Tuesday, 28 December 2010

குவளைகளில் கொதிக்கும் பானம்


வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்
ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.
நகர்த்த இயலாத சுடு வெயில் போல
அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம்.
கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில்
வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது 
குவளைகளில் கொதிக்கும் பானம்.
காணாத காட்சி என கண்கள் சொல்ல
கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்
ஒழுங்கற்றுப் பரவும்  வண்ணங்களைத் தீட்டி.
தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற
தாளில் துலங்கும் காட்சிகளும்
துரித நடனம் ஆடும் குவளைகளும்
ஒன்றின் மேல் ஒன்றாய்  மிகச் சரியாய்.
வெந்து தணிகிறது வெப்பம்.
முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்
நிதானமாய் - பிறிதொரு வேளை 
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.

நாகனாகுளம்


நாகனாகுளம் தெரிகிறது.
பறவைகளும் இல்லாதொரு அமைதியை
நிரப்பி இருக்கிறது தளும்பும்  பரப்பு.
சிறு கல்லாய் இருப்பைக் கரைத்து
நீருள் மூழ்கும் தேடல் மனம்
நட்சத்திரப் புள்ளிகள் மினுங்கி மறையும்
மயக்கும்  இருள் ஒளி ஆட்டத்தில்
சுமைகள் கழன்று சிறகுகள் பெறும்.
நீரில் இப்போதொரு சிறு கல் பறவை
கண்கள் முழுதும் தண்மை பூசி
நீர்பரப்பெங்கும் அமைதியை வட்டமிடும்.
மெல்லக் கரைந்திடும் அகம்  - துரத்தும்
நேற்று, இன்று, நாளை மறந்து...
பரப்பில் மினுங்கும்  பளிங்குப் பாசியில்
ஊடுருவ இயலா பல் நிலவைச் சிதறி
இனி போகும் பாதையெல்லாம் நினைவுகளில்
நட்சத்திரங்களோடு சிறு புன்னகையையும்
மீட்டுக் கொள்ளும் நாகனாக் குளம் -

Friday, 24 December 2010

புத்தகம் 5: அறிமுகம் - Text book Regimes: A Feminist Critique of Nation and Identity - V.Geetha & SalaiSelvam

      குழந்தைகளுக்காகவே நாங்கள் வாழ்கிறோம் என உரத்து முழங்கும் பெற்றோர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வமுடையவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, யோசிக்க வேண்டிய, மறு ஆய்வு செய்யக்கூடிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது இந்நூல். தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல் மற்றும் குடிமை நூல்களில் வெளிப்பிரதியாகவும், மறை பிரதியாகவும் வெளிப்படுத்தப்படும் அடையாளம் மற்றும் கருத்தாக்கம் நுணுக்கமாக அலசப் பெற்றுள்ள இந்நூல் குறித்த ஒரு சுருக்கமான பார்வையே இக்கட்டுரையின் நோக்கம்.

      தமிழ் - இன்று - தன் சமூக நீதி அடையாளத்தை இழந்து ஒரு கலாச்சார மற்றும் அரசியல் சொல்லாடலாக மாறிவிட்டது என்பதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக, பாடநூல்கள் - தமிழ்நாட்டுப் பாடநூற்கழக வெளியீடுகள் - பெரியாரைப் பேசுகையில் அவரது சுயமரியாதைகருத்து குறித்துப் பேசுகின்றன. ஆனால், திருமணம், இனப்பெருக்கம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த அவரது தீவிரமான கருத்துகளைப் புறக்கணிக்கின்றன.சுயமரியாதைகழக சொல்லாடல்கள் வழி தமிழ்த் தூய்மையாக மாற்றம் பெற்று அது ஆணின் வீரத்தாலும், பெண்ணின் கற்பாலும் அடையாளப் படுத்தப்பட்டுவிட்டது. அதேசமயம், இச்சொல்லாடல்கள் தமிழ் விலைமகளிர் பாரம்பரியத்தோடு தொடர்புடைய இசை மற்றும் நடனத்தை விதந்தோதுகின்றன. அழகு மற்றும் மதிப்பீடு, கலை மற்றும் கற்புக்கு இடையேயான ஊசலாட்டமே மொழிப் பாடங் களில் வெளிப்படுகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
      காலவறையறை அற்றது தமிழ் என்ற பெருமித உணர்வே தமிழ்ப் பாடநூல்களின் அடிநாதமாக உள்ளது. இன்றின் பொருண்மைத் தன்மை, வரலாற்றுத் தொடர்ச்சி, சமூகப் பரப்புகள் கணக்கில் எடுக்கப்படாமல் ஒரு இலட்சியமயமாக்கப் பட்ட தமிழ் இருப்பே, பாட நூற்களின் கவனப் பொருளாக உள்ளது என்பது நூலில் பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு நிறுவப்படுகிறது. உதாரணமாக, ஒரு பாடம், இயற்கை செயல்பாட்டைத் துல்லியமாக தமிழ்ப்புலவர்கள் கூறுவதால் அவர்கள் அறிவியலின் முன்னோடி ஆவார்கள் என்பதை விளக்குகிறது. (X வகுப்பு, பாடம்-7). ஒரு நீதி அல்லது அழகியற் கருத்தைக் கூறுவதற்கான வழியாக உள்ள ஒரு சித்திரிப்பை அறிவியல் விளக்கமாகக் கொள்ள முடியுமா என்ற கேள்வி ஆய்வு நூலில் எழுப்பப்படுகிறது. அதோடு, அறிவியல் கூட, தமிழ் அறிவால் சுவீகரிக்கப்படும்போது அதற்கான அங்கீகாரத்தைப் பெறுகிறது என்பதையும் இந்நூல் சுட்டுகிறது.
      ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’, தமிழ்ப் புரவலன் குமணன், தமிழில் இருந்தே சமஸ்கிருதம் தோன்றியது என்ற கருத்தினால் கவனிக்கப்படும் தேவநேயப் பாவாணர், தமிழில் எழுதப்பட்ட பல மத நூல்கள், தமிழ் வீரம், தமிழ் வணிகம் என பல்வேறு பிம்பங்கள் பாடப்புத்தகங்கள் வழி ஒருங்கிணைந்து தமிழ்ப் பெருமிதத்தை உரத்து ஒலிப்பதை நூல் நயம்பட நிறுவுகிறது.
      தமிழ் அடையாளத்தோடு தேசிய அடையாளமும் பாட நூல்களில் கவனம் பெறுகிறது. தமிழ்க் கடமையும், இந்தியத் தன்மையும் கொள்வது என்பதே தமிழராக இருத்தலாக இப்புத்தகங்கள் அடையாளப்படுத்துகின்றன. இது பற்றி வ.கீதா தன் முன்னுரையில் இந்தியத் தன்மையை வடிவமைக்கும் ஒரு சிக்கலான உறவு, சாதி வகுப்பு, பாலினம் மற்றும் மத அடை யாளங்கள் ஒருபுறமாகவும், விதிபூர்வமாக இந்தியர்ஆனால் பொதுவாக குறிப்பிட்ட மாநிலத்தவர்என்பது இன்னொரு புறமாகவும் இருப்பதற்கு இடையில் நடக்கும் ஊடு விளையாட்டு, பாடப் புத்தகங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளதுஎனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
     சாதி குறித்து தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல்என்று பாடப் புத்தகங்களின் முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத் தீவிரமும் நேர்மறைச் செயல்பாடுகளும், சாதி குறித்த விவாதங்களும், பாதிப்புகளும் தமிழ்ச் சூழலை அதிரவைத்துக் கொண்டிருப்பதைக் குறித்த பதிவற்று மௌனம் காக்கின்றன பாடப் புத்தகங்கள். அதே வேளையில், சாதி, மறைமுக விளையாட்டைப் பாடப் புத்தகங்களில் ஆடுகிறது என்பதைச் சுட்டும் விதமாக அவற்றில் உள்ள ஆளுமைகளின் தேர்வு உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த ஆய்வு நூல். பெரும்பாலும் ஆளும் கட்சியின் அப்போதைய அரசியல் அல்லது சாதிசார்பே ஆளுமையைத் தேர்வு செய்யும் காரணியாக உள்ளதும் விவாதிக்கப் படுகிறது. மேலும், தலித் தலைவர்களது செயல்பாடுகள் மற்றும் சாதி அடையாளங்கள் மறுக்கப்படுவதும் சுட்டப்பெறுகிறது.
     பாலினப் பாகுபாடு, பெண் குறித்த புளித்துப்போன பார்வை அனைத்துப் பாடங்களிலுமே, மிகக் குறைந்த விதிவிலக்குகளோடு இடம் பெறுவது விவாதிக்கப்படுகிறது. எ-டு: ஒளவையார்-வீடு அல்லாத சமூகப் பாத்திரத்தை எடுத்தால் அவள் பெண்மையை மறுத்தவளாக இருத்தல் வேண்டும். அப்படி ஆனாலும் கூட, அது வியக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு பெண், அதுவும் கூன் விழுந்த முதியவள் எப்படி கவித்திறமும், சமூக அங்கீகாரமும் உடையவளாக இருக்கிறாள்! என்பது ஒரு ஆணின் பேச்சாகப் பத்தாம் வகுப்பு பாடத்தில் உள்ளது. மூன்றாம் வகுப்பு பாடத்தில், பெண் எப்படியாவது படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவள் கையில் ஒரு குழந்தை உள்ளது. அக்குழந்தையை அவள் கவனித்துக்கொள்வது என்பது அவள் பள்ளி செல்வதற்கான தடையாகக் காட்டப்பெறுவதில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்வது பெண்ணின் இயற்கையாகவும், அவள் நினைத்தால் படித்துவிடலாம் என்பது போலவும் நாம் நம்ப வைக்கப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
      ஊனமுற்றோர் குறித்த இயல்பான பார்வை இல்லை. அவர்களது மாற்றுத் திறனை அங்கீகரிக்காமல், அவர்களைச் சாதாரண மனிதர்களாக்க முயற்சிப்பதும், அதிமனிதர்களாக இருப்பதை மட்டும் கொண்டாடுவதுமாக சித்திரிப்புகள் உள்ளதை ஆய்வு நூல் பேசுகிறது. அதனோடு, ஆங்கில நூல்கள் இருவிதமாக உள்ளன. பாரம்பரிய ஆங்கில மொழி கற்பித்தலை மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், தொடர்பு ஆங்கிலத்தைக் கற்பித்தலை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கையாளுகின்றன. வகுப்பு வித்தியாசங்கள் ஆங்கிலப் பாடத்தில் மறை பிரதியாக உள்ளன. பெரும்பாலும் பாடப் புத்தகங்களின் பாத்திரங்கள் உயர்மத்திய வகுப்பினராக, வகுப்போடு தொடர்புடைய பொருட்களை அறிய வேண்டியவராக, பணம்-உடைமை பறிபோதல் கொண்ட அச்சம் கொண்டவராக உள்ளனர். அரசு நூல்களில் பெயர்கள் நம் மொழிக்கேற்ப மாற்றப் படுகின்றன. ஆனால், சூழல் அந்நியமாக உள்ளது. எ-டு: இரு விவசாயிகள் பயிராக்கம் குறித்து ஆங்கிலத்தில் உரையாடுவது.
      வரலாற்று நூல்கள் சற்றே விதிவிலக்காக தமிழின் தனித் தன்மையைப் பேசுவதில்லை. ஆனால், அவற்றின் மையமாக இந்திய தேசம் - அதுவும் நவீன இந்தியா உள்ளது. அனைத்து வரலாறுகளும், இந்தோ - கங்கை சமவெளியில் இருந்தே ஆரம் பிக்கிறது. வம்சாவழி அரசுகளே கவனத்திற்கு கொண்டுவரப் படுகின்றன. ஆண், போரால், தேசம் வெல்பவனாகவும், பெண், திருமணத்தால், தேசம் சேர்ப்பவளாகவும் விமர்சனமற்று சித்திரிக்கப்படுகின்றனர். விளைவுகள் முன்னிறுத்தப்பட்டு, காரணங்கள் விவாதிக்கப்படாமல் போகின்றன என்பது கூர் உணர்வோடு நூலில் வெளிப்படுத்தப்படுகிறது.
      குடிமையியல் நூல்களில், 1-3 வரையிலான நூல்கள், உடனடிச் சூழலைப் புரிய வைக்கின்றன. ஆனால், தொடர்பற்று, இந்திய தேசியம் 5ஆம் வகுப்பில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. மாணவரின் தனிமனிதக் கடமை வலியுறுத்தப்படும் அதே வேளையில் அடிப்படைச் சமம்குறித்த விவாதம் எழுப்பப் படாமற் போகிறது.
     புவியியல் நூல்கள் பழமையை ஒட்டியே உள்ளன. வகை மாதிரிகளே விளக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க மக்கள் காடுகளை அழிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். ஆஸ்திரேலியர்கள் இயற்கை வளங்களை அழித்துத் தொழில் முனைதல் பாராட்டப் படுகிறது. ஆனால் அங்குள்ள பூர்வக்குடி குறித்து மட்டும்  அவர்கள் ஐரோப்பியர்கள் கொண்டுவந்த நோயால் இறந்து போனதாகக் கூறப்படுகிறது! (6ஆம் வகுப்பு)
      இவ்வாய்வு நூல் காட்டும் உதாரணங்கள், கேள்விகள், வியப்புகள் அதிவிரைவாக, பல்வேறு தளம் சார்ந்து இயங்குகின்றன. தீவிர சிந்தனையையும், வாசிப்பையும், கவனத்தையும், பேரலைகளையும் எழுப்ப வல்ல இவ்வாய்வு நூலைத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையே வினாவாகக் கொண்டு முடிகிறது இந்தக் கட்டுரை.
 குறிப்பு: வ.கீதா மற்றும் சாலை செல்வம் இதற்கு முன்னால் இருந்த அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்கள் மற்றும் இப்போதும் இருக்கிற தனியார் கல்விப் புத்தகங்கள் குறித்து எழுதிய நூல் இது.                                 
- நன்றி: மாற்று வெளி  Feb 2010.

Thursday, 23 December 2010

மட்டுமே

பரவச எழில் வண்ணங்களுக்காய்
பதிந்த மென்நுட்பச் சிறகடுக்குகளுக்காய்
விரைந்த  தலை திருப்பல்களுக்காய்
வட்டக் கண்ணில் பளீரிடும் சிவப்பொளிக்காய்
கூரிய வன் அலகுக்காய்
எடையற்று மிதக்கும் பறத்தலுக்காய்
இருப்பை பளிச்சென வெளிப்படுத்தும் கூவலுக்காய்
அல்ல -
இறங்கி அமர்ந்த இடத்தை
இறுக்கமாய் பற்றியிருக்கும்
அதன் நம்பிக்கைக்காக மட்டுமே -
நான் அந்த பறவையைப் பார்த்தேன்.

தீ


பத்தாவதில் பாதி வகுப்பில்
வீட்டிற்கு அனுப்பினார்கள்.
நோய்  தின்ற உடலாய் அப்பா.
அழும் அம்மாவுக்காய்
அழுதேன் சில நேரம்.
'இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு
நடமுற ஏதும் தெரியல' என்று
தலையைப் பற்றி இழுத்து
வெடுக்கெனப் பின்னலை அவிழ்த்தாள்
பக்கத்து வீட்டம்மா.
'நாங்கல்லாம் தெருல
புரண்டு புரண்டு
அப்படி அழுதோம்'
பழம்பெருமை பேசினாள்
இன்னொருத்தி.
என் தம்பியக் கொன்னுட்டீங்களே
என நாடகமாடினாள்
எப்போதும் கண்டிராத ஒருத்தி.
வெள்ளைச் சேலை வாங்கச் சம்மதிக்காத
அண்ணன்களைப் பற்றி -
'பெரியவங்க சொல்றத
யாரு கேட்குறா
என்ன அநியாயம்!'
என்றாள் அம்மாவின் அக்கா!
ஊர்பேச்சு அறிந்த அம்மா
இன்னும் அழுதாள்
அண்ணன்களை அதட்டி.
நாவுகளில் கனிந்த வெப்பம்
தணிதற் பொருட்டு
தட்டச்சு நிறுவனம்
இயங்கிய  தெருவில்
வாசலில் தண்ணீரூற்றி
வெள்ளாடை சுற்றப்பட்டு
வேடிக்கைப் பொருளானாள்.
நாவுகளின் வெப்பம்
இடம் மாறவே செய்தது -
இப்போது இதயத்துள்
எப்போதுக்குமாய்.
எல்லாம் முடிந்து
வீட்டினுள் அம்மா
நுழையும் வேளை
நைந்த துணியாய்
இருண்டிருந்தது பொழுதும்.

Sunday, 19 December 2010

நிலை

அடித்துப் பொழிகிறது மழை.
ஆரவாரிக்கிறது கடல்
அலைகள் சப்திக்க.
கரையோரப் படகுகளோ
அமைதிக்காய் காத்திருக்கும்
நீல வான் பார்த்து.
கருங்கற்கள் மட்டும்
நனைந்து பளபளக்கும்
இடுக்கில் சிறு செடி சிரிக்க.
மழையோ,படகோ
கடலோ,கல்லோ
இணைக்கும் ஈரத்தில்
நமது இருப்புகள் வேறு
எதிர்வுகள் வேறு
வேறு வேறு.

Friday, 17 December 2010

உணர்


ஒரு தாளில் தீட்டப் பெற்ற
ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல்
வளை கோடுகள் கடலாதல் போல் 
இரு 'V' பறவைகளாதல் போல்
பசிய  நீள்  கோடுகள்
செழும் புற்களாதல் போல்
பக்கவாட்டு முகமொன்றில்
நம்பப் பெறும் உயிர்ப்புள்ள
இன்னொரு விழி போல்
மனம் அசைவுறுகையில்
மௌனம் இசையாதல் போல்
பார்வை மொழியாதல் போல்
புன்னகை உறவாதல் போல்
வார்த்தைகள் ஒலியாதல் போல்
சொல்லாமல் செல்லும் -
சொல்லும் பொருள் அடர்
உணர் கவிதை.