Wednesday, 29 June 2011

பேசு


பாலத்தின் அபாயமுனையில் நீ 
அது அப்படியே இருக்கட்டும்
பரவாயில்லை    நகர்ந்து வா
வந்தென் அருகில் அமர்
ஏதொன்றாகிலும் பேசு
என்னைப் பார்க்காவிட்டாலும் 
விண்ணையோ மண்ணையோ
உன் உள்ளங்கைகளையோ  பார்த்து
உனது மகிழ்வுகள் துயரங்கள் கோபங்கள் 
வெறுமைகள் பயங்கள் ஏமாற்றங்கள்
சாதனைகள் பிரியங்கள் வலிகள்
எல்லாம் பேசு அல்லதேதாவது பேசு
நிதானமான சாயங்கால வேளையில்
ஒவ்வொன்றாய்த்  தென்படும் நட்சத்திரங்களாய்
உன் சொற்களில் உன்னை வெளிப்படுத்து
உன்னை மறந்து பேசு 
என்னை மறந்து பேசு
என்றாலும்
உன் அருகிலிருப்பேன் என்றறிந்து பேசு
உனது துயரங்கள் என்னுடையவை
உனது மகிழ்வுகள் என் புன்னகைக்குரியவை
உனக்காகப் பரிவோடிருக்கின்றன சில விரல்கள்
உனக்காகக் காத்திருக்கின்றன உன் நம்பிக்கைகள்
உன்னுடைய இள மனது  என்னுடைய நேற்று
உன்னுடைய நாளை என்னுடைய இன்று
என்னுடைய இன்று உன்னுடைய நம்பிக்கை
அதனால் பேசு ஏதொன்றாகிலும் பேசு
நகர்ந்து போகும் மேகங்கள் போல
கடந்து போகட்டும் அழுத்தங்கள்
பேச மறுத்தோ மறந்தோ
பாலத்தின் அபாயத்  தனிமையில்
உணர்வெள்ளத்தில் உன் உயிரை சிதைக்கும்
கொலைப் பாதகத்துக்கு முன்  பேசு
யாரோடாவது  பேசு ஏதாவது பேசு.   

Monday, 27 June 2011

இன்னொரு


பரபரப்பான காலைகள்
மந்தமான மதியம்
களைப்பு  பூசிய மாலை
ஒரு பானம் தரும் புத்துணர்வு
மெல்ல அலையும் காற்று
வாசிப்பு எழுத்து என
நாளொன்று மிதந்து போகிறது
வெண்மையும் மஞ்சளும் ரோஜாவும்
நிறம் மாறும்  துகிலோடு.
பிரிய  மறுக்கும்  துளிகளோ  நழுவி 
நினைவின் வினோத சீசாவில்
பல வண்ணத் திரவங்களாய்
சேகரம் ஆகிறது 
ஒரு போதும் நிறையா வரத்தோடு.
மெல்ல  மூடியைக் களவாடும் 
இரவின் திருட்டுக் கரங்கள்
அள்ளித் தெளிக்கின்றன
தவறிய துளிகளின்
வண்ண வாசனையை
கனவுகளின் முற்றங்களில்.
பார்த்துக் கொண்டிருக்கும் நிலவோ
புன்னகைக்கிறது  சப்தமின்றி ஊரறிய.
ஓசையின்றி  நழுவும் இரவைக் கடியும் நிலா 
எஞ்சிய துளிகளை நாளைய பூக்களுக்கு
வண்ணமாய் வழங்கி முடிக்கையில்
எழும்புகிறது  இன்னொரு இளங்காலை. 

Saturday, 25 June 2011

பயணம் 4: நாங்கள் சென்றோம்


முதுகலை முடித்து வேண்டாவெறுப்பாக மதுரையில் B.ED  சேர்ந்தேன். பொதுவாகக் குழந்தைகளுடன் விளையாடுவதில்  எனக்குப் பிரியம் . அதனால்  குழந்தைகளுக்கு சொல்லித் தரும் அளவு எனக்குத் திறமை கிடையாது என்பது எனக்குத் தீர்மானமாகத் தெரிந்திருந்தது. தெப்பக்குளத்தின் வழியாகத் திரும்பும் ஒவ்வொரு மாலையிலும் நட்புகளிடம் சொல்லுவேன்: நான் நாளை இங்கு வர மாட்டேன், வந்தால் என்னை தெப்பக்குளத்துள் தள்ளி விடுங்கள் என்று. சீக்கிரம் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கவும் B.ED படிப்பை 2 மாதத்திலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப் போனேன். அதிகமான பணிப்பளு. குறைந்த சம்பளம். அதுவும் பல தவணைகளில் தரப்படும். கிராமத்துச்  சூழல். நாங்கள் தங்கியிருந்த தெருவில் ஒரு முறை நாங்கள் சாணி தெளித்துக் கோலம் போடுவதில்லை என்று அப்படிக் கடிந்து கொண்டார்கள்!  என்றாலும் எனக்கு முதுகலை முடித்துவிட்டு என் உணவிற்கு இன்னொருவரை சார்ந்திருப்பது  அவமானமாக இருந்தது. முதுகலையை, பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே ''சாதாரணக் கல்லூரியில்  படித்தால் போதாதா, அப்படி என்ன பல்கலைக்கழகம் போய் படிக்க வேண்டியிருக்கிறது?'' என்று உறவினர்கள் இடித்துரைத்தது வேறு, என்னை வேலை செய்யத் தூண்டியது. என்றாலும் அந்த நிறுவனம் 2 மாதம், 3 மாதம் என சம்பளம் தராமல் இருந்த போது வேலையை விடுவதே சரியானதாக இருந்தது.

படித்துவிட்டு வேலையற்று இருக்கும் நாட்கள் கொடுமையானவை. நான் வேலைக்குப் போக வேண்டும் என்றோ, ஏன் வேலைக்குப் போகவில்லை என்றோ யாரும் கேட்கமாட்டார்கள் வீட்டில். என்றாலும் பாரமாய் உணர்ந்தேன். ஒரு சுயவிவரக் குறிப்பு தயாரித்து அதை எனக்குத் தெரிந்த எல்லா நிறுவனங்களுக்கும்  அனுப்பிக் கொண்டே இருந்தேன். தபால்காரரோ வரும் போது ஏமாற்றத்தையும், போகும்போது  நம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டு சென்று கொண்டிருந்தார். பிறகு மேல்மருவத்தூரில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்தது. ஆனால் அந்த ஊரின் ஆன்மிகப் புகழால், பெண்ணாகவும் இருக்க நேர்ந்ததால் வீட்டில் போகக் கூடாதென்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள். மீண்டும் வேலையற்ற வெறுமை. ஒரு மாதம் கழித்து மீண்டும் மேல்மருவத்தூரில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதம். இப்போது நான் தெளிவாக இருந்தேன். நான் நிச்சயமாக அந்த நேர்முகத் தேர்வுக்குப் போவேன், யார் கூட வராவிட்டாலும் நான் தனியாகப்  போவேன் என்று சொல்லி விட்டேன். என் பிடிவாதம் தெரிந்தபின் அம்மா கூட வந்தார்கள். பல சங்கடங்களைத் தாண்டி மேல்மருவத்தூர் கிளம்பினோம்.

கொட்டுகிற மழை. ஊரும் அரசுப் பேருந்து. உடைந்த கண்ணாடி வழியாக தெறிக்கும் தண்ணீர். பாவமாக ஒரு அம்மா. வேலைக்குப் போகும் உறுதியில் பல்லை கடித்துக் கொண்டு ஒரு மகள் என இருந்தது அந்த காட்சி. கழிவறை வசதிகள் கொஞ்சமும் இல்லாத சூழல். மோட்டலில் இருக்கும் கழிவறைகளின் நிலை கால் வைக்க முடியாதபடி. பேருந்து இருவருக்கும் ஒத்துக் கொள்ளாது என்பதால் சாப்பிடவும் இல்லை. உருட்டிக் கொண்டே போன அந்த பேருந்து ஒரு வழியாக மேல்மருவத்தூர் வந்தது. சாப்பிட நேரமில்லை. வேகமாக ஒரு விடுதியில் குளித்துவிட்டுக் கிளம்பி  அந்த நிறுவனத்திற்குப் போனோம். நல்ல கூட்டம். வேறுவேறு வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள். ஆண்கள் தனியாகவும்,பெண்கள் அப்பாக்களோடோ அல்லது உறவு ஆண்களோடோ வந்திருந்தார்கள். அம்மா வந்திருந்தது என்னோடு மட்டுமே. நாங்கள் அந்த கூட்டத்திலிருந்து வித்தியாசமாக பார்க்கப்படுவதாக உணர்ந்தோம். எனக்கு அப்படி அம்மா என்னோடு வந்திருந்தது மகிழ்வாக இருந்தது.

முதல் ஆளாக உள்ளே அழைக்கப்பட்டேன். கேள்விகள், செய்முறைப் பரிசோதனைகள். நன்றாக பதில் சொல்ல முடிந்தது. வேலைக்கு நியமிக்கப்பட்டால் உடனே சேர முடியுமா என்று இறுதியாக கேட்டார்கள். நம்பிக்கை பூத்தது. வெளியே வந்து அம்மாவிடம் நிச்சயம் வேலை கிடைக்குமென்று சொன்னேன். அப்படியே ஆனது. எவ்வளவு சம்பளம் வேண்டும் என அவர்கள் கேட்ட  போது எவ்வளவு சொல்ல வேண்டும் என்று கூட சொல்லத் தெரியவில்லை. ஆனால் சந்தோஷமாக இருந்தது. அம்மா அவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு வேலை கிடைத்த சந்தோஷம். 5 நிமிடம் பள்ளியில் இருந்து வர தாமதமானாலும் பதறி அண்ணனை அனுப்பும் அம்மாவும், நானுமாக, பெண்களாகப் பயணித்து வென்ற சந்தோஷம், இருப்பிற்கான அர்த்தம் கிடைத்த  சந்தோஷம்  என அதற்குப் பல வண்ணங்கள்.


திரும்பும் போது எனக்குப் பசியே இல்லை. சந்தோஷத்தில் சாப்பிட முடியவில்லை. மிகக் குறைவாகச் சாப்பிடும் அம்மாவோ  அன்று நன்றாக சாப்பிடுவதைப் பார்த்தேன். அதுவும் சந்தோஷத்தினால் என்று தோன்றியது. வழியில் விருதுநகரில் முதல்முதலாக காலச்சுவடு இதழை வாங்கினேன். அதிலிருந்த ஓவியாவின் நேர்காணல் மனதில் பலத்த நம்பிக்கையையும், இலக்குகளையும் விதைத்தது. அதில் அவர் தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து ஓட்டுனராக வசந்தகுமாரி என்பவரைப்  பணிபுரியச் செய்வதில் நேர்ந்த போராட்டங்களைப் பதிவு செய்திருந்தார். இதெல்லாமே ஒரு eye-opener ஆக  இருந்தது.அல்லது நல்ல துவக்கமாக இருந்தது. ஒரு விதத்தில் இந்த பயணம் அர்த்தமுள்ள இருப்பிற்கான தேடலின் முதல் காலடியாக இருந்தது.

Storm in a teacup என்ற  ஆங்கில மரபு வழக்கு சொல்வது போல ஒரு வேளை நான் எழுதுவது சிறிய விஷயங்களைப் பெரிதாகச் சொல்வது போல இருக்கலாம். ஆனால் மண்புழுவிற்கு வண்ணத்துப் பூச்சி பறக்கும் உயரம் கூடத் தொலைதூரம்தான் இல்லையா? இன்னும் எங்கள் வீட்டில் உள்ள பெண்கள் கடையில் ஒரு தேநீர் கூட தனியாகப் போய் குடிக்க மாட்டார்கள். ஒரு வாரத்திற்கு முன் கஷ்டப்படுகிற ஒரு பெண்ணுக்கு வேலை வாய்ப்பொன்று குறித்து சொன்னேன். வீட்டிற்கு 5 மணிக்குள்  வரும்  வேலையாக  இருக்க  வேண்டும்  என்றும், வேலையிடம் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணின் அப்பா அந்த வேலையை மறுத்து விட்டார். இன்னும் நிறையக் குடும்பங்களில் இது தொடர்கிறது. பெண்ணிற்கான கட்டுப்பாடு அவளது நன்மைக்காகத்தான் என்ற பெயரில் அவள் ஒரு சிறிய கூண்டிற்குள் - அது தங்கக் கூடாகவே  இருந்தால்தான் என்ன?- வானொத்த வாழ்வின் விகாசங்களைத் தொலைக்க வைக்கப் படுகிறாள். Rokeya  Hosain இன் சுல்தானாவின் கனவு எனும் புதினத்தில் ஒரு கேள்வி மிக அழகாக முன் வைக்கப் படும் - அதன் சாரத்தை மட்டும் கூறுகிறேன் - ஒரு உயிருக்கு ஒருவர் தீங்கிழைத்தால் தீங்கிழைப்பவர் சிறையில் வைக்கப் பட வேண்டுமா, தீங்கிழைக்கப்பட்டவர் சிறையில் வைக்கப் படவேண்டுமா என அது வினவும். பெண்கள் விஷயத்தில் நடப்பது இதுதான். நீ பலவீனமானவள் என நான்கு சுவர்களே கோவிலாக விதந்தோதப்பட்டும், தந்திரம் குறைவான இடங்களில் பொட்டச்சி, வீட்டை வீட்டு வெளியே போகக் கூடாதென்றும்  அடக்கி வைக்கப் படுவது  பெண்தான்.

கோவில்பட்டியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவிலிருக்கும் மேல்மருவத்தூருக்கு வேலையின் பொருட்டு, பொருளாதார, மன தற்சார்பு தேடிப் பெண்களாக நாங்கள் சென்ற அந்த பயணம்  என்னளவில் ஒரு மைல் கல்தான்.

Monday, 20 June 2011

பயணம் 3: வானத்து நட்சத்திரங்களடி!


கோவில்பட்டியின் எல்லையில் பல வருடங்களாக ஒரு பலகை இருந்தது.  அதில் Welcome to the Matchless City of Matches என்றிருக்கும். வேலை நிறைந்த ஊர். தீப்பெட்டி தொழிற்சாலைகளால் பல வீடுகள் வாழவும், பிள்ளைகள் படிக்கவும் முடிந்தது, அதன் பக்க விளைவுகள் ஊடே. ஆனால் அந்த matchless ஊரில் குளங்களோ, நீர்நிலைகளோ கிடையாது. பெரிய அளவில் பசுமையைப் பார்த்துவிட முடியாது. அதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு முன்னால் ஒரு பெரிய பசிய பூங்கொத்தைப் போல வேப்ப மரங்களும், அருகாமையில் புளிய, வாகை மரங்களும், கருவேல மரங்களும் இருந்தன. வீட்டின் புறவாசலில் பப்பாளி, எலுமிச்சை, அகத்தி, கொய்யா, கருவேப்பிலை, கொடுக்காப்புளி, கனகாம்பரச்  செடிகள், மணத்தக்காளி, டிசம்பர் பூச்செடிகள், மருதாணி, மாதுளை என இருந்தன. எல்லா இறுக்கமான சூழலிலும், அந்த மாதிரி நேரங்களில் புத்தகம் படிப்பது சரியான முறையில் பார்க்கப் படாது, இயற்கையே மருந்தாக இருந்திருக்கிறது.

சிறு வயதில் அப்படியே விளையாடிக் கொண்டே போவோம். கும்பலாய்ப்  பெயர் தெரியாத செடிகள் வளர்ந்திருக்கும். அவற்றிற்கு தாத்தாப் பூ, ரேடியோ பூ, பொம்மைக்கா செடி என விதம்விதமாகப் பெயர்கள். ஒரு செடியில் - பின்னால் அவற்றின் பெயர் அம்மான் பச்சிரிசி எனத் தெரிந்து கொண்டேன் - உதிரிப் பாக்கு போல காய் இருக்கும். இலையைக் கிள்ளினால் பால் வரும். அதற்கு வெத்தல பாக்குச் செடி என பெயர். இன்னொரு செடியின் காய்கள் கூரற்ற முட்களோடு இருக்கும். அதை வைத்து தலை சீவலாம். அதற்கு பெயர் சீப்புச் செடி. எனக்குப் பிடித்த இன்னொரு பூ miniature சூரிய காந்தி போல  இருக்கும். அதையும் சூரிய காந்திப் பூ என்றுதான் சொல்லுவோம். என்னவோ அதை பார்த்தாலே பயங்கர சந்தோஷமாக இருக்கும். இன்னும் தும்பைகள், அவரைப்பூக்கள், அகத்திப் பூக்கள், போகன்வில்லா, மரமல்லி, பன்னீர் பூக்கள், செக்கச் சிவந்த கள்ளிப் பூக்கள், சரம்சரமாய்த் தொங்கும் மஞ்சள் கொன்றை என எத்தனை அலுக்காத அழகுகள். அப்படியே வெளியைப் பிரகாசப்படுத்துவதோடு  எத்தனை பேருக்கு எவ்வளவு  விதமான மன உலகத்தை அது ஏற்படுத்துகிறது? அவற்றை நேரடியாகப் பார்க்கிற, அவற்றின் குளிர்வை நனவுணர்வற்று உணர்கிற, மனதின் சூடுகள் அப்படியே தணிந்து போகிற ஒரு அனுபவத்தை  நவீனக் கருவிகளால் தர முடியுமா? அவற்றால் எப்படி ஒரு முழுமையான வளர்ச்சி ரீதியான உணர்வுச் சூழலை  ஏற்படுத்த முடியும்? முடியாதென்றே தோன்றுகிறது. உதாரணமாக...

அப்போது மேல்மருவத்தூரில்  வேலை  பார்த்துக்  கொண்டிருந்தேன். நானும் தோழியும் வெளியே சென்று விட்டு  சோற்றுப்பாக்கத்தின் (ஊரின் பெயர்) அவ்வளவு பரிச்சயம் ஆகாத வழியில் மரங்கள் அடர்ந்த ஒரு நீண்ட பாதை வழியாக இரவில் திரும்பிக் கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. நிலவற்ற இரவு வேறு. அடுத்த அடியை எங்கே வைக்கிறோம் என்று கூடத் தெரியவில்லை. சட்டென்று ஒரு கானகத்துள் போய்விட்ட உணர்வு. அடுத்தவரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அப்படியே மெதுவாக முன்னேற ஆரம்பித்தோம். பயத்தினால் முழு விழிப்புடனான உடல், மன நிலை.இப்படியே  கொஞ்சம் முன்னேறினோம். அதற்குள் எல்லையற்ற பிரயாணம் பண்ணிய  உணர்வு. அதன் பின் நடந்தது வாழ்வின் மறக்க இயலாதொரு அற்புதம்:

பறக்கும் வெளிச்ச புள்ளிகள் அலைவுறும் அழகிய கிளைகளையுடைய மரத்திலிருந்து மிதக்கும் இலைகள் போல உதிரவும் , மீளவும் செய்தன மின்மினிப்  பூச்சிகள். அவற்றால் உயிர்ப்புற்ற மரம் அதி அற்புதமாய் தன் ஒளி இருப்பை பிரகாசமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு நூறு  மின்மினிப்  பூச்சிகள் தனக்கென ஜொலிக்கும்  உலகத்தை உருவாக்கிய சந்தோஷத்தை  அது தன் இலைகளால்  சலசலத்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வானிலிருந்து தவறிய நட்சத்திரப் புள்ளிகள் போல, ஒளியால் இசைக்கும் இசைக்குறிப்புகள் போல, கோள்கள் சுழலும் பால்வீதி போல, கட்டுண்ட ஆன்மாவிற்கு வண்ணத்துப்பூச்சி சிறகுகள் முளைத்தாற்போல, கார்த்திகை சுடர்களின் நடனம் போல, வண்ணச் சிதறல் போல, ஒரு வித மகிழ்வான கண்ணீர் துளிகள் போல  இன்னும் சொல்ல இயலாத பரவச உணர்வுகள் போல அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த அந்த மின்மினிப் பூச்சிகளோடு நின்றுகொண்டே சுழன்றாடியது  மனம்.

மீட்கவே முடியாத கால்களை எப்படியோ மீட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். அதிகம் பேச முடியவில்லை. அந்த காட்சி ஏற்படுத்திய உணர்வுப் பளு. பயணக் களைப்பு வேறு. சீக்கிரம் தூங்கி விட்டோம். நடு இரவில் திடீரென ஒரு உணர்வு. கண் விழித்தால் தோழியும் விழித்த நிலையில். அவளைப் பார்த்தேன். மௌனமாக ஜன்னலை சுட்டிக் காட்டினாள். இரு மின்மினிப்பூச்சிகள்  அறையின் குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்தன. சப்தமே இல்லாமல் அங்கே ஒரு உலகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம் நீண்ட நேரம். அலைவுற்ற கால்களும், மனமும் அமைதிக்கு வந்தபோது தூக்கம் அருகே வந்து நின்று கொண்டது. மின்மினிப் பூச்சிகளோடு உலகமும் விடைபெற்றுக் கொண்டது. 

Monday, 13 June 2011

பயணம் 2: அபத்த நகை


வாழ்கையின் அபத்தங்கள் ஒரு நகைச்சுவைதான். சமயங்களில் ஒரு பாதிக்கும் விஷயம் கூட அதில் உள்ள அபத்தத்தை உணர்ந்தோமானால் விலா வலிக்கும் சிரிப்பில் முடியும். ஒரு மேலாண்மைப் புத்தகத்தில் இப்படிப் படித்தேன் - யாராவது கடுமையாக நடந்து கொண்டால் அதை  நகைச்சுவையாக்க அந்த காட்சியை அப்படியே reverse இல் ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று. அது எனக்கு நன்றாகவே உதவி இருக்கிறது. ஆனால்  இந்த பத்தியில் எழுதப் போவது அது அல்ல.

பஸ்சில் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த நாட்களில் வழக்கமாக கடைசியில் இருக்கும் அந்த நீண்ட  இருக்கையில்தான் உட்காருவோம் தோழியும்  நானும். (தோழி என்று எழுதும்போதெல்லாம் சங்ககால வாசனை வருகிறது. சகி என்றும்  சொல்ல முடியவில்லை. சினேகிதி பரவாயில்லை இருந்தாலும் வேறு வார்த்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.)  அப்படி ஒரு நாள் வெகு  மும்முரமாகப்  பேசிக்  கொண்டிருந்தபோது  என் டிபன் பாக்ஸ் கீழே விழுந்து விட்டது. நான் என்ன செய்தேன்,  வேகமாக எழுந்து பின்புறக் கண்ணாடியின் வழியாக சாலையைப் பார்த்தேன். அப்புறம்தான் என் செயலின் அபத்தம் புரிந்தது. பஸ்ஸில் என்ன ஓட்டையா இருக்கிறது கீழே விழுந்த பாக்ஸ் சாலையில் விழுவதற்கு. உள்ளிருந்து பீறிட்டுக் கொண்டு வந்தது சிரிப்பு. அடக்க முடியாமல் தனியே சிரித்தபடி குனிந்து தேட ஆரம்பித்தேன். தோழிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன, என்ன என்றாள். சிரிப்பிற்கு ஊடாக கீழே விழுந்த டிபன் பாக்சை நான் ரோட்ல  தேடுறேன் என்றேன். என்ன புரிந்துகொண்டாளோ தெரியவில்லை. வேகமாக எழுந்து பின்புறக் கண்ணாடியில் எட்டிப் பார்த்தாள் சாலையை. அவ்வளவுதான் தெரியும். அதுக்கு அப்புறம் நாங்க சேர்ந்து சிரிச்ச சிரிப்புல மொத்த பேருந்தும் எங்கள வினோத ஜந்து மாதிரிப் பார்த்தது. எப்படி பாத்துக்கோங்க -  நான்தான் அறிவாளின்னா நம்ம தோழமையும் அப்படியே.

பயணத்துல இப்ப ஒரு கிளை வளைவு. இது நான் படிச்ச பள்ளில நடந்தது. அறிவியல் ஆசிரியர் ஏதோ கோவமாக இருந்திருக்கிறார். ஆசிரியர்கள் கோபமாக இருக்கும்போது Record Note திருத்துகிறார்கள் அல்லது ஆசிரியர்கள் கோவமாக இருப்பதற்காக Record Note திருத்துகிறார்கள். எது எப்படியோ அப்படித் திருத்தினால் கோபத்திற்கு வடிகால் கிடைக்கும் என்பது மட்டும்  காலம்காலமாக ஆசிரியர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. திருத்தும்போது எழுதியவரும் ஆசிரியர் அருகில் மஞ்சத் தண்ணி ஊத்திய ஆடு போல நின்று கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர், ஒவ்வொரு  பெஞ்ச்சா நோட்டக் கொண்டு வா என்றிருக்கிறார். முதலில் பையன்களின் பக்கம். மூன்று பெஞ்ச் வரை அர்ச்சனை, அடிகளோடு ஓடி விட்டது. கடைசிப் பையனின் நோட்டை திருத்தியபடி, லாஸ்ட் பென்ச்! கொண்டு வா என்றிருக்கிறார். குனிந்து நோட்டைத் திருத்தியதில் வகுப்பில் கேட்ட சத்தத்தை அவர் பொருட்படுத்தவில்லை. கொஞ்ச நேரத்தில் நிமிர்ந்து பார்த்தால் பையனுக்குப் பதிலாக  அவர் முன்னால் மரத்தால் செய்யப் பட்ட அந்த வகுப்பின் பையன்கள் பக்கத்தில் உள்ள லாஸ்ட்  பென்ச்! அவர் மேல் உள்ள பயத்தில் ஆகுபெயராக அவர் சொன்னது புரியாமல் அப்படியே அந்த பெஞ்சை தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க பையங்க. இப்ப அந்த கோவமான ஆசிரியருக்குக் கூட சிரிக்கிறதத் தவிர வேற வழி இல்லாமப் போயிருச்சு.

திரும்பவும் பேருந்து. ஆனால்  இது நகரப் பேருந்து. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தேன்.  பின்  ஒரு அம்மா ஏறினார்கள். எனக்குப் பின்னால் நின்று கொண்டார்கள். இடித்துக் கொண்டு வேறு. சரி, பொது ஜன வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பானு நானும் பொறுத்துகிட்டேன். பேருந்து நிற்கவும் எனக்கு முன்னால் உள்ள இருக்கையில் இருந்த ஒரு அம்மா இறங்குனாங்க. அந்த காலி இடத்துல உட்கார சொல்லி, நான் ரொம்ப நேரமா நின்னுட்டிருந்ததப்  பாத்த, அந்த இருக்கைல இருந்த இன்னொருத்தங்க சொன்னாங்க. நான் போறதுக்குள்ள பின்னால நின்ன அம்மா ஒரே இடி இடிச்சுகிட்டு கால  மிதிச்சு  முன்னால போய் டமால்னு உட்கார்ந்தாங்க. அதோட மட்டும் இல்லாம இலவச இணைப்பா அவங்க பை வேற ஆவேசமா ஒரு இடி குடுத்துச்சு. அந்த அம்மா நல்லாக் கூட உட்கார்ந்திருக்க மாட்டாங்க. இன்னும் அவங்க பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்கள இடிக்கக் கூட இல்ல, அதுக்குள்ளே  அடுத்த நிறுத்தம் வந்துடுச்சு.. அவ்வளவுதான். அந்த அம்மா திரும்பவும் டமால் டுமீல்னு எந்திருச்சு தாமரை மேல கால் வெச்சு நடந்த பத்மபாதர் மாதிரி இருக்குறவங்க கால் மேல ஏறி நடந்து இறங்கிப் போய்ட்டாங்க. நான் இந்த பக்கமும், அந்த பக்கமும் வேற யாராவது அந்த மாதிரி அம்மா இருக்காங்களான்னு பாத்துட்டு ( எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்) அந்த காலி இடத்துல போய் உட்கார்ந்தேன். பக்கத்துல இருந்தவங்க என்னை பாக்கக நான் அவங்களப் பாக்க அங்க வெடிச்சுச் சிதறுச்சு ஒரு சிரிப்பு. 5 நிமிஷம் உட்காரப் போற ஒரு அம்மாவுக்கே அந்த  இருக்கை மேல அவ்வளவு பிரியம்னா அப்புறம் ...  நீங்களே கோடிட்ட இடத்த நிரப்பிக்கோங்க. நான் இறங்கிப் போகணும் : )

குறுக்குத்துறை


பேருந்துக் காட்சியாய்க்
கடந்து போகிறது
குறுக்குத்துறையின்
நீர் வற்றிப் போன மணல்
நினைவுகளின் புனலோ 
முடியை இழக்கப் போகிறாயென
பரிகசித்த இயல்புப்  பெண்கள்
அச்சத்தோடு முழுகிய ஆறு
காலில் குறுகுறுத்த
நிறமற்ற மீன்கள்
என்ன படிக்கிறாயென
அன்பாய் விசாரித்தபடி
காது குத்திய தட்டார்
அழுகை பொறுக்காமல்
விட்டகன்ற அம்மா
குளிர்ந்த சந்தனத்தோடு
மாலை சூடிய பெருமிதத்தில்
தரிசித்த முருகன் என்று
வழிந்தோடும் தளும்பத்  தளும்ப.
போலவே 
சுருள இயலா ஆறு 
இமைகளற்ற விழிகளில் படிய
மழை குறித்த மாறாக் கனவுகளுக்கு
கொக்கிடம் பயின்ற வாழ்வுப் பாடங்கள்
கொஞ்சமேனும் உதவ
நினைவுகளை
உண்டு உயிர்த்திருக்கலாம்
மணலுள் உறையும் ஆதி மீன்கள்.

Friday, 10 June 2011

பயணம் 1
நீண்ட நாட்களாகப் பயணம் பற்றி எழுதத் தோன்றும். நீண்ட தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவில்லை என்றாலும் கிட்டத்தட்ட ஒரு ஆறு ஆண்டுகள் அதிகமாகப் பயணித்திருக்கிறேன். தவிர ஒரு பெண்ணாக என்னுடைய பயணங்கள் முக்கியம் என்றே கருதுகிறேன். வீட்டின் உள்ளேயே  பெரும்பாலும் அடைபட நேரும் பெண்களுக்குப் பயணம் ஒரு விடுதலை. கொஞ்ச நேரம் சுதந்திர வாகனத்தில் அவர்கள் பிரயாணித்துக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் பயணிப்பது, அதிலும் தனியே பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அடையாளங்கள் அற்று ஒரு துறவி போல வேடிக்கை பார்த்துக் கொண்டு தளும்பாத தண்ணீர் போன்ற சந்தோஷத்துடனான ஒரு மனநிலை அது.

பள்ளி முடியும் வரை வீடு, வீடு விட்டால் பள்ளி. உலகம் அவ்வளவுதான். நிறைய நேரம் வெளியே நடக்க ஆவலாக, தவிப்பாக  இருக்கும். ஆனால் முடியாது. கோவில்பட்டியில் எங்கள் வீட்டிற்கு பின்னால் தண்டவாளம். சிறு வயதில் புகைவண்டியின் ஓசை கேட்கும் போதே ஓடிச் சென்று அடுத்தவரின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டு தண்டவாளத்திற்கு நெருக்கமாக நிற்போம். புகைவண்டி வேகமாக நகரும்போது நாங்களும் நகர்வது போல இருக்கும். அது எங்களை  உள்ளே இழுப்பது போலத் தோன்ற இதயத் துடிப்பு எகிறும். அது ஒரு மயக்கம். பின் TTR இற்கு டாட்டா சொல்லுவோம். பதிலுக்கு அவர் டாட்டா சொல்லிவிட்டால் அவ்வளவுதான், அன்று உலகம் எங்களுடையது. சிரித்துக் கொண்டே கொஞ்ச நேரம் பின்னால் ஓடுவோம். பின் பொன்வண்டுகள் தெரிகிறதா, பட்டுப் பூச்சி இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டே வீடு திரும்புவோம். இந்த பயணம் கூட  ஒரு வயது வரைதான். பின் புகைவண்டியின் சத்தம் பயணத்தை இரவு, பகலாய் நினைவுபடுத்தியபடி இருக்க வீட்டுள் இருக்க வேண்டியதே தான். சில நேரங்களில் இரவுகளில் புகைவண்டி நிலையத்தின் பெஞ்சுகளில் உட்கார்ந்து படிக்கத் தோன்றும். படிக்கிற பிள்ளை எங்கே வேண்டுமானாலும் படிக்கும் என்ற கூரான தர்க்கத்தில் ஆசைகள் சிறகுகளை ஓசையின்றி மடக்கிக் கொள்ளும். கோவில்பட்டியின் புகைவண்டி நிலையம் பற்றி பின்னால் கதைகளில் படிக்க நேரிட்டபோது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது - வாய்க்கப் பெறாத  வெளிகள் குறித்து.

பின்னால் வேறு ஊரில்  அதிகக் கட்டுப்பாடுகள் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்தேன். கல்லூரிக்கு உள்ளேயே விடுதி. கொஞ்சம் தள்ளி இருக்கிற கேட்டின் அருகில் போனால் கூட காவலர் வந்து விரட்டுவார். அவருக்குத் தெரியாமல் அந்த கேட்டின்  கம்பிகளைத் தொட்டு வருவது கூட எங்களுக்கொரு சாகச விளையாட்டாக இருந்தது. எவ்வளவு முட்டாள்தனமான, இன்றும் தொடர்கிற - பெண்கள் விடுதிகளில் இருக்கிற, கைதிகளைப் போலவும், சுய சிந்தனை அற்றவர்கள் போலவும் பெண்களை நடத்துகிற  போக்கு! அவ்வளவு சிறைவிதிகள் உள்ள விடுதியிலும் எல்லா சம்பிரதாய மீறல்களும் இருந்தது. நீள் செவ்வக வடிவ நோட்டுப் புத்தகங்களில் காதல் கடிதங்கள் எழுதப் பட்டுக் கொண்டிருந்தன.  ஒரு பால் உறவுகள், மெல்லிய ஈர்ப்புகள்,  அதனால் வரும் சண்டைகள், புதிய ஜோடிகள், சில  மாணவிகள்  போதைப் பொருள் உபயோகிப்பதாகக் கிசுகிசுக்கள் என உள்ளே ஒரு உலகம் இருந்தது. கைகளைக் கோர்த்துக் கொள்ளவோ, தோள் மேல் கை போடவோ கூடாதெனவோ ஆசிரியர்களால் அறிவுறுத்தப் பட்டோம். விதிகள், ஈர்ப்புகள், மீறல்கள் என்ற முக்கோண விளையாட்டில் அறிவியல் பூர்வமாக அல்லது படைப்பாக்க ரீதியாக மனவியல் விஷயங்களை அணுகுவது என்பது நடைபெறவே இல்லை. பயணம் என்று ஆரம்பித்து எங்கெங்கோ எழுத்து போகிறது. ஆனால் பயணம் என்றால் எதிர்பாராத திருப்பங்களும்  நேரும் இல்லையா.

அந்தக் கல்லூரியின் கடைசி இரண்டு மாதங்கள் பிடிவாதம் பிடித்து உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்குப் போகும் day scholar ஆனேன். அப்போதும் கல்லூரிப் பேருந்தில்தான் போக வேண்டும். சரியான நிறுத்தத்தில்தான் இறங்குகிறோமாவெனக் கண்காணிக்க பேருந்தில் ஆளும் உண்டு. நானும் என் தோழியும் - கனவுகளால் உயிர்வாழ்கிறவள்  அவள் - வேடிக்கை பார்த்துக் கொண்டு பலதும் பேசியபடி, சிரித்துக்கொண்டே போவோம். தினமும் வழியில்  ஒரு தேவாலயத்தைப் பார்ப்போம். சுற்றிலும் செடிகள் இருக்க ஒரு மாதிரி தனிமையாய் ஆனால் ஈர்க்கிற அழகோடு இருக்கும். அந்த செடிகளில் பூக்கள் போல நிறைய நத்தைகள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கும். எங்களுக்கு அந்த தேவாலயத்திற்குப் போக வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து தினமும் வளர்ந்து பைத்தியம் பிடித்தாட்டத் தொடங்கி  விட்டது. ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்தோம்  மதியம் வரையே  கல்லூரி என்பதாலும் அன்று ஊருக்குப் போவதற்காக பேருந்தில் கூட்டமிருக்கும் கண்டுகொள்ளப்படமாட்டோம் என்பதாலும். அந்த நாள் வந்தே விட்டது. கால்களைப் பேருந்தில்  இருந்து மண்ணில் வைத்த போது எங்கள் பாதங்கள் எங்களுடையது போலவே இல்லை. நத்தைகள் நிறைந்த  செடியை வியந்து பார்த்து விட்டு தேவாலயத்தின் வாசலுக்குப் போனோம். உள்ளே யாரும் இல்லை. உள்ளே போகத் தயக்கமாக இருந்தது. இருவருமே கிருஸ்தவர்கள் இல்லை. நிமிர்ந்து மேலே பார்த்தோம். ஆசிர்வதிக்கப்பட்டவர்களே உள்ளே வாருங்கள் என எழுதப் பட்டிருந்தது. சட்டென்று பரவசமாக உணர்ந்தோம். புன்னகையோடு நுழைந்தோம். அதிகக் குடும்பக் கவலைகளுடைய அவள் மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். நான் அவள் தனிமையைக் குலைக்க விரும்பாமல் சப்தமற்று விலகி நின்று கொண்டிருந்தேன்.ஆளற்ற அந்த நெடிதுயர்ந்த  தேவாலயம்  காலத்துக்குமாய் மனதில் உறைந்து  போய்   பயணத்தின் சுதந்திரத்தை, தேடலை, எதிர்பாரா ஆச்சர்யங்களைப் பரிசாக அளித்தது.
            முதல் பயணம் இப்படித்தான்... இனியும் எழுதுவேன் -  இந்த வலைப்பதிவைப் படிக்கும்  நட்புகள் பொறுத்துக் கொள்க.

Sunday, 5 June 2011

அருகாமை


கண்ணாடியில்  தெரிவதை  விட
அருகாமையில் இருக்கின்றன பொருட்கள்
என எழுதப் பட்டிருக்கிறது வாகனத்தில்
அதில் இல்லாத தூசியைத் துடைக்கிறேன்
கூடவே உன்னையும் பார்க்கிறேன்
நோய் தின்னும் உடல் மீறி
பிடிவாதமாய் வாழ்கிறது  முகம்
அலை பேசியில் பேசிக் கொண்டிருக்கிறாய்
இப்போது நீ பேசும் நபரோடு நீ இல்லை
உன் முகத்தில் குமிழிடும் வெட்கம்
உன்னை வெளியிட்டு விடுகிறது
என்ன பார்க்கிறாய் நான் அழகுடி என்கிறாய்
கண்கள் கலங்கச் சிரிக்கிறேன்
இந்த துல்லிய வானம் நீண்ட சாலை அமைதி
வேற்றுக் கிரகம் போலொரு உணர்வு
நமது உடனிருப்பு...
நம்மை ஆற்றுப்படுத்துகிறது சிறிதேனும்.
மீண்ட வாழ்க்கையில்
உன்னிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது
நலமில்லை பிறகு பேசுகிறேன் என
அதன் பின் நீ பேசவில்லை
வாழ்க்கை தொடரத்தான் செய்கிறது
சிரிப்பு சாப்பாடு வேலைகள்
இயக்கம் தூக்கம்
தனிமையை மட்டும்
கவனமாகத் தவிர்க்கிறேன்
நேரில் தெரிவதை விட
அருகாமையில் இருக்கின்ற உன்னை
கலைத்துவிடக் கூடும் ஒரு தனிமை.      

Friday, 3 June 2011

சில நேரங்களில்


சில நேரங்களில் ஒரு கவிதையில்
சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது
நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு
ஒளிந்து விளையாடும் விளையாட்டு
மறைந்திருப்பவரைக்  கண்டுபிடித்ததும் 
முற்றுப் பெறுகிறது - சிறிது நேரம்.
சீருடையில் ஒரு முகமும்  
தனியுடையில் ஒரு முகமுமென
அடையாளமணியும் சொற்கள்...
சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை 
தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்
லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டுமா
பறவை என்றெழுதிய போதே பார்வையில்
அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்
தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்
காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்
கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும் 
பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும். 

Wednesday, 1 June 2011

அவகாசம்


தொட்டாற்சிணுங்கியின்  இதழ்கள்
பாதுகாப்பில் குவிந்து மூடுகின்றன 
உணவுள்ள விரல்களை நிராகரித்து
பறவை சிறகடிக்கிறது பயத்தில்
குழந்தை மறுப்பாய்த் தலை அசைத்து
அம்மாவின் தோள் நோக்கித் திரும்புகிறது
நிலைஇழப்புப் பரிதவிப்பில்.
எனினும்
காத்திருத்தல் பூப்பூக்கும்.
எதிரொலிகள் மறையாதொலிக்கும்
காரணமறியாக் கதவடைப்புகள்
குப்பைகளோடு வீசப்படும் படைப்புகள்
வேர் பிடுங்கப்பட்ட செடிகள்
அன்பு  உருவழிந்த ஆத்திரங்கள்
வாழ்விலிருந்து மறைந்து போதல்
இப்படி
அவசரத் தீர்ப்புகளில்  முற்றுபுள்ளியிட்டு
பேனாவை  இறுக்கி மூடும் ஒருவர் மட்டும்
விழி அகன்று
பார்க்க வேண்டியிருக்கிறது கொஞ்சம்
இரைத்தபடி நிற்கும் நம்பிக்கையை 
உண்மை  விரிந்த உள்ளங்கைகளை
துடிதுடிக்கும் இதயப் படபடப்பை
மறுதலிக்கப்பட்ட கண்களை
அல்லது
ஒரு முறையேனும்
ஒரு கண்ணாடியில் தன்னை.