கதையின் சிறுமியின் நாய் வளர்க்கும் ஆசையும், அப்படி வளர்க்கும்  நாய்க்குட்டி பெண்  குட்டி   என்பதால்  காட்டில்  எட்டி  உதைக்கப்படும்  நிலை  கண்டு தானும் ஒரு பெண் தனக்குமந்த நிலை ஏற்பட்டுவிடுமோ  எனக் கலங்குவதும் அடர்த்தியான வலியோடு பதிவு செய்யப்படுள்ளது. அம்மா சாகப் போகிறேன் எனும்போது 'நானும் வர்ரேன், என எப்போதும் போல் சொல்லும் குழந்தையும் கதையில் கவிதையாக வெளிப்படுகிறது.. நிரூபணம்  கதையின் சிறுவனோ கைவிடப்பட்ட முதியவருக்கான கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையின் நிரூபணமாக உள்ளான். கதைகளில் தென்படும் அன்பு வறட்சிக்கான  மாற்றாக குழந்தைகளே  உள்ளனர்.
         குதிரை மசால் தாத்தா கதையின் முதியவர் அப்படி குழந்தை மனம் உள்ள தாத்தாதான். அதனால்தான் 80 வயதிலும் உழைக்க முடிகிறது. ஊர்ப் பிள்ளைகளோடு ஒன்ற முடிகிறது. பாட்டி இறந்தால் தானும் காணாமல் போவேன் என பூடகமாகச் சொல்ல முடிகிறது. இதே பிணைப்பும், அன்பும் மெய்ப்பொருள் காண்பது அறிவு கதையின் அப்பாவுக்கு மகன் மேல். எப்படியாவது பிள்ளையை படிக்க வைக்க நினைக்கும் அப்பாவின் அன்பையும், வறுமையையும் புரிந்து கொண்டு மெய்ப்பொருள் அறியும் மகன். ஆனால் பொருள் இல்லாததை வெறுத்து ஒதுக்கும் மனைவி வாழும் கலை கதையில். கழைக் கூத்தாடி சிறுமியின் வாழ்வு பணம் கொடுத்துப் போகும் வாழும் கலை பயிற்சிகளை விடப் பாடம் புகட்ட கடின வேலைக்குத் திரும்பும் கணவனின் வலி பேசுகிற கதை.
           பெண்ணை உடலாகப் பார்க்கும் பொதுப் புத்தியின் ஒருவரான நாயகன், அப்பாவை  சாகக் கொடுத்துவிட்டு அவர் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவி கேட்கும் பெண்ணை, அவள் வெண்ணிலை நிலையில் ஆதரவற்று  உள்ளதைப்  புரிந்து வெட்கி மாறும் இயல்புக் கதை வெண்ணிலை.  எனினும் தொகுப்பின் தலைப்புக் கதையான ஒரு துளி துயரம் காட்டுகின்ற உலகம் மாறுபட்டது. கொந்தளிப்பானது. திருமண மொய்ப் பணத்தை பதிவு செய்யும் சாக்கில் கொடுத்த கடனை எடுத்துக் கொண்டுவிட்ட நண்பனின் நம்பிக்கையின்மையை, துரோகத்தை எண்ணி எண்ணி மாய்ந்து போகும் மனிதன் ஒருவன் அடுத்த நாளே தற்கொலை செய்ய, அவனது  மனைவி அவன் மாற்றுத் திறனாளியான தன் மேல் அன்பு காட்டிய அவனின் கவுரவத்திற்காக அந்த நண்பனுக்கு மிச்சமுள்ள கடன் தொகையை கொடுக்கும், அவன் வெட்கி வருந்துவான் என நினைத்து ஏமாறும், வலி கடலென அவளுள் அலைஎழுப்பும் கதை. மனித மனதின் சின்னத்தனமும், பெருந்தன்மையும் இணைமுரணாக வெளிப்படும் கதை.
         பூமிக்குள் ஓடுகிறது நதியில் இரண்டு சாதியை சேர்ந்த அன்பான மனிதர்கள் மோசமான கலவரச் சூழலிலும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் நேயம்  பற்றியது. இந்த கதைகள் அனைத்துக்கும் மாறாக அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள்  கதை உள்ளது.  அது உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் முதியவள் ஒருவள் சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக அவளுக்கே உரிய ரகசியத்தோடு, வன்மத்தோடு, மகனை, மருமகளை படுத்தும் பாட்டை, பெண்ணுக்கு  அவர்களுக்குத் தெரியாமல் தோடும், பணமும் கொடுப்பதை, வித்தியாசமாகப் பதிவு செய்கிறது. குதிரை டாலருக்காக ஏங்கும் மகன் வழிப்   பேரனை அவள் ஏமாற்றுகிறாள். அது அவளின் ரகசிய வன்ம வெற்றியாக, ஆணின் தோல்வியாக குறியீடாக உள்ளது.
          கதைகளின் மொழி நடை மண் வாசனையோடு, இயல்பாக உள்ளது. இறுக்கமாகவும் உள்ளது. தீராக்குறை கதையில் மட்டும் dramatic monologue எனும்  ஒருவர்  பேச்சில் சூழல் சொல்லப்படும், எதிராளியின் பேச்சு ஊகிக்கப்படும் உத்தி கையாளப் பட்டுள்ளது. கதையின் மனிதர்கள் சூழலின் வெம்மையிலிருந்து தப்பிக்க பெரும்பாலும் நனவுரு கற்பனையில் (fantasy) மூழ்குகிறார்கள். இது அடிக்கடி உபயோகப்படுத்தப் படுவது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.  கிடந்த கோலம் கதை கந்தர்வனின் இரண்டாம் ஷிப்ட் கதையை நினைவுறுத்துகிறது தவிர்க்க இயலாமல். கூரு கெட்டவன் கதைப்பிரதியில் தாஸ்தொவ்ஸ்கியின் இடியட் மின்னி மறைகிறான். தற்செயலான ஒற்றுமையாக இருக்கலாம்.
           முடிவாக, நன்மையும், தீமையும் ஊடு பாயும் உலகின் அதிகரித்துக்கொனடே  போகும் துயரத்தின் சாயையை ஒரு துளி துயரம் தொகுப்பின் கதைகள் ஒரு விதமான வலியின்  இழை கொண்டு வடிவங்களாக்குகின்றன எனலாம். இத்தனைக்கு மத்தியிலும்  வாழ்கை ஓடும் விந்தையை மென்னகையோடு சொல்கின்றன  தொகுப்பின் தலைப்பும், உள்ளடக்கமும் என்பது இத்தொகுப்பின் இன்னொரு ஊடிழையாக, இணைபிரதியாக (subtext) உள்ளது. அது தொகுப்பின் பலமாகவும்  உள்ளது.

Sunday, 7 November 2010

புத்தகம்-3: காட்டில் ஒரு மான்


             அம்பையின் கதைகள் பல அடுக்குகளால் ஆனவை. அவை சித்தரிக்கும் உலகின் குறுக்கு வெட்டில் சர்வ சாதாரணமாக மரபைக் கலைத்துப் போடலும், புதிய அழகியலும், துணிவும், தர்க்கமும், உண்மையும் இழையோடும். அவரது காட்டில் ஒரு மான் தொகுதியில் உள்ள கதைகளும் அப்படி எழுதப்பட்ட கதைகள்தான். தொகுப்பில் உள்ள அடவி கதையில் உள்ள மாய யதார்த்தம் (magic realism) மட்டும் ஒரு புதிய எழுத்து உத்தி. ஆனால் இந்த பதிவு பேசப்போவது தொகுதியின் தலைப்புக் கதையான காட்டில் ஒரு மான் குறித்துதான்.
            காட்டில் ஒரு மான் கதையின் தளம் அதிகம் பேசப்படாத ஒரு தளம். ஒரு குறிப்பிட்ட உடல் வேறுபாட்டை சமூகம் பார்க்கின்ற பார்வையை, அதை சரிப்படுத்த சமூகம் அப்படியுள்ள மனிதர்களை படுத்தும் பாட்டை, தொடர்ந்து அந்த உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பதை, அவ்வேறுபாட்டை அந்த உயிர் வேறு விதங்களில் ஈடு செய்யும் திறனை யோசிக்கத் தவறுவதை படம் பிடிக்கிற கதை. இத்தனையையும் கதை தட்டையாகப் பேசாமல், இருளும், ஒளியும், காடும், நிலவும், மானும், குழந்தைகளும், கதை சொல்கிற அத்தையும் அமைதியான நீர்நிலையில் சலனம் ஏற்பட்டு மாறுகிற பிம்பங்கள் போல மறைந்து, ஒளிர்கிற கதை.
            தங்கம் அத்தை பற்றிய  குழந்தைப் பருவ நினைவுகளை அவரது மருமகள் வள்ளி நினைவுகூர்வதாக கதை இருக்கிறது. தங்கம் அத்தை பற்றிய ஆரம்ப நினைவுகள் கவித்துவமும், உணர்ச்சியும், மாயாஜாலமும், மென்மையும் கொண்ட அற்புத கதைசொல்லி  அவள்  என்பதாக இருக்கிறது. அதோடு அவள் ஹார்மோனியம் இசைக்கவும், பாடவும் கூடிய ஒருவள். ஆனாலும் அவளை மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் அனுதாபம் இருந்தது. அவள் பருவம் அடையவில்லை என அறிகிறார்கள் வீட்டுக்குழந்தைகள். ஆனால் அவர்களால் அதை புரிந்துகொள்ள
முடியவில்லை.எல்லோரையும் போலவே அவள் தோற்றமளித்தாள்.
           வீடும், சமூகமும்  தங்கத்தின் உடல் வேறுபாட்டை நோயாகவே பார்த்தது. அவள் உடலைக் 'குணப்படுத்த' அத்தனை வகை மருத்துவமும் பரிசோதிக்கப்பட்டன. பூசைகள் செய்யப்பட்டன. பயந்தால் ஏதாவது நடக்கலாம் என கரிய போர்வை போர்த்திய உருவம் அவள் மேல் பாய்ந்ததில் துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க அவள் விழும் வரை, "என்னை விட்டுடுங்க, என்னை விட்டுடுங்க'' என அவள் கதறும்வரை சமூகம் அவளைப் பரிசோதனை எலியாக்கியது. பின் அவள் கணவருக்கு வேறு பெண் பார்ப்பது ஆரம்பிக்க அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். பின் சமாதானம் ஆகி கணவர் மணப்பதை ஏற்று, அவளே பெண் பார்த்து வைத்து வாழ்கிறாள். அது அவளுக்கான வாழ்வியல் நிர்பந்தம் என்பது வெளிப்படை.
           ரோஸ்மேரி  கார்லாண்ட் என்ற ஆய்வாளர் அவரது அசாதாரண உடல்கள் (Extra ordinary Bodies) என்ற புத்தகத்தில் இலட்சியமயமாக்கப்பட்ட விதிகளில் இருந்து குறைபட்ட எந்த உடல்சார் கூறும் சரிசெய்யப் படவேண்டும் அல்லது நீக்கப் படவேண்டும் என்பதாகவே மாற்றுத்திறன் பற்றி, இன்றைய உலகின் வரையறையை, மருத்துவ மாதிரி(medical model) உருவாக்கியிருக்கிறது என்கிறார். கதையில் சமூகத்தின் இலட்சிய விதியாக இனப்பெருக்கத் திறன் அல்லது வம்ச விருத்தி உள்ளது. அதன் காரணமாக தங்கத்தின் உடல் 'குணப்படுத்தப்பட'  மருத்துவ, மந்திர முயற்சிகள் -- போதும் இந்த சித்திரவதை -- என்று அவள் அலறும் அளவு  மேற்கொள்ளப்படுகின்றன, அவை பலிக்காதபோது அவள் நீக்கப்பட்டு, அதாவது மனைவியாக நீக்கப்பட்டு, கணவன் மறுமணம் செய்கிறான்.
           சமூகத்தின் இந்த பார்வை மாற்றுத் திறனாளிக்கு அநீதி இழைப்பதோடு அவர் அவரது சுயம் குறித்து கொண்டுள்ள பார்வையையே மாற்றுகின்றன. அவர் போராடித்தான் தன் சுயத்தை மீட்டுக் கொள்ள முடிகிறது. இது கதையுள் வரும் கதையாகக்  கவின்மொழியில் உருவகமாகக் கூறப் பட்டுள்ளது. அந்த கதை தங்கத்தால் குழந்தைகளுக்குக் கூறப் படுகிறது. அது பயமே இல்லாத காட்டில் -- நெருப்பு, ஊடுருவாளர்கள், வேட்டைக்காரர்கள் போன்ற பிரச்சனைகளை அது    கொண்டிருந்தாலும் கூட -- வாழும் ஒரு மான் பற்றியது. அங்குள்ளவர்கள் அதற்கு பழக்கம் என்பதால் அது சுதந்திரமாகவே உணர்ந்தது. எப்படியோ அது வழி தவறி வேறோர் காட்டில் சிக்கிக் கொள்கிறது. பழக்கமின்மை, இருள், தனிமை, வேடன் ஒருவன் மாமிசம் உண்ணும் காட்சி ஆகியவை அதை அதீதமாகப் பயமுறுத்துகின்றன. பின் பவுர்ணமியன்று அந்த மாயம் நிகழ்கிறது. நிலா வெளிச்சம் எல்லாவற்றையும் துலங்க வைக்க, காடு பழகிப் போகிறது. மானின் உச்ச பயம் விலகி அமைதியாக உணர்கிறது. கதையின் மானோடு தங்கத்தை எளிதாகவே இனம் காண முடியும். அவள் குழந்தையாக இருந்தபோது பாதுகாப்பாகவே உணர்ந்திருக்க முடியும். ஆனால் பெரியவர்களின் உலகம் வேறுபட்டது. அது தங்கத்தின் வளர்ந்த பெண் உடல் இனவிருத்தி செய்யக்கூடியதாக வேண்டும் என்ற கட்டளையைக் கொண்டது. அது தங்கத்தை பயமுறுத்தியிருக்க வேண்டும். இந்த அகச் சிக்கல் சுயம் தெளிந்த ஒரு கணத்தில் காணாமல் போய் பெரியவர்களின் உலகம் என்ற புதிய காட்டை சந்திக்க வலுப் படுத்தியிருக்க வேண்டும். அதனாலேயே அவள் தன் படைப்பாற்றலை தன்னுடைய வழியில் கற்பனையாக, கதையாக, இசையாக, வேலையாக, மென்மையாக, அன்பாக வெளிப்படுத்துகிறாள், அந்த மான் போல அமைதியும் அடைகிறாள். இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒருவர் விட்டுச் செல்லக் கூடியது குழந்தைகள் மட்டும் அல்லவே, நல்லவை எதுவும், வருங்காலத்தை வளமாக்கும் எதுவும் அடையாள நீட்சிகளே என்ற தொனி மௌனமாக ஒலிக்கிறது கதையில்.
           ஒவ்வொரு சொல்லாடலுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. கதையில் அம்பையின் சொல்லாடல் தங்கத்தின் பருவமடையாமை என்பதை நோயாக அல்லாமல் வித்தியாசமாகப் பார்க்கச் சொல்கிறது. அது மாற்றுத் திறனாக இருப்பதை வெவ்வேறு   வார்த்தைகளில் சொல்கிறது:
சாறு கனியும் பழத்தை போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில்.
... அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப் போல் ஒரு உயிர்  வேகம் தாக்கியது.
அவள் கை பட்டால்தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன.
தவிர தங்கத்தின் கதைகள், அவள் இருப்பு எல்லாமே குழந்தைகளுக்கு இதமாக உள்ளன. அம்பையின் இந்த சொல்லாடல்கள் எல்லாமே தாய்மை என்பதை வெறும் உடல் சார்ந்த விஷயமாகப் பார்ப்பதை கேள்விக்குட்படுத்துகின்றன. உளப்பகுப்பாய்வில் Motheror என்ற வார்த்தை உபயோகப்படுத்தப் படுகிறது. குழந்தையின் உடல், உளத் தேவைகளை யார் அக்கறையோடு பராமரிக்கிறாரோ அவரே motheror - அவர் உடல் பூர்வமாக அம்மாவாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆக கதையின் இணைபிரதி தாய்மை குறித்த கருத்துக்களையும் மறுபார்வைக்கு உட்படுத்துகின்றது.
          ''இப்படி உடம்பு திறக்காம..." என வருத்தப்படும் உறவுக்கு தங்கம் இவ்வாறு பதில் அளிக்கிறாள்:
ஏன், என் உடம்புக்கு என்ன? வேளாவேளைக்குப் பசிக்கலையா? தூக்கமில்லையா? எல்லா உடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்குது. அடி பட்டா வலிக்குது. ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தா சீ வடியுது. சோறு தின்னா செரிக்குது. வேற என்ன வேணும்?
அந்த கேள்வி நமக்கும் தான்
 

Monday, 1 November 2010

யாராக இருக்கிறாள்?


குளிரும் கம்பிகளில்
முகம் வைத்தபடி
சிறுமி ஒருத்தி
கடும் மழையில்
தனித்து  நிற்கிறாள்.

மழை 
ஆயிரம் குமிழ்களாய்
பூத்து மறைவதை
உற்று நோக்கி
தன்னை மறக்கிறாள்.

பின்மாலை நேர மழை
வண்ணக் குடைகளாய்
ததும்பிச் செல்ல
பரவசம் இலைச் சொட்டாய்
அவள் இதயமெங்கும்.

வீட்டின் உள்ளே
திரும்பிப் பார்த்துவிட்டு
தவிர்க்கவியலா உந்தலோடு
உள்ளும் புறமும் நனைய
கம்பிகளூடே கை நீட்டுகிறாள்.

மழை - சிதறல்களாய்
உள்ளங்கைகளில்
பட்டுத் தெறிக்கும்
அந்த இடி, மின்னல் கணத்தில்
அவள் யாராக இருக்கிறாள்?