Friday, 17 December 2010

உணர்


ஒரு தாளில் தீட்டப் பெற்ற
ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல்
வளை கோடுகள் கடலாதல் போல் 
இரு 'V' பறவைகளாதல் போல்
பசிய  நீள்  கோடுகள்
செழும் புற்களாதல் போல்
பக்கவாட்டு முகமொன்றில்
நம்பப் பெறும் உயிர்ப்புள்ள
இன்னொரு விழி போல்
மனம் அசைவுறுகையில்
மௌனம் இசையாதல் போல்
பார்வை மொழியாதல் போல்
புன்னகை உறவாதல் போல்
வார்த்தைகள் ஒலியாதல் போல்
சொல்லாமல் செல்லும் -
சொல்லும் பொருள் அடர்
உணர் கவிதை.

11 comments:

சுந்தர்ஜி said...

ஒரு வெண்பரப்பில் கோர்க்கப்பட்ட இவ்வெழுத்துக்கள் ஓவியத்தின் நிறத்தில் துவங்கி அடர்கவிதையாய் முடிந்தார்ப் போல.

ஏங்க வைத்த இடைவெளி பரிசளித்தது அற்புதமான இந்தக் கவிதையை.நன்றி சைக்கிள்.

Harani said...

வண்ணங்கள் வண்ணங்களாகத்தான் உள்ளன. எண்ணங்கள் வண்ணங்களோடு எண்ணமுறும்போது அவை வண்ணங்களின் வண்ணங்களைத்தாண்டிய எண்ணங்களை வண்ணங்களாக மனவெளிகளில் அர்த்தப்படுத்துகின்றன. அர்த்தம் அழுத்தமுறுகையில் அடர் கவிதைகளாகின்றன சைக்கிள். இயல்பான கவிதை. வாழ்த்துக்கள்.

santhanakrishnan said...

வாழ்வின் அத்தனை வர்ணங்களையும்
ஒற்றைக் கவிதையில் தீட்டியிருக்கிறீர்கள்.
வசீகரம் சைக்கிள்.

பத்மா said...

ஹா சைக்கிள் சொல்லாத வார்த்தைகளில் தான் ஆயிரம் அர்த்தங்கள்

மீண்டும் மீண்டும் படிக்க தோன்றிய அர்த்தங்கள் சொல்லியிருக்கிற வார்த்தைகளில் ..

Vel Kannan said...

எத்தனயோ கவிதை பற்றிய விளக்கம் இருக்கிறது.
சில விளக்கம் தெளிவுரை மட்டுமே நமக்கு மிக நெருக்கமாக இருக்கும்.
அப்படியான ஒரு நெருக்கத்தை உணர்கிறேன் தோழி ...
தேர்ந்தெடுத்த அந்த படம் மிக அருமை. நான் இன்னும் சிறிது நாட்களில் எனது தளத்தில்
உபயோகபடுத்தி கொள்ள உங்களின் அனுமதி வேண்டும் .. அன்புடன்.

சைக்கிள் said...

# நன்றி திரு.சுந்தர்ஜி.வீடு பார்க்க வேண்டிய வேலைச் சூழலில் எழுத முடியவில்லை.இனி எழுதுவேன்.
# நன்றி திரு.ஹரணி. அழகான வார்த்தை அடுக்குகளில் மையப்புள்ளியை சொல்லிவிட்டீர்கள்.
# உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.சந்தான கிருஷ்ணன். உங்கள் கவிதைகள் நன்று. குறிப்பிட்ட சில கவிதைகள் மிக அழகு.
# நன்றி திரு.பத்மா. வாசிப்பின் போதே கவிதை துலக்கம் பெறுகிறது.
# நன்றி திரு.வேல்கண்ணன்.படம் இணையம் தந்ததே.என்னிடம் எதற்கு அனுமதி? எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லக்கூட உரிமை இல்லை எனக்கு!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

மனதின் வலிமையே உணர்தலில்தான் வெளிப்படுகிறது..அழகு

vasan said...

இதைத்தான் வ‌ண்ண‌ம‌ய‌மான(க‌ல‌ர்புல்) க‌விதை என்பார்க‌ளோ!
ப‌டைத்த‌வ‌ன் பார்வையும், பார்ப்ப‌வ‌ன் பார்வையும் ஒரே கோண‌த்தில் எனில் கோண‌லும் நேராகும். நேர்கோடும் ஏர்கோடாகி, புன்ன‌கை முளைக்க‌த் தொட‌ங்கும்.

சைக்கிள் said...

# கருத்துக்கு நன்றி திரு.திருநாவுக்கரசு.
# நன்றி திரு.வாசன். சற்று முரண்படுகிறேன். வாசித்தலுக்கு சில சுதந்திரங்கள் உண்டு, அது படைத்தவரின் கோணத்தோடு ஒன்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதில் உடன்பாடு எனக்கு.

vasan said...

முர‌ண்ப‌ட்டுத்தான் ஆகவேண்டுமா?
ஒத்தைய‌டி பாதை ந‌டை போல,
சில ச‌ம‌ய‌ம் உட‌ன்ப‌ட்டும் வ‌ர‌லாம் தானே!

சைக்கிள் said...

கட்டாயமில்லை என்றுதான் சொல்கிறேன். நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை திரு.வாசன்.