Friday, 5 July 2013

இளவரசனின் மரணம்

    இளவரசனின் மரணம் இன்றென்னை எழுதத் தூண்டுகிறது. தூங்கிக் கொண்டிருக்கும்!??தமிழ்ச் சமூகத்திற்கு மீண்டும் ஒரு பலத்த அடி இளவரசனின் மரணம்.அந்த மனிதனின் சோகம் சாதியின் அந்தரங்க வன்மத்தை தமிழகமெங்கும் வெளிச்சப் படுத்தி விட்டு முடங்கிக்  கொண்டது. இதற்கு நான் பொறுப்பல்ல, நான் இதைச் செய்யவில்லை என்று நாம் யாருமே  உறுதியாகச் சொல்லிவிட முடியாது. சாதிப்பெருமிதங்களாகவும், குடும்பக் கட்டுமானங்களாகவும், சொல்வழக்குகளாகவும், பேரவைகளாகவும், அரசியல் கட்சிகளாகவும், மேலாதிக்கமாகவும், கீழ்மைபடுத்தலாகவும்  நாம் சுரணை கெட்டு  வாழ்ந்து கொண்டே போகும் வரை இந்த வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொருவரின் கையிலும் மரணத்தின் கறை ஒட்டிக் கொண்டே இருக்கும்.

      திவ்யா தன் பிரிவின் மூலம் சாதியினால் உணர்வு ரீதியாகக் காயடிக்கப் பட்டார் என்றால் இளவரசன் தன்  மரணத்தின் மூலம் சாதியினால் உடல் ரீதியாகவும் - உயிரை விட வைப்பதன் மூலம் - காயடிக்கப் பட்டு விட்டார். இந்த இரண்டு இளைய ஜீவன்களும்  அனுபவித்த மனப் போராட்டங்கள் எவ்வளவு இறுக்கம் மிகுந்தவை? திவ்யாவின்  தந்தையின் மரணம், தொடர் கலவரங்கள், மனஉளைச்சல், பாதுகாப்பற்ற நிலை, கருச்சிதைவு என திவ்யாவும் , இளவரசனும்  அடைந்த துன்பங்கள் மரண வலி மிகுந்தவை. இருந்த போதிலும் இருவரும் கைகோர்த்து ஒருவரையொருவர் பாரமாற்றிக் கொள்ள வேண்டியவை. சாதிய சமூகத்தின் கோரப் பிடியை தளர்த்த தங்களால் முடிந்த ஒரு காரியமாற்ற வேண்டியவை. ஆனால் அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை. மிதித்து, வளைத்து, ஒடித்துப் பிடுங்கப்பட்ட செடிகள் போல குற்றுயிராகி, குலைந்து விட்டார்கள். வெறும் சாதி  அச்சுறுத்தல் மட்டும் காரணம் என சொல்ல இயலவில்லை. நாம், இந்தச் சமூகம் - பொறுப்போடு செயல்பட வில்லை. பிள்ளைகளுக்கு யோசிக்கும் ஒரு மன வெளியைக் கட்டமைக்க வில்லை. செய்வது நேர்மைச் செயலாக இருந்தால் ''பாதகம் செய்வோரைக் கண்டால் மோதி மிதிக்கச்'' சொல்லித் தரவில்லை. இளவரசனைப் போராளியாக்க, திவ்யாவை உறுதியாக நிற்க வைக்க நம்மால் - கல்வி, நட்பு, பத்திரிகை, குடும்பம் - என  ஒருவராலும்  முடியவில்லை. ஏனெனில் நாம் சாதி மனிதர்களாக இருக்கிறோம். அதனாலேயே நமது இந்த so called democratic சமூகத்தின் சாதிய, இன்ன பிற அரக்கத்தனம் பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. எல்லோருமே தெரிந்தே இந்த அர்த்தமற்ற சாதி முகமூடியில் மறைந்து மௌனம் காக்கிறோம். சாதிக் கட்சிகளை, கட்சிகளின் தேர்தல்-சாதியப் பார்வையை மறுதலிக்க மறுக்கிறோம். பாதிக்கப்படும்போது முணுமுணுத்துவிட்டு,  அனுகூலங்களை மட்டும் நமக்கு நாமே சொல்ல விழையாத இரசியத்தோடு  பயன்படுத்திக் கொள்கிறோம். வெளியிடங்களில், சமூகப் பரிவர்த்தனைகளில், பன்னாட்டு தகவல் தொடர்பு வேலையகங்களில், மொழியில், உச்சரிப்பில் என அவை பல கிளைகளோடும், வேர்களோடும் வியாபித்துக் கொண்டே போகின்றன. 
   நமது பல  பள்ளிகூடங்கள் சாதியின் கைப்பிடியில், ஒதுக்கலில், சொல்லாடலில், பள்ளியில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் வேலைகளில், தொடலில் இருப்பதை ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.  நம்மிடையே நிறையப் பாடல்கள் இருக்கின்றன. ''குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'' என அவை தமிழக வீதிகளில் ஒரு வசீகரக் கனவைப் பறக்க விட்டபடி இருக்கின்றன. ஆனால் காது கேட்டும், கேட்காத, கேட்காத போதும் கேட்பது போல என நடிக்கும் நம் மாறு வேஷங்களை கலைக்க இந்த ஆய்வறிக்கைகளின் பக்கங்களில் ஒலிக்கும்  குழந்தைகளின் விசும்பல்களுக்கு, கண்ணீருக்குத்  திராணியில்லை. அழுது கொண்டே வளரும் இக்குழந்தைகள் வளர்ந்த பின் இளவரசன்களாகி உயிரை விடுவதிலும் மாற்றமில்லை. இந்த முகமூடிப் பின்புலத்தில் வளர்க்கப்படும் போலிப் பாதுகாப்பு சாதிச் சமூகப் பூஞ்சைத் திவ்யாக்கள் காதலிப்பார்கள், கரம் பிடிப்பார்கள், அச்சுறுத்தப் படுவார்கள், தன்னைத் தொலைத்து  நடைப்பிணமாவர்கள். நாம் அழுது விட்டு அவரவர் சாதிச் சமூகத்தில் உறவாட, மணமுடிக்க, சாதிச் சொல்லாட, உயர்வு, தாழ்வு மனநிலைகளை நமக்குள்ளும், வெளியேவும் கட்டமைக்கப்  போய்  விடுவோம். உண்மையில்  சாதியை ஒழிக்க யாரும் நமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. சுய சிந்தனையுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் அது தெரிந்தே இருக்கும். ஆனால் நமக்கு சாதி வேண்டி இருக்கிறது. சாதிய வர்ணத்தை நாம் நமது சூழலில் வெளிப்படையாக நிராகரிக்கும், எதிர்க்கும், போராடும், நீக்கும்  ஒவ்வொரு கணமும் நமக்கு முக்கியம், அவசரம் என்றுணர மறுக்கிற ஒரு சமூக அவலத்தை என்னவென்று சொல்வது?
      ஒரு புறம் இளவரசன்களை உருவாக்கி கொண்டே இன்னொரு புறம் இளவரசனுக்காக விடும் நம் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரின் கரிப்பிலும் ஒரு அரசியல் இருக்கிறது. அது இந்த வாழ்வை வெற்றுப் பாலையாக்கியபடி இருக்கிறது.