Tuesday, 17 May 2011

வளர்பிறை

பேசவோ, பார்க்கவோ,
நினைக்கவே நினைக்கவோ
கூடாதென்ற கட்டளைகள்
பரவித்  திரிகிற வெளியில் 
கடவுச் சீட்டற்ற மேகங்கள்
அழையாமல்  நுழையும்  காற்று
பெரிய கோட்டைக் கதவுகள்
தவற விடும்  இடைவெளியில்
பொசிந்து  விடுகிற நீர்
போன்ற அந்த அன்போ
உறுதியாக வேர்களை
ஆரவாரமின்றி  கிளைபரப்பியபடி 
ஆடும் இலைகளும்  மலர்களும்
முகத்தில் உரசியபடி இருக்க
சாய்ந்து  கொண்டிருக்கிறது
புன்னகைத்தபடி.
அதன் நினைவுகளில்
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு நிலாவென
நினைத்துக் கொண்ட
சிறுபிள்ளை நினைவுகளை
தண்ணென்ற இருப்பில்
மௌனமாய்த் தகர்க்கிற
எல்லோருக்குமான ஒரு நிலா
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
வளர்பிறையென...

7 comments:

மிருணா said...

Blogger பிரச்சனையால் திரு: சுந்தர்ஜி மற்றும் சந்தான கிருஷ்ணனின் கருத்துக்கள் காணாமல் போய்விட்டன. அதற்கு வருத்தமும், கருத்துக்களுக்கு நன்றியும்

A.R.RAJAGOPALAN said...

பிரபஞ்சத்தின் மிக
பிரபல்யம் இந்த
பிரிய நிலா
அள்ள அள்ள
குறையாத
அட்சய பாத்திரம் போலவே
எழுத எழுத
முடியாத
பயணமும் அழகும்
இதன் சொத்து .
நிலவினைப்போலவே
உங்களின் கவிதையும் அழகு
வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி said...

ப்ளாக்கர் திரும்பவும் எழுதினால் தடுக்க முடியாதுதானே?


எத்தனையோ பேர் நிலவைப் பற்றி எழுதிமுடித்த பின்னும் எழுத இதுபோல் புதிய கோணம் கிடைப்பது நிலவாலா மொழியாலா உங்களின் பார்வையாலா எனப் பிரித்துப் பார்க்க முடியாது திணறுகிறேன் மிருணா.

என் பால்ய காலத்தில் நானும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நிலா இருக்கும் என எண்ணியவன்தான்.அந்தக் கற்பனையும் கவிதைக்கு அழகூட்டுகிறது.

நிமிர்ந்து பார்க்கிறேன்.முழு நிலவுக்குப் பிந்தைய ஒரு நாள் வாடலுடன் சிரித்தபடியிருக்கிறது புதுச்சேரி நிலா.

அபாரம் மிருணா.

Vel Kannan said...

வளர் பிறை - ம்....
தெளிவும் அழகும் கவிதையில் மிருணா

நிலாமகள் said...

//கடவுச் சீட்டற்ற மேகங்கள்
அழையாமல் நுழையும் காற்று
பெரிய கோட்டைக் கதவுகள்
தவற விடும் இடைவெளியில்
பொசிந்து விடுகிற நீர்
போன்ற அந்த அன்போ
உறுதியாக வேர்களை
ஆரவாரமின்றி கிளைபரப்பியபடி
ஆடும் இலைகளும் மலர்களும்
முகத்தில் உரசியபடி இருக்க
சாய்ந்து கொண்டிருக்கிறது
புன்னகைத்தபடி.//:)

மிருணா said...

# வரவிற்கும், பகிர்விற்கும் நன்றி திரு.ராஜ கோபாலன்.
# வெறும் நன்றி மட்டுமே சொல்ல முடிகிறது திரு.சுந்தர்ஜி.உங்கள் ஊக்கம் தொடர்ந்து எழுத வைக்கிறது.மற்றபடி இயற்கை ஒரு வற்றாத கருப்பொருள் என்பது மட்டுமே நிலா பற்றி தொடரும் கவிதைகள் நமக்கு உணர்த்தும் செய்திகள்.பாண்டிச்சேரியில் நான் வெகு முன்னால் 28 நாட்கள் இருந்திருக்கிறேன்.மிக அழகான கல் கடற்கரையும்,ஒரு உல்லாச உணர்வையும் கொடுக்கும் ஊர்.நிலாவும் அதோடு சேர்ந்து கொண்டால் வேறு சொல்ல ஏதும் இல்லை..
#நன்றி திரு.வேல்கண்ணன்.
# நிலா,சில நாட்களாக நான் உங்களை இணக்கத் தோழியாக உணர்கிறேன். நன்றி.

நிலாமகள் said...

//நிலா,சில நாட்களாக நான் உங்களை இணக்கத் தோழியாக உணர்கிறேன்.// :)))))))