Friday, 29 July 2011

பற


பறப்பதற்கு 
சிறகுகள் தேவையில்லை
சிறகுகள் இருந்தால்
ஏங்குதல் இல்லை 
என்பது ஒரு புறமிருக்க 
சிறகுள்ள எல்லாம்
பறப்பதுமல்ல
தவிர
ஒரு பறவை
பறத்தலின் தொழிற்பாடில் இருக்க
பறத்தலின் கனவோ
எல்லையற்ற வானை விரிக்கிறது
மினுங்கிச் சிரிக்கும்
ஒரு வெள்ளை நட்சத்திர புள்ளியை 
தன்  நீல ஓவியத்தில் அது
மறக்காமல் வைக்கிறது
ஓவியத்தின் பறவைகள்
எப்போதும் உயரத்தில் பறக்க
வல்லூறுகளோ கழுகுகளோ
அவற்றிற்கொரு பொருட்டில்லை
ஒரு மழை நாளின் ஈரம்
சிறகுகளை நனைப்பதோ
ஏங்கி மரக்கிளைகளில்
மழை முடியக் காத்திருக்கும்
பசித்த கண்களை உருவாக்கலோ
இல்லை
சில நொடி என்றாலும்
வானில் பறந்து  வானில் வாழ்ந்து 
வானின் பரந்துபட்ட கைகளில் வைக்கும்
வானில் பிறந்த இளம் குஞ்சுகளை
புது வானிற்கான தேடல் சிறகுகளோடு
மேலும்
பறத்தலின் கனவு
பறத்தலின் பறத்தலும் ஆகும்
நண்ப.

6 comments:

நிலாமகள் said...

சிறகுள்ள எல்லாம்
பறப்பதுமல்ல /பறப்பதற்கு சிறகுகள் தேவையில்லை/

இருப்பின் மீதான‌ ச‌லிப்போ வெறுப்போ ப‌ற‌த்த‌லின் அவாவைக் கிள‌றுமோ... எழும்பிப் ப‌ற‌ந்தாலும் வானெல்லை தொட்டு ம‌ண்வ‌ந்து நிலைக்க‌த் தான் வேண்டும் கால்க‌ள் எனும் நித‌ர்ச‌ன‌ம் உறைத்தாலும் ஆய‌த்த‌ங்க‌ளில் க‌ழியுது ஆயுள்.

சிவகுமாரன் said...

\\\ஒரு மழை நாளின் ஈரம்
சிறகுகளை நனைப்பதோ
ஏங்கி மரக்கிளைகளில்
மழை முடியக் காத்திருக்கும்
பசித்த கண்களை உருவாக்கலோ
இல்லை//

- எதையும் வேறொரு கோணத்தில் காணும் உங்கள் கவிதைக் கண்கள் ....
நீங்கள் பெற்ற வரம் .
அருமை.

சிவகுமாரன் said...

என் தளம் வந்ததற்கு நன்றி .
தங்களுக்கும் , அழைத்து வந்த நிலாமகளுக்கும் .

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Harani said...

பறத்தல் எப்போதும் சுகம். விவரிக்கமுடியாத சுகம். நன்றாக அனுபவியுங்கள்.

மிருணா said...

# நன்றி நிலாமகள். இங்கே பறத்தல் ஒரு உன்னதக் குறியீடாக Jonathan Livingston Seagull போல. வான் பற்றிய கனவுகள் மண்ணில் நிலைபெறத்தான், எதிரிடை அல்லவே.
# நன்றி திரு.சிவகுமாரன்.
# நன்றி திரு.ரத்னவேல் அய்யா.
# ஊக்கத்திற்கு நன்றி திரு.ஹரணி.