Wednesday, 13 July 2011

எண்ணங்கள்+எழுத்துக்கள்+வண்ணங்கள்+++++


இந்த சைக்கிள் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஆகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறது. மன அவசமுற்ற ஒரு நேரத்தில் அல்சர் வர ஆரம்பித்தது. அதனால் எழுத வேண்டும், எழுதினால் அது அல்சருக்கு ஒரு மாற்றாக  இருக்குமென்று எழுதத் தொடங்கினேன். தவிர என்றாவது ஒரு நாள் எழுத வேண்டும் என்பது சிறு வயது முதலான ஆசையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கே எனக்கென்று ஒரு தளம். ஒரு பத்திரிகை ஆசிரியர் போல வடிவமைப்பு, எழுத்து, பிரசுரிக்கும் உரிமை போன்ற அதிகாரம் உள்ள ஒரு தளம். பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை அனுப்பி விட்டு வருமா, வராதா எனக் காத்திருக்க வேண்டியதில்லை, யாரும் படித்துத் தானாக வேண்டும் என்ற நிர்பந்தமுமில்லை, படிக்கக் காசில்லை, பிடிக்காவிட்டால் நகர்ந்து விடலாம், எந்த விரயமுமில்லை போன்ற இன்ன பிற. எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை நாள் படித்துக் கொண்டு மட்டும் இருப்பது, இந்த உலகிற்குச் சொல்ல, மொழியில் என் உணர்வுகளை, எண்ணங்களை பதித்துப் போக இவ்வளவு நாள் இந்த உலகில் வாழ்ந்ததற்கு எனக்கு உரிமை இல்லையா என்றும்.

எழுதத் துவங்கிய நேரத்தில் என் தோழி கீதாவிடமிருந்து மட்டும் பின்னூட்டம் வரும். பின் தெரிந்தவர் ஒருவர் இந்த வலைப்பூவின் வண்ணமும், வடிவமைப்பும் மட்டும் தான் அழகு, மனதில் பதியவில்லை எழுத்து என்று ஒரு பின்னூட்டம் இட்டார். அவர் நேர்மைக்கு நன்றி. ஆனால் அவ்வளவு சாரமற்ற எழுத்தையா எழுதுகிறோம் என யோசனையாக இருந்தது. பின் சுந்தர்ஜியின் சந்தோஷ அதிர்ச்சி தந்த பின்னூட்டம். என்னைப் போல நிறைய பேர் அவருக்கு நன்றி சொல்வோம் என்றே நினைக்கிறேன். மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்த அவரது பின்னூட்டங்கள் தொடர்ந்து எழுதக் காரணமாக இருந்தது. இந்த தளத்தில் முதலில் எழுதிப் பின் நவீன விருட்சம், அதீதம்  தளங்களில்  கவிதைகளும், பெண்ணியம் தளத்தில்  புத்தகம் குறித்த  கட்டுரைகளும் வந்ததும் உற்சாகமாக இருந்தது. வேறு இணைய தளங்களில் உங்கள் எழுத்து ஏற்கனவே வேறு தளங்களில் வந்திருக்கக் கூடாதென்று நிபந்தனை இட்டார்கள். என்னவோ எனக்கு மனம் ஒப்பவில்லை. என்னுடைய பிளாக்கில் எழுதாமல் எப்படி என மனம் சண்டித்தனம் பண்ணியது, பண்ணுகிறது.

இந்த தளத்திற்கு இப்போதும் அதிக வாசக நட்புகள் கிடையாது. ஆனால் வாசிப்பவர்களின் எழுத்துக்கள் -  திரு: ஹரணி, நிலாமகள், திருநாவுக்கரசு, சந்தான கிருஷ்ணன், எப்போதாவது வாசிக்கும் திரு:வாசன், வேல்கண்ணன்,  தமிழ், பத்மா, எட்வின், ரிஷபன், அவர்களது  தளத்தில் இந்த தளத்தில் உள்ள கவிதையைப் பதிவு செய்திருக்கும் திரு.சுந்தர்ஜி, பா.ராஜாராம் ஆகியவர்களின் எழுத்துக்கள் புத்துணர்வு தரும்படியாய்.

இன்னும் எவ்வளவு நாள் எழுதுவேன் என்று தெரியாது. ஆனால் தகிக்கிற ஒரு நேரத்தில் குளிர் நிழலாகவும், பூக்களை அள்ளித்  தரும் மரங்கள் அடர்ந்த சோலையாகவும் இருந்த இந்த எழுத்துப் பயணத்திற்கு இந்த தளம் வழியே வந்த அத்தனை நட்புகளுக்கும் என் மறவாத அன்பும், நன்றியும்.

18 comments:

RVS said...

இன்னும் எழுதுங்கள்! ;-)

நிலாமகள் said...

இந்த உலகிற்குச் சொல்ல, மொழியில் என் உணர்வுகளை, எண்ணங்களை பதித்துப் போக //தகிக்கிற ஒரு நேரத்தில் குளிர் நிழலாகவும், பூக்களை அள்ளித் தரும் மரங்கள் அடர்ந்த சோலையாகவும் இருந்த இந்த எழுத்துப் பயணத்திற்கு ...// :-))))

சைக்கிள் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம்// சந்தோஷமாகத்தான் இருக்கிறது :-)))))))))))))

மிருணா said...

# நன்றி திரு.ஆர்.வி.எஸ். வலைச்சரத்தில் இந்த தளத்தை அறிமுகப் படுத்திய உங்களுக்கும் நன்றி.
# நன்றி தோழி.நிலாமகள் :)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் :-)

santhanakrishnan said...

வருடங்களும்,எழுத்துக்களும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

மிருணா said...

# வாழ்த்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி திரு.திருநாவுக்கரசு.
# நல்வார்த்தைகளுக்கு நன்றி திரு.சந்தான கிருஷ்ணன்.

அப்பாதுரை said...

எதிர்பாராமல் இங்கே வந்திறங்கினேன் (சுந்தர்ஜி). மிக அருமையாக எழுதுகிறீர்களே? வருட வாழ்த்துக்கள். உங்கள் ஆயாசம் புரிகிறது. முடியும் பொழுது எழுதுங்கள்.

மிருணா said...

நன்றி திரு.அப்பாதுரை.

சிவகுமாரன் said...

உங்கள் எழுத்தக்களை, சுந்தர்ஜியின் எழுத்துக்களைப் போல கொஞ்சம் மிரட்சியுடன் தான் நான் பார்ப்பேன். உண்மை சொல்லப் போனால் ,( வெட்கமாக இருக்கிறது) உங்கள் எழுத்தைப் படித்த பிறகு என் கவிதைகளைப் எனக்குப் பிடிக்காமல் போகிறது. அதனாலேயே தங்கள் வலைப்பக்கம் அடிக்கடி வராமல் இருந்திருக்கிறேன்.
நிறைய எழுதுங்கள் என் தலைக்கனத்தை அது நிச்சயம் குறைக்கும்.

மிருணா said...

வானவில்லின் அழகு அதன் வேறுபட்ட வண்ணங்களில். மரபு சார்ந்த உங்கள் எழுத்துக்கள் அருமையானவை. அவற்றை நேசிக்கத் தவறாதீர்கள். அதோடு நீங்கள் இப்படி எழுதினால் என் தலை கனத்து விடாதா நண்பரே? தொடர்ந்து எழுதுங்கள் என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டு உங்கள் ஊக்கத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் திரு.சிவகுமாரன்.

Harani said...

அன்புள்ள சைக்கிள்..

எழுத்து என்பது வரம். எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் நமது எல்லா சௌகரியங்களோடும் குடியிருந்துகொள்ள ஒரு குடில். நமது மனம் நினைக்கும் வடிவங்களிலும் வண்ணங்களிலும் நமது எழுத்துலகத்தை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நமக்கிருக்கிறது.

உங்களின் எழுத்துக்கள் ஒரு தனித்துவம் மிக்கவை. அவற்றிற்கு காலங்கள் என்பது அடையாளம் அவ்வளவே. அவை காலத்தையும் கடக்கும் வல்லமையுடன் இயங்கும். எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

எழுதுவதால் நாம் வாழ்கிறோம். நமது வாழ்க்கை அர்த்தப்படுகிறது. அடுத்தவரின் வாழ்வில் நாம் மணம் பரப்புகிறோம். நம்முடைய எழுத்தால் அவர்களின் வாழ்வும் வெளிச்சமாகிறது சில கணங்களிலேனும்.

நம்முடைய மனஉணர்வுகளை நாம் செதுக்கி...தேக்கி...இழைத்து...மனத்தொட்டிலில் வைத்து கொண்டாடி...என்னவெல்லாம் செய்கிறோம். எங்கேனும் நமது எண்ணங்களின் கற்பனைகளின் படைப்பாளுமையின் சொற்களில் யாரேனும் சுகந்துபோகையில் நாம் கடந்துபோகிறோம்.

எழுதுங்கள் சைக்கிள்.

எழுதுவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

பாரதி சொன்னது போல நாம் வேடிக்கை மனிதரல்ல..

வாழ்த்துக்கள்.

மிருணா said...

ஊக்கமான கருத்துக்களுக்கு நன்றி திரு.ஹரணி. //யாரேனும் சுகந்துபோகையில் நாம் கடந்துபோகிறோம்.// - அழகான, ஆழமான சொல்லாக்கம். நட்பாக, நார்சிச சுயத்தை களையச் சொல்லும் வரிகள். எழுத வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தவும், எப்படி எழுத வேண்டுமென குறிப்பாகவும் உதவும் உங்கள் உற்சாகமான சொற்களுக்கு மீண்டும் நன்றி.

paarkkadal sakthi said...

வணக்கம் தோழி, முதலில் உங்கள் பக்கத்தை அறிமுகம் செய்தவர் திருநாவுக்கரசுதான். அப்போது உங்களை தோழர் என நினைத்துக்கொண்டேன். அந்த எழுத்துகளில் நிச்சயம் மிகப்பெரும் ஈர்ப்பு இருக்கிறது. எனக்கு சோம்பல் கொஞ்சம் அதிகம். எனவே அதிகம் பின்னூட்டங்கள் இடுவதில்லை; தவிர வலையில் மேய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு. எப்போதாவது, வலைப்பூவை திறந்தால், உங்களின் பக்கங்களை சிலாகிக்காமல் சென்றதில்லை. தமிழ் இலக்கிய மாணவனான எனக்கே உங்கள் எழுத்துகளின் மீது பொறாமை உண்டு தோழி,,, வாழ்த்துகள்....
(இப்போது கூட புதிய நண்பர் ஒருவருக்கு வலைப்பூ பற்றி அறிமுகம் செய்ய தங்களின் பக்கத்தை திறந்து உதாரணம் காட்டும் போதுதான், இந்தப் பதிவைப் படித்தேன்.)

மிருணா said...

நன்றி திரு.சக்தி. உங்களது எழுத்துக்களின் நடையும், கருப்பொருளும் தனித்த அடையாளம் உள்ளவை.உண்மையில் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மேல் எனக்குக் கொஞ்சம் பொறாமைதான்.அதனால் அதை படிக்கும் உங்கள் ஊக்கத்திற்கு மீண்டும் நன்றி.

சு.சிவக்குமார். said...

வாழ்த்துக்க்கள்..தொடருங்கள்..வாசிக்கயிருக்கிறார்கள்....குறைந்தளவிலேனும்...நிறை மனதுடன்.....

மிருணா said...

ஊக்கத்திற்கு நன்றி திரு.சிவகுமார்.

vasan said...

முத‌லாண்டின் நிறைவில்,த‌ங்க‌ள‌து ம‌னம்திற‌ந்த‌, வெள்ளெந்தியான வெளிப்பாடு, க‌ருவ‌றை தீப‌மாய்,உங்க‌ள் ப‌திவினை மேலும் மெருகூட்டி இருக்கிற‌து. வாழ்த்துக்க‌ள்.

மிருணா said...

மனப்பூர்வமான நன்றி திரு.வாசன். ஒரு இடைவெளிக்குப் பின் பதிவுலகம் வந்திருக்கிறீர்கள்? நலமென்று நம்புகிறேன்.