Wednesday, 24 November 2010

ஹேம்லினின் எலிகள்

கொடுங்குற்றமும் தண்டனையும் இனிப்பும்
குழந்தைகளின் புகைப்படங்கள் ஊடாக
சுழன்று கொண்டே போயின முடிவற்று.
தினசரிகளில் வன்பாலுறவும்  குரூரக்கொலையும்
முட்டிப்புரளும்  பெருவன்ம வெள்ளக்காடுகளாய்
இன்றைய தலைப்புச் செய்தியாகிவிட.
ஹேம்லினின்  எலிகளாய் நுகர்வு மந்தையை
மதிமயக்கி  இசை பாடும் பைப்பர் ஊடகங்கள்
காமத்தைப் பொருளாக்கி வக்கிரத்தை விலையாக்கும் -
அறுவடைத் துயரையும் காசாக்கி பையில் போடும்.
சித்திரமாய், நகைச்சுவையாய், கலையாய், எழுத்தாய்
இச்சையைக் கவர்ந்திழுத்து அறிவைப் புறமொதுக்கும்
பெரும் விந்தை சந்தை மாயக் காட்சிகள் நொடிதோறும்...
அத்தனைக்கும் விலை கொடுத்து வீட்டில் இருத்தி
இன்று பிள்ளைகளைப் பறிகொடுத்துப் பரிதவித்து
காரண காரிய தொடர்புக் கவலை துறக்கும் நாம்...
ஆதார இச்சை மனித இயல்பென்றால்
கட்டற்ற இச்சை எதனின் இயல்பு?
காதலற்ற காமம் பிறதின்மேல் வக்கிரமெனில்
காதலும் அன்பும் வாங்குவது எவ்விடம்?
நுகர்வுச் சந்தையில் வாடிக்கையாளர் தேவைக்குப் பொருள்.
யோசிக்கும் நம் தேர்வுக்குப் பொருள்...?

9 comments:

Vel Kannan said...

உங்களின் வரிகள் மனதிற்குள்
பெரும் பிரளயத்தை ஏற்படுத்துகிறது தோழி ...
(தற்போது வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை..
சில நாட்கள் கழித்து வருகிறேன் )

திருநாவுக்கரசு பழனிசாமி said...

காதலையும்,சுயத்தையுமே பாடும் என் கவிதைகள் குறித்து நெருடல் ஏற்படுகிறது இதை வாசிக்கையில்..

சுந்தர்ஜி said...

திரவத்தின் கொதிநிலை தாண்டிய கொப்பளங்களைக் காண்கிறேன்.இன்றென் மனநிலையை இந்தக் கவிதை பாடுவது என் கவிதையாகவும் உரிமை கொண்டாடத் தோன்றுகிறது. பொறுப்புணர்வுக்கு என் சிரம் தாழ்கிறது.

சுந்தர்ஜி said...

அந்தக் குழந்தை சுட்டும் விரலுக்கு எதிரே நானும் நிற்கிறேன் கழிவிரக்கத்துடன்.படத்தின் ஆழம் உலுக்குகிறது.சொல்லவிடுபட்ட்தால் மீள்வருகை.

க.மு.சுரேஷ் said...

? ? ?
"உங்கள் கேள்வி எங்களிடமும்..
தோன்றி மறையும் கானல்நீராய்..
குழந்தையின் விரல் முன் நாங்கள் குற்றவாளிகள்..
ஓடும் எலிகளில் யோசித்துக்குகொண்டே ஓடும் எலி நான்."

"ஏதும் சொல்லாமல் ??? உடன் நான்."

vasan said...

இச்சை, இல‌ட்சிய‌ம், பெரிதென ஆசை கொள், க‌ற்ப‌னையே அற்ப‌னையும் அரிய‌ணை ஏற்றும், அத்த‌னைக்கும் ஆசைப்ப‌டு, அவ‌னின் பாவ‌ம், செல்வ‌ம் ஆன‌ல்ந‌ம்மின் செல்வ‌ம் ந‌ம் விய‌ர்வை. அடுத்த‌வ‌ன் பாக்க‌ட்டிலிருந்து எடுத்த‌ல் எவ்வ‌ள‌வு க‌டின‌ம். அவனைப் பார், சினிமாவில் பார், சீரிய‌லில் பார், எடுத்த‌வ‌ன் தான் கெழிக்கிறான், கொழுக்கிறான், ர‌சிக்கிறான், சிரிக்கிறான். கொடுத்த‌வ‌ன் ஏமாளி, எலிக‌ளெல்லாம் பெண்க‌ளாய் போனால், ஏக்ஸ் ஸ்பிரேதான் இப்பொது பைப்ப‌ர். க‌டைக‌ளில் இல்லை ஸ்டாக்.‌

நிலாமகள் said...

ஆதார இச்சை மனித இயல்பென்றால்
கட்டற்ற இச்சை எதனின் இயல்பு?

சுட்டு விரல் நீட்டிய குற்றச்சாட்டு திகைக்கச் செய்கிறது... சிந்திக்கவும் சொல்கிறது.

Vel Kannan said...

ஏதோ ஏதோ சொல்ல வேண்டும் என்று இருந்தேன். ஓரளவுக்கு சுந்தர் ஜி வெளிபடுத்தியிருக்கிறார்
தி.பழனிச்சாமி சொன்னது போல் நெருடல் அல்ல குற்ற உணர்வே வந்துவிட்டது எனக்கு. (சில நாட்கள் பேனா பிடிக்காமலும் இருந்தேன்). சொல்லியும் மாளாது என்றுதான் தோன்றுகிறது தோழி. என் செய்வேன் ... ?

சைக்கிள் said...

எதுவும் சொல்ல இயலவில்லை இன்னும். உணர்வுபூர்வமாக இருப்பதை அறிவுக்கு உட்படுத்தினால் ஒழிய நம் பொழுதுபோக்குத் தேர்வுகள் நம்மை வாழ விடாது.கருத்துப் பகிர்வளித்த அனைவருக்கும் நன்றி.