Thursday, 7 July 2011

விடுபட்டவை

 
வீட்டிலிருந்து கிளம்பிய காலடிகள் மற்றும் 
வீடு திரும்பிய காலடிகளின்  எண்ணிக்கை 
சமனுற்றதாவென முணுமுணுப்பாய்க் கணக்கிட்டபடி
வீடு  திரும்பிக் கொண்டிருந்தது இரவு
காலடி ஓசைகள் தணிந்த நடைபாதையின் வழியே.
எண்ணிக்கையில் விடுபட்ட  காலடிகளின் கணக்கால்
குழம்பிய இரவு அப்படியே நடைபாதையில்
சாய்ந்து அமர்ந்தது சோர்ந்த உணர்வோடு.
ஆயிரம் கருவிழிகளால்  ஆன இருளோ
நட்பாய் இரவின்  அருகில் அமர்ந்து 
கூட்டத்தில் தொலைந்த குழந்தைப் பாதங்கள்
வீடு விரட்டிய முதிய பாதங்கள்
காதலில் விரைந்த இளைய பாதங்கள்
கடன் பளு சுமந்த பூனைப் பாதங்கள்
வாழ்வு வெறுத்த நாடோடிப்  பாதங்கள்
வாழ்வை நேசித்த  இலட்சியப் பாதங்கள்
கோடுகள் தாண்டிய  அவசியப் பாதங்கள் என
விடுபட்ட கால்களின் விவரம் கூறி
களைத்த இரவை உறங்கச் சொன்னது
உள்ளம் அதிர்ந்த  இரவோ
மற்ற பாதங்களின் விதி தானறியேன் என்றும் 
கூட்டத்தில் தவறிய குழந்தைகளின் பாத ஒலி
ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்குவதால்
இனி  ஓயாதொலித்துக் கொண்டே இருக்குமென்றும்
குழந்தையைப்  பறிகொடுத்தவர்களின்  தேய்ந்த  பாதங்கள்
மறந்தும் ஒரு நாளும் ஒலி ஏற்படுத்தாதென்றும்
அரற்றியபடி ஓட ஆரம்பித்தது
எல்லைகள் அற்ற  கரிய நெடுஞ்சாலையில்.

10 comments:

நிலாமகள் said...

வீடு விரட்டிய முதிய பாதங்கள்
காதலில் விரைந்த இளைய பாதங்கள்

கடன் பளு சுமந்த பூனைப் பாதங்கள்
வாழ்வு வெறுத்த நாடோடிப் பாதங்கள்
வாழ்வை நேசித்த இலட்சியப் பாதங்கள்
கோடுகள் தாண்டிய அவசியப் பாதங்கள் //

இவ‌ற்றை எல்லாம் தாண்டி கூட்ட‌த்தில் தொலைந்த‌ குழ‌ந்தைக‌ளின் பாத‌ங்க‌ள் ஏற்ப‌டுத்தும் அதிர்வும் அவ‌ல‌மும் ம‌ன‌சை திடுக்கிட‌ச் செய்து விட்ட‌து மிருணா.

Rathnavel said...

நல்ல பாதச் சுவடுகள்.
வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி said...

சுவடுகளின் கணக்கு சமன் செய்ய முடியாதபடிக்குப் பதிந்திருக்கின்றன இக்கவிதையில்.

நிலாமகளின் வார்த்தைகள் போலவே தொலைந்த பிஞ்சுகளின் சுவடுகள் ஏற்படுத்தும் வடுக்கள் அழிக்கமுடியாதவை.

நல்ல கவிதை.

தமிழ் said...

//கூட்டத்தில் தவறிய குழந்தைகளின் பாத ஒலி
ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்குவதால்//

வலிக்கச் செய்யும் வரிகள்..

கே. பி. ஜனா... said...

அப்படியே மனம் கனத்து அமர வைத்த கவிதை! பாராட்டுக்கள்!

மிருணா said...

பகிர்வுக்கு நன்றி திரு: நிலாமகள், ரத்னவேல் அய்யா, சுந்தர்ஜி, தமிழ், கே.பி.ஜனா.

ரிஷபன் said...

பாதங்களை வைத்து உயிரான மனிதர்களை வரைந்து விட்டீர்கள்.

மிருணா said...

நன்றி திரு.ரிஷபன்.

புலவர் சா இராமாநுசம் said...

//கூட்டத்தில் தொலைந்த குழந்தைப் பாதங்கள்//

படித்ததில் பிடித்த வரிகள்
இவை
வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்

மிருணா said...

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி திரு.ராமானுசம்.