Monday, 25 July 2011

பதம்


கடக்க நினைத்த பாதைகள்
வளர்ந்து கொண்டே 
உடன் வந்தவர்கள்
ஒவ்வொரு வளைவுகளிலும்
காணாமலோ கையசைத்தோ 
எஞ்சியவை எல்லாம் நினைவுகள்
ஒரு பூக்காலத்தின்
மிஞ்சிய நறுமண நார்கள்
இசைத்  தட்டு முடிந்து 
ஒலிக்கும் கேளாச் சங்கீதங்கள்
தொலைக்காட்சிப் பெட்டியை 
அணைத்த  பின்  தோன்றும்
கண  நேர  பிம்பங்கள்
ஆயினும் 
கூடடைந்து முடிந்த பறவைகள்
எல்லாம் சரியாவென
நிச்சயப்படுத்திக் கொள்ளும்
கடைசிக் கூவலாய் ஒலிக்கும்
கதகதப்பு தேய்ந்த விசாரிப்புகள்
தனி நபர் நாடகீய மொழியை
அரங்கேற்ற விலகிச் செல்வேன்
மெழுகுவர்த்தியின் எரிதல் போல
சில நொடி தடுமாறிப் பின் பொறி பற்றும்
எழுத்தின் கணப்பில் என்னை நுழைப்பேன்
எழுத்துக்கள் ஜீவனேற்றும்
எழுத்துக்கள் பற்ற வைக்கும்
எழுத்துக்கள் தகதகக்கும்
எழுத்துக்கள் வியாபிக்கும்
விரைந்து  உயரும் தழலின் தகிப்பில்
வெந்து பதப்படும் ஒரு இருப்பின் தசை.

5 comments:

நிலாமகள் said...

//எழுத்து என்பது வரம். எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் நமது எல்லா சௌகரியங்களோடும் குடியிருந்துகொள்ள ஒரு குடில். நமது மனம் நினைக்கும் வடிவங்களிலும் வண்ணங்களிலும் நமது எழுத்துலகத்தை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நமக்கிருக்கிறது.

எழுதுவதால் நாம் வாழ்கிறோம். நமது வாழ்க்கை அர்த்தப்படுகிறது. அடுத்தவரின் வாழ்வில் நாம் மணம் பரப்புகிறோம். நம்முடைய எழுத்தால் அவர்களின் வாழ்வும் வெளிச்சமாகிறது சில கணங்களிலேனும்.//என்ற‌ திரு. ஹ‌ர‌ணி அவ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளைக் க‌ண்ணுற்று இங்கு மீண்டேன் மிருணா.

//எழுத்துக்கள் ஜீவனேற்றும்
எழுத்துக்கள் பற்ற வைக்கும்
எழுத்துக்கள் தகதகக்கும்
எழுத்துக்கள் வியாபிக்கும்
விரைந்து உயரும் தழலின் தகிப்பில்
வெந்து பதப்படும் ஒரு இருப்பின் தசை.//

ப‌க்குவ‌ப்ப‌ட்ட‌ ந‌டையும் மொழியும் சிலிர்ப்பேர்ப்ப‌டுத்துகிற‌து.

Vel Kannan said...

"பதம்"
பதம் பார்க்கிறது என் மனதை மிருணா

சு.சிவக்குமார். said...

//எழுத்துக்கள் ஜீவனேற்றும்
எழுத்துக்கள் பற்ற வைக்கும்
எழுத்துக்கள் தகதகக்கும்
எழுத்துக்கள் வியாபிக்கும்// இந்த இடத்தில் தவிர்க்கவே முடியாமல் எனக்கொரு பாடல் நினைவில் தட்டுகிறது..ஞாபகங்கள் தீ மூட்டும்..ஞாபங்கள் நீருற்றும்..ஏதோ ஒரு பாட்டு....

//ஒரு மெழுகுவர்த்தியின் எரிதல் போல சில நொடி தடுமாறிப் பின் பொறி பற்றும்// ரசித்தேன்.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன்
சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.............

மிருணா said...

# உங்களுக்குத் தேடுகிற கண்கள் நிலாமகள். பகிர்வுக்கு நன்றி.
# நன்றி திரு.வேல்கண்ணன்
# நன்றி திரு.சிவகுமார். நீங்கள் சொல்வது போல வரி அமைப்பில் ஒற்றுமை இருக்கிறது. ஆனால் தொனி வேறுபடுகிறது, இல்லையா?
# நன்றி திரு.அம்பாளடியாள்.