Monday, 19 January 2015

கடந்தபடி


பணி முடிந்து வீடு திரும்பும்
இந்த இருள் சூழும் மாலைப் பொழுதில்
நான் மலர்களைக் கனவு காண்கிறேன்
அலைபாயும் நதி வெள்ளத்தில்
அமைதியாக இலைகளை மிதக்க விடுபவளாக
இன்று கொஞ்சம் இருக்க விரும்புகிறேன்
தாமரை இலையில்  சறுக்காடும்
நிலவு ஒளிரும் நீர்த்துளிகளோடு
இந்த இரவு முழுதும் விளையாடவும்
அடர்ந்த சருகுகளில்  புதைந்து  நடக்கவும்
வளர்ந்த வாதாம் மர  இலைகளின்
மாறும் வண்ண நேர்த்தி குறித்து வியப்புறவும்
ஒரு வித குளிர்கால ஏக்கமுறும் வேளை
மெல்ல மழை பிடிக்கத் துவங்குகிறது
ஒரு மறைவான  நிலத்தின்
சிறிய கனவுகள் போல வண்ணக் குடைகள்
சரியும் பாதையில்
மிதந்து செல்ல ஆரம்பிக்கின்றன
மழையின் வலு கூடும் இந்நேரம்
நுண்ணிய விழிகளென விரியும் மழைக்  குமிழ்கள்
திரும்பாமல் போவோரை ஆர்ப்பரித்துக் கூப்பிடுகின்றன
வீடு திரும்ப மனமின்றி களைப்புகள் நீரில்  கரைந்தோட
குமிழ்களோடு உரையாட ஆரம்பிக்கிறேன்
சிரித்து மகிழும் நுரைக்  குமிழ்கள்
இந்நாளைக் கடந்தபடி இருக்கின்றன.

Photo Courtesy: Ravi Markande





8 comments:

ரூபன் said...

வணக்கம்
அருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நிலாமகள் said...

நுண்ணிய விழிகளென விரியும் மழைக் குமிழ்கள்//

இந்த ஒரு வரி போதும் கவிதையின் உச்சம் பெற!!

இறுதி வரியைக் கைப்பற்றிக் கடக்கப் போதுமானதாகிறது எனக்கு இந்நாள்!

வளர்ந்த வாதாம் மர இலைகளின்
மாறும் வண்ண நேர்த்தி குறித்து வியப்புறவும் நானும் உங்களுடன் மிருணா.

மிருணா said...

நன்றி திரு.ரூபன்.
உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி நிலா. வாங்க, போவோம். அப்புறம் நீங்கள் முகநூலில் இருக்கிறீர்களா?

நிலாமகள் said...



வலைப்பூவும் g+ ம் தான் இப்போதைய மைதானம் எனக்கு.

கணவர் கணக்கில் சென்று முகனூலை கண்டுகொள்வதுண்டு.

ஏன் மிருணா?

மிருணா said...

வேறு எதற்கு,Friend request கொடுக்கத்தான் தோழி. இந்த வாக்கியம் ஒரு முரண்தொடையாக இருக்கிறது, இல்லையா!

நிலாமகள் said...

:))

Kalayarassy G said...

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_29.html

மிருணா said...

நன்றி தோழி.கலையரசி. நிச்சயம்.