Wednesday, 26 January 2011

அவ்வளவே

ஒன்றுமில்லை
ஒரு வெள்ளைக் காகிதத்தை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.
வரைபட நதிகள் எனப் பரவும்
உள்ளங்கை  ரேகைகளைக் கவனிக்கவோ
மனம் கசிய ஒருமுறை  புன்னகைக்கவோ
பேசுபவர்களின் வார்த்தைகளோடு
பாவங்களையும் ரசிக்கவோ செய்தாலும் சரி
அசந்துறங்கும் குழந்தையின் அமைதியில் உறையும்
களங்கமின்மையை உணர்வதுவும் அப்படியே.
எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு பாடல்
இதயத்தை தீண்டிச் செல்லும் கணங்களும்
சுவர்களில் எழுதப்பட்ட நற்வாசகங்கள்
உங்களுக்கேயானவை என்ற களிப்பும்
கூடத்தான்.
மேலும்
கண்ணாடியில் உங்களை யாரோவாக
ஒருமுறை பார்த்துக் கொண்டாலோ
ஒரு கூழாங்கல்லின் குளிர்வைக்
கண்கள் மூடி ஸ்பரிசித்தாலோ
அல்லது
கல் சுமந்து உழைத்துக் களைத்துப்
பேருந்தில் பயணிக்குமொரு முதியவருக்கொரு
இன்சொல்லும் நட்பாகப் பயணச் சீட்டும்
பகிர  முடிந்தாலுமோ கூட
போதும்...
நீங்கள் உங்களைச் சிறிதேனும் கண்டடைய. 

Saturday, 22 January 2011

வரா வரம்


பெயரறியாச்  சிறுபூக்கள் சேகரித்து
உள்ளங்கைகளில் மென்பூக்கள் குவிய
இதயம்  குளிர்ந்து மகிழும் வண்ணம்
வண்ணங்களை கண்களில் நிறைத்து
மாலை சூரியனின் செவ்வண்ண சாயம்
பூசியிருக்கும் தெருவில் தானுமொரு புள்ளியாய்
கசிந்து கலந்து அந்தி இருளாகும் மாயம் வியந்து
சில நேரம் மேக  உருவங்கள் கண்டு கரைந்து 
புத்தகங்களை மகிழ்ந்து  படித்து தன்னை மறந்து
கண்டறியா கற்பனை சிகரங்களில் கால் பதித்த
இளமையின் பொழில் முற்றங்கள்
சென்றது எவ்விடம்? சென்றது எவ்விதம்?
கடமைகளின் லக்ஷ்மணக் கோடு தாண்டி
காற்றில் கூந்தல் பறக்க அறியா வெளியில்
ஓடும் நீரோடை சப்தம் இடையறாது ஒலித்திருக்க
வாத்தின் நட்சத்திர ஆரஞ்சுக் கால்கள்
பசும்புற்களூடே வந்து போக
கவலைகளற்று  வானை வியக்கும்
நாளொன்று வேண்டும் நாளொன்று போதும்
இன்றெனக்கு...
பின் நாளை யோசிப்பேன்
பாலைவன நிலவு ததும்பும் மணற்பாளம்  குறித்தும்
கனவிலிருந்து திரும்பி வரா வரம் குறித்தும்.

Sunday, 9 January 2011

சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள்.

      
       சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள். பக்கத்தில் சென்ற ஆட்டோவின் கருப்பு வெளிப்புறத்தில் சில பறவைகள் வரையப் பட்டிருந்தன.பாறைகளில்,குடிசையின் சுவர்களில், சாலையில், குகைகளில்,உடலில்  என மனித மனம்  ஏதொன்றிலும்  ஒரு  அழகுணர்வை வெளிப்படுத்திவிடுகிறது. முன்பு ஒருமுறை பாண்டிச்சேரி கல்லூரி வளாகமொன்றில் மஞ்சள் மலர்கள் மரத்தைச் சுற்றி அழகு வட்டமொன்றை வரைந்திருந்ததைப் பார்த்தேன். மாலை அதே இடத்தைப் பார்த்தால் யாரோ ஒரு காதல் வயப்பட்டவர்  இதய வடிவத்தையும் நுண்ணிய எழில்  வடிவங்களையும் அந்தப் பூக்களில் நேர்த்தியாக அமைத்திருந்தார்.

       சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள். இரு பின்னல்களில் ரிப்பன் பறக்க வேகமாக சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தாள் பள்ளிச் சிறுமியொருத்தி. ஒரு இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி, மனைவியின் கையிலொரு குழந்தை, அவருக்குப் பின்னால் மகள், கணவருக்கு முன் ஒரு பையன் என ஒரு மாதிரி சமாளித்தபடி சென்று கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞன் சிவப்பு சாயம் பூசிய  தலை வெயிலில் தீப்பிழம்பு போல் தெரிய  'வ்ரூம்' என பேரோசை எழுப்பிப் பறந்து சென்றான் வாகனத்தில். பேருந்தைப் பிடிக்க ஒரு அலுவலகம் செல்லும் பெண்மணி தலை தெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தார். காலை நேர நெருக்கடி எங்கும். வழியில் ஒரு திண்டில் வயதான பெண் ஒருவர்  காலை நீட்டியபடி எல்லோரையும் வேடிக்கை பார்த்தபடி நிம்மதியாக அமர்ந்திருந்தார்.

       சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள்.மழை பெய்துகொண்டிருந்தது உச்சமாய். சாலையோரம் மூங்கிலால் செய்யப்பட ஊஞ்சல், நாற்காலிகள், சோபா, மோடா போன்றவற்றை விற்பவர்கள் பொருட்களை ஒரு யானை போல கித்தான் துணியால் போர்த்தியபடி அவற்றைத் துளிகூட  நனையாமல் பாதுகாத்துக் கொண்டு தாம் மழையில் நனைந்தபடி  இருந்தார்கள்.

சாலையில் விரைந்து கொண்டே இருக்கின்றன வாகனங்கள்.

Friday, 7 January 2011

eighty two twenty two குருவிகள்

 
       அப்போது கும்பகோணத்தில் புது வீடொன்றில் நானும், அம்மாவும் இரண்டரை வயது அண்ணன் மகளோடு இருந்தோம். பால்கனிதான் எங்கள் ஆசுவாச இடம். மறைவும், வாழைகளும், அழகான மஞ்சள் மலர்களுடைய பூவரசம் பூக்களும் கூடிய இடம். அங்கே தினமும் மாலை  வரும் சில வகை குருவிகளுக்கு அம்மா eighty two twenty two குருவி என பெயர் வைத்திருந்தார்கள். அவற்றின் கூவல் ஒலி அப்படித்தான் கேட்கும்.
        குட்டிப்பெண் சுறுசுறுப்பானவள். நான் ஓடிப் படிகளில் இறங்கினாலும் அவள் எனக்கு முன்னால் கேட்டின் அருகே சென்று விடுவாள். அவள் டாட்டாவோடே ஆரம்பிக்கும் என் பணிப் பயணம்.வேலை முடித்து வந்ததும் அந்த பால்கனியில் உட்கார்ந்து கொண்டு அவளும், நானும் உலகை ஆராய்வோம். எங்கிருந்தாவது பாடல்கள் கேட்கும். அப்போதெல்லாம் தொலைகாட்சி வாங்கக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தேன். அந்த பாடல்களை மாற்றி வரி அமைத்து அவளை சிரிக்க வைப்பது ஒரு சந்தோஷமான அனுபவம். அப்படித்தான் ஒரு நாள் 'இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை' பாடலைக் கேட்டோம்.
       கேள்விகளால்  செய்யப்பட்டவள் அவள். ஆரம்பித்துவிட்டாள். ""இன்னிசைனா என்ன?" என் திருக்குரலில் பாடிப் புரிய வைத்து விட்டேன். ''காற்றுனா என்ன?'' மின்விசிறி, ஊதிக் காட்டுதல், மர அசைவு என விளக்கினேன். ''உருவமில்லைன்னா என்ன?'' அவ்வளவு சின்னப் பெண்ணுக்கு புரிய வைக்கும் அளவு இவ்வளவு பெரிய பெண்ணிற்கு திறமை இருக்கிறதா என்றொரு யோசனை. பின் துணிந்து களத்தில் இறங்கினேன். ''குட்டி, கண்ண மூடிக்கோ?'' செய்தாள். என் பெயரைச் சொன்னேன், ''இப்ப உனக்கு என்ன தோணுது?'' ''நீதான் தோணுது'', ''என்ன தெரியுது?'' ''உன் முகம் தெரியுது'' என்றாள். ''நான் எப்படி தெரியுறேனோ அதான் என் உருவம். இப்ப காற்றுனு நினைச்சிக்கோ. உருவம் தெரியுதா, இல்லேல்ல, அதான் உருவம் இல்லேன்னு பாடுறாங்க''. அப்பாடி, ஒரு வழியா சொல்லி முடிச்சாச்சு! அவள் என்னை சில வினாடிகள் பார்த்தாள். ''ஏன், இலையெல்லாம் அசையுதே அப்ப அதானே அது உருவம்'' என்றாள். மின்னதிர்வுக்கு உள்ளானது போலிருந்தது. அவ்வளவு உண்மையாக இருந்தது அந்த பதில். தவிர அந்த மனசுக்கு இவ்வளவு யோசனையிருக்கும் என்பதுவும் எதிர்பாராததாக இருந்தது. இதுல்ல கவிதை என்றும் தோன்றியது. ''ஆமா செல்லம் நீ சரியா சொல்லிட்ட, எனக்குத்தான் ஒன்னும் தெரியல'' என்று மட்டும் சொன்னேன். இப்போதும் அவள் என்னை முந்தியிருந்தாள். சுயம் வெட்கி யோசிக்க ஆரம்பித்தேன். பின்புலமாக eighty two twenty two குருவிகள் ஒலிக்க ஆரம்பித்தன...இன்றும் அந்த நினைவுகள் ஒலித்துக் கொண்டே இருகின்றன.

Wednesday, 5 January 2011

முடிவறியா வழி


கைகளில் அள்ளிய மணலில்
அலைகளின்  யுக தாள லயம்
தற்செயலாய் தொட்ட  கிளைகளில்
பறவைகளின் கூவல் அதிரும் ஒலி
சைக்கிளின் சக்கரத்தில் கேட்கும்
அடைபட்ட காற்றின் சுதந்திரத் தேடல்
மகளை அணைத்தபடி பள்ளி செல்லும்
அந்த மாற்றுத் திறனாளியின் வண்டியில்
முயற்சியின் இடைவிடா சுழலொலி
ஒரு கைபேசியின் நினைவில்
பல்லாயிரம் உணர்வுகளின் அலைமொழி
விட்டுச் செல்லப் போகும் இந்த கூட்டில்
கேட்டிடுமோ என் ஜீவிதத்தின் வலி?