Monday, 29 November 2010

பனிப் பூக்கள்


குளிரால் நிரம்பியிருக்கும் இக்காலை
அறியாமையின் பச்சையம் துளிர்த்திருக்க
பிரியத்தின்  பூக்கள்  உவந்தளிக்கப்பட்ட
முன்னொரு வெயில் ஒளிந்த அதிகாலையாக.

தூய்மையின் புதுச்சாயல்  பொழுதில்
பெறப்பட்டக்  கொத்து மஞ்சள் பூக்களில்
சிறு கண்ணாடிகளைப் பதித்திருந்தது பனி
பிரியத்தின் உற்சாகத்தைப் பிரதிபலித்து.

பின் ஒரு பல்வடிவ  உருக்காட்டியின்
முடிவிலா வசீகர வண்ணங்களோடு
மாறிக் கொண்டே போயின  நாட்கள்...
இன்னதென்று வகை அறியாப் புதிராக.

யாரும் கண்டிராத அதிசய நெய்வில்
உணர்வுகள் கொதித்துத் தெறித்தன 
அன்பின் அதி  நுட்ப மென்னிழைகள்
வலியின்  அடர்த்தியில் தனித்தொளிர.

என்றாலும் அந்த அதிகாலை நினைவுகள்
விளங்கவியலா வாழ்வு  கிளை பரப்பும்
நேசத்தின்  அளப்பரிய முற்றத்தில்
ஆயிரம்  இள மஞ்சள் பூக்களாய்...   

12 comments:

சுந்தர்ஜி said...

இருளும் ஒளியும் பிரியாத அதிகாலையில் நனைத்தது கவிதை.வடிவமும் சொற்களும் அற்புதம்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ஏகாந்தம்

Vel Kannan said...

ஏகாந்தம்... சுகந்தம்.. அருமை.

சைக்கிள் said...

பகிர்வுக்கு நன்றி திரு: சுந்தர்ஜி,திருநாவுக்கரசு,வேல்கண்ணன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை, சார்!

dineshkumar said...

படரும் பனித்துளி சுடர்விடும் சூரியனின் சுகந்த காலை
அழகா கோர்க்கப்பட்ட கவிதை வரிகள் அற்புதம் சார்.......

சைக்கிள் said...

# நல்வரவும்,பகிர்வுக்கு நன்றியும் திரு.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி.
# முதல் வரவுக்கும், உணர்வுப் பகிர்வுக்கு நன்றியும் திரு.தினேஷ் குமார்.

சிவகுமாரன் said...

உங்கள் சைக்கிள் பச்சைப் பசேலெனும் காதலெனும் வனாந்திரத்துக்கும் , வக்கிரக் காமம் நிறைந்த மாயைஎனும் பாலைக்கும் அழைத்துச் செல்கிறது.
ஹேம்லினின் எலி- எனக்கு பொருள் புரியவில்லை நண்பரே. இது போன்ற கவிதைகளை புரிந்து கொள்ள எனக்கு வெகு நேரம் ஆகிறது. ரொம்ப high level கவிதையா இருக்கு.

சைக்கிள் said...

நீங்கள் சொல்வது போல இந்த கவிதை அன்பை நினைவுகூர்வதாகவும் 'ஹேம்லினின் எலிகள்' வக்கிர காமத்தை கேள்விக்குட்படுத்துவதாகவுமே இருக்கிறது. ஹேம்லின் என்பது உலக புகழ் பெற்ற சிறுவர் கதை மற்றும் பாடலில் வரும் நகரம். மிகுந்த எலித் தொந்தரவுக்குள்ளாகும் அந்நகரத்தினருக்கு, pipe வாசிக்கும் ஒரு கலைஞன் இசை மூலம் எலிகளைக் கவர்ந்து கடலில் மூழ்கடித்து உதவுகிறான்.ஆனால் நகரத்தவர் அவர்கள் வாக்களித்த தொகையை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். சினமடையும் அவன் நகரக் குழந்தைகளை இசையால் ஈர்த்து கடலுக்குள் எங்கோ கொண்டு சென்று விடுகிறான். நாமும் விளம்பர போதையில் மயங்கி உடலை பிரதானப்படுத்தும் நுகர்வுக் கலாச்சாரத்தில் குழந்தைகளை - கோவை நிகழ்வு போல - பலிகளாக்கி விடுகிறோம். நம் முயற்சிதான் நம் வாசிப்பு level நண்பரே. கவிதையின் நோக்கம் ஒரு சிந்தனையை, ஒரு மன அசைவை தோற்றுவிப்பது தான்.

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

சிவகுமாரன் said...

நன்றி நண்பரே. ஹெம்ளினின் எலி நினைவுக்கு வந்துவிட்டது. Bagpiper poem
என்று சொல்வோம். நிறைய எழுதுங்கள். என் வாசிப்பின் தரத்தை உயர்த்திக் கொள்கிறேன்/

Ramachandran said...

ethan thaavara peya enna?
What is the botanical name for this?