Saturday, 7 May 2011

மூன்று புள்ளிகள்

பற்பல வார்த்தைகளின் அணிவரிசை
போர் புரியும் ஒரு கவிதையில்
ஒப்பீடுகள், சிக்கன உவமைகள்
முரண்தொடைகள், ஆகுபெயர்கள்
படிமங்கள்  எனப் போகும்
ஒரு பொருட் பன்மொழிகள்...
நான் மூன்று புள்ளிகள் குறித்து யோசிக்கிறேன்
முடிவற்ற மூன்று புள்ளிகள் ...
அவை எல்லாவற்றையும் சொல்கின்றன
அல்லது
எதையும் சொல்லாமல் செல்கின்றன.
தேடலுற்ற  ஆன்மாவின் இளைப்பாறல்
இந்த மூன்று புள்ளிகளில் எந்த புள்ளியில்,
அல்லது
மூன்று புள்ளிகளும் சொல்லப்படாத 
ஒரு புள்ளியே தானா?
எனில்
ஒரு புள்ளி முற்றுபுள்ளியைக் குறிக்க
மூன்று புள்ளிகள் முடிவின்மையை குறிப்பது ஏன்?
தர்க்க நியாயங்களுக்கு உட்படாத இப்புள்ளிகள்
மனதின் அ-தர்க்க மொழி பேசும் இயல்பாய்.
எழுதும் மனமும், வாசிப்பு மனமும்
ஒரு புள்ளியில் சந்தித்தல்
சொல்லாததின் மொழி பேசும்
இந்த மூன்று புள்ளிகள் அன்றி
வேறெதில் ?
கால மயக்கத்தில் பயணிக்குமொரு கவிதைக்கு
வழுக்கிச் செல்லும் சக்கர இயக்கங்களாய்
தாளில் பதிந்த மூன்று புள்ளிகள்...

8 comments:

சுந்தர்ஜி said...

மூன்று புள்ளிகள் வைத்து எழுதுபவர்களைக் கவனித்திருக்கிறேன். நான் ஒருபோது கூட உபயோகித்து எழுதியதில்லை.

எனக்குத் தெரிந்ததெல்லாம் கமா, கேள்விக்குறி மற்றும் முற்றுப்புள்ளி மட்டும்தான். வெகு அபூர்வமாக ஆச்சர்யக்குறி உபயோகிப்பேன்.

மூன்று புள்ளியை யோசித்து எழுதப்பட்ட இந்தக் கவிதையின் பாடுபொருள் என்னை ஆச்சர்யக்குறியை உபயோகிக்கத் தூண்டுகிறது மிருணா!

நவீனம் மற்றும் அபாரம்.

RVS said...

ஃ ஃ ஃ - ஆயுதமாய் எழுத்துக்கள். ;-))

மிருணா said...

நன்றி திரு.சுந்தர்ஜி.
வரவிற்கும், கருத்திற்கும் நன்றி திரு. ஆர்.வி.எஸ்

Vel Kannan said...

தொடரும் அல்லது முடிவுறாத மூன்று புள்ளிகளை வைத்து இப்படி ஒரு அருமையான கவிதையா ?
(வெயில் காலத்தில் மண்டை காய(அதிகம் யோசிக்க)வைத்த கவிதை இது )

santhanakrishnan said...

...

மிருணா said...

# இது வஞ்சப் புகழ்ச்சியோவென நானும் மண்டை காய்ந்து கொண்டதில் கணக்கு நேராகிவிட்டது திரு.வேல்கண்ணன் :)
# உங்கள் கருத்தில் உள்ள அந்த மூன்று புள்ளிகளுக்கு நல்ல விதமாகவே பொருள் புரிந்து கொள்கிறேன். எவ்வளவு வசதி பார்த்தீர்களா இந்த மூன்று புள்ளிகளால்?

நிலாமகள் said...

//தேடலுற்ற ஆன்மாவின் இளைப்பாறல்
இந்த மூன்று புள்ளிகளில் எந்த புள்ளியில்//
முற்றுப் புள்ளியை முடிவுறா எச்சமாக்கும் வல்லமை பெற்ற அம்மூன்று புள்ளிகள், சற்றே இடம் மாறி மேல்-கீழ் ஆனால் ஆயுதமாகும் அதிசயம்! கோடு புள்ளிகளால் ஆனதல்லவா...!

மிருணா said...

ஆம் தோழி. தவிர புள்ளிகளால் ஆகும் ஒரு நேர்கோடு முடியும் இடம் infinity அல்லவா?