Sunday, 9 January 2011

சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள்.

      
       சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள். பக்கத்தில் சென்ற ஆட்டோவின் கருப்பு வெளிப்புறத்தில் சில பறவைகள் வரையப் பட்டிருந்தன.பாறைகளில்,குடிசையின் சுவர்களில், சாலையில், குகைகளில்,உடலில்  என மனித மனம்  ஏதொன்றிலும்  ஒரு  அழகுணர்வை வெளிப்படுத்திவிடுகிறது. முன்பு ஒருமுறை பாண்டிச்சேரி கல்லூரி வளாகமொன்றில் மஞ்சள் மலர்கள் மரத்தைச் சுற்றி அழகு வட்டமொன்றை வரைந்திருந்ததைப் பார்த்தேன். மாலை அதே இடத்தைப் பார்த்தால் யாரோ ஒரு காதல் வயப்பட்டவர்  இதய வடிவத்தையும் நுண்ணிய எழில்  வடிவங்களையும் அந்தப் பூக்களில் நேர்த்தியாக அமைத்திருந்தார்.

       சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள். இரு பின்னல்களில் ரிப்பன் பறக்க வேகமாக சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தாள் பள்ளிச் சிறுமியொருத்தி. ஒரு இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி, மனைவியின் கையிலொரு குழந்தை, அவருக்குப் பின்னால் மகள், கணவருக்கு முன் ஒரு பையன் என ஒரு மாதிரி சமாளித்தபடி சென்று கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞன் சிவப்பு சாயம் பூசிய  தலை வெயிலில் தீப்பிழம்பு போல் தெரிய  'வ்ரூம்' என பேரோசை எழுப்பிப் பறந்து சென்றான் வாகனத்தில். பேருந்தைப் பிடிக்க ஒரு அலுவலகம் செல்லும் பெண்மணி தலை தெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தார். காலை நேர நெருக்கடி எங்கும். வழியில் ஒரு திண்டில் வயதான பெண் ஒருவர்  காலை நீட்டியபடி எல்லோரையும் வேடிக்கை பார்த்தபடி நிம்மதியாக அமர்ந்திருந்தார்.

       சாலையில் விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள்.மழை பெய்துகொண்டிருந்தது உச்சமாய். சாலையோரம் மூங்கிலால் செய்யப்பட ஊஞ்சல், நாற்காலிகள், சோபா, மோடா போன்றவற்றை விற்பவர்கள் பொருட்களை ஒரு யானை போல கித்தான் துணியால் போர்த்தியபடி அவற்றைத் துளிகூட  நனையாமல் பாதுகாத்துக் கொண்டு தாம் மழையில் நனைந்தபடி  இருந்தார்கள்.

சாலையில் விரைந்து கொண்டே இருக்கின்றன வாகனங்கள்.

10 comments:

சுந்தர்ஜி said...

விரையும் வாகனங்களுக்கு இடையேயும் வாழ்க்கை அவரவர் தேர்வுக்கேற்றபடிக் காத்திருக்கிறது.

இதோ இன்று என்னால் இந்தப் பத்தரை மணிக்காலையில் ஒரு கவிதை எழுத முடிகிறது,நாளை பத்தரைக்கு?

அருமையான பார்வை சைக்கிள்.

Vel Kannan said...

காட்சிகளை படம்பிடித்தபடியும் பகிர்ந்தபடியும் செல்கிறது இயல்பாக உங்களின் எழுத்து.
விடுபட்ட சிலவற்றையும் படித்துவிட்டேன். அனைத்திற்கும் வாழ்த்துகளும் அன்பும்.
தொடர்ந்து இணைய பக்கம் வரமுடியாத சுழ்நிலை .....இன்னும் தொடர்கிறது

Harani said...

அன்புள்ள...

பல வருடங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு கதை வந்திருந்தது. அக்கதையின் தலைப்பு.
அப்போது திறந்திருக்கலாம் கதவு - என்பதாகும். அருமையான கதை அது. அதற்குப் பின் அந்தப் பாதிப்பில் நான் ஒரு கதை தமிழ்அரசியில் எழுதினேன். இப்போது உங்கள் பார்வையாக இது. அருமையாக இருக்கிறது. இப்படி எழுதுவதில் பல வசதிகள் உள்ளன. நம்முடைய மனம் நினைப்பதையெல்லாம் நேர்த்தியாக சொல்லலாம். எப்படியிருப்பினும் இந்த உங்கள் பார்வை மிகுந்த பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

தமிழ் said...

வித்தியாசமான பதிவு.. ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டேயிருக்கும் காட்சிகள் அழகாகத் தொகுக்கப் பட்டுள்ளது !

சிவகுமாரன் said...

உங்கள் சைக்கிளில் விரைந்து கொண்டே படம் பிடித்தவாறு பயணிக்கிறீர்கள்..
அழகாய் தத்ரூபமாய் விரிகின்றன காட்சிகள்.

சைக்கிள் said...

# நன்றி திரு.சுந்தர்ஜி.நிச்சயமின்மைகளின் நிச்சயமே வாழ்க்கை போல.
# நன்றி வேல்கண்ணன்.என்னவென்று தெரியவில்லை. உங்களின் இயல்பு வாழ்க்கை மீண்டு வரட்டும்.
# நன்றி திரு.ஹரணி.உண்மைதான் நீங்கள் சொல்வது. முடிந்தால் அந்த கதையை பதிவிடுங்களேன்.
# நன்றி தமிழ்.உங்கள் எழுத்தும் எனக்குப் பிடிக்கும்.
# நன்றி திரு.சிவகுமாரன்.அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்.

vasan said...

/சாலையில் விரைந்து கொண்டே இருக்கின்றன வாகனங்கள்./
அல்ல‌து வாக‌ன‌ங்க‌ளாக‌....

சைக்கிள் said...

மையப்புள்ளியைச் சொல்லிவிட்டீர்கள் திரு.வாசன்.

கீதா இளங்கோவன் said...

இந்த பதிவு எனக்கு பிடித்திருக்கிறது தோழி. சாலையின் ஒரு பகுதியில் நின்று கொண்டு நான் வேடிக்கை பார்த்த உணர்வு.

சைக்கிள் said...

வேடிக்கை பார்ப்பதிலும் எனக்கொரு தோழி என சந்தோஷம் கீதா.