Saturday, 30 April 2011

பெயரற்றது
பனிப்பாறை நீரான பொழுது
ஒரு துளிச் சத்தமும் கேட்கவில்லை
பெரிதாக ஒன்றுமில்லை
நெகிழ்தல், உடைதல், பெருக்கெடுத்தல்
அவ்வளவே.
தவிர
மேற்பரப்பில் வானம் படிந்து கொள்ள
நீர்மத்துள் ஜீவனாய்
கொஞ்சம் வாழும் வேட்கையும்...
                                                       .

Thursday, 21 April 2011

நிழல் இலைகள்


தூங்காத இரவொன்றில் மெல்ல
நினைவுகளின் ஜன்னல்கள் திறக்கின்றன.
ஏக்கங்களின் பாதங்கள் அடிவைக்கும் ஓசை.
நீண்ட நாள் நட்பு போல கரம் கொடுக்க
தயாராகின்றன மனதின் மெலிந்த விரல்கள்.
ஒவ்வொரு உருவமும் அவ்வளவு அழகு
அவ்வளவு பிரியம் அவ்வளவு அவ்வளவு.
எப்போது வழிந்ததிந்த கண்ணீர் - அதன் சுவை
எப்போது இனிப்பாகவும், கரிப்பாகவும் ஆனது?
சிறகைப் பிடித்து வீசப்பட்ட பறவை போல
வானில் விரைந்து  மறந்து போனவை
ஏன்  திரும்பின வலியுள்ள கூடிற்கு?
வார்த்தைகளும் தொலைந்த இவ்விரவு -
மௌனமாய் இருக்கைகளை காட்டுகிறது
வந்த விருந்துக்கும் வரவிருக்கும் விருந்துக்கும்.
எல்லோரும் நிறைந்தபின் புன்னகையின் நடனம்
மனத் தர்பாரெங்கும் சப்தங்கள் எதிரொலிக்க.
நிலவின் ஒற்றை கிரணம் மட்டும்
நிழல் இலைகளை வருடுகிறது மென்மையாக -
அறிதலில்.

Thursday, 7 April 2011

உங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி

                                        அருணா ஷான்பாக்                                                             
      மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியின் தத்துவத்துறை நடத்திய திரைப்படங்களில் பொருண்மை குறித்த ஆய்வு எனும் நிகழ்விற்காக  வானவில் ரேவதி இயக்கிய உங்களில் ஒருத்தி எனும் விவரண-நாடக படைப்பைப் பகுப்பாய்வு செய்ய அழைக்கப்பட்டிருந்தேன். 2001 இல் 19 வயதேயான ரீட்டா மேரிக்கு காவல் நிலையத்தில் நடந்த கொடும் வன்முறை பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். காவல் துறை மீது மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்திய சம்பவமாக, அப்பெண்ணிற்கு ஏற்பட்ட  பெரும் துக்கமான நிகழ்வாக அது நினைவுகளில் பதிந்திருந்தது. அதனாலேயே அந்த  படமிருந்த  குறுந்தகடைப் பார்க்காமலேயே நாட்களைக் கடத்தினேன் உறுத்தலோடு. பின் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.
      விவரணப் படத்தின்படி நம்மில்  ஒருத்தியான  ரீட்டா  மேரி கல்வியில் விருப்பமின்றி வீட்டில் இருந்தபடி மியூசிக் சேனல்களும், திரைப்படம் சார்ந்த செய்திகளையும் விருப்பமுடன் படிக்கிறாள். உறவினர் வீட்டுக்குத் தாயுடன் சென்றிருந்த இடத்தில் ஏற்படும் மன வருத்தத்தில் வீட்டை விட்டு  வெளியேற உதவியாகத் தாயிடம் தான் பணம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கையில் நகையுடன் வெளியேறுகிறாள். தனிமையில் மனக் குமைவுடன் நிற்கும் ரீட்டாவை ஒரு பெண்களை விற்கும் எத்தன் பார்க்கிறான். தான் உதவுவதாகக்  கூறி அவளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அங்குள்ள பெண் ரீட்டாவுக்குப் பிரியாணி கொடுத்து, நைச்சியமாகப் பேசி  அவளை தாங்கள் சொன்னவாறு நடக்கச் சொல்கிறாள். அங்கிருக்கும் இன்னொருவன் தனி வீடு பார்த்து அவளை பத்திரமாக அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றுகிறான். அதே வேளையில் அவள் ஊசிகள் மூலமாக எப்போதும் மயக்க நிலையில் வைக்கப்படுகிறாள். பாலியல் வல்லுறவு அவள் மேல் நடத்தப்படுகிறது.
        அந்த விடுதிக்கு வரும்  சில லாரி ஓட்டுனர்களால் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. வாழ்கையின் முரண்கள்தான் எத்தனை? பெண் தேடி அந்த விடுதிக்கு வரும் அவர்கள் கதறி அழும் ரீட்டாவைப்  பார்த்து இரங்கி  அவளைக் காப்பாற்றத் துணிகிறார்கள். தப்பிக்கிற வழியில் பேருந்தில் பிடிபட்டு போலீஸ் அவர்களைக் கைது செய்கிறது. கள்ளச் சாராயம் கடத்தியதாக அவர்கள் மேல் பொய் வழக்குப் பதிவு செய்யப் படுகிறது. ரீட்டா மேரியின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கல்பனா ஏதோ முரணை உணர்கிறார். எனவே வழக்கமான 15 நாட்கள் காவலில் வைக்காமல் 3 நாட்களுக்குப் பின் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்கிறார். அன்றிரவு செஞ்சி காவல் நிலையத்தில் அங்குள்ள சில காவலரால் அப்பாவியான அவள் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுகிறாள். அவளுக்குப் பக்கத்து அறைக் கைதி அவள் வலி தாங்காமல் கதறியதை, நடக்க இயலாமல் துடிப்பதை, அவள் ஆடைகளில் ரத்தக்கறை படிந்திருந்ததைக்  கவனிக்கிறார்.       
      மீண்டும் நீதி மன்றம். நீதிபதி கல்பனா. அவருக்கு அவளுக்கு நடந்த கொடுமை விளங்குகிறது. அவளைப் பற்றி வழக்கறிஞர் லூசி பேசுகிறார்.  அவள்  வெட்டுக் காயம் பல உள்ள  ஆட்டுக் குட்டியொன்றை  குளிர்ந்த நீரில் முக்கியதுபோல துடித்தாள் என்றும், தன உடல் வலிக்கிறது  என மீண்டும் மீண்டும் கதறியபடி இருந்தாள் என்றும் கூறுகிறார். பின் திலகவதி I.P.S  தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்பாடு செய்யப் படுகிறது. தீர விசாரிக்கும் அவர் அவளுக்கு நேர்ந்த அவலத்தை வெளிக் கொண்டு வருகிறார். ரீட்டாவின் பக்கத்து அறைக் கைதியும் சாட்சி அளிக்கிறார்.சம்பந்தப்பட்ட காவலர்களுக்கும், மற்ற தரகர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப் படுகிறது. மன அமைதி இழந்து போன ரீட்டா உளவியல் சிகிச்சை மேற்கொள்ளுகிறாள். என்னைப் பார்க்க வராதே நான் செத்து போய்விட்டேன் என  தன்னைப்  பார்க்க வரும் தாயிடம் கதறுகிறாள். சில காலங்களுக்குப் பின் மெல்ல தேறி வீடு செல்கிறாள். படத்தின் இறுதியில் தான் இப்போது மீண்டும் படிப்பதாகவும், சுற்றத்தவரின் பேச்சுக்கிடையிலும் தான் தைரியமாக இருப்பதாகவும், தனக்கு  நேர்ந்தது இனி யாருக்கும் நேர வேண்டாம் என்றும் கூறுகிறாள்.
      தாங்க முடியாத ஒரு வலிக்கதறலை  ஏற்படுத்துகிறது இந்த ஆவணப் படம் காட்டும் உண்மைகள்.  ரீட்டா ஒரு சிறு பெண். நம்பிக்கையோடு வெளியே வருகிறாள். சமூகம் அவளை வஞ்சிக்கிறது. சமூகம் வஞ்சித்தால் காக்க வேண்டிய காவலர்களோ சதை வெறி பிடித்த ஈவிரக்கமற்றவர்களாய் அவளை கிழித்துக் குதறுகிறார்கள். நல்ல வேளையாய் நீதியின் கண் மட்டும் அவளைக் காப்பாற்றுகிறது .
 
ஆனால் காப்பாற்றப் படாத ரீட்டா மேரிகளும், முஸ்கான்களும் என்ன ஆகிறார்கள்? உயிரைக் காக்கும் சேவை செய்த அருணா ஷான்பாக் இன்று 37 வருடங்களாகக்  கோமாவில் இருப்பதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? 

நாம் பாதுகாப்பான ஒரு குடிமைச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை உணர்வை தருவது ஒரு அரசின் அடிப்படைக் கடமை அல்லவா?

பாலியல் வக்கிரம் என்பது இவ்வளவு உயிர் மற்றும் உள்ள அழிவை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கை உணர்வோடு நாமோ, நம் பேச்சு, எழுத்து போன்ற செயல்பாடுகளோ, ஊடகம் குறித்த நம் பார்வையோ, ஊடகக்  கட்டுப்பாடு குறித்த உணர்வோ இருக்கிறதா?

இது தனி மனிதப் பிரச்சனை அல்ல சமூகப் பிரச்சனை. அதனால் நாம் நம் உளவியலைப் புரிந்து கொள்ள, தடுமாற்றங்களை மடைமாற்றம் செய்ய, அறிவியல் பூர்வமாக இவ்விஷயத்தை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டியது, அந்த விழிப்புணர்வு  அறிவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக எனக்குப் பட்டது தான் தைரியமாக இருப்பதாக ரீட்டா மேரி சொன்னது. இந்த மனத் துணிவை ஏற்படுத்துவது ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நம் கடமை என உறுதியாகத் தோன்றுகிறது.

அதோடு முதலில் ரீட்டா  நம்பிய திரை உலகம் காட்டிய மாய உலகம் பற்றிய பிம்பங்கள் தகர்ந்து அவள் கல்வி நோக்கி நகர்வதை  நுட்பமாக உணர்த்துகிறது இந்தஆவணப் படத்தின் இறுதிக் காட்சிகள். இயக்கிய பிரேமா ரேவதிக்கு நன்றியும், வாழ்த்துக்களும். தவிர இது போன்ற ஆவணப் படங்கள் கல்லூரிகளுக்கு அவசியம் என்றும் எண்ணுகிறேன்.

Monday, 4 April 2011

துளிர்


இரு பட்டாம்பூச்சிகளின் மஞ்சள் சுறுசுறுப்பில்
மனதைத் தொலைத்துப் பறக்க விட்டேன்
வார்த்தையை யைதைத்ர்வா என
வாசித்துக் கொண்டேன் - கொண்டேன் வாசித்து. 
உயிரை  நிறைக்கும் மணத்தோடு இருந்த
பெயர் தெரியாத அந்த பூக்களுக்கு
ரங்கூன் க்ரீப்பெர்ஸ்  என்று பெயரென
நெருங்கிச் சொன்னேன்  இரகசியமாக.
பொன் பொழுததில் பறக்கும் சருகுகள்
மரங்களில் இளந்துளிர்களாய் ஆதல் கண்டேன்.
வானம் மட்டும் அறிந்த சிறகுகளின்
இசைக் குறிப்பொன்று இதயத்துள் தவறி வீழ்ந்து 
தன்னைத்தானே இசைத்தபடி அழைத்துச் செல்ல
போக வேண்டிய இடத்திற்கு போகாமல்
வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்ட நிறைவில்
மௌனங்களும், துயரும், அன்பும்  கசியும்
பெருவெளியுள் நடந்தபடி  திரும்பிப் பார்க்கிறேன்
ஒரு கவிதைப் புத்தகத்தின் உள்ளிருந்து உலகத்தை.