Saturday, 8 February 2014

பால்ய வனம்
பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்
நினைவு படுத்துகிறது பால்யத்தை.
தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்
மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு
வாய்த் தண்ணீருள் மூழ்கிய
கனகாம்பர விதைகள் வெடிக்கும்
துடி துடிக்கும் இதயம்.
தட்டான்கள் ரீங்கரிக்க
வண்ணத்துப்பூச்சி பிடிக்க
ஓடும் பசிய வெளியில்
பதிந்திடும் பாதச் சுவடுகள்  
நூறு வண்ணத்துப் பூச்சிகள்.
பின் அயர்ந்து தூங்குகையில் 
வயலெட், மஞ்சள்  டிசம்பர் பூக்களைப் பற்றிய
சிறிய அவாக்களும் 
வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும் 
பெரும் வனக் கனாக்களும்.
முட்களை மறைத்தபடி
நுண்ணிய வலைத்துகளாய் விரியும்
முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்
சிக்காமல் ஒரு சிறுமி
பால்யத்தின்
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி
அதன் எலுமிச்சை  வாசனை பரவ
பச்சை வண்ண சீப்புக் காயை 
தலையில் தேய்த்தபடி
ஓடிக் கொண்டே  இருக்கிறாள் 
எதன் பின்னும் அல்லாமல்.

16 comments:

கீத மஞ்சரி said...

முற்பிறவியின் நினைவுகள் போல மறந்துபோயிருந்த அத்தனையும் மளமளவென்று கண்ணுக்குள் விரிய புதுப்பிறவி எடுத்தாற்போல் புத்துணர்வு உள்ளத்துள்!ஓடித் திரியும் சிறுமியாய் உருவகப் படுத்திக்கொள்கிறேன் என்னையும்! மனம் தொட்ட வரிகள் மிருணா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள்...

மிருணா said...

மகிழ்ச்சியும் நன்றியும் கீதமஞ்சரி. நன்றி திரு தனபாலன்

நிலாமகள் said...

உள்ளங்கையில் சொட்டு தண்ணீர் விட்டு அதில் கனகாம்பர விதை வைத்து இறுக்க மூடிக் கொள்ள நீர் ஊறி விதைத்தோல் வெடிக்கும் தருணம்... ஆஹா! பெரிதாய் ஏதோ சாதித்த குதுகலத்தோடு கையோடு ஒட்டிக் கொண்ட விதைகளை கவனமாக எடுத்து மண்ணில் புதைத்தெல்லாம் மறுபடியும் மனசில் முளைவிடச் செய்து விட்டீர்கள் மிருணா! இன்றொரு தடவை வாய்க்குள் வெடித்துப் பார்க்கும் அனுபவத்துக்கு விழைகிறது மனசில் எஞ்சியிருக்கும் குழந்தைமை.

//வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் பசிய வெளியில்
பதிந்திடும் பாதச் சுவடுகள் நூறு வண்ணத்துப் பூச்சிகள்.//

முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்
சிக்காமல் ஒரு சிறுமி
பால்யத்தின்
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி//

வரிகளுள் சிக்கிக் கிடக்கும் பலதையும் தொட்டுத் தொடர்கிறது புத்தி. பொக்கிஷமாய் சேகரிக்கிறேன் கவிதையை, பால்கனியிலும் வானத்து நீலத்தை ரசிக்க வாய்க்காத வரும் சந்ததிக்கு.

மிருணா said...

மகிழ்ச்சியும்,நன்றியும் நிலா. நாமெல்லாம் இன்னொரு முறை குழந்தைகள் போல கைகளைப் பிடித்துக் கொண்டு விளையாடினால் என்ன? ஏக்கமாகவே இருக்கிறது.

அப்பாதுரை said...

வருஷத்துக்கு ஒரு பதிவானாலும் வளமாகவே இருக்கிறது.

மூடிய இமைகளுள்ள பருவம்.. simply beautiful.

இந்த வருஷம் நாலஞ்சாவது எழுதுங்களேன்.. இருபது எழுதினாலும் சரிதான்.

மிருணா said...

ஊக்கத்திற்கு நன்றி திரு.அப்பாதுரை

ezhil said...

வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

மலரும் நினைவுகளை கண் முன் நிறுத்திய கவிதை பால்ய வனம்.... அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

வலைச்சர தள இணைப்பு : வலை வீசம்மா வலை வீசு

மிருணா said...

# வருகைக்கும், கருத்திற்கும் நன்றி எழில்.
# நன்றி திரு.தனபாலன்.

இராஜராஜேஸ்வரி said...

பச்சை வண்ண சீப்புக் காயை
தலையில் தேய்த்தபடி
ஓடிக் கொண்டே இருக்கிறாள்
எதன் பின்னும் அல்லாமல்.

இந்த கவிதையின் பின்னால்
நிற்காமல் ஓடுகிறது
எந்தன் பால்ய கால மனம்..பாராட்டுக்கள்..!

மிருணா said...

பால்ய வனம் உங்களை வரவேற்கிறது ராஜேஸ்வரி மேடம்.கருத்திற்கு நன்றியும்.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அருமை ! வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் சிறந்த கவிதைகளைப்
படைத்திட வேண்டும் .

மிருணா said...

நன்றி தோழி.அம்பாளடியாள்.

Ramki... said...

நல்ல கவிதை மிருணா

மிருணா said...

Thank you Mr.Ramki.