Friday, 29 July 2011

பற


பறப்பதற்கு 
சிறகுகள் தேவையில்லை
சிறகுகள் இருந்தால்
ஏங்குதல் இல்லை 
என்பது ஒரு புறமிருக்க 
சிறகுள்ள எல்லாம்
பறப்பதுமல்ல
தவிர
ஒரு பறவை
பறத்தலின் தொழிற்பாடில் இருக்க
பறத்தலின் கனவோ
எல்லையற்ற வானை விரிக்கிறது
மினுங்கிச் சிரிக்கும்
ஒரு வெள்ளை நட்சத்திர புள்ளியை 
தன்  நீல ஓவியத்தில் அது
மறக்காமல் வைக்கிறது
ஓவியத்தின் பறவைகள்
எப்போதும் உயரத்தில் பறக்க
வல்லூறுகளோ கழுகுகளோ
அவற்றிற்கொரு பொருட்டில்லை
ஒரு மழை நாளின் ஈரம்
சிறகுகளை நனைப்பதோ
ஏங்கி மரக்கிளைகளில்
மழை முடியக் காத்திருக்கும்
பசித்த கண்களை உருவாக்கலோ
இல்லை
சில நொடி என்றாலும்
வானில் பறந்து  வானில் வாழ்ந்து 
வானின் பரந்துபட்ட கைகளில் வைக்கும்
வானில் பிறந்த இளம் குஞ்சுகளை
புது வானிற்கான தேடல் சிறகுகளோடு
மேலும்
பறத்தலின் கனவு
பறத்தலின் பறத்தலும் ஆகும்
நண்ப.

Monday, 25 July 2011

பதம்


கடக்க நினைத்த பாதைகள்
வளர்ந்து கொண்டே 
உடன் வந்தவர்கள்
ஒவ்வொரு வளைவுகளிலும்
காணாமலோ கையசைத்தோ 
எஞ்சியவை எல்லாம் நினைவுகள்
ஒரு பூக்காலத்தின்
மிஞ்சிய நறுமண நார்கள்
இசைத்  தட்டு முடிந்து 
ஒலிக்கும் கேளாச் சங்கீதங்கள்
தொலைக்காட்சிப் பெட்டியை 
அணைத்த  பின்  தோன்றும்
கண  நேர  பிம்பங்கள்
ஆயினும் 
கூடடைந்து முடிந்த பறவைகள்
எல்லாம் சரியாவென
நிச்சயப்படுத்திக் கொள்ளும்
கடைசிக் கூவலாய் ஒலிக்கும்
கதகதப்பு தேய்ந்த விசாரிப்புகள்
தனி நபர் நாடகீய மொழியை
அரங்கேற்ற விலகிச் செல்வேன்
மெழுகுவர்த்தியின் எரிதல் போல
சில நொடி தடுமாறிப் பின் பொறி பற்றும்
எழுத்தின் கணப்பில் என்னை நுழைப்பேன்
எழுத்துக்கள் ஜீவனேற்றும்
எழுத்துக்கள் பற்ற வைக்கும்
எழுத்துக்கள் தகதகக்கும்
எழுத்துக்கள் வியாபிக்கும்
விரைந்து  உயரும் தழலின் தகிப்பில்
வெந்து பதப்படும் ஒரு இருப்பின் தசை.

Friday, 22 July 2011

வேறு போதை


அணில் துள்ளலாய்த் தாவும்
நிழல், வெளிச்சம்
இறைந்து கிடக்கும் குன்றிமணிகளின்
மங்கல் சிவப்பு இதம் 
சுற்றி சுற்றிப் பறக்கும் 
ஆரஞ்சு பட்டாம்பூச்சிகள் 
யாருமற்ற ஆசுவாசத்தில்
உறவாடும் மரக் கிளைகள்
வாசனை வழிந்து பரவும்
மருதாணிப் பூக்கள்
பல வண்ண வடிவத்துடனான
சரளைகளின் சப்த  சிநேகம்
கணந்தோறும்  மாறும்
வயல்நீர் மேக ஓவியம்
மறக்க பறக்க மிதக்க
பின்னும்
வேறு போதை  நமக்கு!

Wednesday, 13 July 2011

எண்ணங்கள்+எழுத்துக்கள்+வண்ணங்கள்+++++


இந்த சைக்கிள் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஆகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறது. மன அவசமுற்ற ஒரு நேரத்தில் அல்சர் வர ஆரம்பித்தது. அதனால் எழுத வேண்டும், எழுதினால் அது அல்சருக்கு ஒரு மாற்றாக  இருக்குமென்று எழுதத் தொடங்கினேன். தவிர என்றாவது ஒரு நாள் எழுத வேண்டும் என்பது சிறு வயது முதலான ஆசையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கே எனக்கென்று ஒரு தளம். ஒரு பத்திரிகை ஆசிரியர் போல வடிவமைப்பு, எழுத்து, பிரசுரிக்கும் உரிமை போன்ற அதிகாரம் உள்ள ஒரு தளம். பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு வருமா, வராதா எனக் காத்திருக்க வேண்டியதில்லை, யாரும் படித்துத் தானாக வேண்டும் என்ற நிர்பந்தமுமில்லை, படிக்கக் காசில்லை, பிடிக்காவிட்டால் நகர்ந்து விடலாம், எந்த விரயமுமில்லை போன்ற இன்ன பிற. எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை நாள் படித்துக் கொண்டு மட்டும் இருப்பது, இந்த உலகிற்குச் சொல்ல, மொழியில் என் உணர்வுகளை, எண்ணங்களை பதித்துப் போக இவ்வளவு நாள் இந்த உலகில் வாழ்ந்ததற்கு எனக்கு உரிமை இல்லையா என்றும்.

எழுதத் துவங்கிய நேரத்தில் என் தோழி கீதாவிடமிருந்து மட்டும் பின்னூட்டம் வரும். பின் தெரிந்தவர் ஒருவர் இந்த வலைப்பூவின் வண்ணமும், வடிவமைப்பும் மட்டும் தான் அழகு, மனதில் பதியவில்லை எழுத்து என்று ஒரு பின்னூட்டம் இட்டார். அவர் நேர்மைக்கு நன்றி. ஆனால் அவ்வளவு சாரமற்ற எழுத்தையா எழுதுகிறோம் என யோசனையாக இருந்தது. பின் சுந்தர்ஜியின் சந்தோஷ அதிர்ச்சி தந்த பின்னூட்டம். என்னைப் போல நிறைய பேர் அவருக்கு நன்றி சொல்வோம் என்றே நினைக்கிறேன். மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்த அவரது பின்னூட்டங்கள் தொடர்ந்து எழுதக் காரணமாக இருந்தது. இந்த தளத்தில் முதலில் எழுதிப் பின் நவீன விருட்சம், அதீதம்  தளங்களில்  கவிதைகளும், பெண்ணியம் தளத்தில்  புத்தகம் குறித்த  கட்டுரைகளும் வந்ததும் உற்சாகமாக இருந்தது. வேறு இணைய தளங்களில் உங்கள் எழுத்து ஏற்கனவே வேறு தளங்களில் வந்திருக்கக் கூடாதென்று நிபந்தனை இட்டார்கள். என்னவோ எனக்கு மனம் ஒப்பவில்லை. என்னுடைய பிளாக்கில் எழுதாமல் எப்படி என மனம் சண்டித்தனம் பண்ணியது, பண்ணுகிறது.

இந்த தளத்திற்கு இப்போதும் அதிக வாசக நட்புகள் கிடையாது. ஆனால் வாசிப்பவர்களின் எழுத்துக்கள் -  திரு: ஹரணி, நிலாமகள், திருநாவுக்கரசு, சந்தான கிருஷ்ணன், எப்போதாவது வாசிக்கும் திரு:வாசன், வேல்கண்ணன்,  தமிழ், பத்மா, எட்வின், ரிஷபன், அவர்களது  தளத்தில் இந்த தளத்தில் உள்ள கவிதையைப் பதிவு செய்திருக்கும் திரு.சுந்தர்ஜி, பா.ராஜாராம் ஆகியவர்களின் எழுத்துக்கள் புத்துணர்வு தரும்படியாய்.

இன்னும் எவ்வளவு நாள் எழுதுவேன் என்று தெரியாது. ஆனால் தகிக்கிற ஒரு நேரத்தில் குளிர் நிழலாகவும், பூக்களை அள்ளித்  தரும் மரங்கள் அடர்ந்த சோலையாகவும் இருந்த இந்த எழுத்துப் பயணத்திற்கு இந்த தளம் வழியே வந்த அத்தனை நட்புகளுக்கும் என் மறவாத அன்பும், நன்றியும்.

Sunday, 10 July 2011

பகிர்வு/மீள்பதிவு

நவீன விருட்சம் வலைப்பதிவில் முன்பு இடம் பெற்ற 'குவளைகளில் கொதிக்கும் பானம்' கவிதை இப்போது  நவீன விருட்சம் 90-ஆவது இதழில் அச்சாக்கம் பெற்றுள்ளது. அந்த கவிதையையும்,
நவீன விருட்சம் 89-ஆம் இதழில் அச்சாக்கம் பெற்ற 'மெய்ப்பொருள்' கவிதையையும் மீண்டும் பகிர்கிறேன்.தொடர்ந்து எழுத இந்த சைக்கிள் வலைத்தளத்தில் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

குவளைகளில் கொதிக்கும் பானம்


வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்
ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.
நகர்த்த இயலாத சுடு வெயில் போல
அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம்.
கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில்
வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது 
குவளைகளில் கொதிக்கும் பானம்.
காணாத காட்சி என கண்கள் சொல்ல
கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்
ஒழுங்கற்றுப் பரவும்  வண்ணங்களைத் தீட்டி.
தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற
தாளில் துலங்கும் காட்சிகளும்
துரித நடனம் ஆடும் குவளைகளும்
ஒன்றின் மேல் ஒன்றாய்  மிகச் சரியாய்.
வெந்து தணிகிறது வெப்பம்.
முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்
நிதானமாய் - பிறிதொரு வேளை 
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.
                                           - Dec 28, 2010

 

மெய்ப்பொருள்

ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி  புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின்  அழகை
கண்களில் நிறைத்தபடி  செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப்  பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள் 
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய 
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப                
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை 
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால் 
வாழ்கையைப் பற்றிச் செல்ல 
பிறிதொரு தேவை  இல்லை.
                            - Aug 11, 2010

Thursday, 7 July 2011

விடுபட்டவை

 
வீட்டிலிருந்து கிளம்பிய காலடிகள் மற்றும் 
வீடு திரும்பிய காலடிகளின்  எண்ணிக்கை 
சமனுற்றதாவென முணுமுணுப்பாய்க் கணக்கிட்டபடி
வீடு  திரும்பிக் கொண்டிருந்தது இரவு
காலடி ஓசைகள் தணிந்த நடைபாதையின் வழியே.
எண்ணிக்கையில் விடுபட்ட  காலடிகளின் கணக்கால்
குழம்பிய இரவு அப்படியே நடைபாதையில்
சாய்ந்து அமர்ந்தது சோர்ந்த உணர்வோடு.
ஆயிரம் கருவிழிகளால்  ஆன இருளோ
நட்பாய் இரவின்  அருகில் அமர்ந்து 
கூட்டத்தில் தொலைந்த குழந்தைப் பாதங்கள்
வீடு விரட்டிய முதிய பாதங்கள்
காதலில் விரைந்த இளைய பாதங்கள்
கடன் பளு சுமந்த பூனைப் பாதங்கள்
வாழ்வு வெறுத்த நாடோடிப்  பாதங்கள்
வாழ்வை நேசித்த  இலட்சியப் பாதங்கள்
கோடுகள் தாண்டிய  அவசியப் பாதங்கள் என
விடுபட்ட கால்களின் விவரம் கூறி
களைத்த இரவை உறங்கச் சொன்னது
உள்ளம் அதிர்ந்த  இரவோ
மற்ற பாதங்களின் விதி தானறியேன் என்றும் 
கூட்டத்தில் தவறிய குழந்தைகளின் பாத ஒலி
ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்குவதால்
இனி  ஓயாதொலித்துக் கொண்டே இருக்குமென்றும்
குழந்தையைப்  பறிகொடுத்தவர்களின்  தேய்ந்த  பாதங்கள்
மறந்தும் ஒரு நாளும் ஒலி ஏற்படுத்தாதென்றும்
அரற்றியபடி ஓட ஆரம்பித்தது
எல்லைகள் அற்ற  கரிய நெடுஞ்சாலையில்.

Saturday, 2 July 2011

அலைவுறும் சிறு இலைகள்


காற்றில்  அலைவுறும் சிறு இலைகள்  போல
மிதக்கும்  மொழி நீரில்  ஏறி இறங்கிட
விட்டுச் செல்கிறேன்  சில தாள்களை
முடியும்  மட்டும் போகட்டும்   
வண்டியில் பயணம் போகும்  கரும்புத் தோகை
பாதை மண்ணோடு சரசரக்கும்
இரகசிய குழுஊக் குறி போல
வாழ்வோடு பிரயாணிக்கும்  வார்த்தைகள்
பரந்து விரிந்த மொழியின் தளத்தில்
சோழிகள் ஆடி சலசலக்கட்டும்.
கண்ணுக்குத் தெரியா விதைகள்
இயற்கை கசிந்த  நாளொன்றில்
இளஞ்செடியாய் அசையும் நடனம் போல
இறுகித் தட்டிய வெடிப்பு வாழ்வில்
புதைந்து போகும் சில கணங்கள்
உயிர்  தரிக்கட்டும்  மொழியின் வெளியில்.
முரட்டு வாசனை ததும்பும் வேர் முடிச்சுகளில்
ஒட்டியிருக்கும் செம்பழுப்பு மண்ணைப் போல
செப்பமிடா  வார்த்தைகளின் பரப்பில் ஒட்டியிருக்கும்
அடியாழ  நினைவின்  பற்றுதல்கள்
சொற்களாய் உதிர்ந்தபடி  இருக்கட்டும்.
மழை வற்றும்  கோடையின்
இறுதி நாள்  சொட்டும் மட்டும்.