Thursday, 23 December 2010

மட்டுமே

பரவச எழில் வண்ணங்களுக்காய்
பதிந்த மென்நுட்பச் சிறகடுக்குகளுக்காய்
விரைந்த  தலை திருப்பல்களுக்காய்
வட்டக் கண்ணில் பளீரிடும் சிவப்பொளிக்காய்
கூரிய வன் அலகுக்காய்
எடையற்று மிதக்கும் பறத்தலுக்காய்
இருப்பை பளிச்சென வெளிப்படுத்தும் கூவலுக்காய்
அல்ல -
இறங்கி அமர்ந்த இடத்தை
இறுக்கமாய் பற்றியிருக்கும்
அதன் நம்பிக்கைக்காக மட்டுமே -
நான் அந்த பறவையைப் பார்த்தேன்.

12 comments:

சுந்தர்ஜி said...

எல்லோரும் பார்க்கத தவறுகிற அல்லது எல்லோருக்கும் பார்க்கத் தெரியாத பறவையின் இருபிடி நம்பிக்கையை மட்டும் பார்க்கிற
இந்தக் கவிதையின் மொட்டவிழ்தலை
அதன் சுகந்தத்தை முற்றுப் புள்ளி வரை முகர்ந்தேன்.

Vel Kannan said...

ஆஹா, அருமை, இன்னும் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.
பார்ப்பதற்கு பறவைகள் வருகிறதே அதை நினைத்தால்
எதிலுமே நம்பிக்கையில்லாமல் போகிறது சைக்கிள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அழகு..பறவைகளை பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில் இது நல்ல பார்வை

Vel Kannan said...

பார்ப்பதற்கு பறவைகள் குறைந்து வருகிறதே அதை நினைத்தால்
எதிலுமே நம்பிக்கையில்லாமல் போகிறது சைக்கிள்
(குறைந்து- தவறிவிட்டது )

vasan said...

வீடுகளில்லாம் உரிமையேடு கீச்சிட்டு, கூடுக‌ட்டி வாழ்ந்த‌ குருவிக‌ள் அருகிவிட்ட‌ன‌.
ஆண்ட‌ன‌ க‌ருவிக‌ளின் அலை, அண்ட‌விடுவ‌தில்லை குருவிக‌ளை.

Harani said...

Excellent.Excellent.Excellent.Excellent.Excellent.ExcellentExcellent.Excellent.ExcellentExcellent.Excellent.ExcellentExcellent.Excellent.ExcellentExcellent.Excellent.ExcellentExcellent.Excellent.ExcellentExcellent.Excellent.Excellent.Excellent.ExcellentExcellentExcellent.Excellent.ExcellentExcellent.Excellent.Excellent

சுந்தர்ஜி said...

36 வார்த்தைகள் எழுதி 33 எக்ஸெல்லெண்ட் வாங்கின சைக்கிளைப் பார்த்துப் பொறாமை-

ராத்திரி 8.28க்கு ஒக்காந்து மெனக்கெட்டு 33 தடவை எக்ஸெல்லெண்ட்டை பொறுமையா முற்றுப்புள்ளியோட 33 காப்பிடல் லெட்டரோட......

ம்ம். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுங்க சைக்கிள்.

ஹரணீய்......இந்தோ கெளம்பிட்டேன் நானும் பறவையப் பத்திக் கவிதையெழுத.

பத்மா said...

சைக்கிள் ,இந்த குட்டி பறவைகளைப் பார்த்தபடியே தான் என் காலைச் சமையல் நடக்கும்..
ஒரு அலமண்டா பூவின் மடியில் இருக்கும் தேனை குடிக்க கற்பித்த இயற்கையின் அதிசயத்தை வியந்தபடி இருந்திருக்கிறேன் ..இன்று நீங்கள் சொல்வதும் அதன் வேறொரு பரிமாணம்..... நம்பிக்கை காணுங்கால் நம்பிக்கை வருகிறது ..
ரசித்தேன்

சைக்கிள் said...

# நன்றி திரு: சுந்தர்ஜி, திருநாவுக்கரசு, வேல்கண்ணன்,வாசன். பறவைகளும், அணில் சத்தங்களும் ஆன வாழ்க்கையை விட்டுவிட்டு டிஜிட்டல் சத்தங்களால் மேற்பூச்சு பளபளக்கும் வாழ்க்கைதான் வாழப் போகிறோம் போல.
# ஊக்கத்திற்கும், உணர்வுபூர்வமான வாசிப்புக்கும் நன்றி திரு.ஹரணி.
# சுந்தர்ஜி, 1.ஹரணி சார் ஒரு பேராசிரியர். இந்த blog என்கிற தேர்வுத் தாளில் மோசமாக என் பிறபதிவு(ல்)கள் இருக்க, சுமாரான இந்த பதிவுக்கு சந்தோஷத்தில் பாராட்டிவிட்டார் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.
2. மட்டுமே என்ற தலைப்பை அவர் மட்டமே என வாசித்துவிட்டு அட பரவால்லயே இந்த பிள்ளை நேர்மையா உண்மையை ஒத்துகொண்டிருக்கிறதே என்றும் சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது.
3. எழுதியவர்களுக்கே தெரியாத 36 வார்த்தை, 33 excellent , 33 capital, 33 முற்றுபுள்ளி கணக்கை 9.51 இற்கு போட்ட உங்களுக்கு எவ்வளவு பொறுமை(!) இருக்கணும்... பிரமாதம் போங்க.பறவைகள் ரெடியாம் : )
# ஒரு visual ஆன பறவைகளைப் பார்க்கிற ஒரு பத்மாவை யோசிக்க வைத்தது உங்கள் கருத்து திரு.பத்மா.நன்றி.

Harani said...

சைக்கிள்..

ஒரு கவிதை என்பது படைப்பாளன் எழுதி முடித்தவுடன் முடிந்துவிடுவதில்லை. அதை வாசிக்கிற ஒவ்வொரு மனவெளியிலும் ஏற்படுத்தும் புதுப்புது உணர்வுகள் முக்கியமானவை. அதன்பின்தான் அந்தக் கவிதை தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு வாழத்தொடங்குகிறது. அழியா வாழ்வினை நோக்கி நகர்கிறது.

நான் எந்தவொரு கவிதையையும் எதிர்மறையாகப் பார்க்கிற பழக்கம் இல்லை. தவிரவும் மட்டுமே என்கிற நிலையிலேயே பார்த்தேன். என்னுடைய கவிதைகளில் பெரும்பான்மை நான் பிடித்துக்கொண்டிருப்பது நம்பிக்கையையே. ஆகவே இந்தக் கவிதை நிரம்பப் பிடித்துப்போனது. எனவே அது 33 சொற்களோடு முடிந்துவிடவில்லை. இன்னும் அது தொடர்கிறது என்றே பொருள்.

எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது எழுதி விட்டேன். பேராசிரியர் என்பது ஒப்பனை. அது வலைப்பதிவிற்குள் கொண்டு வருவதேயில்லை. எல்லா வலைப்பதிவுகளையும் விடாமல் படிக்க ஆசை. ஆனாலும் பணியின் இறுக்கம் தடுத்துவிடுகிறது.

சுந்தர்ஜி ஓர் அற்புதமான கலைஞன். ஒரு நல்ல கலைஞன் தரமான கலைஞன் எதனையும் பெருந்தன்மையோடுதான் அணுகுவான். பெருந்தன்மையும் விசாலமும் மேன்மையான பண்புகள். இந்த இந்த மேன்மைக்குரியவர் எப்போதும் சுந்தர்ஜி. ஒருபடைப்பிற்கான கருத்தினைப் பொறுமையாக எண்ணி அதனைப் பற்றி மனந்திறந்து பாராட்டுவது வெகு ஆரோக்கியமான கலைஞனை அடையாளப்படுத்துகிறது. இப்போது தமிழ்ப் படைப்புலகம் அப்படியெல்லாம் இல்லை. அரசியலும் பணமூம் அவர்கள் பின் பல நல்ல படைப்பாளிகளை ஓட வைக்கிறது. வாய் திறந்து பொய் பேச வைக்கிறது. பேசுகிறார்கள். தகுதியற்றதையெல்லாம் தகுதியெனப் பேசி தங்களின் தகுதியை இழந்து நிற்கிறார்கள்.

எழுதுங்கள் சைக்கிள். இயல்புமாறாமல் எழுதுவதுபோல எப்போதும் எழுதுங்கள். சுந்தர்ஜி ஒவ்வொரு சொல்லும் நம்மை சிந்திக்க வைக்கிறது. எழுத ஆர்வம் கிளைக்கிறது. அந்தப் பொறுப்புணர்ச்சிக்குத் தலைவணங்குகிறேன். நன்றி சைக்கிள்.

சைக்கிள் said...

திரு.ஹரணி, உங்கள் கருத்துக்களை முழுமையாகப் புரிந்துகொண்டேன்.நான் சொன்னது சுயகிண்டலாகவும், சுந்தர்ஜியைக் கிண்டல் செய்யவும் மட்டுமே.சுந்தர்ஜியின் ஆழமான எழுத்தும், புதியவர்களை உற்சாகப்படுத்தும் அரிய வாசிப்பும், பாராட்டும் மனப்பூர்வமாக அறிவேன். விளையாட்டுக்குக் கூட உங்கள் நண்பரை விட்டுக் கொடுக்காத நட்பை அறிய சந்தோஷமாக இருக்கிறது.தவிர 'பேராசிரியர் என்பது ஒரு ஒப்பனை' என்ற சுய தெளிதலும் இங்கே அரியது சார்.உங்கள் வார்த்தைகள் அனைத்திற்கும் நன்றி.

Harani said...

திருத்தம்.

எதனையும் பெருந்தன்மையோடுதான் அணுகுவார். நன்றி.