Monday, 22 August 2011

கல்லில் உள்ள மீன் - ரீட்டா டவ்


கல்லில் உள்ள மீன்
கடலுக்குத் திரும்ப 
விழைகிறது .
 
ஆய்வு, சிறிய
ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது
வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற
பக்கவாட்டுத் தோற்றத்தோடு
பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது.

கடலில் மௌனம்
மீண்டும் மீண்டும் அலைகிறது
அவ்வளவு - தேவையற்றதுமே!

தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை
பதிக்கும் கணம் வரும் வரை
அது மிதக்கிறது -
பொறுமையாக.

கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும்
வீழ்வது என்பது
வாழ்பவருக்குச் செய்யும்
உபகாரமென.

அதற்குத் தெரியும் - ஏன் ஒரு எறும்பு
ஒரு கடத்தல்காரனின்  எரியூட்டு போல
பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும்
தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென.
அதற்குத் தெரியும் - ஏன் ஒரு விஞ்ஞானி
பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை
இரகசிய உவப்பில்
வருடுகிறார் என.

---------------------------------------------------------------------------------------------------------------

ஆப்ரிக்க-அமெரிக்க கவிஞரான Rita Dove - இன்  கவிதைகள் வித்யாசமான பாடுபொருள் கொண்டவை. அவருடைய  The Fish in the Stone என்ற கவிதை, அதை  படித்த  நாளில்  இருந்தே பெரிதும் ஈர்த்தது.  The Fish in the Stone என்பது எதைக் குறிக்கிறது என்பதை உணரவே கொஞ்சம் நேரம் எடுத்தது. வாசிப்பின் புதிர்த்தன்மை தமிழில் மொழிபெயர்க்கவும் தூண்டியது.

 கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது எது தொலைகிறதோ அது தான் கவிதை என்று விளையாட்டாகவும், ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் சொல்லுகிறார்கள். முடிந்த வரை மொழி பெயர்க்க முயன்றதன் விளைபொருள்
மேலே  உள்ள கவிதை(?). மூலக் கவிதையையும்  கீழே இணைத்துள்ளேன்.

The Fish in the Stone

The fish in the stone
would like to fall
back into the sea.


He is weary
of analysis, the small
predictable truths.
He is weary of waiting
in the open,
his profile stamped
by a white light.


In the ocean the silence
moves and moves
and so much is unnecessary!


Patient, he drifts
until the moment comes
to cast his
skeletal blossom.


The fish in the stone
knows to fail is
to do the living
a favor.


He knows why the ant
engineers a gangster's
funeral, garish
and perfectly amber.
He knows why the scientist
in secret delight
strokes the fern's
voluptuous braille.

             - Rita Dove

11 comments:

சு.சிவக்குமார். said...

நல்ல முயற்சி.ஒரு நல்ல வாசகருக்கும் சரி,படைப்பாளிக்கும் சரி, மொழிப்பெயர்ப்பு அவர்களை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது..

மிருணா said...

உண்மைதான். நன்றி சிவகுமார்.

Vel Kannan said...

பகிர்வுக்கு நன்றி மிருணா
மிகவும் பயனுள்ள வித்தியாசமான அனுபவத்தை/பார்வையை தந்த கவிதை

கீதா said...

தேர்ந்தெடுத்த சொல்லுளிகளால் திறபடச் செதுக்கிய கவிச்சிற்பம்,
வார்த்தைகளின் கட்டமைப்பில் உருவான அற்புதக் கவிமாளிகை, மூலக்கவியின் எண்ணங்களை முழுமையாய் வெளிப்படுத்திய ஆழ்கவி.

பாராட்டுக்குரிய அனைத்தையும் பட்டியிலிட இயலாது. வெறுமனே ரசித்து முறுவலுடன் வாழ்வியல் அறிகிறேன். பாராட்டுகள் மிருணா.

ஜானகிராமன் said...

வீழ்வது என்பது
வாழ்பவருக்குச் செய்யும்
உபகாரமென.

வாழ்க்கை பற்றிய அற்புதமான தரிசனம். மனம் இந்த வார்த்தைகளிலேயே குத்தி நிற்கிறது.

மிருணா said...

# நன்றி வேல்கண்ணன். எனக்கும் - ஒரு மீனின் புதைபடிமம்(fossil) பற்றிய இந்த கவிதை - ஒரு வித்யாசமான வாசிப்பனுபவத்தைத் தந்தது.
# ஊக்கமூட்டும் சொல்வளத்திற்கு நன்றி கீதா.
# பகிர்வுக்கு நன்றி திரு.ஜானகிராமன்.

Harani said...

மொழிபெயர்ப்பு அருமை மிருணா. நமது கவிதைகளுக்கும் அவர்களின் கவிதைககும் உள்ள பொருண்மை இடைவெளியை நாம் உணரத்தான் வேண்டும். எவ்வளவு அழுத்தமான கவிதை இது. வெண்ணொளி...எலும்புக்கூட்டு மலர்ச்சி... உங்கள் மொழிபெயர்ப்புச் சொற்கள் கவித்துவம் பொழிகின்றன. தொடர்ந்து சிறந்த கவிதைகளை மொழிபெயர்த்து அதை புத்தமாக்கம் செய்யுங்கள். உங்களின் பணி பாராட்டிற்குரியது. வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

ந‌ல்ல‌தொரு ப‌டைப்பாளியே ந‌ல்ல‌தொரு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌வும் இருக்க‌ முடியும் என்ப‌தை இந்த‌ மொழிபெய‌ர்ப்புக் க‌விதை ம‌றுப‌டியும் மெய்ப்பிப்ப‌தாய் இருக்கிற‌து மிருணா. மூல‌த்தை உள்வாங்கி ச‌ற்றும் சிதையாவ‌ண்ண‌ம் தேர்ந்தெடுத்த‌ வார்த்தைப் பிர‌யோக‌ங்க‌ள் த‌ங்க‌ளின் ஆழ்ந்த‌ அக்க‌றையுட‌னான‌ திற‌ன்நுட்ப‌த்தை காட்டுகிற‌து. பாராட்டுக்க‌ளோடு வாழ்த்தும் ந‌ன்றியும்!

நிலாமகள் said...

க‌ட‌ல் திரும்ப‌ ஆசைப்ப‌டும் மீனாக‌ நாமும் க‌ட‌ந்து வ‌ந்த‌ பிராய‌ங்க‌ளுக்குள் ம‌றுபிர‌வேச‌ம் செய்ய‌ ஏக்க‌முறுகிறோம். அந்த‌ மீனைப் போல‌வே நம் வாழ்த‌லும் வீழ்த‌லும் ச‌முதாய‌த்துக்கான‌ ப‌ய‌ன்பாடாய் இருந்துவிட்டுப் போக‌ட்டுமென்ற‌ அவா எழுகிற‌து வாசித்து முடிக்கையில். நீரினுள் அலைவுறும் மீனின் வேக‌ம‌ற்றிருந்தாலும் எறும்புக‌ளின் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வில் அவ‌ற்றிலிருந்து க‌சியும் ப‌சைப்பொருளின் துணையோடு இல‌க்கைய‌டைய‌ வாய்த்து விடுவ‌து ப‌டைப்பின் விய‌ப்ப‌ன்றி வேறென்ன‌...?!

மிருணா said...

# ஊக்கத்திற்கு நன்றி திரு.ஹரணி. பொருண்மை பற்றிய உங்கள் ஆய்வு குறித்து நீங்கள் உங்கள் வலைப்பதிவில் எழுதினால் இன்னும் தெளிவான பார்வை கிடைக்கும் என நம்புகிறேன்.

# நன்றி நிலாமகள். இந்த கவிதை ஒரு வருடமாக என்னைத் தொடர்ந்தபடி இருந்தது. இதை மொழி பெயர்த்த அனுபவம் குறித்தும் பிறகு எழுதுவேன். அது ஒரு பயணமாகவே இருந்தது. எறும்பின் fossil, umber மரப் பிசினில் தான் பெரும்பாலும் கிடைக்கிறது. அதுவே கவிதையில் குறிக்கப் பெறுகிறது. //வாழ்த‌லும் வீழ்த‌லும் ச‌முதாய‌த்துக்கான‌ ப‌ய‌ன்பாடாய் இருந்துவிட்டுப் போக‌ட்டுமென்ற‌ அவா// என்ற உங்கள் கருத்து கவிதையின் உயிரை நீங்கள் சரியாக அணுகியிருப்பதை சொல்லுகிறது. மகிழ்ச்சி தோழி.

Harani said...

பொருண்மை குறிதது எழுதியிருக்கிறேன் பாருங்கள். முழுவதையும் விளக்க தொடர் போல எழுதவேண்டூம். முடிந்தவரை ஓரிரு பதிவுகளில் விளக்க முயற்சிக்கிறேன். நன்றி.