Thursday, 5 May 2011

புனைவு

காதலைப் பாடப் புனிதப்படுத்த வேண்டியிருந்தது
மீராவுக்கும் ஆண்டாளுக்கும்
அக்கமகாத்தேவிக்கும்
ஏன் அண்மைக் கமலா தாசிற்கும்.
அல்லது
பெரும் புனைவில் மட்டுமே
சாத்தியமாயிருக்கலாம்
உள்ளங் கவர் கள்வன் குறித்த
அகப்புற வய உருக்கனவுகள்.
சரித்திரத்தின் தப்படிகள்
தப்பாமல் ஒலித்திருக்க
சாத்தியமற்ற செலூலாயிட் நெசவை
தினமும் நெய்யும் எம்
பெனிலோப் பெண்களுக்கு
அதிர்ச்சி மட்டுமே பெரும்பாலும்...
வைத்தியம்.
அர்ச்சுனனது தீர்த்த யாத்திரையில்
நகைச்சுவை இடைவெளியாய்
பெண்கள் தென்படும் தொன்மம்.
ராமாயண சீதைக்காவது
பார்த்தபின் தான் காதல்
கனவுத் தொழிற்சாலைகளில் பார்க்காமல் காதல்
இடித்தால் காதல் முட்டினால் காதல்
வல்லுறவுக்கு உள்ளாக்கினாலும் காதல்?
''ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு
அந்த ஒன்று என்ன என்பதுதான் கேள்வி இப்போது?''
அப்போது மற்றது?
18 - இல் காதலில் தொலைத்த படிப்பு
25 - களில் காதல் தொலைந்து  படிப்பு.
தயங்கிய கால்களோடு
மொழி புரியாப் பயணியாய்
மீளக் கல்லூரிக்குள் நுழையுமவர்
கண்களில் உயிர்ப்பில்லை.
பைகளுக்குப் பதிலாய்
பரிதாபக் குழந்தைகள்
கனக்குமவர்  கைகளுக்கு
படித்து எழுதல்  எளிதில்லை.
காதலுக்குப் பின் வாழ்தல் குறித்திங்கே
பாடங்களுமில்லை - பெரிதாய்ப்
படங்களுமில்லை.
உன்னை விட... என உருகும் பாடல்களுக்கு
உலகம் சொந்தமில்லை.
உண்மையில்
வாழ்க்கையின் ஆயிரம் கதவுகளுக்கு
தாழுமில்லை.

8 comments:

Ramani said...

காதலுக்குப் பின் வாழ்தல் குறித்து
படமோ பாடமோ நிச்சயம் இருக்க
சந்தர்ப்பமே இல்லை
எப்படியாவது கஷ்டப்பட்டோ
அல்லது இஷ்டப்பட்டோ
திருமணத்தில் படம் முடிய
சுபம் எனப் பார்த்தே வளர்ந்து விட்டோம்
சிந்தனைய தூண்டிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வித்தியாசமான ஒரு மொழிக கையாள்கையில் அந்தக் காலம் தொடங்கி, இந்தக் காலம் வரைக்கும் காதலை எப்படிக் கவிஞர்கள் பாடுகின்றார்கள் என்பதனை அலசியிருக்கிறது கவிதை.

சுந்தர்ஜி said...

மீராவில் தொடங்கி யாரோவில் தொடரும் காதல் இறுதியில் தாழில்லா ஆயிரம் கதவுகளில் நுழைந்து வசீகரிக்கிறது மிருணா.

என் ஆஸ்தான படிமங்களான கதவிலும் தாழிலும் வந்து முடித்தமைக்கு உங்கள் மேல் வழக்குத் தொடர இருக்கிறேன்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

பெண்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஆண்கள் கண்டறிந்த வழிகளுள் ஒன்று காதலும் அதன் பிறகான வாழ்வியல் முறைகளும்- நல்ல கவிதை

Vel Kannan said...

ஆரம்பித்தில் இருந்தே ஏதோ ஒன்று இடறுகிறது மிருணா ... தேடிப்போனால் ஆணி வேர் கிடைக்குமா என்றும் தெரியவில்லை.
இறுதியான உங்களின் வரிகளில் தான் நான் நின்று கொண்டிருக்கிறேன்

மிருணா said...

# நன்றி திரு.ரமணி.
# நன்றி திரு.நிரூபன்
# நன்றி திரு.சுந்தர்ஜி. உங்கள் கவிதைகளில் உள்ளவை மூடிய கதவும், தாழும் என்பதால் வழக்கு தள்ளுபடியாகிவிடுகிறது.
# நிபந்தனையற்ற அன்பு இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம் என்று படுகிறது. நன்றி திரு.திருநாவுக்கரசு.
# எது இடறல் என்று தெரிந்தால் யோசிக்கலாம் திரு.வேல்கண்ணன். தொடர்ந்து கையில் குழந்தையுடனும், விரக்தி எழுப்பும் உணர்ச்சி மற்றும் கோபத்தோடும் வரும் இளம்பெண்களைப் பார்க்கிறேன். விட்டுச் சென்ற படிப்பைத் தொடர வரும்போது எந்த ஆசிரியர் வகுப்பாசிரியராக இருந்தார், அப்போது என்ன பாடத் திட்டம் இருந்தது என்ற எதுவும் தெரியாது. படிக்கும் போதும் பல சிரமங்கள். இதுதான் காதலென்றால் இதற்குத் தூபம் போடுகிற ஒன்றாகப் பாடல்கள் - ஒவ்வொரு முறையும் கேட்கும்போது தங்களுக்கு அதிகம் பிடித்த சேனலாக கல்லூரிப் பெண்கள் சொல்வது
ம்யூசிக் சேனல்கள்தான் - அவை என்ன கொடுத்தது அவர்களுக்கு? என்ன பதில் இருக்கிறது இளமையில் இறுகிப் போன அந்த முகங்களுக்கு?

நிலாமகள் said...

//காதலுக்குப் பின் வாழ்தல் குறித்திங்கே
பாடங்களுமில்லை - பெரிதாய்ப்
படங்களுமில்லை.
உன்னை விட... என உருகும் பாடல்களுக்கு
உலகம் சொந்தமில்லை.
உண்மையில்

வாழ்க்கையின் ஆயிரம் கதவுகளுக்கு
தாழுமில்லை.//
ஆமோதிக்கிறேன் மிருணா.
சுந்தர்ஜி said ...
என் ஆஸ்தான படிமங்களான கதவிலும் தாழிலும் வந்து முடித்தமைக்கு உங்கள் மேல் வழக்குத் தொடர இருக்கிறேன்//:)
மிருணா said...
உங்கள் கவிதைகளில் உள்ளவை மூடிய கதவும், தாழும் என்பதால் வழக்கு தள்ளுபடியாகிவிடுகிறது.//
:))
மிருணா said...
தொடர்ந்து கையில் குழந்தையுடனும், விரக்தி எழுப்பும் உணர்ச்சி மற்றும் கோபத்தோடும் வரும் இளம்பெண்களைப் பார்க்கிறேன். விட்டுச் சென்ற படிப்பைத் தொடர வரும்போது எந்த ஆசிரியர் வகுப்பாசிரியராக இருந்தார், அப்போது என்ன பாடத் திட்டம் இருந்தது என்ற எதுவும் தெரியாது. படிக்கும் போதும் பல சிரமங்கள். இதுதான் காதலென்றால் இதற்குத் தூபம் போடுகிற ஒன்றாகப் பாடல்கள் - ஒவ்வொரு முறையும் கேட்கும்போது தங்களுக்கு அதிகம் பிடித்த சேனலாக கல்லூரிப் பெண்கள் சொல்வது
ம்யூசிக் சேனல்கள்தான் - அவை என்ன கொடுத்தது அவர்களுக்கு? என்ன பதில் இருக்கிறது இளமையில் இறுகிப் போன அந்த முகங்களுக்கு?//

கவிதைக்குப் பின்னணி கனப்படுத்துகிறது மனசை. யார் எக்கேடு கெட்டால் என்ன... நம் கல்லா நிரம்பினால் சரி என்றிருப்பவர்களை என்ன செய்ய...? யார் எக்கூத்தாடினாலும் நம் காரியத்தில் நாம் கண்ணாயிருக்க பாட திட்டத்துக்கு அப்பாற்பட்டு கற்க வேண்டியிருக்கிறது வளரிளம் பருவத்தினர்.

மிருணா said...

உணர்வுப் பூர்வமான பகிர்வுக்கு நன்றி தோழி. தொடர்ந்து பேசவும், எழுதவும் வேண்டிய மிகப் பெரிய விஷயம் இது.