Thursday, 7 April 2011

உங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி

                                        அருணா ஷான்பாக்                                                             
      மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியின் தத்துவத்துறை நடத்திய திரைப்படங்களில் பொருண்மை குறித்த ஆய்வு எனும் நிகழ்விற்காக  வானவில் ரேவதி இயக்கிய உங்களில் ஒருத்தி எனும் விவரண-நாடக படைப்பைப் பகுப்பாய்வு செய்ய அழைக்கப்பட்டிருந்தேன். 2001 இல் 19 வயதேயான ரீட்டா மேரிக்கு காவல் நிலையத்தில் நடந்த கொடும் வன்முறை பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். காவல் துறை மீது மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்திய சம்பவமாக, அப்பெண்ணிற்கு ஏற்பட்ட  பெரும் துக்கமான நிகழ்வாக அது நினைவுகளில் பதிந்திருந்தது. அதனாலேயே அந்த  படமிருந்த  குறுந்தகடைப் பார்க்காமலேயே நாட்களைக் கடத்தினேன் உறுத்தலோடு. பின் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.
      விவரணப் படத்தின்படி நம்மில்  ஒருத்தியான  ரீட்டா  மேரி கல்வியில் விருப்பமின்றி வீட்டில் இருந்தபடி மியூசிக் சேனல்களும், திரைப்படம் சார்ந்த செய்திகளையும் விருப்பமுடன் படிக்கிறாள். உறவினர் வீட்டுக்குத் தாயுடன் சென்றிருந்த இடத்தில் ஏற்படும் மன வருத்தத்தில் வீட்டை விட்டு  வெளியேற உதவியாகத் தாயிடம் தான் பணம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கையில் நகையுடன் வெளியேறுகிறாள். தனிமையில் மனக் குமைவுடன் நிற்கும் ரீட்டாவை ஒரு பெண்களை விற்கும் எத்தன் பார்க்கிறான். தான் உதவுவதாகக்  கூறி அவளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அங்குள்ள பெண் ரீட்டாவுக்குப் பிரியாணி கொடுத்து, நைச்சியமாகப் பேசி  அவளை தாங்கள் சொன்னவாறு நடக்கச் சொல்கிறாள். அங்கிருக்கும் இன்னொருவன் தனி வீடு பார்த்து அவளை பத்திரமாக அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றுகிறான். அதே வேளையில் அவள் ஊசிகள் மூலமாக எப்போதும் மயக்க நிலையில் வைக்கப்படுகிறாள். பாலியல் வல்லுறவு அவள் மேல் நடத்தப்படுகிறது.
        அந்த விடுதிக்கு வரும்  சில லாரி ஓட்டுனர்களால் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. வாழ்கையின் முரண்கள்தான் எத்தனை? பெண் தேடி அந்த விடுதிக்கு வரும் அவர்கள் கதறி அழும் ரீட்டாவைப்  பார்த்து இரங்கி  அவளைக் காப்பாற்றத் துணிகிறார்கள். தப்பிக்கிற வழியில் பேருந்தில் பிடிபட்டு போலீஸ் அவர்களைக் கைது செய்கிறது. கள்ளச் சாராயம் கடத்தியதாக அவர்கள் மேல் பொய் வழக்குப் பதிவு செய்யப் படுகிறது. ரீட்டா மேரியின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கல்பனா ஏதோ முரணை உணர்கிறார். எனவே வழக்கமான 15 நாட்கள் காவலில் வைக்காமல் 3 நாட்களுக்குப் பின் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்கிறார். அன்றிரவு செஞ்சி காவல் நிலையத்தில் அங்குள்ள சில காவலரால் அப்பாவியான அவள் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுகிறாள். அவளுக்குப் பக்கத்து அறைக் கைதி அவள் வலி தாங்காமல் கதறியதை, நடக்க இயலாமல் துடிப்பதை, அவள் ஆடைகளில் ரத்தக்கறை படிந்திருந்ததைக்  கவனிக்கிறார்.       
      மீண்டும் நீதி மன்றம். நீதிபதி கல்பனா. அவருக்கு அவளுக்கு நடந்த கொடுமை விளங்குகிறது. அவளைப் பற்றி வழக்கறிஞர் லூசி பேசுகிறார்.  அவள்  வெட்டுக் காயம் பல உள்ள  ஆட்டுக் குட்டியொன்றை  குளிர்ந்த நீரில் முக்கியதுபோல துடித்தாள் என்றும், தன உடல் வலிக்கிறது  என மீண்டும் மீண்டும் கதறியபடி இருந்தாள் என்றும் கூறுகிறார். பின் திலகவதி I.P.S  தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்பாடு செய்யப் படுகிறது. தீர விசாரிக்கும் அவர் அவளுக்கு நேர்ந்த அவலத்தை வெளிக் கொண்டு வருகிறார். ரீட்டாவின் பக்கத்து அறைக் கைதியும் சாட்சி அளிக்கிறார்.சம்பந்தப்பட்ட காவலர்களுக்கும், மற்ற தரகர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப் படுகிறது. மன அமைதி இழந்து போன ரீட்டா உளவியல் சிகிச்சை மேற்கொள்ளுகிறாள். என்னைப் பார்க்க வராதே நான் செத்து போய்விட்டேன் என  தன்னைப்  பார்க்க வரும் தாயிடம் கதறுகிறாள். சில காலங்களுக்குப் பின் மெல்ல தேறி வீடு செல்கிறாள். படத்தின் இறுதியில் தான் இப்போது மீண்டும் படிப்பதாகவும், சுற்றத்தவரின் பேச்சுக்கிடையிலும் தான் தைரியமாக இருப்பதாகவும், தனக்கு  நேர்ந்தது இனி யாருக்கும் நேர வேண்டாம் என்றும் கூறுகிறாள்.
      தாங்க முடியாத ஒரு வலிக்கதறலை  ஏற்படுத்துகிறது இந்த ஆவணப் படம் காட்டும் உண்மைகள்.  ரீட்டா ஒரு சிறு பெண். நம்பிக்கையோடு வெளியே வருகிறாள். சமூகம் அவளை வஞ்சிக்கிறது. சமூகம் வஞ்சித்தால் காக்க வேண்டிய காவலர்களோ சதை வெறி பிடித்த ஈவிரக்கமற்றவர்களாய் அவளை கிழித்துக் குதறுகிறார்கள். நல்ல வேளையாய் நீதியின் கண் மட்டும் அவளைக் காப்பாற்றுகிறது .
 
ஆனால் காப்பாற்றப் படாத ரீட்டா மேரிகளும், முஸ்கான்களும் என்ன ஆகிறார்கள்? உயிரைக் காக்கும் சேவை செய்த அருணா ஷான்பாக் இன்று 37 வருடங்களாகக்  கோமாவில் இருப்பதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? 

நாம் பாதுகாப்பான ஒரு குடிமைச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை உணர்வை தருவது ஒரு அரசின் அடிப்படைக் கடமை அல்லவா?

பாலியல் வக்கிரம் என்பது இவ்வளவு உயிர் மற்றும் உள்ள அழிவை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கை உணர்வோடு நாமோ, நம் பேச்சு, எழுத்து போன்ற செயல்பாடுகளோ, ஊடகம் குறித்த நம் பார்வையோ, ஊடகக்  கட்டுப்பாடு குறித்த உணர்வோ இருக்கிறதா?

இது தனி மனிதப் பிரச்சனை அல்ல சமூகப் பிரச்சனை. அதனால் நாம் நம் உளவியலைப் புரிந்து கொள்ள, தடுமாற்றங்களை மடைமாற்றம் செய்ய, அறிவியல் பூர்வமாக இவ்விஷயத்தை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டியது, அந்த விழிப்புணர்வு  அறிவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக எனக்குப் பட்டது தான் தைரியமாக இருப்பதாக ரீட்டா மேரி சொன்னது. இந்த மனத் துணிவை ஏற்படுத்துவது ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நம் கடமை என உறுதியாகத் தோன்றுகிறது.

அதோடு முதலில் ரீட்டா  நம்பிய திரை உலகம் காட்டிய மாய உலகம் பற்றிய பிம்பங்கள் தகர்ந்து அவள் கல்வி நோக்கி நகர்வதை  நுட்பமாக உணர்த்துகிறது இந்தஆவணப் படத்தின் இறுதிக் காட்சிகள். இயக்கிய பிரேமா ரேவதிக்கு நன்றியும், வாழ்த்துக்களும். தவிர இது போன்ற ஆவணப் படங்கள் கல்லூரிகளுக்கு அவசியம் என்றும் எண்ணுகிறேன்.

8 comments:

சுந்தர்ஜி said...

மிகவும் பிற்போக்கான காட்டுமிரண்டி சமூகத்தில் நாம் வாழ்வதான உணர்வை ஏற்கெனவே அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ரீட்டமேரியின் இந்த ஆவணப்படம் நம் கல்வி குறித்தும் பெண்கள் குறித்த பார்வை குறித்தும் பலத்த அதிர்வுகளோடு பல விடைகளற்ற கேள்விகளை எழுப்புகிறது.

Anonymous said...

இந்திய சமூகம் காட்டுமிராண்டித்தனமானவை என்பதில் ஐயமே இல்லை ! இங்கு பிரச்சனையே இந்நாட்டை வழிநடத்தும் முக்கிய தலைகளும் அவ்வாறே இருக்கின்றன ............. ரீட்டாமேரியின் இந்த ஆவணப்படம் பரவலாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவும் பேய்களை எதிர்த்துப் போராடவும் வழி செய்ய வேண்டும் என்பதே எனது அவா .....................

Harani said...

அன்புள்ள சைக்கிள்..

ரீட்டா மேரி அன்றைய சூழலில் செய்தித்தாளில் படித்துவிட்டு குடும்பம் முழுக்க வேதனைப் பொங்கப் பகிர்ந்துகொண்டேன். உங்களின் பதிவு மனதை வேதனைப்படுத்துகிறது. படைப்பாளிகளாகிய நாம் என்னதான் செய்யபோகிறோம்? பதிவதும் பகிர்வதும் இயலாமையில் மனம் புழுங்கித் தவிப்பதும் இன்னும் வேதனையைப் பெருக்குகிறது. இந்தத் தேசத்தை மாற்றவேண்டும். எப்படி மாற்றுவது? எப்படி நம் செயலை வடிவமைத்துக்கொள்வது பலத்த யோசனையில் இருக்கிறேன்.உங்களி பதிவு என்னை உலுக்குகிறது நெருப்பைக் கொட்டி. இந்த ஆவணப்படம் எல்லாப் பெண்களையும் சென்றுசேர வேண்டும். படிக்காத பெண்களையும் ஆண்களையும்கூட பார்க்கவைத்து விளக்கவேண்டும்.

நிலாமகள் said...

//அவள் வெட்டுக் காயம் பல உள்ள ஆட்டுக் குட்டியொன்றை குளிர்ந்த நீரில் முக்கியதுபோல துடித்தாள் என்றும், தன உடல் வலிக்கிறது என மீண்டும் மீண்டும் கதறியபடி இருந்தாள்//

படிக்கும் போதே நாமும் ரீட்டாவின் வலி உணர்கிறோம் மிருணா. இவ்விடத்தில் தம்மின் மெலியார்க்கு எந்த விதத்தில் இதம் தரலாமென ஈரம் உள்ள அனைவர்க்கும் சிந்தனை எழுவது இயல்பு.

கூடவே, இளம் சிறார்களுக்கு அறிவுறுத்தலும், வழிகாட்டலும் நமது பொறுப்பென சுட்டிக் காட்டியது நன்று.

கீதா இளங்கோவன் said...

அருமையான பதிவு மிருணா.... சில வருடங்களுக்கு முன், மதுரையில் கூடு பெண்கள் வாசிப்பரங்கம் நடத்திய, பெண் இயக்குனர்களின் படங்கள் திரையிடப்பட்ட `பெண் திரை' சர்வதேசத் திரைப்பட விழாவில், `உங்களில் ஒருத்தி' ஆவணப் படமும் இடம் பெற்றது. படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்ததால் இப்படத்தை முன்னதாகவே பார்த்தேன்.... மூன்று நாட்கள் தூங்க முடியவில்லை.... அப்பாவி இளம் பெண்கள் இந்த சமுதாயத்தில் எப்படியெல்லாம் சிதைக்கப் படுகின்றனர், அதுவும் அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியுள்ள பொறுப்பில் உள்ளவர்களால்... சில நல்ல உள்ளங்கள் உதவியதால் ரீட்டாவால் மீண்டு வர முடிந்தது. இல்லாவிட்டால்.... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.... ரேவதியின் இயக்கத்தில் வீரியமான ஒரு படைப்பு இந்த படம்.
// இது தனி மனிதப் பிரச்சனை அல்ல சமூகப் பிரச்சனை. அதனால் நாம் நம் உளவியலைப் புரிந்து கொள்ள, தடுமாற்றங்களை மடைமாற்றம் செய்ய, அறிவியல் பூர்வமாக இவ்விஷயத்தை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டியது, அந்த விழிப்புணர்வு அறிவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.//
உங்கள் கூற்றுடன் முழுக்க உடன்படுகிறேன். விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழி.

மிருணா said...

# நன்றி திரு.சுந்தர்ஜி. காட்டுமிராண்டி/நாகரிகவாசி என்ற இருமைகள் கற்பிதமே. மனதுள் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது குறித்து சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தன்னைத் தானே வாசிக்கவும், யோசிக்கவுமான பயிற்சி தேவைப்படுகிறது . பின் சில வன்முறைகள் குறையும்.
# வரவிற்கும், பகிர்வுக்கும் நன்றி திரு.இக்பால். நம்மின் சிறந்த கூறுகளை நமது வருத்தத்தில் நாம் நமதாகப் பற்றிக் கொள்ளத் தவறவிடக் கூடாது. தவறுகளையும், வன்முறைகளையும் தூண்டுவது எது, ஏன் என்று இன்னும் ஆழமாகப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
# உணர்வுபூர்வமான பகிர்வுக்கு நன்றி திரு.ஹரணி. நிச்சயமாக நாம் வினை செய்ய வேண்டும். அதில் சந்தேகமில்லை. அந்த ஆவணப் படத்தை தங்கள் கல்லூரியில் திரையிடலாம். உங்களுக்கு சம்மதம் எனில், உதவ முடியும்.
# சரியாக புரிந்துகொண்டீர்கள் நிலாமகள். ரீட்டாவின் நிலையை அப்படியே உணர்த்தும் வரிகள் அவை. நமக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நிறையப் பேசத் தோன்றுவதால் இங்கே எழுதாமல் போகிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
# அப்போதுதான் கூடிற்கு வரத் துவங்கிய காலம் என்பதால் ஆவணப் படத்தைப் பார்க்க இயலவில்லை. அந்தப்படம் சரியான தேர்வுதான். காப்பாற்றப் படாத ரீட்டாக்களுக்கும், இனி நேரக் கூடாத இது போன்றவற்றிற்கும் நாம் உழைக்க வேண்டியதிருக்கிறது. விரிவாக நேரில் பேசுவோம். நன்றி கீதா.

இரா.எட்வின் said...

வணக்கம் தோழர்,
இது இரண்டாவது முறை இந்தப் பதிவிற்காக நான் பின்னூட்டமிடுவது. போனமுறை மிக நீண்ட பின்னூட்டம் இட்டு பதிவதற்குள் எனது கணினியிப் பழுதானது.

/என்னைப் பார்க்க வராதே நான் செத்து போய்விட்டேன்/

ரீட்டாப் பெண்ணின் நினைவை மீளவும் கொண்டு வந்து சேர்த்தது உங்கள் பதிவு.

/என்னைப் பார்க்க வராதே நான் செத்து போய்விட்டேன்/

/தான் தைரியமாக இருப்பதாக ரீட்டா மேரி சொன்னது./

இந்த இரண்டு ஸ்டேட்மெண்டுகளுக்கும் இடையில் எத்தனை போராட்டங்கள். இதற்கிடைப் பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான் நாம் நம்பிக்கையோடு ஏற்றிப் பிடிக்க வேண்டிய விஷயங்கள்.

மிருணா said...

பகிர்வுகளுக்கு நன்றி தோழர். உண்மைதான். 'மனதில் உறுதி வேண்டும்' இல்லையா? அதே சமயம் இது போன்ற நிகழ்வுகள் விபத்தாகக் கருதப்படாமல் பாதுகாப்பான சமூகம் பெறுவதும், அதை அரசிடம் demand செய்வதும் குடிமையுரிமையாகக் கருதப்பட வேண்டும்.