Sunday, 16 November 2014

களிச் சிற்றலை


பின்னலிடுகிறாள்  அம்மா
குழம்பின் வாசனையைக்  கணித்தபடி
கொடியில் காயும் சீருடைகளை யோசித்தபடி
தலையை ஆட்டாதே என்று  சிறு அதட்டலோடு.
அம்மாவின் தொடலில் ஆதி பந்தம் உயிர்ப்புற
மகுடியின் நாதமென அமைதியுறுகிறாள் மகள்.
அவளது கைவண்ணத்தில் பின்னப்படுகின்றன 
வழுவழுவென்ற பளபளக்கும் இரு நாகங்கள்
சிவப்பு வண்ண பூக்களை ரிப்பனில் சீரமைக்கையில்
சிற்பியின் கவனம் அவளது விரல்களிலும் விழிகளிலும்
மீண்டுமொரு முறை  பின்னலை நேர்த்தியாகி
மகளது தோள்களில்  தட்டுகிறாள் செல்லமாக
ஏனடிக்கிறாய் எனச் சிணுங்கும் மகளிடம்
'அடிக்கணும் போலருக்கு'  என்கிறாள் புன்னகையோடு
அவளது புன்னகை காற்றில் இடம்பெயர்ந்து
மகளின் முன் ஒரு மனோகர  நறுமணமாகிறது
திக்குமுக்காடும் உணர்வை  சமாளித்தபடி அவள்
அனிச்சையாய்க்  கண்ணாடி எடுத்து முகம் பார்க்கிறாள்
மகளின் முகத்திற்குப்  பின் நெருக்கமாய்  அம்மாவின் முகம்
கூர்ந்து கவனிக்கையில் புலப்படுகிறது
அம்மாவின் முகத்துக்குப் பின்
அம்மாவின் அம்மாவின் அம்மாக்களின் முகம்
சில சாயல்களில் அப்பாக்களின் முகமும் - அங்கே
கனிந்து எழும்புகிறது வாழ்வின் களிச் சிற்றலை.





11 comments:

நிலாமகள் said...

படிப்பு நிமித்தம் தொலைவிலிருக்கும் மகளை, 'களிச் சிற்றலை' கண்டு களித்த கணத்தில் இழுத்து வைத்து தலை வாரி கைக்கண்ணாடியில் பின்னணியில் கண்டு நெகிழ்கிறது மனோவேகம்.

சிலசாயல்களில் அப்பாக்களும் என்றது உச்சம்!

தலைப்பில் கூட தனித்துவம்! சப்பு கொட்டி ருசிக்கும் படியான தேன் தமிழ்ச் சொற் தேடல்!

ரிஷபன் said...

அம்மாவின் தொடலில் ஆதி பந்தம் உயிர்ப்புற
மகுடியின் நாதமென அமைதியுறுகிறாள் மகள்.

களிச் சிற்றலை.. பேரலையாய்..

மிருணா said...

# நன்றி நிலா.நீங்கள் உங்கள் மகளை நினைவுக்கு கொண்டு வரும் அதே வேளையில், இதை முகநூலில் பகிர்ந்த போது, தோழி.கீத மஞ்சரி அவரது அம்மாவை நினைவுக்கு கொண்டு வந்தார். மகிழ்ச்சியாக இருக்கிறது.

# நன்றி திரு.ரிஷபன்

நிலாமகள் said...

முதல் அலையில் மகளாய் இருந்தேன். மறு அலை தாய்மை நினைவு. பிறிதொரு அலை பேத்தி தலைபற்றும் கற்பனை. பின்னலிடும் காலம் நீடிக்கும் வரைக்குமான நிலைக்கவிதையன்றோ 'களிச் சிற்றலை'!

மிருணா said...

வேறென்ன வேண்டும் இந்த கவிதைக்கு.நன்றி நிலா.

சிவகுமாரன் said...

என்னையும் ஒரு மகளாக்கி விட்டீர்கள். வேறென்ன சொல்ல? அருமை மிருணா.

மிருணா said...

நன்றி சிவகுமாரன்.

வசந்தசெல்வன் said...

"அம்மாவின் தொடலில் ஆதி பந்தம் உயிர்ப்புற
மகுடியின் நாதமென அமைதியுறுகிறாள் மகள்."

"சிலசாயல்களில் அப்பாக்களும்!" ஆகிய இடங்களில்
தமிழ் அலையில் மிதக்கிறேன் :D
கவி சிற்றலை பேரலையாக வாழ்த்துக்கள்!

மிருணா said...

நன்றி வசந்தசெல்வன்.

Toto said...

Hi.. I sincerely appreciate your works. உங்க கவிதைகள், வார்த்தை தேர்வு, அதை சொல்ற விதம் எல்லாமே ரொம்ப அபாரமா இருக்கு. உங்க எழுத்து என்னை இன்னும் கொஞ்சம் சிறப்பா யோசிக்க, எழுத வைக்குது. நன்றி. I mean it.
நான் எழுதறது இங்க..
Http://Roughnote.pixmonk.in

மிருணா said...

ஊக்கத்திற்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி டோட்டோ, இன்னும் நீண்ட தூரம் போகும் மொழிப் பயணம் எனக்கு, நமக்கு - எழுத விழைபவர்களுக்கு - இருக்கிறது என எண்ணுகிறேன். சீக்கிரம் உங்கள் தளத்தை வாசிக்க விழைகிறேன். சுந்தர்ஜி உங்கள் தளம் பற்றி எழுதிய நினைவு. நன்றி.