Tuesday, 31 May 2011

நிழல்


சொற்கள்
கண்ணாடி
படிமங்கள்
பிம்பங்கள்
எண்ணங்கள்
வெளிச்சம்
மௌனங்கள்
நிழல்
வாசிப்பு
ஒளிச் சிதறல்
தரிசனம்
தானறிதல்.

Friday, 27 May 2011

பகடை


வெளிச்சம் பற்றிய நினைவுகளறியா
பிறவி இருளென கவிழ்கிறது காலம்
இருள் படிந்திருக்கும் தெருக்களில்
உத்தேசமாய் நடந்து செல்கிறாள் பிச்சி
திரை அரங்கின்  எதிர்பாராப் படிகளாய்
எந்த நேரமும் தட்டுப்படலாம்
நம்பிக்கையின் மின்னல் தடயங்கள்
எனக் காதுகளுயர்த்திய கால்களோடு.
 
திறந்து விடக் கூடிய ஜன்னல்கள்
எதிர்பட்டுவிடக் கூடிய  பூக்கள்
காற்றில் ஒலிக்கும் மணிச்சரங்கள்
கடந்து  செல்லும் பட்டாம்பூச்சிகள்
அல்லது
மரணத்திலிருந்து மீண்ட உயிரின்
ஒரு ஜீவ பார்வை என்று
மீண்டும் மீண்டும் 
தனக்குள் உச்சரித்தபடி  நடக்கிறாள்.

நேற்றின் பச்சைய நினைவுகளை 
இன்றின் பாலை கருக்க
உற்றுப் பார்த்தபடி தேடுகிறாள்
அவள் மட்டுமே அறிந்த சாலைகளின்
மறைந்து போன  சக்கரத் தடங்களை.
ஒரு மொழிபெயர்க்கப் படாத நூலை
இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும்
நரம்புகள் தெறிக்கும் விரல்களை
மரணம் ஒருக்கால் தளர்த்தலாம்.

உடையவர் கைவிட்ட மிரண்டு மெலிந்த
நாயொன்றும் அவளது இறுதி நினைவுகளில்
பின் தொடர்ந்தபடி இருக்கிறது.

ஒரு கனவு கூட அவளை
மீட்டு விடும் சாத்தியங்கள் இருக்க
புதிர் வட்டப் பாதையை
நினைவின் சரடு கொண்டு
கடக்கும் பிச்சியின் எத்தனிப்பை
கண்கொட்டாமல் பார்க்கிறது காலம்
மந்திரப் பகடையைச் சுழற்றியபடி.

Tuesday, 24 May 2011

ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு


உள்ளிழுக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் தண்ணீரின்
மாய மிதவை கணத்துள் பிரவேசிக்கும் பொழுதில்
எடையற்ற ஒரு வெளியின் வெளிச்ச கணங்களில்
மொழி  மென் துகிலென நழுவிச் செல்லும் நளினமாய்
கண்கள் அறியாக்  காற்றின் உணர்சித்திரங்களும்
பரவசம் பேசிச் செல்லும் வார்த்தைகளற்று.
வழியற்று வலியுற்று வளி போல் திடமற்று 
நெகிழும்  மனதை நிலை இருத்த பூக்களைப் பார்க்க
பசிய கிளை நுனிகளில் நீள் விரல் மருதாணியாய்
பூத்திருக்கும்  செந்நிற பூக்களின் விகசிப்பில் 
நுட்பங்களின் மென்னொளி  துலங்கும்  அகமொழி
இதழ் இதழாய் ததும்பி சிலிர்க்கிறது 
வண்ண வார்த்தைகளாய்.
அசையும் இருப்பே மொழி என்றுணரும் வேளை
மரத்திலிருந்து மிதக்கும் அச் செம்பூக்கள்
மெல்லத் தடம் மாறி கண்களில் உயிர்க்கிறது
ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு.  

Tuesday, 17 May 2011

வளர்பிறை

பேசவோ, பார்க்கவோ,
நினைக்கவே நினைக்கவோ
கூடாதென்ற கட்டளைகள்
பரவித்  திரிகிற வெளியில் 
கடவுச் சீட்டற்ற மேகங்கள்
அழையாமல்  நுழையும்  காற்று
பெரிய கோட்டைக் கதவுகள்
தவற விடும்  இடைவெளியில்
பொசிந்து  விடுகிற நீர்
போன்ற அந்த அன்போ
உறுதியாக வேர்களை
ஆரவாரமின்றி  கிளைபரப்பியபடி 
ஆடும் இலைகளும்  மலர்களும்
முகத்தில் உரசியபடி இருக்க
சாய்ந்து  கொண்டிருக்கிறது
புன்னகைத்தபடி.
அதன் நினைவுகளில்
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு நிலாவென
நினைத்துக் கொண்ட
சிறுபிள்ளை நினைவுகளை
தண்ணென்ற இருப்பில்
மௌனமாய்த் தகர்க்கிற
எல்லோருக்குமான ஒரு நிலா
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
வளர்பிறையென...

Wednesday, 11 May 2011

தெரியவேயில்லை


ஓடிப்பிடித்தல் 
நொண்டி
கண்ணாமூச்சி
கல்லா மண்ணா
திருடன் போலீஸ்
படிகளிலிருந்து குதித்தல்
பாம்புக் கட்டம்
வழுக்கும்  சறுக்கில்
கீழிருந்து மேல்  ஏறல்
பூப் பறிக்க வருகிறோம்
மெல்ல வந்து முள்ளிப் போனவளை
முகபாவம் கொண்டு கண்டறிதல்
மணலுள் பொருள் தேடும்
கிச்சு கிச்சுத் தாம்பாளம்
இன்னும்
ஊஞ்சல், விழுதாட்டம், ட்ரேட்
செத்து விளையாடல்
என ஆடிய பொழுதுகளில்
தெரியவேயில்லை
வளர்ந்த பின்னும்  வாழ்க்கை
இப்படித்தானென...

Monday, 9 May 2011

எதற்கென?


பறக்கும் தும்பிகளுக்கு
இளஞ்சிவப்பு கண்ணாடி இறகுகள்
பசித்த கம்பளிப் பூச்சிகளுக்கு
அதி விரைவு ஊர்திக் கால்கள்
மிதிபடும் பச்சைப் புற்களுக்கு
வெட்டுக் கத்திக் கூர் ஓரங்கள்
ஆயுள் நீண்ட ஆமைகளுக்கு
இறுகிச் செறிந்த ஓட்டுடம்பு
காத்திருக்கும் சூரியகாந்திப் பூக்களுக்கோ
இருப்பேயொரு வண்ண ஆரவாரம்
சிறைப் பிடிக்க, நசுக்க, மிதிக்க
போகிற போக்கில் ஒடித்துப் போக
கல்லெறிந்து கண்டுபிடிக்க
கைகளும், கால்களும்
எதற்கென?

Saturday, 7 May 2011

மூன்று புள்ளிகள்

பற்பல வார்த்தைகளின் அணிவரிசை
போர் புரியும் ஒரு கவிதையில்
ஒப்பீடுகள், சிக்கன உவமைகள்
முரண்தொடைகள், ஆகுபெயர்கள்
படிமங்கள்  எனப் போகும்
ஒரு பொருட் பன்மொழிகள்...
நான் மூன்று புள்ளிகள் குறித்து யோசிக்கிறேன்
முடிவற்ற மூன்று புள்ளிகள் ...
அவை எல்லாவற்றையும் சொல்கின்றன
அல்லது
எதையும் சொல்லாமல் செல்கின்றன.
தேடலுற்ற  ஆன்மாவின் இளைப்பாறல்
இந்த மூன்று புள்ளிகளில் எந்த புள்ளியில்,
அல்லது
மூன்று புள்ளிகளும் சொல்லப்படாத 
ஒரு புள்ளியே தானா?
எனில்
ஒரு புள்ளி முற்றுபுள்ளியைக் குறிக்க
மூன்று புள்ளிகள் முடிவின்மையை குறிப்பது ஏன்?
தர்க்க நியாயங்களுக்கு உட்படாத இப்புள்ளிகள்
மனதின் அ-தர்க்க மொழி பேசும் இயல்பாய்.
எழுதும் மனமும், வாசிப்பு மனமும்
ஒரு புள்ளியில் சந்தித்தல்
சொல்லாததின் மொழி பேசும்
இந்த மூன்று புள்ளிகள் அன்றி
வேறெதில் ?
கால மயக்கத்தில் பயணிக்குமொரு கவிதைக்கு
வழுக்கிச் செல்லும் சக்கர இயக்கங்களாய்
தாளில் பதிந்த மூன்று புள்ளிகள்...

Thursday, 5 May 2011

புனைவு

காதலைப் பாடப் புனிதப்படுத்த வேண்டியிருந்தது
மீராவுக்கும் ஆண்டாளுக்கும்
அக்கமகாத்தேவிக்கும்
ஏன் அண்மைக் கமலா தாசிற்கும்.
அல்லது
பெரும் புனைவில் மட்டுமே
சாத்தியமாயிருக்கலாம்
உள்ளங் கவர் கள்வன் குறித்த
அகப்புற வய உருக்கனவுகள்.
சரித்திரத்தின் தப்படிகள்
தப்பாமல் ஒலித்திருக்க
சாத்தியமற்ற செலூலாயிட் நெசவை
தினமும் நெய்யும் எம்
பெனிலோப் பெண்களுக்கு
அதிர்ச்சி மட்டுமே பெரும்பாலும்...
வைத்தியம்.
அர்ச்சுனனது தீர்த்த யாத்திரையில்
நகைச்சுவை இடைவெளியாய்
பெண்கள் தென்படும் தொன்மம்.
ராமாயண சீதைக்காவது
பார்த்தபின் தான் காதல்
கனவுத் தொழிற்சாலைகளில் பார்க்காமல் காதல்
இடித்தால் காதல் முட்டினால் காதல்
வல்லுறவுக்கு உள்ளாக்கினாலும் காதல்?
''ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு
அந்த ஒன்று என்ன என்பதுதான் கேள்வி இப்போது?''
அப்போது மற்றது?
18 - இல் காதலில் தொலைத்த படிப்பு
25 - களில் காதல் தொலைந்து  படிப்பு.
தயங்கிய கால்களோடு
மொழி புரியாப் பயணியாய்
மீளக் கல்லூரிக்குள் நுழையுமவர்
கண்களில் உயிர்ப்பில்லை.
பைகளுக்குப் பதிலாய்
பரிதாபக் குழந்தைகள்
கனக்குமவர்  கைகளுக்கு
படித்து எழுதல்  எளிதில்லை.
காதலுக்குப் பின் வாழ்தல் குறித்திங்கே
பாடங்களுமில்லை - பெரிதாய்ப்
படங்களுமில்லை.
உன்னை விட... என உருகும் பாடல்களுக்கு
உலகம் சொந்தமில்லை.
உண்மையில்
வாழ்க்கையின் ஆயிரம் கதவுகளுக்கு
தாழுமில்லை.

Tuesday, 3 May 2011

யாருமற்ற தெருவில்

யாருமற்ற தெருவில் கசக்கப்பட்ட  காகிதம் 
சுதந்திரமாய் தெருவை தத்திக்  கடக்கிறது.
காகங்கள் கரைந்தபடி வெயிலை இளக்க
அசையும் இலைகளோடு மரங்களின்  மகிழ்ச்சி
பூமியில் கசிகிறது  உயிர்ப்புற்ற நிழல்களில்.
எங்கேயோ ஒலிக்கும் வாகனச் சத்தங்கள்
உள் நுழையும் போதே மடிந்து மறைய
புகையின் கூந்தல்   துயரில் அலைந்து
மேலெழும்பி மறைகிறது  கரிய  பறவையென.
அமைதி ஒரு அலையற்ற குளமாய்
வீதி எங்கும் நிரம்பி உயரும் வேளை
தெரு  அதிமுழுமையாய் வெம்மையுறுகிறது
கதிரோடான தீராக் காதலில்...
முதற் காலடி மந்திரவாதியின் முழக்கம் போல்
தெருவை  உருமாற்றும் மாயக் கணத்திற்குள்
எப்படியோ வாழ்ந்துவிடுகிறது தனதான வாழ்வை.

Sunday, 1 May 2011

பறத்தல் அதன் சுதந்திரம்


ஒரு பெரிய சொல்லின்
நுனி பற்றி கொறிக்கும் துறுதுறுப்புக்காய்
அளவற்ற பழங்களில் தடுமாறி
கீசு கீசென  மரமெங்கும் ஓடும் வாலிற்காய்
இலைகளில் பதுங்கிப்  பின் ஏதோ நினைத்தாற்போல
தன்னை உலகிற்குச் சொல்லும் பிரத்யேகக் குரலாய்
கிளை விட்டுக் கிளை தாவும்
பெருஞ் சாகச உற்சாகத்துக்காய்  
எப்போதாவது இலைகளூடே தெரியும்
அந்த நீல வானிற்கான வியப்பிற்காய்
கொய்யா மலர்களின் காட்டில் திரியும்
அந்த மன அணிற்களை அறிவேன் நான்
என்றாலுமவை சிக்குவதே இல்லை
எந்த ப(அ)டைப்பு  வலைக்குள்ளும்.