Wednesday, 16 March 2011

பொம்மைகள்


பொம்மைகளோடு விளையாடுகிறாள் சிறு பெண்
மூன்று  கைக்குட்டைகள் ஜன்னல் கம்பிகளில்
தொட்டில்களாய் அசைகின்றன வரிசையாக.
ஓரக்கண்ணால் பிள்ளைகள்  தூங்கிவிட்டனவாவென
தொட்டில்களுக்குள் பார்த்தபடி விளையாடுகிறாள்...
சிறிய அம்மா - அவளது முகத்தில் கனிவும், பொறுப்பும்.
கதவைத் திறந்து  உள்ளே வருபவரை நிறுத்தி
வாயின் மேல் விரல் வைத்து சாடை செய்கிறாள்
சத்தம் போடாதீர்கள் என. 
படபடக்கும் சன்னல் கதவுகளை செல்லமாய் அடித்து
ஏன் சத்தம் என கண்டிக்கும் அவள் உடன் நகர்ந்து 
வேலையாய் இருக்கும் பாவனை  செய்கிறாள். 
இறுதியில் பிள்ளைகளை நேர்த்தியாய் வாரியெடுத்து
அருகில் கிடத்தியபடி தட்டிக் கொடுக்கும் அவள்
அயர்ந்து தூங்குகிறாள் பொம்மைகள்  விழித்திருக்க.
தமக்குள்ளே பேசிக்கொண்ட பொம்மைகள் சொல்லின:
இப்படித்தான் மனிதர்கள் வாழ்க்கையில் - 
வேறு பொம்மைகளோடு - அவரவர் கற்பனையோடு.

Friday, 11 March 2011

கோடையின் உவப்பு


இந்த கோடையின் வெம்மை
இனிமையானதொரு உவப்பை வெளியிடுகிறது.
ஒரு பழங்கால அறையை போன்ற இந்த பூமி
அதன் ஆதி சாயல்  துலங்கித் தெரிய
இலைகள் உதிர்த்த பற்பல கிளைகள் வழி
வானைக் கண்ணுக்குள் அணுக்கி  வைக்கிறது.
ஒரு மங்கலான ஒளி வழியும்
நான்கு மணி மனிதர்கள்
விருப்பு வெறுப்பற்ற ஞானியராய்
பேருந்தில் சாய்ந்தபடி இருக்கிறார்கள்
அவர்களின் பார்வையற்ற பார்வை
கலைக்க முடியாதொரு அமைதியை
வழியெங்கும் பேசிச் செல்கிறது
பயணம் முடிந்து திரும்பும் வேளை
அந்தியின் சோபை அவர்களை அழகூட்ட
மெல்லக் கரைகிறார்கள் கோடையின் உவப்பில்
பின் 
ஆயிரம் பழங்களாய்  சூரியன் தணிய
கனிந்து  விம்முகிறது கோடைப்  பழம்.  

Monday, 7 March 2011

பசும் பூங்கிளைகள்


பட்சிகளின் கொஞ்சலொலி போல
அழைப்பு மணி உள்ள வீட்டின் முற்றத்துள்
எட்டிப் பார்க்கின்றன பூமரக் கிளைகள் -
இரகசியமாய்ப் பறவைகளுக்கு சேதி சொல்ல.
முகம் பார்க்கவென்றே  நீரை  முகிலுக்கு அனுப்பி
கண்ணாடிக் குளங்கள் செய்து கொள்கின்றன
மாற்றமே அழகென சலசலக்கும்  இலைமரங்கள்.
மண்ணோடு கட்டுண்டு கொண்டே மண் தாண்டி
வேர்களை தேடலுக்கு அனுப்பும் சூட்சும மரங்கள்
மௌனமாய் பதில்களை பூக்களாய்  எழுதுகின்றன..

எத்தனை முறை அகற்றினாலும்  வாசல் கம்பிகளில் 
பிடிவாதக் குழந்தையாய் சிரிக்கின்ற  இலைகளின் ஜீவன் 
ஒரு பூ உதிர்ந்து முகம் உரசி தோள் தழுவும்  உன்னத கணம்
ஒரு அலையடித்தாற்போல மனதை எழுப்பும்  இளங்காற்று
கூடடையும் பறவைகளின்  சங்கீத தியானம் என
தினமும்  ஒளிகூட்டும் ஒரு மரத்தின் அத்தனையும்...
இருந்தும்...
குடைகளாய் நீளும் நெடுஞ்சாலை மரங்களின்
பசும் பூங்கிளைகள் வெட்டப்படும்  போது
குவிந்துவிடுகிற சூனியத்தின் அகோரம்
நம்மில் யார் முகம்?