Wednesday, 10 December 2014

நீள் சிறகுகள்

ஆகாயத்தில்  பறக்கும்
சிறு பறவை  ஒன்று
ஒரு நீண்ட சித்திரத்தை
அந்த வானம் முழுதும்
விரித்துக் கொண்டே போகிறது.   


Sunday, 16 November 2014

களிச் சிற்றலை


பின்னலிடுகிறாள்  அம்மா
குழம்பின் வாசனையைக்  கணித்தபடி
கொடியில் காயும் சீருடைகளை யோசித்தபடி
தலையை ஆட்டாதே என்று  சிறு அதட்டலோடு.
அம்மாவின் தொடலில் ஆதி பந்தம் உயிர்ப்புற
மகுடியின் நாதமென அமைதியுறுகிறாள் மகள்.
அவளது கைவண்ணத்தில் பின்னப்படுகின்றன 
வழுவழுவென்ற பளபளக்கும் இரு நாகங்கள்
சிவப்பு வண்ண பூக்களை ரிப்பனில் சீரமைக்கையில்
சிற்பியின் கவனம் அவளது விரல்களிலும் விழிகளிலும்
மீண்டுமொரு முறை  பின்னலை நேர்த்தியாகி
மகளது தோள்களில்  தட்டுகிறாள் செல்லமாக
ஏனடிக்கிறாய் எனச் சிணுங்கும் மகளிடம்
'அடிக்கணும் போலருக்கு'  என்கிறாள் புன்னகையோடு
அவளது புன்னகை காற்றில் இடம்பெயர்ந்து
மகளின் முன் ஒரு மனோகர  நறுமணமாகிறது
திக்குமுக்காடும் உணர்வை  சமாளித்தபடி அவள்
அனிச்சையாய்க்  கண்ணாடி எடுத்து முகம் பார்க்கிறாள்
மகளின் முகத்திற்குப்  பின் நெருக்கமாய்  அம்மாவின் முகம்
கூர்ந்து கவனிக்கையில் புலப்படுகிறது
அம்மாவின் முகத்துக்குப் பின்
அம்மாவின் அம்மாவின் அம்மாக்களின் முகம்
சில சாயல்களில் அப்பாக்களின் முகமும் - அங்கே
கனிந்து எழும்புகிறது வாழ்வின் களிச் சிற்றலை.

Monday, 13 October 2014

நாங்கள் அரூபத்தை ரூபமாக்கத் தலைப்படுவோம்.


காளியும் மாலை சூடிக் கொள்கிறாள்
செவ்வரளிப் பூக்களும் இலைகளும் காற்றில் அசைய
சுடரசையும் நினைவின் கிளர்ந்தல்களில் ஒளிரும்
துணையின் பேரன்புத் திருமுகத்தின் மின்னல் பாவனை
ஒவ்வொரு நிழல் குழைவிலும்  பிரசன்னமாகும்
அதி ரூப  வண்ண சாயைகளின் வசீகரம்.
கால மாயத்தில் உறைந்து போன  பாவை விளக்குகள்
கனவு காணும் இருளின் வெளியில் கலந்தே ஒலிக்கும்
முன்னை கிருஷ்ணனின் மெல்லிய குழலொலியும்
அன்பிற்கு ஏங்கிய  ராதைகளின் தாபமும்
பெண் மனவெளியெங்கும் பெருகி கடக்கும் மாயம் -
கடற்கரை மணலெங்கும் பரவும் நீர்மையை
கடல் மட்டும் அறியும்.
காலப் பறவைகளின் கீச்சொலியில்
எம் ஆதிப்  பெண்கள் மிழற்றிய மொழி-
அன்பே  நீ மறையாதிரு ஒரு பொழுதும்
நாங்கள்  அரூபத்தை ரூபமாக்கத் தலைப்படுவோம்.

Monday, 22 September 2014

கூடும்யாரும் பார்த்திராத ஒரு கணத்தில்
ஒரு விண்கல் போல உள் நுழைந்த பறவை
எதிரெதிர் திசை பலகணிகள் நோக்கி
திரும்பத் திரும்ப பறந்தபடி இருந்தது
பழுப்புப் புள்ளிகள் கொண்ட உடலோடு
பலகணிச் சில்லுகளைக் கொத்திக் கொண்டு
பயத்தின் இறகுகளை அறையெங்கும் தூவியபடி
கருப்பு கோலிக் கண்களில் பதட்டம் பளிச்சிட
விரைந்து பறந்து கொண்டேயிருந்தது
இங்கும் அங்கும் - அங்கும் இங்கும்.

எதைக் கண்டு அஞ்சி எதனுள் நுழைந்தது அது?
எதனில் விடுபட அதனில் தவித்தன சிறகுகள்?
தவிப்பின் வெம்மை அறையில்
இலை இலையாய்த் துளிர்ந்து
கிளைகள் மரங்கள் கானகம் ஆக
அறை எங்கும் அசையும் நிழல்கள்
கிளைகள் முழுதும் புதிய பறவைகள் .
ஆளில்லாத் தனிமையில்
வழி அறியாப் பறவையோடு
ஒரு அழகிய அலையெழுப்பி
மெல்ல விண்ணோக்கி
பறக்கக் கூடும் அப்பறவைகள் -
நம் மனம் போல

ஒரு நாளைப் போல..

Monday, 8 September 2014

ஈரக் காற்று

பறத்தலை மறந்த
வண்ணத்து பூச்சி இறகு
கதிரின் மினுங்கில்
பளிச்சிடும் வண்ணங்களோடு
தத்திச்  செல்கிறது
மண்ணோடு மண்ணாக

கிளைகளில் சிக்கிக் கிழிந்த பட்டம்
படபடத்து தலையாட்டுகிறது
காற்று கடந்து போகும்
ஒவ்வொரு முறையும்
இறுதி வரையும்

நதியற்ற பெருநிலத்தின்
செம்பழுப்புத்  தோல் தடங்களில்
நீர் ரேகைகளைத் தேடித் தோற்றபின்
முகத்தை வருடும் ஈரக் காற்று
இறுதி முத்தமென அகம் இலங்க

புன்னகைத்தபடி இருக்கிறது
கோவில் இருளை
மீறித் துலங்கும்
கருங்கற்  சிலையின்
சிறு குமின் சிரிப்பு.


Wednesday, 3 September 2014


இந்த முறை  மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்:

1. நிச்சயதார்த்தம் ( குஜராத்தி புதினம்  ​) - ஜாவர் சந்த்  மெகானி - சாகித்ய அகாடெமி பதிப்பகம் )
2.காலடியில் ஆகாயம் - ஆனந்த் - காலச் சுவடு
3.நான் காணமல் போகும் கதை -  ஆனந்த் - காலச் சுவடு
4.சாதியும் நானும் - பெருமாள் முருகன் - காலச் சுவடு
5.தோழர்களுடன் ஒரு பயணம் - அருந்ததி ராய் - விடியல், மனிதன் பதிப்பகம்
6. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி

1. The Calcutta Chromosome - Amitav Ghosh - Penguin
2. The Glass Palace - Amitav Ghosh - Penguin
3. One Amazing Thing - Chitra Banerjee Divakaruni - Penguin
4. The Indians - Sudhir Kakar, Katharina Kakar - Penguin
5. Resilience - Andrew Zolli, Ann Marie Healy - Headline

இன்னும் வாங்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவ்வளவு புத்தகங்களையும் அள்ளி  வந்து விடலாமா என ஆசை துடிக்கிறது. நாளை பார்க்கலாம் என வந்து விட்டேன். சீக்கிரம் படித்து விட்டு  அவை பற்றி எழுத நினைக்கிறேன். பார்க்கலாம்.

Tuesday, 10 June 2014

ஆதல்


உலகின் பத்து சிறந்த பூக்களுள்
தான் ஒன்று அல்ல என்பது
அந்த கரிய நிலத்து சிறு பூவிற்குத்  தெரியாது
தெரிந்தாலும் அது மலர்வதை நிறுத்தாது

உலகின் இருபது சிறந்த பறவைகளுள்
தான் ஒன்று என்பது
அங்கே உயரப் பறக்கும் பறவைக்குத் தெரியாது
தெரிந்தாலும் அது பறப்பதை நிறுத்தாது.


Monday, 21 April 2014

புறம்/அகம்சுடரின் ஒளிக்குப்
பின்னால்  ஒளிந்திருக்கிறது
திரியின் வலி கருமை பூசி

மலர்ந்திருக்கும் பூக்களுக்கு
நீர் பாய்ச்சுபவரின் சின்னஞ்சிறு மகள்
மரித்துப் போனது தெரியாது

கழன்ற வண்ணத்துப் பூச்சியை
மறக்க இயலவில்லை
வெறுமையில் சுருண்ட கூடிற்கு

வெட்டி வீழ்த்திய
கழுத்தில் இருந்து பீறிடுகிற ரத்தம்
தாயொருவளின் முலைப்பாலாய்
விழுந்து சிதறுகிறது நிலத்தில்

ஒரு உள்ளார்ந்த துயர்
கேவிக் கொண்டே இருக்கிறது
வன்பாலுறவுள்ளாக்கப்பட்ட பெண்கள்
வாழும் தேசத்தில்... 

Wednesday, 9 April 2014

மதுரம்


எனக்குத் தெரியும்
மஞ்சள் மலர்கள் அளிக்கும் உற்சாகத்தை
வேறு ஏதாலும் பதிலீடு செய்ய முடியாதென.
எனக்குத் தெரியும்
முரட்டுக் கருவண்ணப் பாறைகளும்
வெட்டுக் குழிகளும்
அவற்றுள் தேங்கிய நீல வானும்
அழகின் சன்னதம் கொண்டு
மனம் நிலை பெறச் செய்வதை.
எனக்குத் தெரியும்
நிலம் நனைந்து பெருகும்
சிவந்த மண் வாசனை
ஒரு இருப்பின்  பள்ளங்களை
ஒவ்வொன்றாய் நிரப்பிவிடுமென.
எனக்குத் தெரியும்
அதல பாதாளத்தில் தலைகீழாக விழுகையிலும்
சன்னஞ் சதுர மழை கம்பிகளின்
சிறு மதுர ஒலி கொண்டு
மீண்டுமொரு முறை
இவ் வாழ்வை
இழுத்துக் கட்டி விடலாமென.

Saturday, 5 April 2014

தாழ்ந்தபடிவெயிற்  பொழுதில்
தன்னை மேலும் 
பளபளப்பாக்கிக் கொள்கிறது
பசிய இலை நுனியில்
ஒரு சிவப்பு வண்டு.
ஓயாமல்
மோதிப் பிரிந்து  பறக்கும்
இரு இளம் பட்டாம்பூச்சிகள்
மஞ்சள் பொட்டுகளை 
பகல்  எங்கும் வைத்தபடி.
ஒளி மினுங்கும்
பளிங்கு நீர்க் குமிழ்களில் 
தாமரை இலை எங்கும்
பகடை விளையாடும்  காற்று
இணைக்கவும் செய்கிறது  இறுதியில்.
புகைப்பட சட்டங்களை
வெளியெங்கும் பொருத்திக் கொண்டிருக்கும்
வெயில் மட்டும்
கவனித்துக் கொண்டு  இருக்கிறது 
வேண்டுதல்கள் ஊசலாடும்
கோவில் மரக்கிளைகள்
தாழ்ந்தபடியே  இருப்பதை.


Saturday, 8 February 2014

பால்ய வனம்
பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்
நினைவு படுத்துகிறது பால்யத்தை.
தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்
மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு
வாய்த் தண்ணீருள் மூழ்கிய
கனகாம்பர விதைகள் வெடிக்கும்
துடி துடிக்கும் இதயம்.
தட்டான்கள் ரீங்கரிக்க
வண்ணத்துப்பூச்சி பிடிக்க
ஓடும் பசிய வெளியில்
பதிந்திடும் பாதச் சுவடுகள்  
நூறு வண்ணத்துப் பூச்சிகள்.
பின் அயர்ந்து தூங்குகையில் 
வயலெட், மஞ்சள்  டிசம்பர் பூக்களைப் பற்றிய
சிறிய அவாக்களும் 
வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும் 
பெரும் வனக் கனாக்களும்.
முட்களை மறைத்தபடி
நுண்ணிய வலைத்துகளாய் விரியும்
முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்
சிக்காமல் ஒரு சிறுமி
பால்யத்தின்
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி
அதன் எலுமிச்சை  வாசனை பரவ
பச்சை வண்ண சீப்புக் காயை 
தலையில் தேய்த்தபடி
ஓடிக் கொண்டே  இருக்கிறாள் 
எதன் பின்னும் அல்லாமல்.