Wednesday, 16 March 2011

பொம்மைகள்


பொம்மைகளோடு விளையாடுகிறாள் சிறு பெண்
மூன்று  கைக்குட்டைகள் ஜன்னல் கம்பிகளில்
தொட்டில்களாய் அசைகின்றன வரிசையாக.
ஓரக்கண்ணால் பிள்ளைகள்  தூங்கிவிட்டனவாவென
தொட்டில்களுக்குள் பார்த்தபடி விளையாடுகிறாள்...
சிறிய அம்மா - அவளது முகத்தில் கனிவும், பொறுப்பும்.
கதவைத் திறந்து  உள்ளே வருபவரை நிறுத்தி
வாயின் மேல் விரல் வைத்து சாடை செய்கிறாள்
சத்தம் போடாதீர்கள் என. 
படபடக்கும் சன்னல் கதவுகளை செல்லமாய் அடித்து
ஏன் சத்தம் என கண்டிக்கும் அவள் உடன் நகர்ந்து 
வேலையாய் இருக்கும் பாவனை  செய்கிறாள். 
இறுதியில் பிள்ளைகளை நேர்த்தியாய் வாரியெடுத்து
அருகில் கிடத்தியபடி தட்டிக் கொடுக்கும் அவள்
அயர்ந்து தூங்குகிறாள் பொம்மைகள்  விழித்திருக்க.
தமக்குள்ளே பேசிக்கொண்ட பொம்மைகள் சொல்லின:
இப்படித்தான் மனிதர்கள் வாழ்க்கையில் - 
வேறு பொம்மைகளோடு - அவரவர் கற்பனையோடு.

10 comments:

vasan said...

பொம்மைகளுக்கு கிடைக்கும் க‌வ‌ன‌ம்
பெரும்பாலும் உண்மைக‌ளுக்கு கிடைப்ப‌தில்லை.

மிருணா said...

உண்மை திரு.வாசன்.நன்றி.

சுந்தர்ஜி said...

பொம்மைகளுடான குழந்தைகளின் பாவனை போல் உண்மையான பாவனை வேறெதுவும் இருந்ததில்லை. அந்த உலகத்தைப் போல் பெரிய சொத்து வேறெதுவும் இருந்ததில்லை.அந்த உலகத்தை இழந்ததைவிடப் பெரிய இழப்பும் இருந்ததில்லை.

அற்புதம் மிருணா.(இந்தப் பெயர்தான் இத்தனை நாள் சைக்கிளை ஓட்டியதா?)

படமும் கனவும் நனவும் கலந்தாற் போல் அழகு.

மிருணா said...

நன்றி திரு.சுந்தர்ஜி.அந்த உலகத்தை நாம் வேறு விதங்களில் பதிலீடு செய்கிறோம் - கொஞ்சம் வெளிப்படையாகவும், அதிகம் PERSONAL ஆகவும் என்றுதான் சொல்ல விழைகிறது கவிதை.அப்புறம் மிருணா சும்மா பேருக்கு.இந்த தளத்தை ஓட்டுவது சைக்கிள்தான்.

Harani said...

பொம்மைகள் எப்போதும் சுகானுபவம் மிக்கவை. அவை எல்லோருடனும் இணைந்தும் இயைந்தும் இயங்கக்கூடியவை. ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவையும் பிணக்கையும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பொம்மைகள்தான் சந்து செய்விக்கின்றன. குழந்தைகளின் உலகில் பொம்மைகள்தான் அவர்களின் துடிப்புமிகு எழில்மிகு வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி அவரவர்க்கான வாழ்வில் பறந்துகொண்டிருக்கையில் அவர்கள் விட்டுச் செல்லும் தனிமையை (ஈடு கட்ட முடியாத தனிமையை) தற்செயலாகப் பரண் ஒழிக்கையில் விழுகின்ற ஒட்டடைப் படிந்த பொம்மைகளுள் ஏதேனும் ஒன்று தனிமையை ஒதுக்கி மிச்சமிருக்கும் வாழ்வை மீட்டெடுத்து வாழவைக்கின்றன. எல்லோருக்குள்ளும் ஒரு பொம்மை உணர்வு ஒளிந்துகொண்டிருக்கிறது. ஆகவேதான் நாம் எங்கேறும் குழந்தைத்தனமாகப் பேசவோ செய்யவோ உடன்பட்டுவிடுகிறோம். நினைவுகளைக் கிளறிவிட்ட பதிவு சைக்கிள். நன்றிகள்.

மிருணா said...

அழகாகச் சொல்லிருக்கீங்க.வளர்ந்தபின் பிடித்த மனிதர்கள் பொம்மைகளாய் சில நேரம் என்பது வேறு கதை.நன்றி திரு.ஹரணி.

கமலேஷ் said...

கடைசி வரிகள்
அனிச்சையாய்
ஒரு புன்னகையை
வாசகனின் உதடுகளில்
எழுதி வைக்கிறது.

அழகான கவிதை.

மிருணா said...

உங்கள் கருத்துரையும் கவிதையுரையாய் இருக்கிறது.நன்றி.

நிலாமகள் said...

//மூன்று கைக்குட்டைகள் ஜன்னல் கம்பிகளில்
தொட்டில்களாய் //
//ஓரக்கண்ணால் //
//கனிவும், பொறுப்பும்//
//வாயின் மேல் விரல் வைத்து சாடை //
//செல்லமாய் அடித்து//
//வேலையாய் இருக்கும் பாவனை//
//நேர்த்தியாய் வாரியெடுத்து//

குழந்தைகள் உலகத்தில் 'போலச் செய்தல்' வெகு சுவாரஸ்யம். மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றிய அக்கறை வேண்டியிராத குதூகலம். என் பெண் தன் பொம்மை பாப்பாவை இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். தேவையற்றதை உடனுக்குடன் அப்புறப்படுத்திவிடும் சுபாவமுடைய அவளுக்கு தன் அற்புத உலகின் பொக்கிஷங்களை இழக்க மட்டும் மனமற்றிருப்பதை பெருமிதத்துடன் ரசித்திருப்போம். சாய்த்தால் கண்மூடும் அப்பொம்மையை கவனமாக கையாளும் அவளது குழந்தைமை நினைவை கிளர்த்தியது தங்கள் கவிதை. குழந்தைகள், மழை போல் ... இல்லையா மிருணா...

தாமத வருகைக்கு வெட்கி நிற்கச் செய்தது கவிதை.

மிருணா said...

பகிர்வுக்கு நன்றி தோழி. நான்கூட என் அண்ணன் மகள் நினைவில்தான் எழுதினேன். ஒரு சதுரத் துணி போதும் அவளுக்கு - கற்பனை எல்லை தாண்டி விரிய. அந்த மாயக் கம்பளத்தில் நானும் ஒட்டிக் கொள்வேன். நீங்கள் சொல்வது போல மழை வெள்ளம் போல அவள் உலகுள் அடித்துச் செல்லப்பட்ட நாட்கள் அவை.