Saturday, 22 January 2011

வரா வரம்


பெயரறியாச்  சிறுபூக்கள் சேகரித்து
உள்ளங்கைகளில் மென்பூக்கள் குவிய
இதயம்  குளிர்ந்து மகிழும் வண்ணம்
வண்ணங்களை கண்களில் நிறைத்து
மாலை சூரியனின் செவ்வண்ண சாயம்
பூசியிருக்கும் தெருவில் தானுமொரு புள்ளியாய்
கசிந்து கலந்து அந்தி இருளாகும் மாயம் வியந்து
சில நேரம் மேக  உருவங்கள் கண்டு கரைந்து 
புத்தகங்களை மகிழ்ந்து  படித்து தன்னை மறந்து
கண்டறியா கற்பனை சிகரங்களில் கால் பதித்த
இளமையின் பொழில் முற்றங்கள்
சென்றது எவ்விடம்? சென்றது எவ்விதம்?
கடமைகளின் லக்ஷ்மணக் கோடு தாண்டி
காற்றில் கூந்தல் பறக்க அறியா வெளியில்
ஓடும் நீரோடை சப்தம் இடையறாது ஒலித்திருக்க
வாத்தின் நட்சத்திர ஆரஞ்சுக் கால்கள்
பசும்புற்களூடே வந்து போக
கவலைகளற்று  வானை வியக்கும்
நாளொன்று வேண்டும் நாளொன்று போதும்
இன்றெனக்கு...
பின் நாளை யோசிப்பேன்
பாலைவன நிலவு ததும்பும் மணற்பாளம்  குறித்தும்
கனவிலிருந்து திரும்பி வரா வரம் குறித்தும்.

13 comments:

நிலாமகள் said...

வரிகளும், வார்த்தைகளும், பொதிந்த அர்த்தங்களும் ... மறுபடியும் வாசிக்க வாசிக்க தீரா உவகையுமாக... அற்புதம் அற்புதம் எனக் கூவி நிற்கிறேன். பிடியுங்கள் பொற்கிழி! என்றிடுவேன்... அரசாய் நானிருந்திருந்தால்! எழுதினால் இப்படிஎழுத வேண்டும்!! வாழ்த்துகள்!!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

கனவுகளற்ற வாழ்க்கையை வாழ்வது சற்று கடினம்தான்

//பாலைவன நிலவு ததும்பும் மணற்பாளம்//
கண்முன் விரிகிறது

santhanakrishnan said...

கனவிலிருந்து திரும்பி
வரா வரம் தரும்
சாமியைக் கனவில்தான்
கண்டுபிடிக்க வேண்டும்.

சுந்தர்ஜி said...

அந்தப் படத்தை மொழிபெயர்த்தால் இந்தக் கவிதையாகத்தான் இருக்கமுடியும்.

அந்த ஒற்றையடிப் பாதை உங்கள் விரிகனவின் முன் கொண்டு நிறுத்த அதற்குப் பின்னே பாலைவன நிலவு ததும்பும் மணற்பாளம் தகிக்கிறது.

கனவிலிருந்து திரும்பி வரா வரம் மட்டும் வேண்டாமே சைக்கிள்?

இந்தத் தமிழுக்கும் கவிதைக்கும் நாங்கள் எங்கே போவோம்?

Vel Kannan said...

ஆகச் சிறந்த கவிதை இது.
வாசித்தபின் பல வரிகள்
நினைவிற்குள் அசைகின்றன
(சில) நினைவுகளையும் அசைத்து பார்கின்றன மிருணா

பத்மா said...

ஆம் எங்கு போயின ? திரும்பி வரட்டும் சைக்கிள் .ஆனால் கனவாய் அல்ல நனவாய்
விரும்பிய பொருள் கைப்பட வேண்டும் ....விரைவில் ..
அழகான nostalgic moodai தூண்டும் கவிதை ..நானும் அதில் சில நிமிஷம் வாழ்ந்து திளைத்து ஏக்கத்துடன் பிரிந்து போகிறேன் ..
இது உங்கள் எழுத்தின் வெற்றி

சைக்கிள் said...

# தகுதி இல்லை எனினும் உற்சாகமான ஊக்கப்படுத்துதலுக்கு நன்றி திரு.நிலாமகள்.
# அப்படித்தான் தோன்றுகிறது நண்பர் திருநாவுக்கரசு.
# கவிதையிலும்... என துணிந்து எழுதிவிட்டேன் திரு.சந்தான கிருஷ்ணன்.
# நன்றி திரு.சுந்தர்ஜி. அதி ஊக்கமான வார்த்தைகள். தமிழ் வெண்பா எல்லாம் நீங்களும், இன்னும் சிலரும் எழுதுவதைப் பார்ததால் வெட்கமாக இருக்கிறது என் போதாமை குறித்து. தமிழ் இலக்கியம் முறையாகப் படிக்கவில்லை என வருத்தமும் படுகிறேன்.
# பகிர்வுக்கு சைக்கிளின் நன்றி திரு.வேல்கண்ணன்.
#நல்லெண்ணத்திற்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி திரு.பத்மா. பெண்களுக்கான கவிதை இது என்றே தோன்றுகிறது. அதனாலேயே கவிதையின் தாக்கம் உங்களுக்கும், நிலாமகள் அவர்களுக்கும்.

சுந்தர்ஜி said...

பிழை திருத்த அல்ல இது.

நிலாமகளையும் பத்மாவையும் திரு.என நீங்கள் விளிக்க நான் திருதிருவென விழித்து திருவையே எல்லோருக்கும் தவிர்த்துவிடலாமே என்ற யோசனையுடன் திரு.சைக்கிளுக்கு வைக்கிறேன்.

திரு.சுந்தர்ஜி திரு.பத்மா திரு.நிலாமகள் திரு.சைக்கிள்.(கடைசியாய் ஒரு தடவை சொல்லிப் பாத்துக்கிறேன் சொல்லாமலே படத்தில் லிவிங்ஸ்டன் மாதிரி).

சைக்கிள் said...

திரு என அழைப்பதில் ஒரு மரியாதை இருக்கிறது. அது ஏன் உங்களுக்கு திருதிரு ஆகிறது எனத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் MS என்பது திருமணம் ஆன பெண்ணுக்கும், மற்றவருக்கும் ஆன பொது மரியாதை முன் விளி ஆக இருக்கிறது. திரு என்பது தமிழில் ஆண்களுக்கு அப்படியான சொல்லாக இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி ஒரு பொது சொல் வழக்கு இல்லை. இதில் ஒரு பாலின அடையாள அரசியல் உள்ளது.அதுபோல gender shade தவிர்த்து எழுதும் எண்ணத்துடன் தெரிந்தே எழுதப்படுவதுதான் திரு, திரு.சுந்தர்ஜி. நீங்கள் லிவிங்க்ஸ்டன் ஆக வேண்டாம் என்பதால் 'திரு' தொடரும் என நட்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுந்தர்ஜி said...

ஆண்களிலும் பெண்களிலும் நேரடியான பெயரொன்று இருக்கும் போது பால்பேதம் குறித்து எண்ணியதில்லை.அல்லது ர் விகுதி சேர்த்துவிடுவேன்.அல்லது ஐயா-அம்மா.

இந்தப் பின்புலத்தில் எனக்கு திரு.பத்மா வித்யாசமாகத் தெரிந்தது.அவ்வளவுதான் சைக்கிள்.பாலின அடையாள அரசியலுக்குள் எல்லாம் செல்ல விருப்பமும் இல்லை.

தொடர்ந்து தொடர்புகொள்பவர்களுக்கிடையில் இந்த திரு பதம் தேவையில்லையோ என்றும் கருதினேன்.

ஆனால் உங்களின் பதில் எனக்கு த்ருப்தி அளித்ததுடன் விளையாட்டாய்ச் சொன்ன விஷயத்தின் பின்னும் இத்தனை ஜெண்டர் ஷேடெல்லாம் இருக்கிறது என்று புரிந்து கொண்டபின் என் வேண்டுகோளைத் திரும்பப் பெறுகிறேன்.

நீங்களே சொன்னது போல் தேவையில்லாமல் லிவிங்ஸ்டன் ஆகவேண்டாமென்றும் முடிவு செய்து விட்டேன்.

காயமேற்பட்டிருப்பின் மன்னியுங்கள் சைக்கிள்.

சைக்கிள் said...

முதலில் புரிதலுக்கு நன்றி தோழர். மொழியிலும் அரசியல் இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ நாம் அதனால் வடிவமைக்கப் படுகிறோம். அதனை கேள்விக்குட்படுத்தும்போது, புதிதாக சொல்லை மாற்றிப் பார்க்கும்போது பழக்கம் சார்ந்த மனது அதை ஏற்க மறுக்கிறது. அதற்கான விளக்கம் மட்டுமே எனது முந்தைய கருத்து. தவிர இணையவெளியில் தொடர்பில் ஒரு கவனமும் வேண்டியுள்ளது அல்லவா? மற்றபடி மன்னிக்கும்படி ஒன்றும் இல்லை, கேள்விகள், விளக்கங்கள்..அவ்வளவுதான்.

சிவகுமாரன் said...

\\கனவிலிருந்து திரும்பி வரா வரம் //

என் நீண்ட நாள் ஆசை இது சைக்கிள், இது.
அருமை.

சைக்கிள் said...

நன்றி நண்பர்.