Monday, 20 June 2011

பயணம் 3: வானத்து நட்சத்திரங்களடி!


கோவில்பட்டியின் எல்லையில் பல வருடங்களாக ஒரு பலகை இருந்தது.  அதில் Welcome to the Matchless City of Matches என்றிருக்கும். வேலை நிறைந்த ஊர். தீப்பெட்டி தொழிற்சாலைகளால் பல வீடுகள் வாழவும், பிள்ளைகள் படிக்கவும் முடிந்தது, அதன் பக்க விளைவுகள் ஊடே. ஆனால் அந்த matchless ஊரில் குளங்களோ, நீர்நிலைகளோ கிடையாது. பெரிய அளவில் பசுமையைப் பார்த்துவிட முடியாது. அதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு முன்னால் ஒரு பெரிய பசிய பூங்கொத்தைப் போல வேப்ப மரங்களும், அருகாமையில் புளிய, வாகை மரங்களும், கருவேல மரங்களும் இருந்தன. வீட்டின் புறவாசலில் பப்பாளி, எலுமிச்சை, அகத்தி, கொய்யா, கருவேப்பிலை, கொடுக்காப்புளி, கனகாம்பரச்  செடிகள், மணத்தக்காளி, டிசம்பர் பூச்செடிகள், மருதாணி, மாதுளை என இருந்தன. எல்லா இறுக்கமான சூழலிலும், அந்த மாதிரி நேரங்களில் புத்தகம் படிப்பது சரியான முறையில் பார்க்கப் படாது, இயற்கையே மருந்தாக இருந்திருக்கிறது.

சிறு வயதில் அப்படியே விளையாடிக் கொண்டே போவோம். கும்பலாய்ப்  பெயர் தெரியாத செடிகள் வளர்ந்திருக்கும். அவற்றிற்கு தாத்தாப் பூ, ரேடியோ பூ, பொம்மைக்கா செடி என விதம்விதமாகப் பெயர்கள். ஒரு செடியில் - பின்னால் அவற்றின் பெயர் அம்மான் பச்சிரிசி எனத் தெரிந்து கொண்டேன் - உதிரிப் பாக்கு போல காய் இருக்கும். இலையைக் கிள்ளினால் பால் வரும். அதற்கு வெத்தல பாக்குச் செடி என பெயர். இன்னொரு செடியின் காய்கள் கூரற்ற முட்களோடு இருக்கும். அதை வைத்து தலை சீவலாம். அதற்கு பெயர் சீப்புச் செடி. எனக்குப் பிடித்த இன்னொரு பூ miniature சூரிய காந்தி போல  இருக்கும். அதையும் சூரிய காந்திப் பூ என்றுதான் சொல்லுவோம். என்னவோ அதை பார்த்தாலே பயங்கர சந்தோஷமாக இருக்கும். இன்னும் தும்பைகள், அவரைப்பூக்கள், அகத்திப் பூக்கள், போகன்வில்லா, மரமல்லி, பன்னீர் பூக்கள், செக்கச் சிவந்த கள்ளிப் பூக்கள், சரம்சரமாய்த் தொங்கும் மஞ்சள் கொன்றை என எத்தனை அலுக்காத அழகுகள். அப்படியே வெளியைப் பிரகாசப்படுத்துவதோடு  எத்தனை பேருக்கு எவ்வளவு  விதமான மன உலகத்தை அது ஏற்படுத்துகிறது? அவற்றை நேரடியாகப் பார்க்கிற, அவற்றின் குளிர்வை நனவுணர்வற்று உணர்கிற, மனதின் சூடுகள் அப்படியே தணிந்து போகிற ஒரு அனுபவத்தை  நவீனக் கருவிகளால் தர முடியுமா? அவற்றால் எப்படி ஒரு முழுமையான வளர்ச்சி ரீதியான உணர்வுச் சூழலை  ஏற்படுத்த முடியும்? முடியாதென்றே தோன்றுகிறது. உதாரணமாக...

அப்போது மேல்மருவத்தூரில்  வேலை  பார்த்துக்  கொண்டிருந்தேன். நானும் தோழியும் வெளியே சென்று விட்டு  சோற்றுப்பாக்கத்தின் (ஊரின் பெயர்) அவ்வளவு பரிச்சயம் ஆகாத வழியில் மரங்கள் அடர்ந்த ஒரு நீண்ட பாதை வழியாக இரவில் திரும்பிக் கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. நிலவற்ற இரவு வேறு. அடுத்த அடியை எங்கே வைக்கிறோம் என்று கூடத் தெரியவில்லை. சட்டென்று ஒரு கானகத்துள் போய்விட்ட உணர்வு. அடுத்தவரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அப்படியே மெதுவாக முன்னேற ஆரம்பித்தோம். பயத்தினால் முழு விழிப்புடனான உடல், மன நிலை.இப்படியே  கொஞ்சம் முன்னேறினோம். அதற்குள் எல்லையற்ற பிரயாணம் பண்ணிய  உணர்வு. அதன் பின் நடந்தது வாழ்வின் மறக்க இயலாதொரு அற்புதம்:

பறக்கும் வெளிச்ச புள்ளிகள் அலைவுறும் அழகிய கிளைகளையுடைய மரத்திலிருந்து மிதக்கும் இலைகள் போல உதிரவும் , மீளவும் செய்தன மின்மினிப்  பூச்சிகள். அவற்றால் உயிர்ப்புற்ற மரம் அதி அற்புதமாய் தன் ஒளி இருப்பை பிரகாசமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு நூறு  மின்மினிப்  பூச்சிகள் தனக்கென ஜொலிக்கும்  உலகத்தை உருவாக்கிய சந்தோஷத்தை  அது தன் இலைகளால்  சலசலத்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வானிலிருந்து தவறிய நட்சத்திரப் புள்ளிகள் போல, ஒளியால் இசைக்கும் இசைக்குறிப்புகள் போல, கோள்கள் சுழலும் பால்வீதி போல, கட்டுண்ட ஆன்மாவிற்கு வண்ணத்துப்பூச்சி சிறகுகள் முளைத்தாற்போல, கார்த்திகை சுடர்களின் நடனம் போல, வண்ணச் சிதறல் போல, ஒரு வித மகிழ்வான கண்ணீர் துளிகள் போல  இன்னும் சொல்ல இயலாத பரவச உணர்வுகள் போல அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த அந்த மின்மினிப் பூச்சிகளோடு நின்றுகொண்டே சுழன்றாடியது  மனம்.

மீட்கவே முடியாத கால்களை எப்படியோ மீட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். அதிகம் பேச முடியவில்லை. அந்த காட்சி ஏற்படுத்திய உணர்வுப் பளு. பயணக் களைப்பு வேறு. சீக்கிரம் தூங்கி விட்டோம். நடு இரவில் திடீரென ஒரு உணர்வு. கண் விழித்தால் தோழியும் விழித்த நிலையில். அவளைப் பார்த்தேன். மௌனமாக ஜன்னலை சுட்டிக் காட்டினாள். இரு மின்மினிப்பூச்சிகள்  அறையின் குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்தன. சப்தமே இல்லாமல் அங்கே ஒரு உலகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம் நீண்ட நேரம். அலைவுற்ற கால்களும், மனமும் அமைதிக்கு வந்தபோது தூக்கம் அருகே வந்து நின்று கொண்டது. மின்மினிப் பூச்சிகளோடு உலகமும் விடைபெற்றுக் கொண்டது. 

8 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
இயற்கையை நன்கு ரசிக்கிறீர்கள். நன்கு எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுகிறீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

தும்பைகள், அவரைப்பூக்கள், அகத்திப் பூக்கள், போகன்வில்லா, மரமல்லி, பன்னீர் பூக்கள், செக்கச் சிவந்த கள்ளிப் பூக்கள், சரம்சரமாய்த் தொங்கும் மஞ்சள் கொன்றை என எத்தனை அலுக்காத அழகுகள். அப்படியே வெளியைப் பிரகாசப்படுத்துவதோடு எத்தனை பேருக்கு எவ்வளவு விதமான மன உலகத்தை அது ஏற்படுத்துகிறது? அவற்றை நேரடியாகப் பார்க்கிற, அவற்றின் குளிர்வை நனவுணர்வற்று உணர்கிற, மனதின் சூடுகள் அப்படியே தணிந்து போகிற ஒரு அனுபவத்தை நவீனக் கருவிகளால் தர முடியுமா?//

அப்ப‌டியே சின்ன‌ வ‌ய‌சு ப‌சும் நினைவுக‌ள் மேலெழ‌ச் செய்து விட்ட‌ன‌.

அற்புதம்:
பறக்கும் வெளிச்ச புள்ளிகள் அலைவுறும் அழகிய கிளைகளையுடைய மரத்திலிருந்து மிதக்கும் இலைகள் போல உதிரவும் , மீளவும் செய்தன மின்மினிப் பூச்சிகள். அவற்றால் உயிர்ப்புற்ற மரம் அதி அற்புதமாய் தன் ஒளி இருப்பை பிரகாசமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு நூறு மின்மினிப் பூச்சிகள் தனக்கென ஜொலிக்கும் உலகத்தை உருவாக்கிய சந்தோஷத்தை அது தன் இலைகளால் சலசலத்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வானிலிருந்து தவறிய நட்சத்திரப் புள்ளிகள் போல, ஒளியால் இசைக்கும் இசைக்குறிப்புகள் போல, கோள்கள் சுழலும் பால்வீதி போல, கட்டுண்ட ஆன்மாவிற்கு வண்ணத்துப்பூச்சி சிறகுகள் முளைத்தாற்போல, கார்த்திகை சுடர்களின் நடனம் போல, வண்ணச் சிதறல் போல, ஒரு வித மகிழ்வான கண்ணீர் துளிகள் போல இன்னும் சொல்ல இயலாத பரவச உணர்வுகள் போல அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த அந்த மின்மினிப் பூச்சிகளோடு நின்றுகொண்டே சுழன்றாடியது மனம்//

உங்க‌ விவ‌ரிப்பில் மூழ்கிட்டேன் மிருணா. வெளியேற‌ துளியும் விருப்ப‌ம‌ற்று.

RVS said...

வாவ்! என் கண்களில் மின்மினிப் பூச்சி பளிச்சிடுகிறது.. நல்ல பயணம். ;-))

சுந்தர்ஜி said...

என் பள்ளி வாழ்க்கை இருப்புப்பாதைகளாலும் மின்மினிப்பூசிகளாலும் உருவானது.

உங்களின் அற்புதமான அனுபவத்துடன் சிள் வண்டுகளின் ஒலியையும் ரயில் நிர்வாகத்தின் சமிஞ்ஞைகளால் அதிரும் இருப்புப் பாதையின் பக்கமிருக்கும் நீள்கம்பிகளையும் நிறைய மின்மினிப்பூச்சிகளையும் இட்டேன்.

பாளையங்கோட்டையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் போகும் இருப்புப்பாதையின் நெருக்கமான அனுபவம் கிடைத்தது.

இந்தத் தொடர் நன்றாக வருகிறது மிருணா.

சந்ரு said...

மிகவும் அழகாக இயற்கையை இரசித்திருக்கிறிங்க.

மிருணா said...

நன்றி திரு:ரத்னவேல்,நிலாமகள், RVS,சுந்தர்ஜி,சந்ரு.

தக்குடு said...

// நிலவற்ற வானத்து//லேந்து வியக்க ஆரம்பித்தேன் உங்கள் இருவரின் நடையையும். இதுக்கு பேர் தான் தமிழ் நடை போலருக்கு!! 'ம்ம்ம்ம்ம்!' பெருமூச்சு மட்டும் தான் தக்குடுவால விடமுடியும். அருமையான தமிழ் நடைக்கு வாழ்த்துக்கள் மேடம்!

இந்த பதிவுக்கு கவிதைனு லேபில் குடுக்கலாமா இல்லைனா அனுபவம்னு குடுக்கலாமானு உங்களுக்கும் குழப்பம் படிக்கிறவாளுக்கும் குழப்பம் அதான் லேபிலே குடுக்கலை கரெக்டா??

மிருணா said...

தக்குடு சார், நல்ல இருட்டுல கண்ணு தெரியாம திக் திக்குன்னு நாங்க நடந்த தமிழ் நடையைப் பாராட்டுனதுக்கு உங்க பாஷைல ஒரு நன்னி ஹை.
கரக்ட்டுன்னும் சொல்லலாம், கரக்ட்டில்லைன்னும் சொல்லலாம். மொத்ததுல ஒரே இருட்டு, குழப்பம் (உங்களை மாதிரியே) போங்க. :)