Wednesday, 1 June 2011

அவகாசம்


தொட்டாற்சிணுங்கியின்  இதழ்கள்
பாதுகாப்பில் குவிந்து மூடுகின்றன 
உணவுள்ள விரல்களை நிராகரித்து
பறவை சிறகடிக்கிறது பயத்தில்
குழந்தை மறுப்பாய்த் தலை அசைத்து
அம்மாவின் தோள் நோக்கித் திரும்புகிறது
நிலைஇழப்புப் பரிதவிப்பில்.
எனினும்
காத்திருத்தல் பூப்பூக்கும்.
எதிரொலிகள் மறையாதொலிக்கும்
காரணமறியாக் கதவடைப்புகள்
குப்பைகளோடு வீசப்படும் படைப்புகள்
வேர் பிடுங்கப்பட்ட செடிகள்
அன்பு  உருவழிந்த ஆத்திரங்கள்
வாழ்விலிருந்து மறைந்து போதல்
இப்படி
அவசரத் தீர்ப்புகளில்  முற்றுபுள்ளியிட்டு
பேனாவை  இறுக்கி மூடும் ஒருவர் மட்டும்
விழி அகன்று
பார்க்க வேண்டியிருக்கிறது கொஞ்சம்
இரைத்தபடி நிற்கும் நம்பிக்கையை 
உண்மை  விரிந்த உள்ளங்கைகளை
துடிதுடிக்கும் இதயப் படபடப்பை
மறுதலிக்கப்பட்ட கண்களை
அல்லது
ஒரு முறையேனும்
ஒரு கண்ணாடியில் தன்னை.  

10 comments:

Ramani said...

இரைத்தபடி இருக்கும் நம்பிக்கையை...
அவ நம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும்
லெட்சுமண்க் கோடாய் இருக்கும்அந்த நிலையை
இதைவிட சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

என்ன ஒரு ஆழமான அகலமான சிந்தனை
பல முறை படித்த பிறகே எனக்கு
கொஞ்சம் புரிந்தது, ரமணி சாரின் கமன்டும் கைகொடுத்தது
பாராட்டு
நன்றி

Rathnavel said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Harani said...

கொஞ்சம் இரைத்தபடி (இறைத்தபடி எது சரி?) நிற்கும் நம்பிக்கையை எனும் வரிகளில் ஒட்டுமொத்த கவிதையின் வேரைப் பார்க்கிறேன். உங்களுக்கு சொல்லாட்சிகள் அடிமைகளாக நிற்கின்றன போலும். சொற்கள் அணிவகுக்கின்றன அதனதற்குரிய பொருளைப் புரிந்துகொண்ட பொறுப்புணர்ச்சியோடு. எளிமையாகவும் எல்லாவித புரிதல்களையும் தெளிவுறுத்தும்படியாக அமைந்த கவிதை இது. வாழ்த்துக்கள் சைக்கிள்.

மிருணா said...

# பகிர்வுக்கு நன்றி திரு.ரமணி.
# நன்றி திரு.ராஜகோபாலன்.
# நன்றி திரு.ரத்னவேல் அய்யா.
# நன்றி திரு.ஹரணி. உண்மையில் சொற்களின் பிடியில் தான் நாம். அப்புறம்,'இரைத்தபடி' மூச்சிரைப்பையும், 'இறைத்தபடி' நீர் இறைத்தலையும் குறிக்கின்றன. உங்கள் கேள்வி அர்த்தங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள உதவியது.நன்றி.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

தொடர்வதில்தான் முடிவு செய்யப்படுகிறது வாழ்க்கை

மிருணா said...

நிச்சயமாக.நன்றி திரு.திருநாவுக்கரசு பழனிசாமி.

சுந்தர்ஜி said...

நிஜமாகவே கவிதையின் முடிப்பு என்னில் இனந்தெரியாத படபடப்பை உருவாக்குகிறது.

வேர் மண்ணோடு பற்றிக்கொள்ளும் காலத்தைக் கூட எடுத்துக் கொள்வதில்லை வேரறுந்து போகும் தருணங்கள்.

நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமான இடைவெளியில் மிக அபாயமாகச் சுழல்கிறது நாட்களின் சக்கரம்.

மொழியால் அதிர்வூட்டும் கவிதை.

vasan said...

புல‌ன்க‌ள் திற‌ந்திருந்தால், போனாவை இறுக்கி மூடும்‌ இறுக்க‌ம் இருந்திருக்காது.

மிருணா said...

நன்றி திரு.சுந்தர்ஜி, திரு.வாசன்.