Saturday, 6 August 2011

சாட், பூட், த்ரீ

 1)விரும்பும் மூன்று விஷயங்கள்?
  விளையாட்டு, கடினமான பிரதிகளை வாசிப்பது, ஆக்கம்

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
    குழந்தைத் தொழிலாளர்கள், சாதி, மறைமுகப் பேச்சு

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
   நெருங்கியவர்களின் மரணம், பணியிடத்தில் காலில் திடீரென்று உரசிப்
   போகிற எலிகள், நெரிசலான போக்குவரத்தில் வண்டி ஓட்டுவது. 

4) புரியாத மூன்று விஷயங்கள்:
   நிலைமை  தெரிந்தும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல்           
   படிக்க, உழைக்க  மறுக்கும் மனோபாவம், புற ஆடம்பரம் மதிப்பளிக்கும்
   என்பதை மற்றவரிடமும் வலியுறுத்தல், சிறிய விஷயங்களுக்கு அழவும்,
   பெரிய விஷயங்களுக்கு கல் போல இருக்கவும் செய்கிற எ(ஏ)ன் மனது!

5) மேஜையில் உள்ள  மூன்று பொருட்கள்?
    புத்தகங்கள், பேனா, க்ரேயான்ஸ்.

6)சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
   பிரியத்தின் தோற்றம் மனதின் புன்னகை, ஆழ்ந்த கருத்தின் வீச்சு
  அறிவின்  நகை, இயற்கையின் வண்ணம் கண்களின் சிரிப்பு.

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
    முதல் பெண் மருத்துவரான ஆனந்தி ஜோஷியின் புனைவு கலந்த
    சரிதையை மொழிபெயர்க்கும் முயற்சி, வீட்டுப் பொறுப்புகள், ஆட்டிசம்
   குறித்த குறிப்புகள் தயாரிப்பது.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
    மரம் நடுவது, ஒரு ஆதரவற்ற குழந்தைக்கேனும் நிழல் தருவது, நூலகம்
    அமைப்பது.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
    வருந்துகிற உள்ளங்களுக்கு நம்பிக்கை அளிப்பது, ஒரு விஷயம் சரி  
    என்று புரிந்துவிட்டால் எப்பாடு பட்டாலும் அதை செய்து முடிப்பது, ஒரு
    பிரச்சனையின் பல்வேறு தீர்வுகளை முயற்சிப்பது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
      சிசுக்கொலை, பெண்வதை, உள்ளார்ந்த அன்பற்ற பகட்டு வார்த்தைகள்.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
      இசை, பிற மொழிகள், நன்றல்லதன்றே மறப்பது.

12) பிடித்த மூன்று உணவு வகை?
      இட்லி-கொத்தமல்லி சட்னி, கம்பங்கூழ்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
      எனக்கு மிகவும் பிடித்த பாடலின் வரிகளைத் தெரிந்து கொள்வதைக்
      கவனமாகத் தவிர்த்து விடுவேன். சில நேரங்களில் நாள் முழுவதும்
      கூட ஒரு இசைக் குறிப்பு மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அந்த
      வகையில் இசைக்காகப் பிடித்த இப்போதைய மூன்று: நான் மொழி
      அறிந்தேன், எந்தே கண்ணனு கருப்பு நிறம்( photographer), சீனி கம்.

14) பிடித்த மூன்று படங்கள்?
      கஷ்டமான கேள்வி. Red Beard, The Sixth Sense, உதிரிப்பூக்கள்.
    
15)இது இல்லாமல் வாழ முடியாதென்று சொல்லும்படியான மூன்று
     விஷயங்கள்?
    அன்பு, சிரிப்பு, வாசிப்பு.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
      நீங்கள், நீங்கள், நீங்கள். 

6 comments:

நிலாமகள் said...

செமையான‌ த‌லைப்பு மிருணா! த்ரீ சொல்லும் க‌ண‌ம் வ‌ரை கைக‌ளின் பொருத்த‌ப்பாடு ப‌ற்றிய‌ குறுகுறுப்பு அனைவ‌ருக்குமான‌ சிறுபிள்ளை விளையாட்ட‌ல்ல‌வா... இதுவும் உத்தி பிரிப்ப‌தும‌ல்ல‌வா சிறுபிராய‌த்து குழு விளையாட்டுக‌ளின் 'டாஸ் போடுத‌ல்'!எங்கெங்கோ ம‌ன‌ம் ப‌ற‌க்க‌ச் செய்து விட்டீர்க‌ள்... ப‌திவின் க‌டைசி வ‌ரை 'கிண்'னென்று இருக்கிற‌து உங்க‌ள் நிலைமை. க‌வ‌ன‌மான‌, க‌ண்ணிய‌மான‌, அள‌வான‌ ப‌தில்க‌ள்... ரொம்ப‌ பிடிச்சிருக்கு என‌க்கு.

rajasundararajan said...

// பயப்படும் மூன்று விஷயங்கள்?
நெருங்கியவர்களின் மரணம், பணியிடத்தில் காலில் திடீரென்று உரசிப்
போகிற எலிகள், நெரிசலான போக்குவரத்தில் வண்டி ஓட்டுவது.//

இயல்புதான்.

நெரிசலான போக்குவரத்தில் வண்டி ஓட்டுவதில் பயம் அல்ல எனக்கு எரிச்சல் வரும். ஆனால், ஆண்டுகளுக்குப் பிறகே கண்டுபிடித்தேன் அது ஒரு கும்பல் நடனம் என்று. அதில் அடுத்தவர் நம் மீது மோதிவிடாமல் இருக்க ஒரு சுளுவு, லயம் கைகூட வேண்டும். நேசித்தால் வரும். மேலும், கண், காது, மெய், மூளை என எல்லாம் விழிப்போடு இயங்குகிற ஒரு வித்தை வண்டி ஓட்டுதல் என்பதால், அது ஒரு தியானமாகவும் வாய்க்கிறது. அந்த வகையில் ஒரு வாஞ்சையோடும் சில சமையம் வண்டியை எடுப்பேன்.

'ஏய், கிறுக்கா, ஒரு நேருக்குப் போயேண்டா!'

'ஓய், போப்பா போ, ஸைட் அடிக்கிற எடத்தெப் பாரு!'

'வர்றான் பாரு, புள்ளெயும் குட்டியும் வெச்சிக்கிட்டு... பொறுமையாத்தான் போறது..'

என்னுடன் வந்த எங்கள் பாப்பா, ஒருநாள், "என்ன, நீங்களாவே பேசிக்கிட்டுப் போறீங்க?!" என்றாள்.

"டென்ஷன் ஆகுதில்ல, அதுதான். ஸ்ட்ரெஸ்ஸ் ரிலீவிங் ஃபார்முலா!" என்றேன் நான்.

Anonymous said...

மிக அனேகமாக நானே பதில் சொன்னாற்போல் ஒரு எண்ணம் ... நன்றி !
- கல்கி -

மிருணா said...

# ஆமாம். நான் இப்போதும் விளையாடுகிறேன் :) பதில்கள் பிடித்திருந்தது பற்றி சந்தோஷம் நிலாமகள். நன்றி.
# திரு.ராஜசுந்தரராஜன், அட ஆமாம் என்று தோன்றியது. முயற்சிக்கிறேன். உங்கள் monologue போலவே நண்பர் ஒருவரும் ''விதிமுறைகளை மீறி ஓட்டுபவர்களால் நான் பதட்டமே அடைய மாட்டேன். முதலிலேயே ஒரு எருமை மாடு வருகிறது. பாவம் அதற்கு சாலை விதிகள் தெரியாது. எப்படி வேண்டுமானாலும் வரும். நான்தான் கவனமாக ஓட்ட வேண்டுமென சொல்லிக் கொள்வேன்'' என்பார். ஆனா நீங்க கொஞ்சம் அன்பா சொல்றீங்க! சுவையான பகிர்வுக்கு நன்றி.
# /மிக அனேகமாக/ - புதிதாக இருந்த சொற் பிரயோகம். பகிர்வுக்கு நன்றி கல்கி.

மணிமேகலா said...

’சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை...’என்றொரு பக்திப் பாசுர வரி ஒன்றிருக்கிறது.

இப்போது தற்செயலாகவே இங்கு வந்து சேர்ந்தேன்.

உங்கள் இந்த ஆக்கத்தை வாசித்த போது இவ் அழகிய வார்த்தை நினைவுக்கு வந்து போகிறது.

சித்தம் அழகியர் வெகு சிலரே.வாழ்த்துக்கள்!

மிருணா said...

பெரிய வார்த்தைகள். ஊக்கத்திற்கானதாய் எடுத்துக் கொள்கிறேன்.நன்றி திரு.மணிமேகலா.