Wednesday, 26 January 2011

அவ்வளவே

ஒன்றுமில்லை
ஒரு வெள்ளைக் காகிதத்தை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.
வரைபட நதிகள் எனப் பரவும்
உள்ளங்கை  ரேகைகளைக் கவனிக்கவோ
மனம் கசிய ஒருமுறை  புன்னகைக்கவோ
பேசுபவர்களின் வார்த்தைகளோடு
பாவங்களையும் ரசிக்கவோ செய்தாலும் சரி
அசந்துறங்கும் குழந்தையின் அமைதியில் உறையும்
களங்கமின்மையை உணர்வதுவும் அப்படியே.
எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு பாடல்
இதயத்தை தீண்டிச் செல்லும் கணங்களும்
சுவர்களில் எழுதப்பட்ட நற்வாசகங்கள்
உங்களுக்கேயானவை என்ற களிப்பும்
கூடத்தான்.
மேலும்
கண்ணாடியில் உங்களை யாரோவாக
ஒருமுறை பார்த்துக் கொண்டாலோ
ஒரு கூழாங்கல்லின் குளிர்வைக்
கண்கள் மூடி ஸ்பரிசித்தாலோ
அல்லது
கல் சுமந்து உழைத்துக் களைத்துப்
பேருந்தில் பயணிக்குமொரு முதியவருக்கொரு
இன்சொல்லும் நட்பாகப் பயணச் சீட்டும்
பகிர  முடிந்தாலுமோ கூட
போதும்...
நீங்கள் உங்களைச் சிறிதேனும் கண்டடைய. 

11 comments:

பத்மா said...

ஆமாம் சைக்கிள் ஆமாம் ..
அத்தகைய தருணங்களில் நாம் எத்தனை அழகாகி விடுகிறோம்?
நம்மை நாம் காதலிக்க வேண்டும், அத் தருணங்கள் ..
இதோ இந்தக் கவிதை வாசிக்கும் நேரம் போல ..

சுந்தர்ஜி said...

இந்தக் கவிதை மூலம் உங்களைக் காண்கிறேன் சைக்கிள்.

vasan said...

த‌ன்னைக் கண்ட‌டைத‌ல் இவ்வ‌ள‌வு எளிமையா!
பின் எத‌னை அடைய‌ இவ‌ர்கள் இவ்வ‌ள‌வு க‌டுமையாய்,க‌ட‌மைக்காய்...?

சைக்கிள் said...

# உங்கள் கருத்து அழகு திரு.பத்மா.
# பிறரில் நம்மைக் காண முடியும் என்பதாலா திரு.சுந்தர்ஜி?
# தெரியலியே என நாயகன் கமல் போல எண்ணிக் கொள்ள வேண்டியதுதான் திரு.வாசன்.

santhanakrishnan said...

எவ்வளவு எளிமையான வழிகள்
நம்மை நாம் கண்டு கொள்ள.
இது புரியாமல் ஏன் தடுமாறி
கொண்டிருக்கிறோம்?

சைக்கிள் said...

எளிமையை நாம் பெரும்பாலும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதாலோ திரு.சந்தான கிருஷ்ணன்?

Harani said...

கவிதை. தரிசனம்.

சிவகுமாரன் said...

சுலபமாய் சொல்லி விட்டீர்கள்
நம்மை நாமே கண்டடைவதும் மீட்டெடுப்பதும் எவ்வளவு பெரிய விசயங்கள்.
அருமையான கவிதை

சைக்கிள் said...

நன்றி நண்பர்.

சிவகுமாரன் said...

சைக்கிளை ஏன் பூட்டியே வைத்திருக்கிறீர்கள் மாதக் கணக்கில் ?. பயணத்தை தொடங்குங்கள்.
பின்தொடரக் காத்திருக்கிறேன்.

சைக்கிள் said...

புது வீடு, தாமதமான வலைப்பின்னல் இணைப்பு, இன்னும் தொடர்கிற பல வகையான பணிப் பளு என எழுத முடியவில்லை.சீக்கிரம் எழுதுவேன். ஊக்கத்திற்கு நன்றி நண்பரே.