Saturday, 25 June 2011

பயணம் 4: நாங்கள் சென்றோம்


முதுகலை முடித்து வேண்டாவெறுப்பாக மதுரையில் B.ED  சேர்ந்தேன். பொதுவாகக் குழந்தைகளுடன் விளையாடுவதில்  எனக்குப் பிரியம் . அதனால்  குழந்தைகளுக்கு சொல்லித் தரும் அளவு எனக்குத் திறமை கிடையாது என்பது எனக்குத் தீர்மானமாகத் தெரிந்திருந்தது. தெப்பக்குளத்தின் வழியாகத் திரும்பும் ஒவ்வொரு மாலையிலும் நட்புகளிடம் சொல்லுவேன்: நான் நாளை இங்கு வர மாட்டேன், வந்தால் என்னை தெப்பக்குளத்துள் தள்ளி விடுங்கள் என்று. சீக்கிரம் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கவும் B.ED படிப்பை 2 மாதத்திலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப் போனேன். அதிகமான பணிப்பளு. குறைந்த சம்பளம். அதுவும் பல தவணைகளில் தரப்படும். கிராமத்துச்  சூழல். நாங்கள் தங்கியிருந்த தெருவில் ஒரு முறை நாங்கள் சாணி தெளித்துக் கோலம் போடுவதில்லை என்று அப்படிக் கடிந்து கொண்டார்கள்!  என்றாலும் எனக்கு முதுகலை முடித்துவிட்டு என் உணவிற்கு இன்னொருவரை சார்ந்திருப்பது  அவமானமாக இருந்தது. முதுகலையை, பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே ''சாதாரணக் கல்லூரியில்  படித்தால் போதாதா, அப்படி என்ன பல்கலைக்கழகம் போய் படிக்க வேண்டியிருக்கிறது?'' என்று உறவினர்கள் இடித்துரைத்தது வேறு, என்னை வேலை செய்யத் தூண்டியது. என்றாலும் அந்த நிறுவனம் 2 மாதம், 3 மாதம் என சம்பளம் தராமல் இருந்த போது வேலையை விடுவதே சரியானதாக இருந்தது.

படித்துவிட்டு வேலையற்று இருக்கும் நாட்கள் கொடுமையானவை. நான் வேலைக்குப் போக வேண்டும் என்றோ, ஏன் வேலைக்குப் போகவில்லை என்றோ யாரும் கேட்கமாட்டார்கள் வீட்டில். என்றாலும் பாரமாய் உணர்ந்தேன். ஒரு சுயவிவரக் குறிப்பு தயாரித்து அதை எனக்குத் தெரிந்த எல்லா நிறுவனங்களுக்கும்  அனுப்பிக் கொண்டே இருந்தேன். தபால்காரரோ வரும் போது ஏமாற்றத்தையும், போகும்போது  நம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டு சென்று கொண்டிருந்தார். பிறகு மேல்மருவத்தூரில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்தது. ஆனால் அந்த ஊரின் ஆன்மிகப் புகழால், பெண்ணாகவும் இருக்க நேர்ந்ததால் வீட்டில் போகக் கூடாதென்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள். மீண்டும் வேலையற்ற வெறுமை. ஒரு மாதம் கழித்து மீண்டும் மேல்மருவத்தூரில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதம். இப்போது நான் தெளிவாக இருந்தேன். நான் நிச்சயமாக அந்த நேர்முகத் தேர்வுக்குப் போவேன், யார் கூட வராவிட்டாலும் நான் தனியாகப்  போவேன் என்று சொல்லி விட்டேன். என் பிடிவாதம் தெரிந்தபின் அம்மா கூட வந்தார்கள். பல சங்கடங்களைத் தாண்டி மேல்மருவத்தூர் கிளம்பினோம்.

கொட்டுகிற மழை. ஊரும் அரசுப் பேருந்து. உடைந்த கண்ணாடி வழியாக தெறிக்கும் தண்ணீர். பாவமாக ஒரு அம்மா. வேலைக்குப் போகும் உறுதியில் பல்லை கடித்துக் கொண்டு ஒரு மகள் என இருந்தது அந்த காட்சி. கழிவறை வசதிகள் கொஞ்சமும் இல்லாத சூழல். மோட்டலில் இருக்கும் கழிவறைகளின் நிலை கால் வைக்க முடியாதபடி. பேருந்து இருவருக்கும் ஒத்துக் கொள்ளாது என்பதால் சாப்பிடவும் இல்லை. உருட்டிக் கொண்டே போன அந்த பேருந்து ஒரு வழியாக மேல்மருவத்தூர் வந்தது. சாப்பிட நேரமில்லை. வேகமாக ஒரு விடுதியில் குளித்துவிட்டுக் கிளம்பி  அந்த நிறுவனத்திற்குப் போனோம். நல்ல கூட்டம். வேறுவேறு வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள். ஆண்கள் தனியாகவும்,பெண்கள் அப்பாக்களோடோ அல்லது உறவு ஆண்களோடோ வந்திருந்தார்கள். அம்மா வந்திருந்தது என்னோடு மட்டுமே. நாங்கள் அந்த கூட்டத்திலிருந்து வித்தியாசமாக பார்க்கப்படுவதாக உணர்ந்தோம். எனக்கு அப்படி அம்மா என்னோடு வந்திருந்தது மகிழ்வாக இருந்தது.

முதல் ஆளாக உள்ளே அழைக்கப்பட்டேன். கேள்விகள், செய்முறைப் பரிசோதனைகள். நன்றாக பதில் சொல்ல முடிந்தது. வேலைக்கு நியமிக்கப்பட்டால் உடனே சேர முடியுமா என்று இறுதியாக கேட்டார்கள். நம்பிக்கை பூத்தது. வெளியே வந்து அம்மாவிடம் நிச்சயம் வேலை கிடைக்குமென்று சொன்னேன். அப்படியே ஆனது. எவ்வளவு சம்பளம் வேண்டும் என அவர்கள் கேட்ட  போது எவ்வளவு சொல்ல வேண்டும் என்று கூட சொல்லத் தெரியவில்லை. ஆனால் சந்தோஷமாக இருந்தது. அம்மா அவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு வேலை கிடைத்த சந்தோஷம். 5 நிமிடம் பள்ளியில் இருந்து வர தாமதமானாலும் பதறி அண்ணனை அனுப்பும் அம்மாவும், நானுமாக, பெண்களாகப் பயணித்து வென்ற சந்தோஷம், இருப்பிற்கான அர்த்தம் கிடைத்த  சந்தோஷம்  என அதற்குப் பல வண்ணங்கள்.


திரும்பும் போது எனக்குப் பசியே இல்லை. சந்தோஷத்தில் சாப்பிட முடியவில்லை. மிகக் குறைவாகச் சாப்பிடும் அம்மாவோ  அன்று நன்றாக சாப்பிடுவதைப் பார்த்தேன். அதுவும் சந்தோஷத்தினால் என்று தோன்றியது. வழியில் விருதுநகரில் முதல்முதலாக காலச்சுவடு இதழை வாங்கினேன். அதிலிருந்த ஓவியாவின் நேர்காணல் மனதில் பலத்த நம்பிக்கையையும், இலக்குகளையும் விதைத்தது. அதில் அவர் தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து ஓட்டுனராக வசந்தகுமாரி என்பவரைப்  பணிபுரியச் செய்வதில் நேர்ந்த போராட்டங்களைப் பதிவு செய்திருந்தார். இதெல்லாமே ஒரு eye-opener ஆக  இருந்தது.அல்லது நல்ல துவக்கமாக இருந்தது. ஒரு விதத்தில் இந்த பயணம் அர்த்தமுள்ள இருப்பிற்கான தேடலின் முதல் காலடியாக இருந்தது.

Storm in a teacup என்ற  ஆங்கில மரபு வழக்கு சொல்வது போல ஒரு வேளை நான் எழுதுவது சிறிய விஷயங்களைப் பெரிதாகச் சொல்வது போல இருக்கலாம். ஆனால் மண்புழுவிற்கு வண்ணத்துப் பூச்சி பறக்கும் உயரம் கூடத் தொலைதூரம்தான் இல்லையா? இன்னும் எங்கள் வீட்டில் உள்ள பெண்கள் கடையில் ஒரு தேநீர் கூட தனியாகப் போய் குடிக்க மாட்டார்கள். ஒரு வாரத்திற்கு முன் கஷ்டப்படுகிற ஒரு பெண்ணுக்கு வேலை வாய்ப்பொன்று குறித்து சொன்னேன். வீட்டிற்கு 5 மணிக்குள்  வரும்  வேலையாக  இருக்க  வேண்டும்  என்றும், வேலையிடம் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணின் அப்பா அந்த வேலையை மறுத்து விட்டார். இன்னும் நிறையக் குடும்பங்களில் இது தொடர்கிறது. பெண்ணிற்கான கட்டுப்பாடு அவளது நன்மைக்காகத்தான் என்ற பெயரில் அவள் ஒரு சிறிய கூண்டிற்குள் - அது தங்கக் கூடாகவே  இருந்தால்தான் என்ன?- வானொத்த வாழ்வின் விகாசங்களைத் தொலைக்க வைக்கப் படுகிறாள். Rokeya  Hosain இன் சுல்தானாவின் கனவு எனும் புதினத்தில் ஒரு கேள்வி மிக அழகாக முன் வைக்கப் படும் - அதன் சாரத்தை மட்டும் கூறுகிறேன் - ஒரு உயிருக்கு ஒருவர் தீங்கிழைத்தால் தீங்கிழைப்பவர் சிறையில் வைக்கப் பட வேண்டுமா, தீங்கிழைக்கப்பட்டவர் சிறையில் வைக்கப் படவேண்டுமா என அது வினவும். பெண்கள் விஷயத்தில் நடப்பது இதுதான். நீ பலவீனமானவள் என நான்கு சுவர்களே கோவிலாக விதந்தோதப்பட்டும், தந்திரம் குறைவான இடங்களில் பொட்டச்சி, வீட்டை வீட்டு வெளியே போகக் கூடாதென்றும்  அடக்கி வைக்கப் படுவது  பெண்தான்.

கோவில்பட்டியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவிலிருக்கும் மேல்மருவத்தூருக்கு வேலையின் பொருட்டு, பொருளாதார, மன தற்சார்பு தேடிப் பெண்களாக நாங்கள் சென்ற அந்த பயணம்  என்னளவில் ஒரு மைல் கல்தான்.

9 comments:

நிலாமகள் said...

மிக‌ அருமையான‌ ப‌ய‌ண‌ம்தான் மிருணா! பெண்ணால் முடியாது, கூடாது என்ற‌ நிய‌திக‌ளை உடைத்தெறிந்த‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா...!ம‌ன‌த் துணிவோடும் தெளிவோடும் ஒரு செய‌லில் இற‌ங்கினால் சூழ‌ல் ந‌ம் துணையாக‌வும் க‌ட‌வுள் ந‌ம் இணையாக‌வும் வ‌ந்துவிட‌ முடிகிற‌து. தொட‌ரும் ப‌ய‌ண‌க் குறிப்புக‌ள் நெகிழ்வேற்ப‌டுத்துமாறு உள்ள‌ன‌.

//மண்புழுவிற்கு வண்ணத்துப் பூச்சி பறக்கும் உயரம் கூடத் தொலைதூரம்தான் // நியாய‌ம் தான்.

//ஒரு உயிருக்கு ஒருவர் தீங்கிழைத்தால் தீங்கிழைப்பவர் சிறையில் வைக்கப் பட வேண்டுமா, தீங்கிழைக்கப்பட்டவர் சிறையில் வைக்கப் படவேண்டுமா?// சிந்தை கிள‌றும் வினா.

இரா.எட்வின் said...

எவ்வளவுதான் தெளிவான நிலைக்கு வந்தாலும் எனக்குள் ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருந்தது தோழா. நீங்கள் ஒரு பெணென்பது புரிந்து போனது.

மிக வசீகரமான நடை உங்களது.

தொடர்ந்து நான் வாசிக்கும் சிலருள் நீங்களும் ஒருவர்.

பி.எட் படிக்க மறுத்ததற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். நாம் கற்பபதற்கு பிள்ளைகளிடம் ஏராளம் இருக்கும் போது அவர்களை கட்டாயப் படுத்தி திணிப்பது இருக்கிறதே...

அருமையானப் பதிவு.

ஆமாம் என்ன செய்கிறீர்கள்?

அதிகம் சாப்பிட்ட அம்மாவின் மன நிலைதான் கொண்டாடப் படவேண்டும். அதுதான் உடைசலின் துவக்கம். மீண் டும் சொல்கிறேன், அருமையானப் பதிவு.

Rathnavel said...

நல்ல பதிவு.
உலகம் நம்மை என்ன சொல்லுமோ என்று எண்ணாதீர்கள்.
வாழ்த்துக்கள்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அருமை, அழகு வேறென்ன சொல்ல..தொடருங்கள்

சுந்தர்ஜி said...

எளிதான சுகமான பயணங்கள் அனுபவங்களைத் தருவதில்லை.

உங்களின் அடுத்தடுத்த படிகளை ஒவ்வொரு இடுகையிலும் ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது.

பெண்களின் நிலையை நோக்க ஆண்கள் என்று என்னை வகைப்படுத்திக்கொள்ள அவமானமாக வெட்கமாக இருக்கிறது.

என்ன செய்ய?

மிருணா said...

# உணர்வுப்பூர்வமான பகிர்வுக்கு நன்றி தோழி.நிலாமகள்.
# ஊக்கத்திற்கு நன்றி திரு.எட்வின். ஏன் குழப்பம் ? நான் கூட இந்த தளத்தை ஆரம்பிக்கும்போது பால் அடையாளம் வேண்டுமாவென யோசித்தேன். பின் பெண்ணாக வாழ்வைப் பார்ப்பதைப் பதிவு செய்ய வேண்டும் என்பதால் பெண்ணென்ற அடையாளத்தோடே எழுத ஆரம்பித்தேன். மற்றபடி எழுதுகிறபோது நம்முள் பல தன்னிலைகள் எழுகின்றன இல்லையா? வேறு, நான் படிக்கும் வேலை செய்கிறேன் தோழர். உங்கள் இறுதி வரிகள் நல்ல கூர்மையான அவதானிப்பு. சந்தோஷமாக இருந்தது.
# ஊக்கத்திற்கு மனப்பூர்வமான நன்றி திரு.ரத்னவேல் அய்யா.
# நன்றி தோழர்.திருநாவுக்கரசு. ஒரு இடைவெளிக்குப் பின் பயணத்தைத் தொடர்வேன்.

மிருணா said...

உங்கள் புரிதலுக்கு பெண்கள் சார்பாக நன்றி தோழர்.சுந்தர்ஜி. நெகிழ்வாக உணர்ந்தேன். செய்ய வேண்டியது என்னவென்று உங்களுக்கே தெரியும். செய்திருப்பீர்கள் எனவும் நம்புகிறேன். முதல் அடி வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது இல்லையா?

Harani said...

அன்புள்ள மிருணா...

உங்கள் பயணப்பதிவைப் படிக்கும்போது ஏற்கெனவே முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல எனது பயணங்கள் நினைவில் ஓடுகின்றன. அவை ஒவ்வொன்று ஓர் உணர்ச்சியைப் பற்றியன. அவமானம், வைராக்கியம், துரோகம், உறுத்தல், பொருளாதாரம் என பல துரத்தியடிக்க வேலை தேடி எங்கும் ஓடிய பயணங்கள் அவை. மிகச் சொற்பச் சம்பளத்தில் காலை 5 மணிக்கு பீச் ஸ்டேஷனலிருந்து குரோம்பேட்டைக்குப் பயணித்து பதனிடப்பட்ட மாட்டுத்தோல்களை தோளில் சுமந்து மறுபடியும் ரயிலில் பயணித்து கம்பெனிக்கு வந்து மாலை ஏழு மணிவரைக்கும் வேலை பார்த்து அலுவலக உதவியாளர் பணியில் தொடங்கி மேலாளர் பணிவரை எல்லாமுமாய் இயங்கி இரவு அதே பதனிடப்பட்ட மாட்டுத்தோலில் அசந்துபோய் உறங்கிய சென்னை காலங்களை நினைக்கிறேன். அப்போது நண்பன் மதுமிதா எழுதிய கடிதத்தின் வரிகள் இவை காசிற்காக ஓடும்போது கனவுகளை மிதித்துக்கொண்டுதான் ஓடவேண்டியிருக்கிறது என்று எழுதினான். எத்தனை ஆறுதலான நம்பிக்கையூட்டிய வரிகள் அவை. உங்களின் கோவில்பட்டி தொடங்கி மருவத்துர்ர் பயணம் எனக்கு நிறைவாக இருந்தது. உங்களின் துணிவு பாராட்டிற்குரியது. உங்கள் இந்தப் பதிவில் மண்புழுவிற்கு வண்ணத்துப்பூச்சி பறக்கும் உயரம்கூட தொலைதுர்ரம்தான் என்கிற வரிகளில் சற்று உறைந்துபோகிறேன். தொடர்ந்து பயணியுங்கள்.

மிருணா said...

உணர்வுப் பூர்வமான பகிர்வுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி திரு.ஹரணி. பல கட்டங்களைத் தாண்டியே நிற்க முடிகிறது வாழ்க்கையில். பேராசிரியராக இப்போது நீங்கள் இருப்பது உங்கள் பயணத்தின் வளைவுகளை மகிழ்வாகச் சுட்டுகிறது. உரைநடை எழுதினால் கவிதை மறந்து விடுவதைப் போல இருக்கிறது. அதனால் ஒரு இடைவெளிக்குப் பின் எழுதுவேன்.