Sunday, 10 July 2011

பகிர்வு/மீள்பதிவு

நவீன விருட்சம் வலைப்பதிவில் முன்பு இடம் பெற்ற 'குவளைகளில் கொதிக்கும் பானம்' கவிதை இப்போது  நவீன விருட்சம் 90-ஆவது இதழில் அச்சாக்கம் பெற்றுள்ளது. அந்த கவிதையையும்,
நவீன விருட்சம் 89-ஆம் இதழில் அச்சாக்கம் பெற்ற 'மெய்ப்பொருள்' கவிதையையும் மீண்டும் பகிர்கிறேன்.தொடர்ந்து எழுத இந்த சைக்கிள் வலைத்தளத்தில் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

குவளைகளில் கொதிக்கும் பானம்


வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்
ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.
நகர்த்த இயலாத சுடு வெயில் போல
அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம்.
கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில்
வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது 
குவளைகளில் கொதிக்கும் பானம்.
காணாத காட்சி என கண்கள் சொல்ல
கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்
ஒழுங்கற்றுப் பரவும்  வண்ணங்களைத் தீட்டி.
தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற
தாளில் துலங்கும் காட்சிகளும்
துரித நடனம் ஆடும் குவளைகளும்
ஒன்றின் மேல் ஒன்றாய்  மிகச் சரியாய்.
வெந்து தணிகிறது வெப்பம்.
முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்
நிதானமாய் - பிறிதொரு வேளை 
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.
                                           - Dec 28, 2010

 

மெய்ப்பொருள்

ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி  புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின்  அழகை
கண்களில் நிறைத்தபடி  செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப்  பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள் 
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய 
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப                
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை 
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால் 
வாழ்கையைப் பற்றிச் செல்ல 
பிறிதொரு தேவை  இல்லை.
                            - Aug 11, 2010

4 comments:

ரிஷபன் said...

//உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்//
//அந்தியின் மென்னிருள் ஊடேவண்ணங்களின் குளுமையை அள்ளித் தெளித்த நித்யகல்யாணி பூக்களை. யோசித்தால் வாழ்கையைப் பற்றிச் செல்ல பிறிதொரு தேவை இல்லை.//
//நிதானமாய் - பிறிதொரு வேளை
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.//

சில வரிகளில் சுழல்கள்..
சில வரிகளில் மணிக்கயிறு..

கட்டிப் போட்ட கவிதைகள்

மிருணா said...

தேர்ந்தெடுத்த சொற்களால் நீங்கள் கருத்துக்களை சொல்லும் விதம் மிக அருமை திரு.ரிஷபன். நன்றி.

புலவர் சா இராமாநுசம் said...

கவிதை உணர்வோடு
மிளிரும் பொன்னுரையாக முன்னுரையே அமைந்துள்ளது

முத்துக் கவிதைகள் இரண்டும்
சத்துக் கவிகளே
அருமை
புலவர் சா இராமாநுசம்

மிருணா said...

ஊக்கத்திற்கு நன்றி புலவர் சா.ராமானுசம் அய்யா.