Monday, 13 June 2011

பயணம் 2: அபத்த நகை


வாழ்கையின் அபத்தங்கள் ஒரு நகைச்சுவைதான். சமயங்களில் ஒரு பாதிக்கும் விஷயம் கூட அதில் உள்ள அபத்தத்தை உணர்ந்தோமானால் விலா வலிக்கும் சிரிப்பில் முடியும். ஒரு மேலாண்மைப் புத்தகத்தில் இப்படிப் படித்தேன் - யாராவது கடுமையாக நடந்து கொண்டால் அதை  நகைச்சுவையாக்க அந்த காட்சியை அப்படியே reverse இல் ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று. அது எனக்கு நன்றாகவே உதவி இருக்கிறது. ஆனால்  இந்த பத்தியில் எழுதப் போவது அது அல்ல.

பஸ்சில் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த நாட்களில் வழக்கமாக கடைசியில் இருக்கும் அந்த நீண்ட  இருக்கையில்தான் உட்காருவோம் தோழியும்  நானும். (தோழி என்று எழுதும்போதெல்லாம் சங்ககால வாசனை வருகிறது. சகி என்றும்  சொல்ல முடியவில்லை. சினேகிதி பரவாயில்லை இருந்தாலும் வேறு வார்த்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.)  அப்படி ஒரு நாள் வெகு  மும்முரமாகப்  பேசிக்  கொண்டிருந்தபோது  என் டிபன் பாக்ஸ் கீழே விழுந்து விட்டது. நான் என்ன செய்தேன்,  வேகமாக எழுந்து பின்புறக் கண்ணாடியின் வழியாக சாலையைப் பார்த்தேன். அப்புறம்தான் என் செயலின் அபத்தம் புரிந்தது. பஸ்ஸில் என்ன ஓட்டையா இருக்கிறது கீழே விழுந்த பாக்ஸ் சாலையில் விழுவதற்கு. உள்ளிருந்து பீறிட்டுக் கொண்டு வந்தது சிரிப்பு. அடக்க முடியாமல் தனியே சிரித்தபடி குனிந்து தேட ஆரம்பித்தேன். தோழிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன, என்ன என்றாள். சிரிப்பிற்கு ஊடாக கீழே விழுந்த டிபன் பாக்சை நான் ரோட்ல  தேடுறேன் என்றேன். என்ன புரிந்துகொண்டாளோ தெரியவில்லை. வேகமாக எழுந்து பின்புறக் கண்ணாடியில் எட்டிப் பார்த்தாள் சாலையை. அவ்வளவுதான் தெரியும். அதுக்கு அப்புறம் நாங்க சேர்ந்து சிரிச்ச சிரிப்புல மொத்த பேருந்தும் எங்கள வினோத ஜந்து மாதிரிப் பார்த்தது. எப்படி பாத்துக்கோங்க -  நான்தான் அறிவாளின்னா நம்ம தோழமையும் அப்படியே.

பயணத்துல இப்ப ஒரு கிளை வளைவு. இது நான் படிச்ச பள்ளில நடந்தது. அறிவியல் ஆசிரியர் ஏதோ கோவமாக இருந்திருக்கிறார். ஆசிரியர்கள் கோபமாக இருக்கும்போது Record Note திருத்துகிறார்கள் அல்லது ஆசிரியர்கள் கோவமாக இருப்பதற்காக Record Note திருத்துகிறார்கள். எது எப்படியோ அப்படித் திருத்தினால் கோபத்திற்கு வடிகால் கிடைக்கும் என்பது மட்டும்  காலம்காலமாக ஆசிரியர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. திருத்தும்போது எழுதியவரும் ஆசிரியர் அருகில் மஞ்சத் தண்ணி ஊத்திய ஆடு போல நின்று கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர், ஒவ்வொரு  பெஞ்ச்சா நோட்டக் கொண்டு வா என்றிருக்கிறார். முதலில் பையன்களின் பக்கம். மூன்று பெஞ்ச் வரை அர்ச்சனை, அடிகளோடு ஓடி விட்டது. கடைசிப் பையனின் நோட்டை திருத்தியபடி, லாஸ்ட் பென்ச்! கொண்டு வா என்றிருக்கிறார். குனிந்து நோட்டைத் திருத்தியதில் வகுப்பில் கேட்ட சத்தத்தை அவர் பொருட்படுத்தவில்லை. கொஞ்ச நேரத்தில் நிமிர்ந்து பார்த்தால் பையனுக்குப் பதிலாக  அவர் முன்னால் மரத்தால் செய்யப் பட்ட அந்த வகுப்பின் பையன்கள் பக்கத்தில் உள்ள லாஸ்ட்  பென்ச்! அவர் மேல் உள்ள பயத்தில் ஆகுபெயராக அவர் சொன்னது புரியாமல் அப்படியே அந்த பெஞ்சை தூக்கிக் கொண்டு வந்துட்டாங்க பையங்க. இப்ப அந்த கோவமான ஆசிரியருக்குக் கூட சிரிக்கிறதத் தவிர வேற வழி இல்லாமப் போயிருச்சு.

திரும்பவும் பேருந்து. ஆனால்  இது நகரப் பேருந்து. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தேன்.  பின்  ஒரு அம்மா ஏறினார்கள். எனக்குப் பின்னால் நின்று கொண்டார்கள். இடித்துக் கொண்டு வேறு. சரி, பொது ஜன வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பானு நானும் பொறுத்துகிட்டேன். பேருந்து நிற்கவும் எனக்கு முன்னால் உள்ள இருக்கையில் இருந்த ஒரு அம்மா இறங்குனாங்க. அந்த காலி இடத்துல உட்கார சொல்லி, நான் ரொம்ப நேரமா நின்னுட்டிருந்ததப்  பாத்த, அந்த இருக்கைல இருந்த இன்னொருத்தங்க சொன்னாங்க. நான் போறதுக்குள்ள பின்னால நின்ன அம்மா ஒரே இடி இடிச்சுகிட்டு கால  மிதிச்சு  முன்னால போய் டமால்னு உட்கார்ந்தாங்க. அதோட மட்டும் இல்லாம இலவச இணைப்பா அவங்க பை வேற ஆவேசமா ஒரு இடி குடுத்துச்சு. அந்த அம்மா நல்லாக் கூட உட்கார்ந்திருக்க மாட்டாங்க. இன்னும் அவங்க பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்கள இடிக்கக் கூட இல்ல, அதுக்குள்ளே  அடுத்த நிறுத்தம் வந்துடுச்சு.. அவ்வளவுதான். அந்த அம்மா திரும்பவும் டமால் டுமீல்னு எந்திருச்சு தாமரை மேல கால் வெச்சு நடந்த பத்மபாதர் மாதிரி இருக்குறவங்க கால் மேல ஏறி நடந்து இறங்கிப் போய்ட்டாங்க. நான் இந்த பக்கமும், அந்த பக்கமும் வேற யாராவது அந்த மாதிரி அம்மா இருக்காங்களான்னு பாத்துட்டு ( எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்) அந்த காலி இடத்துல போய் உட்கார்ந்தேன். பக்கத்துல இருந்தவங்க என்னை பாக்கக நான் அவங்களப் பாக்க அங்க வெடிச்சுச் சிதறுச்சு ஒரு சிரிப்பு. 5 நிமிஷம் உட்காரப் போற ஒரு அம்மாவுக்கே அந்த  இருக்கை மேல அவ்வளவு பிரியம்னா அப்புறம் ...  நீங்களே கோடிட்ட இடத்த நிரப்பிக்கோங்க. நான் இறங்கிப் போகணும் : )

9 comments:

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா இளமை கால பயணங்களை மீண்டும் மீட்டு வந்த பதிவு
உண்மையை சொல்லவேண்டும் என்றால் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர் பார்க்கவே இல்லை
அதுவும் அந்த அனிச்சையான செயல், பஸ்ஸில்
ரசித்தேன் தோழி

rajasundararajan said...

//5 நிமிஷம் உட்காரப் போற ஒரு அம்மாவுக்கே அந்த இருக்கை மேல அவ்வளவு பிரியம்னா அப்புறம் ... நீங்களே கோடிட்ட இடத்த நிரப்பிக்கோங்க. நான் இறங்கிப் போகணும்//

5 - இன்னொரு கால அளவை மாற்றி நிரப்பத் தூண்டும் 'நிமிஷம்' - 'அம்மா' - ...

சரியான குறும்பு!

//நான் இறங்கிப் போகணும்// இதுதானுங்க சத்தியம். இதை யாருமே உணர்றதில்லீங்க.

Rathnavel said...

நல்ல பதிவு.

சுந்தர்ஜி said...

உரைநடை கவிதைக்கு எதிர்ப்புறமுள்ள உங்களின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது.

அபத்தக்கள் நிகழும்போது அதை ரசிப்பதுதான் அதைக் கடந்துசெல்லும் அருமையான வழியும் கூட.

உரைநடையும் நிறைய எழுதுங்கள்-கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பார்க்க வாய்க்காத மிருணாவின் நகைச்சுவை உணர்வை இதில் பார்க்கமுடிவதால்.

நிலாமகள் said...

முத‌லிர‌ண்டு அப‌த்த‌ச் சிரிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளைப் ப‌டித்த‌வுட‌ன் ப‌திவின் ப‌ட‌க்குழ‌ந்தை சிரிப்பைப் பார்த்து ர‌சித்தேன். மூன்றாவ‌து அப‌த்த‌ச் சிரிப்பு வாழைப்ப‌ழ‌த்தில் ஊசியாய் சிந்தனையையும் கிள‌ர்த்தும்ப‌டி.

மிருணா said...

# பகிர்வுக்கு நன்றி திரு.ராஜகோபாலன்.
# நன்றி திரு.ராஜ சுந்தர ராஜன். உங்கள் இறுதி வரிகள் புது வெளிச்சம்.
# நன்றி திரு.ரத்னவேல்.
# நன்றி திரு.சுந்தர்ஜி.
# நன்றி நிலாமகள். உண்மையில் போன பதிவு உங்கள் வேதனையைத் தூண்டியதால் இந்த பதிவை உங்களுக்காகத்தான் lighter vein இல் எழுதினேன்.

நிலாமகள் said...

//இந்த பதிவை உங்களுக்காகத்தான் lighter vein இல் எழுதினேன்//
:-))))))

தக்குடு said...

உங்களோட நகைசுவை ரொம்ப அருமையா இருந்தது மேடம்!

மிருணா said...

நன்றி சார். உங்கள் நகைச்சுவை எழுத்துக்களுக்கு பலரையும் போல் நானும் ஒரு விசிறி.