Friday, 10 June 2011

பயணம் 1
நீண்ட நாட்களாகப் பயணம் பற்றி எழுதத் தோன்றும். நீண்ட தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவில்லை என்றாலும் கிட்டத்தட்ட ஒரு ஆறு ஆண்டுகள் அதிகமாகப் பயணித்திருக்கிறேன். தவிர ஒரு பெண்ணாக என்னுடைய பயணங்கள் முக்கியம் என்றே கருதுகிறேன். வீட்டின் உள்ளேயே  பெரும்பாலும் அடைபட நேரும் பெண்களுக்குப் பயணம் ஒரு விடுதலை. கொஞ்ச நேரம் சுதந்திர வாகனத்தில் அவர்கள் பிரயாணித்துக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் பயணிப்பது, அதிலும் தனியே பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அடையாளங்கள் அற்று ஒரு துறவி போல வேடிக்கை பார்த்துக் கொண்டு தளும்பாத தண்ணீர் போன்ற சந்தோஷத்துடனான ஒரு மனநிலை அது.

பள்ளி முடியும் வரை வீடு, வீடு விட்டால் பள்ளி. உலகம் அவ்வளவுதான். நிறைய நேரம் வெளியே நடக்க ஆவலாக, தவிப்பாக  இருக்கும். ஆனால் முடியாது. கோவில்பட்டியில் எங்கள் வீட்டிற்கு பின்னால் தண்டவாளம். சிறு வயதில் புகைவண்டியின் ஓசை கேட்கும் போதே ஓடிச் சென்று அடுத்தவரின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டு தண்டவாளத்திற்கு நெருக்கமாக நிற்போம். புகைவண்டி வேகமாக நகரும்போது நாங்களும் நகர்வது போல இருக்கும். அது எங்களை  உள்ளே இழுப்பது போலத் தோன்ற இதயத் துடிப்பு எகிறும். அது ஒரு மயக்கம். பின் TTR இற்கு டாட்டா சொல்லுவோம். பதிலுக்கு அவர் டாட்டா சொல்லிவிட்டால் அவ்வளவுதான், அன்று உலகம் எங்களுடையது. சிரித்துக் கொண்டே கொஞ்ச நேரம் பின்னால் ஓடுவோம். பின் பொன்வண்டுகள் தெரிகிறதா, பட்டுப் பூச்சி இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டே வீடு திரும்புவோம். இந்த பயணம் கூட  ஒரு வயது வரைதான். பின் புகைவண்டியின் சத்தம் பயணத்தை இரவு, பகலாய் நினைவுபடுத்தியபடி இருக்க வீட்டுள் இருக்க வேண்டியதே தான். சில நேரங்களில் இரவுகளில் புகைவண்டி நிலையத்தின் பெஞ்சுகளில் உட்கார்ந்து படிக்கத் தோன்றும். படிக்கிற பிள்ளை எங்கே வேண்டுமானாலும் படிக்கும் என்ற கூரான தர்க்கத்தில் ஆசைகள் சிறகுகளை ஓசையின்றி மடக்கிக் கொள்ளும். கோவில்பட்டியின் புகைவண்டி நிலையம் பற்றி பின்னால் கதைகளில் படிக்க நேரிட்டபோது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது - வாய்க்கப் பெறாத  வெளிகள் குறித்து.

பின்னால் வேறு ஊரில்  அதிகக் கட்டுப்பாடுகள் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்தேன். கல்லூரிக்கு உள்ளேயே விடுதி. கொஞ்சம் தள்ளி இருக்கிற கேட்டின் அருகில் போனால் கூட காவலர் வந்து விரட்டுவார். அவருக்குத் தெரியாமல் அந்த கேட்டின்  கம்பிகளைத் தொட்டு வருவது கூட எங்களுக்கொரு சாகச விளையாட்டாக இருந்தது. எவ்வளவு முட்டாள்தனமான, இன்றும் தொடர்கிற - பெண்கள் விடுதிகளில் இருக்கிற, கைதிகளைப் போலவும், சுய சிந்தனை அற்றவர்கள் போலவும் பெண்களை நடத்துகிற  போக்கு! அவ்வளவு சிறைவிதிகள் உள்ள விடுதியிலும் எல்லா சம்பிரதாய மீறல்களும் இருந்தது. நீள் செவ்வக வடிவ நோட்டுப் புத்தகங்களில் காதல் கடிதங்கள் எழுதப் பட்டுக் கொண்டிருந்தன.  ஒரு பால் உறவுகள், மெல்லிய ஈர்ப்புகள்,  அதனால் வரும் சண்டைகள், புதிய ஜோடிகள், சில  மாணவிகள்  போதைப் பொருள் உபயோகிப்பதாகக் கிசுகிசுக்கள் என உள்ளே ஒரு உலகம் இருந்தது. கைகளைக் கோர்த்துக் கொள்ளவோ, தோள் மேல் கை போடவோ கூடாதெனவோ ஆசிரியர்களால் அறிவுறுத்தப் பட்டோம். விதிகள், ஈர்ப்புகள், மீறல்கள் என்ற முக்கோண விளையாட்டில் அறிவியல் பூர்வமாக அல்லது படைப்பாக்க ரீதியாக மனவியல் விஷயங்களை அணுகுவது என்பது நடைபெறவே இல்லை. பயணம் என்று ஆரம்பித்து எங்கெங்கோ எழுத்து போகிறது. ஆனால் பயணம் என்றால் எதிர்பாராத திருப்பங்களும்  நேரும் இல்லையா.

அந்தக் கல்லூரியின் கடைசி இரண்டு மாதங்கள் பிடிவாதம் பிடித்து உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்குப் போகும் day scholar ஆனேன். அப்போதும் கல்லூரிப் பேருந்தில்தான் போக வேண்டும். சரியான நிறுத்தத்தில்தான் இறங்குகிறோமாவெனக் கண்காணிக்க பேருந்தில் ஆளும் உண்டு. நானும் என் தோழியும் - கனவுகளால் உயிர்வாழ்கிறவள்  அவள் - வேடிக்கை பார்த்துக் கொண்டு பலதும் பேசியபடி, சிரித்துக்கொண்டே போவோம். தினமும் வழியில்  ஒரு தேவாலயத்தைப் பார்ப்போம். சுற்றிலும் செடிகள் இருக்க ஒரு மாதிரி தனிமையாய் ஆனால் ஈர்க்கிற அழகோடு இருக்கும். அந்த செடிகளில் பூக்கள் போல நிறைய நத்தைகள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கும். எங்களுக்கு அந்த தேவாலயத்திற்குப் போக வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து தினமும் வளர்ந்து பைத்தியம் பிடித்தாட்டத் தொடங்கி  விட்டது. ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்தோம்  மதியம் வரையே  கல்லூரி என்பதாலும் அன்று ஊருக்குப் போவதற்காக பேருந்தில் கூட்டமிருக்கும் கண்டுகொள்ளப்படமாட்டோம் என்பதாலும். அந்த நாள் வந்தே விட்டது. கால்களைப் பேருந்தில்  இருந்து மண்ணில் வைத்த போது எங்கள் பாதங்கள் எங்களுடையது போலவே இல்லை. நத்தைகள் நிறைந்த  செடியை வியந்து பார்த்து விட்டு தேவாலயத்தின் வாசலுக்குப் போனோம். உள்ளே யாரும் இல்லை. உள்ளே போகத் தயக்கமாக இருந்தது. இருவருமே கிருஸ்தவர்கள் இல்லை. நிமிர்ந்து மேலே பார்த்தோம். ஆசிர்வதிக்கப்பட்டவர்களே உள்ளே வாருங்கள் என எழுதப் பட்டிருந்தது. சட்டென்று பரவசமாக உணர்ந்தோம். புன்னகையோடு நுழைந்தோம். அதிகக் குடும்பக் கவலைகளுடைய அவள் மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். நான் அவள் தனிமையைக் குலைக்க விரும்பாமல் சப்தமற்று விலகி நின்று கொண்டிருந்தேன்.ஆளற்ற அந்த நெடிதுயர்ந்த  தேவாலயம்  காலத்துக்குமாய் மனதில் உறைந்து  போய்   பயணத்தின் சுதந்திரத்தை, தேடலை, எதிர்பாரா ஆச்சர்யங்களைப் பரிசாக அளித்தது.
            முதல் பயணம் இப்படித்தான்... இனியும் எழுதுவேன் -  இந்த வலைப்பதிவைப் படிக்கும்  நட்புகள் பொறுத்துக் கொள்க.

10 comments:

சுந்தர்ஜி said...

ஆஹா!அண்டா காகசம் அபூ காகசம் திறந்திடு சீசேம்!

உங்கள் தளத்தில் பின்னூட்டமிட முடிகிறது இன்று.

உங்கள் உரைநடையும் வெகு நேர்த்தி.

பயணிக்கமுடியாத சிறைப்படல் ஆண்களால் உணரமுடியாத ஒரு அனுபவம்தான்.

ஆனாலும் மரத்துப் போன கால்களோடு நடக்க முயற்சிப்பதான உணர்வை உணர்ந்தேன் உங்களின் விடுதலைப் பட்ட சனிக்கிழமையைப் படித்த போது.

நிறைய இப்படியும் எழுதுங்கள்.

santhanakrishnan said...

வரம் போல் கிடைத்த
அந்த சனிக்கிழமையின்
ஈரம் உங்கள் எழுத்தில்
இருக்கிறது.

rajasundararajan said...

//நிமிர்ந்து மேலே பார்த்தோம். ஆசிர்வதிக்கப்பட்டவர்களே உள்ளே வாருங்கள் என எழுதப் பட்டிருந்தது. சட்டென்று பரவசமாக உணர்ந்தோம். புன்னகையோடு நுழைந்தோம்.//

இதில், //நிமிர்ந்து மேலே பார்த்தோம்// என்பது திட்டமிட்டோ அல்லது காட்சி விவரிப்பின் ஈர்ப்பில் தானாகவோ இடம்பெற்றிருக்கலாம். ஆனால், வாசிக்கையில், அது நம்மை உயர்த்தும் பரவசத்தை உணர்ந்தேன்.

எம்மட்டு எளிமையாக ஆனால் துல்லியமாக இருக்கிறது உங்கள் மொழிநடை! வாழ்க! கோவில்பட்டிக்காரர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தாம், எழுத்துக் கலையில்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//நிமிர்ந்து மேலே பார்த்தோம். ஆசிர்வதிக்கப்பட்டவர்களே உள்ளே வாருங்கள் என எழுதப் பட்டிருந்தது. சட்டென்று பரவசமாக உணர்ந்தோம். புன்னகையோடு நுழைந்தோம்.//

துவக்கமே அருமை..பயணம் எப்போதும் இனிமையானதுதான்..தொடர்வோம் பயணத்தை
(நானும் சோழ தேசங்களுக்கு சென்று வந்ததை பற்றிதான் எழுத துவங்கியுள்ளேன்)

மிருணா said...

# எப்படியும் கதவு வந்து விடுகிறது உங்கள் எழுத்தில் : ) உங்கள் கருத்துக்கள் எப்போதும் உற்சாகம் தருபவை. இப்போதும்.பொதுவாக empathy என்பதற்கு being in other's shoes என்பார்கள் . நீங்கள் //மரத்துப் போன கால்களோடு நடக்க முயற்சிப்பதான உணர்வை// என புத்தழகோடு சொல்லியிருகிறீர்கள். நன்றி திரு.சுந்தர்ஜி.உங்கள் தளத்தின் கவிஞர் ஊருக்குப் போயிருகிறாரா, அவரை வரச் சொல்லுங்கள், நாட்களாகிவிட்டது.
# நன்றி திரு.சந்தான கிருஷ்ணன்.
# வரவிற்கும்,வாசிப்பிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி திரு.ராஜ சுந்தர ராஜன். இயல்பாக நடந்த காட்சிதான் அது.வாழ்க்கைக்கும் சில எதிர்பாராத் தன்மை இருக்கிறதல்லவா.அதோடு கோவில்பட்டி சார்பில் இந்த கத்துக்குட்டியின் நன்றியும்.
# மகிழ்ச்சி நண்பர். படிக்கும் ஆவலோடு.

பத்மா said...

aduthathu padikka aavalai thhondukirathu ..naamum payanithu irukom ezhutha thaan iyalavillai ...azhaku mruna ..

நிரூபன் said...

பயணம் பற்றிய முதலாவது பாகம்,
சிறு வயது தொடங்கி, கல்லூரி வாழ்க்கை வரையான சுவையான நிகழ்வுகளை அலசியிருக்கிறது..

படிப்போரின் ஆவலைத் தூண்டும் வண்ணம் சுவையாக எழுதுகிறீர்கள்.

நிலாமகள் said...

அடையாளங்கள் அற்று ஒரு துறவி போல வேடிக்கை பார்த்துக் கொண்டு தளும்பாத தண்ணீர் போன்ற சந்தோஷத்துடனான ஒரு மனநிலை அது.//

படிக்கிற பிள்ளை எங்கே வேண்டுமானாலும் படிக்கும் என்ற கூரான தர்க்கத்தில் ஆசைகள் சிறகுகளை ஓசையின்றி மடக்கிக் கொள்ளும்.//

பதிலுக்கு அவர் டாட்டா சொல்லிவிட்டால் அவ்வளவுதான், அன்று உலகம் எங்களுடையது.//

விதிகள், ஈர்ப்புகள், மீறல்கள் என்ற முக்கோண விளையாட்டில்//

பயணத்தின் சுதந்திரத்தை, தேடலை, எதிர்பாரா ஆச்சர்யங்களை//

ம‌றுப‌டி ம‌றுப‌டி வாசித்துக் கொள்கிறேன்... ஆமோதிக்க‌வும் சிலாகிக்க‌வுமாய். ப‌ய‌ண‌த்தில் த‌ங்க‌ளைப் பின் தொட‌ர‌ குதூக‌ல‌மாய் கிள‌ம்புகிற‌து ம‌ன‌சு.

Harani said...

வாழ்க்கையே பயணம்தான் மிருணா. அதிலும் குட்டிகுட்டியாய் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எழுதுங்கள் சுவையாகத் தொடங்கியிருக்கிறீர்கள். நான் தனியே எனது பயணங்கள் குறித்து டைரி எழுதிக்கொண்டிருக்கிறேன். பயணங்கள் எல்லா சுவாரஸ்யங்களுக்கும் புதிர்களுக்கும் சுவைகளுக்கும் இடமளிப்பவை. தொடர்ந்து படிப்பேன்.

மிருணா said...

# ஆமாம்.நன்றியும் திரு.பத்மா.
# நன்றி திரு.நிரூபன்
# ஊக்கத்திற்கு நன்றி திரு.நிலாமகள்.
# நன்றி திரு.ஹரணி. அந்த சுவையான நினைவுகளை பதிவில் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.