Sunday, 5 June 2011

அருகாமை


கண்ணாடியில்  தெரிவதை  விட
அருகாமையில் இருக்கின்றன பொருட்கள்
என எழுதப் பட்டிருக்கிறது வாகனத்தில்
அதில் இல்லாத தூசியைத் துடைக்கிறேன்
கூடவே உன்னையும் பார்க்கிறேன்
நோய் தின்னும் உடல் மீறி
பிடிவாதமாய் வாழ்கிறது  முகம்
அலை பேசியில் பேசிக் கொண்டிருக்கிறாய்
இப்போது நீ பேசும் நபரோடு நீ இல்லை
உன் முகத்தில் குமிழிடும் வெட்கம்
உன்னை வெளியிட்டு விடுகிறது
என்ன பார்க்கிறாய் நான் அழகுடி என்கிறாய்
கண்கள் கலங்கச் சிரிக்கிறேன்
இந்த துல்லிய வானம் நீண்ட சாலை அமைதி
வேற்றுக் கிரகம் போலொரு உணர்வு
நமது உடனிருப்பு...
நம்மை ஆற்றுப்படுத்துகிறது சிறிதேனும்.
மீண்ட வாழ்க்கையில்
உன்னிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது
நலமில்லை பிறகு பேசுகிறேன் என
அதன் பின் நீ பேசவில்லை
வாழ்க்கை தொடரத்தான் செய்கிறது
சிரிப்பு சாப்பாடு வேலைகள்
இயக்கம் தூக்கம்
தனிமையை மட்டும்
கவனமாகத் தவிர்க்கிறேன்
நேரில் தெரிவதை விட
அருகாமையில் இருக்கின்ற உன்னை
கலைத்துவிடக் கூடும் ஒரு தனிமை.      

13 comments:

பத்மா said...

wowwwwww
arumai cyle ...manathu kanththudan

அஹமது இர்ஷாத் said...

வ‌ரிக‌ளில் தெறிக்கும் இய‌ல்பு..ந‌ல்லாருக்கு..

santhanakrishnan said...

கண்ணீர்த்துளி
தொட்டு
ஒரு சித்திரம்.

நிலாமகள் said...

கூடிக் க‌ளித்திருந்த‌ ஒரு ந‌ட்பு, கால‌க்கிர‌ம‌த்தில் வெகு தொலைவாய் சென்றாலும் ச‌கித்திருப்போம். ந‌ல‌ம‌ற்றிருப்ப‌தை அறிய‌த் துளிர்க்கும் த‌விப்பும் துடிப்பும் த‌னிமைய‌ர‌க்க‌ன்பாற் பிடிப‌ட‌ அதிக‌ரிக்குமென்ப‌தால், த‌விர்க்கிறோமெனினும் அன்றாட‌ங்க‌ளின் ப‌ர‌ப‌ர‌ப்பிலும் அடிம‌ன‌சின் நெருட‌லை புற‌க்க‌ணிக்க‌ முடிவ‌தில்லை தானே மிருணா...

m said...

arputham arputham

Ramani said...

கவிதையின் உணர்வுகளை
அப்படியே படிப்பவரை உணரச்செய்ய்யும்
அற்புதப்படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

மிருணா said...

பகிர்வுக்கு நன்றி திரு:ரமணி, பத்மா, அஹமத் இர்ஷாத், சந்தான கிருஷ்ணன், m(?).

மிருணா said...

நன்றி நிலாமகள்.நெருடல் கூட இருக்கும் நினைவில் சமாதானப் படுத்தப் படுகிறது தோழி.

சுந்தர்ஜி said...

//கண்ணாடியில் தெரிவதை விட
அருகாமையில் இருக்கின்றன பொருட்கள்//

என்னையும் தொந்தரவு செய்திருக்கின்றன கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வரிகளின் பொருளைக் கடந்த தத்துவ முலாம்.

பார்வைக்குத் தெரிவதை விட அருகாமையில் இருக்கின்றன பார்வையால் உணரமுடியாதவை என்று பொருள் கொள்ளுகையில் வாழ்வு அநித்யமாகத் தெரியும்.

துயரையும் மறுபக்கம் வாழ்வையும் ஒரே நேரம் வெளிப்படுத்தும் முலாம் பூசப்ப்டாத கண்ணாடி இக்கவிதை.

மிருணா said...

நன்றி சுந்தர்ஜி. ஒரு காலத்தில் அந்த வரிகள் ஏதோ ஒரு விதத்தில் மனதை பாதிபதாய் இருந்தது. இப்போது அந்த வரிகள் தொடர்பான நினைவுகள்.உங்கள் கருத்து தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் //பார்வைக்குத் தெரிவதை விட அருகாமையில் இருக்கின்றன பார்வையால் உணரமுடியாதவை என்று பொருள் கொள்ளுகையில் வாழ்வு// எனக்கு நித்யமாகிறது.

சுந்தர்ஜி said...

சபாஷ் மிருணா!நான் அநேகர் உணரா மரணத்தைப் பொருட்படுத்தினேன். நீங்களோ பாஸிட்டிவ்வாக வாழ்வை அது உணர்த்துவதாகப் பார்க்கிறீர்கள்.

கண்ணாடிதானே! யார் பார்க்கிறோமோ அவருக்கேற்ப உருக்காட்டுகிறது போலும்.

அருமை.

Harani said...

நமக்கு அணுக்கமானவர்களின் மரணம் எப்போதும் சுமைதான். அது கண்ணில்விழுந்துவிட்ட சிறு படிகம்போல. தேய்க்கத்தேய்க்க கலங்கிக்கொண்டேயிருப்போம். இருப்பினும் தொடரத்தான் செய்கிறது வாழ்க்கை எனும் வரிகளில் ஒட்டுமொத்த கவிதையின் ஜீவனையும் மரணத்தை எதிர்கொள்ளும் மனோபாவத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. சங்கடம். சுமை. இறுக்கம். இழைக்கிறது மனதை மரத்தைத் தேய்க்கும் உளிபோல.

மிருணா said...

என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உணர்வுப் பகிர்வுக்கு நன்றி.திரு.ஹரணி.