Monday, 9 May 2011

எதற்கென?


பறக்கும் தும்பிகளுக்கு
இளஞ்சிவப்பு கண்ணாடி இறகுகள்
பசித்த கம்பளிப் பூச்சிகளுக்கு
அதி விரைவு ஊர்திக் கால்கள்
மிதிபடும் பச்சைப் புற்களுக்கு
வெட்டுக் கத்திக் கூர் ஓரங்கள்
ஆயுள் நீண்ட ஆமைகளுக்கு
இறுகிச் செறிந்த ஓட்டுடம்பு
காத்திருக்கும் சூரியகாந்திப் பூக்களுக்கோ
இருப்பேயொரு வண்ண ஆரவாரம்
சிறைப் பிடிக்க, நசுக்க, மிதிக்க
போகிற போக்கில் ஒடித்துப் போக
கல்லெறிந்து கண்டுபிடிக்க
கைகளும், கால்களும்
எதற்கென?

10 comments:

சுந்தர்ஜி said...

பிற உயிர்களின் மீதான அலட்சியம் கைகளையும் கால்களையும் அடையாளப்படுத்துகிறதென்பதைச் சொன்ன மேன்மையான கவிதை மிருணா.

Ramani said...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடியது போல
தங்கள் சிந்தனையும் ஜீவகாருண்யத்தின்
மற்றொரு வெளிப்பாடுதான்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

தங்கள் கவிதைகள் புதுவெளியில் திறந்து கொள்கின்றன தம்மை பாராசூட் வெடி போல ,காற்றில் பரவும் விதைகளை ஒத்ததாயும் .தொடர்க.நண்பர்களிடம் தளம் குறித்து பகிர விருப்பதால் புதிய கெச்சட்டங்கள் கேட்கலாம் முற்றத்தில்

santhanakrishnan said...

பறக்கும் தும்பிகளை
கவிதையில் எழுதிப் பார்க்க
பசித்த கம்பளிப் பூச்சிகளை
நசுக்காமல் ஒதுங்கிப் போக
வெட்டுக் கத்திக் கூர் ஓரங்கள்
கொண்ட பச்சைப் புற்களை
ஓவியமாக்க
ஆயுள் நீண்ட ஆமைகளை
தேடிப் போய்
புகைப்படத்தில் சிறை பிடிக்க
காத்திருக்கும் சூரியகாந்திப் பூக்களுடன்
கை குலுக்க
இன்ன பிறவற்றிற்கும்
கைகளும், கால்களும்
தேவைப் படுகின்றனவே?

சுந்தர்ஜி said...

ச.கி.யின் எசப்பாட்டு மிக அருமை. கை குடுங்க மதுமிதா.

மிருணா said...

நன்றி சுந்தர்ஜி.
நன்றி திரு.ரமணி. சிறுவயதில் செடிகளைப் பிடுங்கி வண்ணத்துப் பூச்சிகளை அடித்துப் பிடித்திருக்கிறேன் நட்புகளோடு. அப்போதெல்லாம் ஒரு துளி குற்ற உணர்வும் வந்ததில்லை. அடித்ததைவிட அப்படி உணர்வற்று இருந்தது ஏதோ ஒரு வகையில் இன்று எழுத்தாக.
வரவிற்கும், காட்சி படிமக் கருத்திற்கும், கெச்சட்டங்கள் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை தேட வைத்து அதை கற்றுக் கொண்ட சந்தோஷத்திற்கும் நன்றி திரு.நேசமித்திரன்.
உங்கள் கவிதையுரைக்கு நன்றி திரு.சந்தான கிருஷ்ணன். அப்படி பொதுமனம் இருப்பின் சந்தோஷமே.

மிருணா said...

சுந்தர்ஜி, திரு.சந்தானகிருஷ்ணனின் எசப்பாட்டு உள்ளபடி அருமைதான். ஆனாலும் இவங்கெல்லாம் ப்ரெண்ட்ஸாம்... நடத்துங்க, நடத்துங்க.

நிரூபன் said...

மனிதர்களால் வதைப் படும் விலங்கினங்கள் மீதான கரிசனையினைக் கவிதை சொல்லுகிறது. பூமியிலுள்ள ஜீவராசிகள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்தும் மனிதனுக்கு கை, கால்கல் எதற்கென்னும் உங்களின் சிந்தனை நியாயாமானது.

நிலாமகள் said...

உங்க கவிதைக்கு நிகரான அழகிருக்கு நண்பரின் கருத்துரைக் கவிதையில்! அது மாற்றுக் கருத்தல்ல ... மாற்று சிந்தனை!

//சிறுவயதில் செடிகளைப் பிடுங்கி வண்ணத்துப் பூச்சிகளை அடித்துப் பிடித்திருக்கிறேன் நட்புகளோடு. அப்போதெல்லாம் ஒரு துளி குற்ற உணர்வும் வந்ததில்லை. அடித்ததைவிட அப்படி உணர்வற்று இருந்தது ஏதோ ஒரு வகையில் இன்று எழுத்தாக//

கவிதையின் பின்னணி கவித்துவத்தை மேம்படுத்தும்படி இருக்கிறது மிருணா.

மிருணா said...

பகிர்வுக்கு நன்றி திரு.நிரூபன்.
நிலாமகள், இந்த கவிதையில் இருப்பது போல் இல்லாமல் மென்மையாக விஷயங்களை அணுகுபவர்களுக்கு கவிதையோடு ஒன்றுபட முடியாது. அதன் இயல்பான வெளிப்பாடு திரு.சந்தானகிருஷ்ணனின் அழகிய கவிதை. எழுதும்போதே தெரிந்தே எழுதினேன். கவிதை அப்படி அல்லாத - என்னுடைய சிறு வயது அனுபவம் போல - ஒரு மனம் குறித்த வெளிப்பாடு. புரிதலுக்கு நன்றி தோழி.