Friday, 7 January 2011

eighty two twenty two குருவிகள்

 
       அப்போது கும்பகோணத்தில் புது வீடொன்றில் நானும், அம்மாவும் இரண்டரை வயது அண்ணன் மகளோடு இருந்தோம். பால்கனிதான் எங்கள் ஆசுவாச இடம். மறைவும், வாழைகளும், அழகான மஞ்சள் மலர்களுடைய பூவரசம் பூக்களும் கூடிய இடம். அங்கே தினமும் மாலை  வரும் சில வகை குருவிகளுக்கு அம்மா eighty two twenty two குருவி என பெயர் வைத்திருந்தார்கள். அவற்றின் கூவல் ஒலி அப்படித்தான் கேட்கும்.
        குட்டிப்பெண் சுறுசுறுப்பானவள். நான் ஓடிப் படிகளில் இறங்கினாலும் அவள் எனக்கு முன்னால் கேட்டின் அருகே சென்று விடுவாள். அவள் டாட்டாவோடே ஆரம்பிக்கும் என் பணிப் பயணம்.வேலை முடித்து வந்ததும் அந்த பால்கனியில் உட்கார்ந்து கொண்டு அவளும், நானும் உலகை ஆராய்வோம். எங்கிருந்தாவது பாடல்கள் கேட்கும். அப்போதெல்லாம் தொலைகாட்சி வாங்கக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தேன். அந்த பாடல்களை மாற்றி வரி அமைத்து அவளை சிரிக்க வைப்பது ஒரு சந்தோஷமான அனுபவம். அப்படித்தான் ஒரு நாள் 'இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை' பாடலைக் கேட்டோம்.
       கேள்விகளால்  செய்யப்பட்டவள் அவள். ஆரம்பித்துவிட்டாள். ""இன்னிசைனா என்ன?" என் திருக்குரலில் பாடிப் புரிய வைத்து விட்டேன். ''காற்றுனா என்ன?'' மின்விசிறி, ஊதிக் காட்டுதல், மர அசைவு என விளக்கினேன். ''உருவமில்லைன்னா என்ன?'' அவ்வளவு சின்னப் பெண்ணுக்கு புரிய வைக்கும் அளவு இவ்வளவு பெரிய பெண்ணிற்கு திறமை இருக்கிறதா என்றொரு யோசனை. பின் துணிந்து களத்தில் இறங்கினேன். ''குட்டி, கண்ண மூடிக்கோ?'' செய்தாள். என் பெயரைச் சொன்னேன், ''இப்ப உனக்கு என்ன தோணுது?'' ''நீதான் தோணுது'', ''என்ன தெரியுது?'' ''உன் முகம் தெரியுது'' என்றாள். ''நான் எப்படி தெரியுறேனோ அதான் என் உருவம். இப்ப காற்றுனு நினைச்சிக்கோ. உருவம் தெரியுதா, இல்லேல்ல, அதான் உருவம் இல்லேன்னு பாடுறாங்க''. அப்பாடி, ஒரு வழியா சொல்லி முடிச்சாச்சு! அவள் என்னை சில வினாடிகள் பார்த்தாள். ''ஏன், இலையெல்லாம் அசையுதே அப்ப அதானே அது உருவம்'' என்றாள். மின்னதிர்வுக்கு உள்ளானது போலிருந்தது. அவ்வளவு உண்மையாக இருந்தது அந்த பதில். தவிர அந்த மனசுக்கு இவ்வளவு யோசனையிருக்கும் என்பதுவும் எதிர்பாராததாக இருந்தது. இதுல்ல கவிதை என்றும் தோன்றியது. ''ஆமா செல்லம் நீ சரியா சொல்லிட்ட, எனக்குத்தான் ஒன்னும் தெரியல'' என்று மட்டும் சொன்னேன். இப்போதும் அவள் என்னை முந்தியிருந்தாள். சுயம் வெட்கி யோசிக்க ஆரம்பித்தேன். பின்புலமாக eighty two twenty two குருவிகள் ஒலிக்க ஆரம்பித்தன...இன்றும் அந்த நினைவுகள் ஒலித்துக் கொண்டே இருகின்றன.

11 comments:

சிவகுமாரன் said...

அருமை,அருமை. அருமை. குழந்தைகள் பல சமயம் நம்மை திகைக்க வைத்து விடுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. என் நண்பரின் முதல் குழ்ந்தை 2 வயதிலேயே இறந்துவிட்டது. 7 வருடங்களுக்கு பிறகு இன்னொரு பையன்( ஷ்யாம் ) பிறந்தான். இப்போது 3 வயது. அவனுக்கு அண்ணன் இருந்தது இறந்தது எதுவும் தெரியாது. விஷயம் தெரிந்த எதிர் வீட்டு திமிர் பிடித்த பெண் கேட்டாள் " ஷ்யாம் உனக்கு அண்ணன் இல்லையா ?" அவன் யோசிக்கவே இல்லை. உடனே சொன்னான் "இல்லை ஆண்டி. நானே வளர்ந்து அண்ணன் ஆயிடுவேன்".

Balaji saravana said...

குழந்தைகள் எப்பவும் படைப்பாளிகள் தான்! காற்றுக்கும் உருவம் கொடுத்துவிடுகிறார்கள் அவர்கள்! :)

சுந்தர்ஜி said...

நான் எழுதிய ”கடவுளின் குழந்தைகள்” பதிவின் தொடர்ச்சியாகவே இதைக் கருதுகிறேன் சைக்கிள்.

//அந்த மனசுக்கு இவ்வளவு யோசனையிருக்கும் என்பதுவும் எதிர்பாராததாக இருந்தது. இதுல்ல கவிதை என்றும் தோன்றியது.//

குழந்தைகள் இயல்பாகவே எவ்வித நிர்பந்தமும் இல்லாததால் கூர்மையான பார்வையும் மொழியும் தத்துவ முடிச்சுக்களும் கொண்டவர்கள்.அவற்றை ரசிக்கவோ கவனிக்கவோ நமக்குத்தான் பொறுமையோ அக்கறையோ இல்லை.

மற்றொன்று அக்குருவிகளுக்கு நீங்கள் வைத்த பெயர்.பெயர் சூட்டுவதிலேயே கவிதை எழுதத் தொடங்கிவிடுகிறீர்கள்.

அற்புதம்.நிறைவு.

சைக்கிள் said...

# நன்றி திரு.சிவகுமாரன்.அந்த பையனைத் தட்டிக் கொடுக்க வேண்டும் போலிருகிறது.என்ன அருமையான பதில்!
# நன்றி திரு.பாலாஜி சரவணா,முதல் வரவிற்கும், கருத்திற்கும்.
# நன்றி திரு.சுந்தர்ஜி.உடல்நிலை சீரடைந்துள்ளதா? கவனமாக இருங்கள்.முன்பே எழுத நினைத்தது இந்த பதிவு.உங்கள் பதிவு பார்த்ததும் தூண்டல்தான்.பொறுமையும்,அக்கறையும் நமக்கு இன்னும் வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். குருவிகளுக்கு பெயர் அம்மா வைத்தது.உங்கள் பாராட்டு அம்மாவுக்கே.

சுந்தர்ஜி said...

ஓ!மன்னியுங்கள்.

அம்மாவிடமிருந்துதான் கவிதை பிறந்திருக்கிறதென்பதும் ஒரு இனிமையான தகவல்தான்.

கண்ணாடியின்றி வாசித்த அவசரத்தில் நேர்ந்த கவனக்குறைவிது.

அம்மாவுக்கு என் அன்பும், பெயருக்கான பாராட்டுக்களும்.

santhanakrishnan said...

பள்ளிக்கூடம்
அம்மா,அப்பா
இத்தனை இம்சைகளுக்கிடையேயும்
குழந்தைகள்
மிக நேர்த்தியாய் இருப்பதைப்
பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாத்தானிருக்கிறது.
உங்கள் மூவருக்குமே என் பாராட்டு.

சைக்கிள் said...

நன்றி திரு.சந்தான கிருஷ்ணன்.

vasan said...

உண்மைக‌ள் மிக எளிமையான‌வை, அத‌னால் நாம் க‌வ‌னமின்றி அதைக் க‌ட‌ந்து விடுகிறோம்.
குழ‌ந்தைக‌ள் கொண்டு வ‌ருகின்றான காலி கோப்பைக‌ளை எளிமையால் நிர‌ப்ப‌.

சைக்கிள் said...

ஒரு ஜென் துறவி போல...இல்லையா?நயமான பார்வை திரு.வாசன்.நன்றி.

கீதா இளங்கோவன் said...

அருமை தோழி. இனி குருவி கூவலை கேட்கும் போது eighty two twenty two தான் நினைவுக்கு வரும்..... குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர ஒன்றும் இல்லை. அந்த குட்டி மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நாம்தான் தயாராக இருக்க வேண்டும்....

சைக்கிள் said...

முயல்வோம்.நன்றி தோழி.