Sunday, 7 November 2010

புத்தகம்-3: காட்டில் ஒரு மான்


             அம்பையின் கதைகள் பல அடுக்குகளால் ஆனவை. அவை சித்தரிக்கும் உலகின் குறுக்கு வெட்டில் சர்வ சாதாரணமாக மரபைக் கலைத்துப் போடலும், புதிய அழகியலும், துணிவும், தர்க்கமும், உண்மையும் இழையோடும். அவரது காட்டில் ஒரு மான் தொகுதியில் உள்ள கதைகளும் அப்படி எழுதப்பட்ட கதைகள்தான். தொகுப்பில் உள்ள அடவி கதையில் உள்ள மாய யதார்த்தம் (magic realism) மட்டும் ஒரு புதிய எழுத்து உத்தி. ஆனால் இந்த பதிவு பேசப்போவது தொகுதியின் தலைப்புக் கதையான காட்டில் ஒரு மான் குறித்துதான்.
            காட்டில் ஒரு மான் கதையின் தளம் அதிகம் பேசப்படாத ஒரு தளம். ஒரு குறிப்பிட்ட உடல் வேறுபாட்டை சமூகம் பார்க்கின்ற பார்வையை, அதை சரிப்படுத்த சமூகம் அப்படியுள்ள மனிதர்களை படுத்தும் பாட்டை, தொடர்ந்து அந்த உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பதை, அவ்வேறுபாட்டை அந்த உயிர் வேறு விதங்களில் ஈடு செய்யும் திறனை யோசிக்கத் தவறுவதை படம் பிடிக்கிற கதை. இத்தனையையும் கதை தட்டையாகப் பேசாமல், இருளும், ஒளியும், காடும், நிலவும், மானும், குழந்தைகளும், கதை சொல்கிற அத்தையும் அமைதியான நீர்நிலையில் சலனம் ஏற்பட்டு மாறுகிற பிம்பங்கள் போல மறைந்து, ஒளிர்கிற கதை.
            தங்கம் அத்தை பற்றிய  குழந்தைப் பருவ நினைவுகளை அவரது மருமகள் வள்ளி நினைவுகூர்வதாக கதை இருக்கிறது. தங்கம் அத்தை பற்றிய ஆரம்ப நினைவுகள் கவித்துவமும், உணர்ச்சியும், மாயாஜாலமும், மென்மையும் கொண்ட அற்புத கதைசொல்லி  அவள்  என்பதாக இருக்கிறது. அதோடு அவள் ஹார்மோனியம் இசைக்கவும், பாடவும் கூடிய ஒருவள். ஆனாலும் அவளை மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் அனுதாபம் இருந்தது. அவள் பருவம் அடையவில்லை என அறிகிறார்கள் வீட்டுக்குழந்தைகள். ஆனால் அவர்களால் அதை புரிந்துகொள்ள
முடியவில்லை.எல்லோரையும் போலவே அவள் தோற்றமளித்தாள்.
           வீடும், சமூகமும்  தங்கத்தின் உடல் வேறுபாட்டை நோயாகவே பார்த்தது. அவள் உடலைக் 'குணப்படுத்த' அத்தனை வகை மருத்துவமும் பரிசோதிக்கப்பட்டன. பூசைகள் செய்யப்பட்டன. பயந்தால் ஏதாவது நடக்கலாம் என கரிய போர்வை போர்த்திய உருவம் அவள் மேல் பாய்ந்ததில் துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க அவள் விழும் வரை, "என்னை விட்டுடுங்க, என்னை விட்டுடுங்க'' என அவள் கதறும்வரை சமூகம் அவளைப் பரிசோதனை எலியாக்கியது. பின் அவள் கணவருக்கு வேறு பெண் பார்ப்பது ஆரம்பிக்க அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். பின் சமாதானம் ஆகி கணவர் மணப்பதை ஏற்று, அவளே பெண் பார்த்து வைத்து வாழ்கிறாள். அது அவளுக்கான வாழ்வியல் நிர்பந்தம் என்பது வெளிப்படை.
           ரோஸ்மேரி  கார்லாண்ட் என்ற ஆய்வாளர் அவரது அசாதாரண உடல்கள் (Extra ordinary Bodies) என்ற புத்தகத்தில் இலட்சியமயமாக்கப்பட்ட விதிகளில் இருந்து குறைபட்ட எந்த உடல்சார் கூறும் சரிசெய்யப் படவேண்டும் அல்லது நீக்கப் படவேண்டும் என்பதாகவே மாற்றுத்திறன் பற்றி, இன்றைய உலகின் வரையறையை, மருத்துவ மாதிரி(medical model) உருவாக்கியிருக்கிறது என்கிறார். கதையில் சமூகத்தின் இலட்சிய விதியாக இனப்பெருக்கத் திறன் அல்லது வம்ச விருத்தி உள்ளது. அதன் காரணமாக தங்கத்தின் உடல் 'குணப்படுத்தப்பட'  மருத்துவ, மந்திர முயற்சிகள் -- போதும் இந்த சித்திரவதை -- என்று அவள் அலறும் அளவு  மேற்கொள்ளப்படுகின்றன, அவை பலிக்காதபோது அவள் நீக்கப்பட்டு, அதாவது மனைவியாக நீக்கப்பட்டு, கணவன் மறுமணம் செய்கிறான்.
           சமூகத்தின் இந்த பார்வை மாற்றுத் திறனாளிக்கு அநீதி இழைப்பதோடு அவர் அவரது சுயம் குறித்து கொண்டுள்ள பார்வையையே மாற்றுகின்றன. அவர் போராடித்தான் தன் சுயத்தை மீட்டுக் கொள்ள முடிகிறது. இது கதையுள் வரும் கதையாகக்  கவின்மொழியில் உருவகமாகக் கூறப் பட்டுள்ளது. அந்த கதை தங்கத்தால் குழந்தைகளுக்குக் கூறப் படுகிறது. அது பயமே இல்லாத காட்டில் -- நெருப்பு, ஊடுருவாளர்கள், வேட்டைக்காரர்கள் போன்ற பிரச்சனைகளை அது    கொண்டிருந்தாலும் கூட -- வாழும் ஒரு மான் பற்றியது. அங்குள்ளவர்கள் அதற்கு பழக்கம் என்பதால் அது சுதந்திரமாகவே உணர்ந்தது. எப்படியோ அது வழி தவறி வேறோர் காட்டில் சிக்கிக் கொள்கிறது. பழக்கமின்மை, இருள், தனிமை, வேடன் ஒருவன் மாமிசம் உண்ணும் காட்சி ஆகியவை அதை அதீதமாகப் பயமுறுத்துகின்றன. பின் பவுர்ணமியன்று அந்த மாயம் நிகழ்கிறது. நிலா வெளிச்சம் எல்லாவற்றையும் துலங்க வைக்க, காடு பழகிப் போகிறது. மானின் உச்ச பயம் விலகி அமைதியாக உணர்கிறது. கதையின் மானோடு தங்கத்தை எளிதாகவே இனம் காண முடியும். அவள் குழந்தையாக இருந்தபோது பாதுகாப்பாகவே உணர்ந்திருக்க முடியும். ஆனால் பெரியவர்களின் உலகம் வேறுபட்டது. அது தங்கத்தின் வளர்ந்த பெண் உடல் இனவிருத்தி செய்யக்கூடியதாக வேண்டும் என்ற கட்டளையைக் கொண்டது. அது தங்கத்தை பயமுறுத்தியிருக்க வேண்டும். இந்த அகச் சிக்கல் சுயம் தெளிந்த ஒரு கணத்தில் காணாமல் போய் பெரியவர்களின் உலகம் என்ற புதிய காட்டை சந்திக்க வலுப் படுத்தியிருக்க வேண்டும். அதனாலேயே அவள் தன் படைப்பாற்றலை தன்னுடைய வழியில் கற்பனையாக, கதையாக, இசையாக, வேலையாக, மென்மையாக, அன்பாக வெளிப்படுத்துகிறாள், அந்த மான் போல அமைதியும் அடைகிறாள். இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒருவர் விட்டுச் செல்லக் கூடியது குழந்தைகள் மட்டும் அல்லவே, நல்லவை எதுவும், வருங்காலத்தை வளமாக்கும் எதுவும் அடையாள நீட்சிகளே என்ற தொனி மௌனமாக ஒலிக்கிறது கதையில்.
           ஒவ்வொரு சொல்லாடலுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. கதையில் அம்பையின் சொல்லாடல் தங்கத்தின் பருவமடையாமை என்பதை நோயாக அல்லாமல் வித்தியாசமாகப் பார்க்கச் சொல்கிறது. அது மாற்றுத் திறனாக இருப்பதை வெவ்வேறு   வார்த்தைகளில் சொல்கிறது:
சாறு கனியும் பழத்தை போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில்.
... அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப் போல் ஒரு உயிர்  வேகம் தாக்கியது.
அவள் கை பட்டால்தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன.
தவிர தங்கத்தின் கதைகள், அவள் இருப்பு எல்லாமே குழந்தைகளுக்கு இதமாக உள்ளன. அம்பையின் இந்த சொல்லாடல்கள் எல்லாமே தாய்மை என்பதை வெறும் உடல் சார்ந்த விஷயமாகப் பார்ப்பதை கேள்விக்குட்படுத்துகின்றன. உளப்பகுப்பாய்வில் Motheror என்ற வார்த்தை உபயோகப்படுத்தப் படுகிறது. குழந்தையின் உடல், உளத் தேவைகளை யார் அக்கறையோடு பராமரிக்கிறாரோ அவரே motheror - அவர் உடல் பூர்வமாக அம்மாவாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆக கதையின் இணைபிரதி தாய்மை குறித்த கருத்துக்களையும் மறுபார்வைக்கு உட்படுத்துகின்றது.
          ''இப்படி உடம்பு திறக்காம..." என வருத்தப்படும் உறவுக்கு தங்கம் இவ்வாறு பதில் அளிக்கிறாள்:
ஏன், என் உடம்புக்கு என்ன? வேளாவேளைக்குப் பசிக்கலையா? தூக்கமில்லையா? எல்லா உடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்குது. அடி பட்டா வலிக்குது. ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தா சீ வடியுது. சோறு தின்னா செரிக்குது. வேற என்ன வேணும்?
அந்த கேள்வி நமக்கும் தான்
 

11 comments:

Vel Kannan said...

நன்றி சைக்கிள் ... ஆகச்சிறந்த பதிவு இது.
முதன் முதலில் சுந்தர ராமசாமி - அவர்களின் உரையாடலில் 'காட்டில் ஒரு மானை' பற்றி நெடு நேரம் பேசினார். பின்பு தான் நான் அறிந்தேன்
(அம்பை என்ற எழுத்தாளரை பற்றியும்) . படித்தேன். கலங்கி போனேன். பெரும் தாக்கத்தை உணர்கிறேன் இன்றுவரை. பின்பு , அம்பையின் உரையாடல் நிகழ்வொன்றில் அவரை சந்தித்தேன். அவரிடம் என் மனதில் ஏற்ப்பட்ட தாக்கத்தை பகிர்ந்து கொண்டேன். (அம்பை, இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் ?). உங்களின் பதிவில் இறுதியில் பகிர்ந்து கொண்ட கேள்விகளை படித்த போது என்னுள் பலப்பல... தகர்ந்து நொறுங்கின. மீண்டும் சொல்கிறேன் உங்களின் இந்த பதிவு , மிக சிறந்த பதிவு. நினைவு படுத்தியமைக்கும் கதை குறித்து தெளிந்த சிந்தனையை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றியும் அன்பும். ஒரு கேள்வி : காட்டில் அந்த மான் இன்னும் அலைந்து கொண்டிருப்பதாகவேபடுகிறது சைக்கிள்.. அப்படித்தானா .. ?

சைக்கிள் said...

உணர்ச்சிபூர்வமான கருத்துப் பகிர்வுக்கு நன்றி திரு.வேல்கண்ணன். அம்பையின் கதைகள் ஒவ்வொன்றை பற்றியும் நிறைய எழுத முடியும். இதே தொகுப்பில் உள்ள 'அன்னங்களும் பட்சிகளும் நெய்யப்பட்ட ஒரு ரோஜா வண்ணப் புடவை' கதையும் இணை இழை கொண்டதுதான். அவசரத்தில் விட்டுவிட்டேன். தவிர பிரபஞ்சனின் 'மரி என்றொரு ஆட்டுக்குட்டி' கதை கூட ஒரு சந்திப்பு புள்ளிதான். படிக்கவில்லையெனில் முயலுங்கள். அம்பை SPARROW திட்டங்களில் தீவிரமாக இருப்பார். காட்டில் அந்த மான் வீட்டைப் பெற்று விட்டதாகவே தோன்றுகிறது எனக்கு.

கீதா இளங்கோவன் said...

அருமையான திறனாய்வு மிருணா. `பொது' அல்லாத எந்த சங்கதியையும் - அது உடல் வேறுபாடாகட்டும், பாலியல் தேர்வாகட்டும், வாழ்கை முறையாகட்டும் - குறையாகவும், கேலியாகவும், விழுமியக் கேடாகவும் பார்க்கும் மனப்போக்குதான் இந்த சமுதாயத்தின் பொதுப்புத்தி. இதை கேள்வி கேட்கும் எவரையும் வன்மத்தோடு காயப்படுத்துவதும், புறக்கணிப்பதும், கேலி பேசுவதும் தான் நடக்கிறது. அம்பையின் காட்டில் ஒரு மான் போன்ற முயற்சிகள் இந்த போக்கை மாற்ற, சிந்திக்கச் செய்ய சிறிதாவது உதவும் என்று நம்புகிறேன். நல்ல கட்டுரையை வசித்த நிறைவு தந்த என் தோழிக்கு வாழ்த்துக்கள்.

vasan said...

/அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப் போல் ஒரு உயிர் வேகம் தாக்கியது.
அவள் கை பட்டால்தான் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன./

தாய்மைக்கு இதைவிட வேறு என்னெ வேண்டும்?
மானுட‌ன், மானுட‌ ஒப்பீடு ஈட‌ற்ற‌து, சைக்கிள்.

சைக்கிள் said...

# நன்றி தோழி. வேறுபாடு என்பதை எதிரியாக அல்லாமல் இன்னொன்றாகப் பார்க்க பழகாததின் விளைவுகள்தான் அவை. அந்த விழிப்புணர்வை போராடித்தான் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது உங்கள் அக்றிணைகள் குறும்பட முயற்சி போல. தொடர் முயற்சி மட்டுமே அவை தரும் சோர்வுக்கு மாற்று, இல்லையா?
# புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி திரு.வாசன்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல பகிர்வு..அம்பையின் எழுத்துக்களை இதுவரை படிக்கவில்லை..இனி படிக்கிறேன்

சைக்கிள் said...

நன்றி தோழர்.படிங்க.

சுந்தர்ஜி said...

அம்பையின் கதைகள் எப்போதுமே புதுக் கோணங்களையும் புதிய பரிமாணங்களையும் பகிர்பவை.

காட்டில் ஒரு மானையும் படிக்கவில்லை. படிப்பேனா என்றும் தெரியவில்லை.

உங்கள் படிப்பார்வம் வாசிக்க ஆசைகொள்ளும் அனைவருக்கும் ஒரு சுடராய் அசைகிறது.

உழைப்புக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துக்கள்.

சைக்கிள் said...

நன்றி தோழர்.

நிலா மகள் said...

உங்கள் வலைப்பூவின் தாமரை பூத்த தடாகத்தின் துல்லியமும் அழகும் போலவே எழுத்துக்களும் ஆழமாக... இறங்கிக் கால் நனைக்க ஆசையாக... காட்டிலொரு மானை தேடிப்பிடிக்கும் (படிக்கும்) விழைவை தந்தமைக்கு நன்றி!

சைக்கிள் said...

நல்வரவும்,நன்றியும்,அன்பும்.உங்கள் தளமும் அருமை.