Saturday, 7 January 2012

எழுத்து?

  

     அம்மாவின் மிக மோசமான உடல்நிலை, கணினிப் பழுது, பண்ணிக் கொள்ளவே போவதில்லை என்று நினைத்து பின் ஒரு மாயம் போல, இருபது நாட்களுக்குள் விரைவாக , ஆனால் கூடிய மட்டும் தன்னுணர்வோடு, செய்து  கொண்ட  திருமணம்  என நிறைய விஷயங்களைத் தாண்டி இன்று மீண்டும் எழுத்துக்கு.

     எழுதவில்லை என்பது ஏக்கமாகவே இருந்தது. என்றாலும் ஏன் எழுதவேண்டும் என்பதற்கு என்னிடம் என்ன பதில் இருக்கிறது? ஒரு அலை போல சப்தமில்லாமல் கரைக்கு அருகில் வந்து பின் ஒரு பாய்ச்சலோசை எழுப்பி, எழும்பி பின் நுரைப்பூக்களால் பட்டுமணலை அலங்கரித்து ஓசையற்றுத் திரும்பும் அக ஆழியின் பாய்ச்சல்களா எழுத்து? முழுமையுறாத மனித ஏக்கங்களே கடலில்  பேரோசை எழுப்பும் அலைகளென முட்டத்தின்  - அதியழகு முரட்டுக் கடலைப் பார்த்தபோது தோன்றியது... போலவே எழுத்துமா?


      நாசரின் அரிதாரம் படத்தில் கூத்தில் சேர்த்துவிடச் சொல்லி கெஞ்சும் ஒரு கலையார்வம் மிகுந்த கிராமத்து மனிதனின்  //காசுக்கா பேருக்கா ஆசை நான் பட்டது, வேற ஏதும் சொல்லத் தெரியலயே/ எனத் தவிக்கும் மனித தாபம் - பின் எதென்பாற் பட்டது? தோழி ஒருத்தி சாப்பிட்டபின் தட்டில் அழகாக சித்திரங்கள் வரைவாள். சோப்பு நுரையால் அவள் வரைவதும் உண்டு. இன்னும் மணலில், உருகி வழியும் மெழுகில், மேகத்தில், நீரில், உப்பில், தூசியில், கார்க் கண்ணாடியில் ஏன் அஸ்திக் கலசத்திலும் என  எத்தனை வளைவுகள், நெளிவுகள், வடிவங்கள், வண்ணங்கள்? அவை எண்ணத்திலும் வந்து எழுத்தாக வனையப் படுகிறவோ?

     சாகாவரம் வேண்டுமென எழுதுகிறோமா? ''அவரவர் எச்சத்தாற் காணப்படும்'' என்றா? அல்லது இருத்தல் உணர்வைத் தூண்டும் ஆசையின் அகங்காரம் வளைத்துக்  கொண்டே போகும் முடிவற்ற அலங்காரத்  தோரணங்களா எழுத்து? தொப்புள் கொடி போல வாழ்வைச்  சுற்றியுள்ள  முடிவற்ற சிக்கல்களின் ஊடே நாம் விடும் சிறு மூச்சா இந்த எழுத்து? அல்லது கண்ணுக்குத் தெரியாத ஆனால் இருக்கும் என்றென்னும் சக மனித  கரங்களின் பரிவை யாசிப்பதா இந்த எழுத்து?

    ''Writing maketh an exact man" என Bacon சொல்வது எதனால்? எனில் எழுதி எழுதி நம்மின் தேவையற்ற பகுதிகளை   செதுக்கிப் புறம் தள்ளி விடுகிறோமா அல்லது முழுமையுறுவதற்கான திரட்சியை எழுத்து நம் அகத்துள் வளர்க்கிறதா?

     நான் ஏன் எழுத வேண்டும்? என்னிடம் பதில் இல்லை. ஆனால் கேள்விகள் இருக்கின்றன  அந்த முட்டம் கடற்கரையின் தீராப் பேரலைகள் போல.

22 comments:

Vel Kannan said...

எழுதும் எல்லோருக்கும் தோன்றும் கேள்விதான் தோழர் மிருணா, கேள்வி தோன்றும் போதே சலிப்பும் தோன்றி விடும் எனக்கு.
பின்பு,சரி ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை பிடித்திருக்கிறது
(இங்கே கை கூடி இருக்கிறது என்று சொல்ல முடியாது) அது போல் நமக்கு இது, எழுதாமல் என்ன செய்ய போகிறோம் எழுதி விட்டு தான் போவமே என்று
மனது ஆறுதல் பட்டுக்கொள்ளும்.
உங்களின் இந்த மொத்த பதிவிலுமே, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை நீங்கள் உபயோகபடித்தியிருப்பது
மிகவும் கூர்மையாக உள்ளது(ஆறுதலுக்கோ ஊக்கத்திற்க்கோ இதை சொல்லவில்லை)
//அம்மாவின் மிக மோசமான உடல்நிலை// வருந்துகிறேன்
//கணினிப் பழுது// அருகில் யாரிடமாவது AMC போட்டு கொள்ளுங்கள்.
//திருமணம்// மனம் நிறைந்த வாழ்த்துகள்

நிலாமகள் said...

//இருபது நாட்களுக்குள் விரைவாக , ஆனால் கூடிய மட்டும் தன்னுணர்வோடு, செய்து கொண்ட திருமணம் //

வாழ்வின் அடுத்த‌ அத்தியாய‌த்திற்குள் நுழைந்த‌மைக்கு வாழ்த்துகிறேன் மிருணா. அம்மாவின் உட‌ல்நிலைக்கும் ம‌ருந்தான‌தா அந்நிக‌ழ்வு? விரும்புப‌வ‌ற்றை ஒருக‌ட்ட‌த்தில் வெறுக்க‌வும், வெறுப்ப‌வ‌ற்றை ஒருக‌ட்ட‌த்தில் விரும்ப‌வுமாக‌ அலைக‌ழிப்பு ந‌ம் எல்லோருக்கும் எப்போதேனும் ...

ஏன் எழுத‌ வேண்டும் நான்? என்ற‌ உங்க‌ள் கேள்விக‌ளுக்குள்ளேயே அத‌ற்கான‌ ப‌தில்க‌ளும் அழ‌காக‌ ஆழ‌மாக‌ அனுமானிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே...! இப்ப‌டியான‌தொரு ஆயாச‌மான‌ த‌ருண‌த்திலும் சிந்தை தெளிவாக‌ இருக்க‌ ஆசீர்வ‌திக்க‌ப் ப‌ட்டிருக்கிறீர்க‌ளே... இதுவும் க‌ட‌ந்து போகும் தோழி! ம‌கிழ்வும் உற்சாக‌மும் மீண்டும் வ‌ர‌ மீண்டு வ‌ருவீர்க‌ள்!

வி.பாலகுமார் said...

ம்ம்... எல்லா கேள்விகளுக்கும் ஒரு நாள் பதில் கிடைக்கலாம். அதுவரை தொடந்து கேளுங்கள் உள்ளுக்குள்ளாவது.


வாழ்த்துகள்.

மிருணா said...

# நட்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.வேல்கண்ணன்.
# இன்சொற்களுக்கு நன்றி தோழி. அம்மாக்களுக்கு பிள்ளைகளின் திருமணம் என்பது வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. அதனால் அம்மா இப்போது பரவாயில்லை. நான் மகிழ்வாகவே இருக்கிறேன். எழுத வேண்டும் என்று இந்த இடைவெளியில் என்னை எது உந்தித் தள்ளியது என்று யோசித்தது இங்கே பதிவாய்.
# தொடர்வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.பாலகுமார். மதுரை பற்றிய உங்களின் பதிவுகள் அருமை. இன்னும் படித்துவிட்டு சொல்கிறேன்.

ஹ ர ணி said...

அன்புள்ள மிருணா...

முதலில் மனங்கனிந்த திருமண வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் மகிழ்ச்சிகளும் நிரம்பி வழியட்டும் என்றைக்கும்.

படைப்பாளியால் என்றைக்குமே எழுதாமல் இருக்கமுடியாது. உங்களின் ஏன் எழுதவேண்டும் என்ற அழுத்தமான கேள்வியின் தொடர்விளைவுகளே உங்களால் எழுதமுடியாமல் இருக்கும் அவஸ்தைகளைக் காட்சிப்படுத்துகிறது.

உங்களுக்குத் தோணும்போது எழுதலாம். நிச்சயம் எழுதுவீர்கள். எல்லாவற்றையும் தாண்டி எழுதுபவன்தானே படைப்பாளி. இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாராலும் படைப்பாளியாக இயங்கமுடியாது. படைப்பாளியாக இருப்பதே இறைவன் கொடுத்த வரம்தான். பலர் இதுகுறித்து ஏங்கப் பார்த்திருக்கிறேன். என்னிடத்தில் புலம்பப் பார்த்திருக்கிறேன்.

சொல்கோர்ப்பு...பொருண்மை விசாலம்..ஆழமான வெளிப்பாடு..இவை உங்கள் கவிதையை மறக்கமுடியாது செய்பவை. எனவே எழுதுங்கள். திருமண வாழ்வை நன்றாக அனுபவியுஙகள். அது ஒரு புது அனுபவ வாழ்வியல். அதன் தளங்களும் இலக்குகளும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவை.

எழுதிக்கொண்டேயிருப்போம் வாய்க்கும்போதெல்லாம் இவற்றை காலத்தின் நியாயங்களுக்கும் தீர்ப்புகளுக்கும் விட்டுவிடலாம். அவை தீர்மானித்துவிடும் நாம் எழுதினாலும் நம்மை இருத்தி வைப்பது குறித்து அல்லது விலக்குவது குறித்து.

மீண்டும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். அம்மாவின் உடல்நலம் வளம் பெறட்டும்.

ஹ ர ணி said...

அன்புள்ள...

உறரணியின் பணிவான வணக்கங்கள்.

லீப்ஸ்டர் பிளர்க்

இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும். இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

நன்றிகள்.


எனக்குப் பிடித்தவை ஏழு.

1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
அப்பா.

2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
என் மகன்.

4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
தனிமை
.
5. கடவுள் வழிபாடு,

6.. குழந்தைகள்.

7. தமிழ்மொழியின் இலக்கியங்கள்.பகிர்தல் நேரம்


1, எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
நண்பன் மதுமிதா - க்கு..

2. இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
துவள்கிற தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
பன்முகத் திறனால் பளிச்சென்று,,,உறவுகளை
மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..
என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...

3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
மனதிற்குப் பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
களைப் பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
அவர்களுக்கு...

4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
தேர்வும்,, மனதிற்கு இதமும்....ஆழமும் என
இயங்கிக் கொண்டிருக்கும் சைக்கிள் மிருணாவிற்கு...

5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
வகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
அவர்களுக்கு...


அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.

சுந்தர்ஜி said...

ஜனவரி 7க்கு ஃபெப்ரவரி 21ல் பதிலெழுதுவதே நான் எத்தனை சுறுசுறுப்பாய் இருக்கிறேன் என்பதைச் சொல்லி விடுமே மிருணா?

போகட்டும். காலம் இத்தகைய மாயத்தை வைத்திருக்கிறது.

வாழ்வின் மற்றொரு தளத்தையும் தருணத்தையும் அடைந்தமைக்கு அன்பான வாழ்த்துக்கள். உங்கள் துணைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்.

எழுதி என்ன ஆகப் போகிறது? இப்படித்தான் ஒரு 20 வருஷம் எழுதாமல் இருந்து மறுபடியும் எழுதத் துவங்கினேன். திருமணம்-இரு மகன்கள்-சமைக்கக் கற்றது-தொழில் முனைவு-நடுநடுவே ஓரிரு கவிதைகள்-நெருங்கிய நண்பனுக்குக் கடிதம்-சிலருக்குத் திருமண அழைப்பிதழ் வடிவமைப்பு-வீடு கட்டியது-நாய்களை வளர்த்தது-தோட்டம் போட்டது-இப்படி..இப்படி.

வாழ்வின் ஒளியும் நிழலும் வீழ்ந்த எல்லாக் காலங்களிலும் நான் வாழ்வை மனிதர்களை என் சுற்றத்தை நட்பை கவனித்தபடியும் உள்ளுக்குள்ளேயே எல்லாவற்றையும் எழுதிக் கொண்டேயுமிருந்தேன் என்பதும்தான் நிஜம்.

எழுதுவதற்கும் எழுதியது போல வாழ்வதும் மட்டுமே அரிதானது.எழுதுவதும் எழுதாமலும் இருப்பது அதற்கடுத்தபடிதான்.தவிர எழுதக் கற்ற பின் எழுத்து தனக்குத்தானே வெளிப்படுவதையும் உள்ளழுந்தியிருப்பதையும் தீர்மானித்துக்கொள்கிறது.

எழுதத் தோன்றுகையில் எழுதுங்கள். உங்களுக்கே இப்படியென்றால் குறிஞ்சிக்கு எப்படியிருக்கும் மலரா வேதனை?

நீங்கள் எழுதப் போகும் அடுத்த கவிதைக்கு வாழ்த்துக்கள் மிருணா.

மிருணா said...

Thiru.Harani, my sincere thanks to you for your hearty wishes and encouragement.If i just took a trip down in memory lane,you have always been a source of encouragement in my writing attempts.Thank you again sir for the award and goodwill.Due to blogger problem, i am unable to comment and post in tamil. But i hope to write in tamil soon.

சுந்தர்ஜி said...

கீழிருந்து மூன்றாவது பத்தியின் முதல் வார்த்தை “எழுதுவதற்கும்” என்பதற்குப் பதிலாக ”எழுதுவதும்” என்றிருக்க வேண்டும்.திருத்தி வாசிக்க இது.

மிருணா said...

மகிழ்ச்சியும் நன்றியும் திரு.சுந்தர்ஜி - குறிஞ்சிக் கவிதைக்கும்.

பத்மா said...

உங்களுக்கு ஒரு விருதை பகிர்கிறேன் ...பெற்றுக் கொள்ளவும்

மிருணா said...

நன்றி பத்மா - விருது கொடுத்த மனதிற்கும், ஊக்கத்திற்கும்.

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

மிருணா said...

Read your write-up. Thank you Geetha.

தக்குடு said...

//திருமணம்// அட!!! வாழ்த்துக்கள்மா!! 4 மாசம் ஆச்சு புது போஸ்ட் போடலாம் தப்புகிடையாது! :)

மிருணா said...

Thank u and wishes to u 2. Will write soon and make u feel sorry for tempting me to write :)

பாற்கடல் சக்தி said...

மண வாழ்வு சிறக்க உளம் நிறைந்த வாழ்த்துகள் தோழி!!!

எழுத்து தவம் தோழி. ஒற்றைக்கால் கடுந்தபசு என்றில்லை; ஊற்றெடுக்க, ஊற்றெடுக்க, உள்ளேயே சமைந்து சமைந்து அசை போடுவதும், உணர்வது கூட தவம் தான்.
மீண்டுமொருமுறை வாழ்த்துகள் தோழி...

சிவகுமாரன் said...

திருமண வாழ்த்துக்கள் .
எழுதும் எல்லோருக்குமான கேள்விகள் .எழுதி முடித்ததும் ஏதோ ஒன்று இறங்கிப் போவதாக உணர்ந்தால் என்னைப் பொறுத்த வரையில் அது எழுத்தின் வெற்றி.
எழுதுங்கள் நிறைய சகோதரி.

மிருணா said...

# உங்கள் எழுத்து எழுதும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.நன்றி சக்தி.

# உண்மைதான்.வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழர்.சிவகுமாரன்

சிவகுமாரன் said...

நான் பொறாமையுடன் வாசிக்கும் எழுத்துக்களில் உங்களுடையதும் ஒன்று. அடிக்கடி வந்து பார்த்து ஏமாந்து போகின்றேன். எழுதுங்கள் சகோதரி.

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

மிருணா said...

நன்றி திரு.தனபாலன்.