Friday, 13 February 2015

சொர்ணம் அம்மா நீ.

     சொர்ணம் எனும் என் அம்மாவை நான் அவளின் தாய்மை தவிர்த்த பிற குணங்களுக்காகவும் நினைவுகூர விரும்புகிறேன். அவளது மனித இருப்பு நிச்சயம் மதிக்கத்தக்கது. அதை பதிவு செய்வது என்னளவிலான ஒரு மரியாதை என நினைக்கிறேன். 

    என் இளம்வயது நினைவுகளில் அம்மா புத்தகம் படிக்கும் காட்சி ஒரு மறக்க முடியாத நினைவு. அண்ணன்களுக்கும், எனக்கும் வயது வித்தியாசம் அதிகம். ஆறு பிள்ளைகளில் கடைக்குட்டி நான். அப்போதெல்லாம் விறகடுப்புக் காலம். கடைபூட்டி அண்ணன்கள் வர இரவு பத்தரை, பதினொன்று ஆகிவிடும். அதன்பிறகு அம்மா அடுக்களையில் உட்கார்ந்தபடி தோசை சுட்டுத் தரவேண்டும். நான் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு விறகில் உருகும் அரக்குப் பிசின்கள் நீர்மமாவதையும், நெருப்பின் தழல்கள் நீலமாகவும், மஞ்சள் தழல்களாகவும் இதழ் இதழாய் எழும்பி எரிவதையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். அந்த வெம்மையும், அண்ணன்களின் சத்தமான பேச்சும், சிரிப்பும், அம்மாவின் அண்மையும், நெருப்பின் வினோத அழகும் வேறு உலகிற்கு கொண்டு செல்லும். அதன் பின் அம்மா எழுந்து அனைத்தையும் சுத்தம் செய்து, தூத்து(பெருக்கி), துடைத்து, முத்து போலக் கோலமிட்டு முடித்து ஒரு வழியாய் தாசாவுக்கு(முன்னறை) வருவாள். 


     கோவில்பட்டியில் நாங்கள் இருந்தது ஒரு அக்ரஹாரத்து தெரு. ஆனால் அங்கு எல்லாருமே குடியிருந்தோம். முன்னறையை தாசா, அதற்கடுத்த அறைளை சின்னப் பட்டாலை (பட்டகசாலையின் மரூஉ என நினைக்கிறேன்), பெரிய பட்டாலை, ரெண்டாங்கட்டு, அடுக்களை, மானவெளி (வானவெளி), சின்ன ரூம், புறவாசல், என அழைத்தோம், வீடு நீண்டு கொண்டே போகும். வீட்டின் அனைத்து அறைகளின் கதவுகளும் நேர்கோட்டில் இருப்பதால் வீட்டின் முன்னே இருக்கும் இடம் தாண்டி, நெடுஞ்சாலை தாண்டி வ.உ.சி நகர் மேலே போகும் இடத்தில் நின்று பார்த்தால் , எங்கள் சீனிவாச அக்ரஹாரத்து வீட்டின் அத்தனை அறைகள் தாண்டி, புறவாசல் கதவு தாண்டி, பின்னிருக்கும் இடம் தாண்டி தண்டவாளத்தில் ரயில் ஓடுவது கூடத் தெரியும், ரயில் இல்லாத நேரத்தில் காந்தி நகரும் தெரியும். அவ்வளவு நேர்கோட்டு வரிசை. ஆனால் அம்மாவோ அடுக்களையில் இருந்து மீண்டு தாசாவுக்கு வர குறைந்தது பதினோரு மணி ஆகும். வாழ்வின் புதிர் பாதைகள் நேர்கோட்டில் அமைவதில்லை. 


     தாசாவுக்கு வரும்போது அம்மா மீண்டும் மனுஷி ஆவாள். அன்றைய செய்தித் தாள், புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பிப்பாள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அக்கா பத்தாங்க்ளாஸ் பரிச்சைக்குப் படிக்கிறாங்க போல என எப்போதும் கிண்டல் செய்வார்கள். ஆனாலும் அம்மா தினமும் படிப்பாள். இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் அப்பா தாசாவில் அருட்பெரும்ஜோதி என்ற பெயரில் தனியார் நூலகம் வைத்திருந்தார். ஆனால் அவர் எப்போதாவதுதான் படிப்பார். ஆனால் அம்மாவோ முடிந்த நேரமெல்லாம் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பா அம்மாவுக்கோ, எங்களுக்கோ அவ்வளவு எளிதில் நூலகப் புத்தகங்களைத் தர மாட்டார். எங்கள் வீட்டு புத்தகங்களைப் பக்கத்து வீட்டில் வாங்கி அம்மா படித்த சம்பவங்களும் உண்டு. ஆனாலும் நானும் அம்மா போலவே சிறு வயதிலேயே படிக்க ஆரம்பித்தேன், அப்பா வெளியே போயிருக்கும் நேரத்தில் வேறு சாவியைக் கொண்டு படபடக்கும் மனதோடு பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். அப்பா வரும் சத்தம் கேட்டு பின்வாசலில் இருந்த ஓட்டுத் தாழ்வாரத்தின் மேல் புத்தகத்தை எறிந்து விட்டு அது சாய்தளம் என்பதால் அது விழுந்து விடாமல் இருக்க வேண்டுமே என படபடக்கும் மனதோடு தவித்திருக்கிறேன். 


    பின்னாளில் புத்தகங்களோடேயே இருப்பதற்காகவே ஆங்கில இலக்கியப் பாடம் பயின்றேன். விருதுநகரில் படிக்கும்போது ஆசை ஆசையாய் கல்லூரி நூலகத்தில் நாவல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றேன். நூலகரிடம் இருந்து யாரது என உரத்தக் குரலும், நாவல் படிக்கவா காலேஜூக்கு வந்தீங்க என்ற அதட்டலும் வந்தது , அது அனைவர் முன்னாலும் குன்றிப் போக வைத்தது. அதனால் ஆங்கில நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். படிப்பு சார்ந்தது என நினைத்து நூலகர் ஒன்றும் சொல்லவில்லை. பின்னாட்களில் கனிவோடும் பேசினார். ஆங்கில மொழியில் வாசித்ததும் உவப்பானது. இன்று வேலையும் அது சார்ந்தே ஆனது. 


    புத்தகங்களே உளப்பகுப்பாய்வு மொழியில் சொல்வதென்றால் எனது இலட்சிய அகமாகவும், order of the father ஆகவும் இருந்தது, இருப்பது, இனியுமானது. வாழ்வின் எல்லா சூழல்களிலும் புத்தகங்கள் வலிமை கூட்டும் துணையாக இருந்து வருகிறது. எனக்கே எனக்கான மகிழ்வாகவும், தற்சார்பாகவும் இருக்கிறது. என் அம்மாதான் அந்த துணையை, நான் சிறு வயதில் பார்த்த நெருப்பின் தழல்கள் ஊடே எனக்கு அறிமுகம் செய்தது. கிட்டத்தட்ட நள்ளிரவிலும், ஓயாத வேலைகளுக்குப் பின்னும் புத்தகம் படிக்கும் அம்மாவின் பிம்பம் யாருக்கு வாய்க்கும்! அது ஆழ்மனதிலும் பதிந்துபோன ஒரு இருப்பு. 2004 இல் இருந்து அம்மா படுத்த படுக்கை ஆகி விட்டாள். அவளது கால்களும், கைகளும் வளைந்து போய்விட்டன, விரல்கள் கோணி விட்டன, அந்த மெலிந்த விரல்களுக்குள்ளும், செய்தித் தாள்களையோ, மெல்லிய வார இதழ்களையோ திணித்துக் கொண்டு அம்மா படிப்பதைப் பார்க்கும் பெரும் பேறு எனக்கு வாய்த்திருக்கிறது.அம்மாவை பிற விஷயங்களுக்காக அவளின் மற்ற ஐந்து பிள்ளைகள் நினைவு கூரலாம், ஆனால் நான் அம்மாவை அவளின் விடாத வாசிப்பிற்காக நினைவு கூர்வேன். அம்மா உனக்கு என் வாழ்நாள் நன்றி. நான் உண்ணும் உணவிலும், சுவாசிக்கும் வாழ்விலும் உனது புத்தக வாசிப்பே உப்பு மற்றும் காற்று.

Monday, 2 February 2015

பேசும் பொற்சித்திரமே


அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க
மயக்கத்தில் உருளும் அப்பாவை
யாரின் கண்களையும் பாராமல்
அப்பா அப்பாவென இடைவிடாமல்
வீடு வர இறைஞ்சுவாள்
ஆட்டிற்கு  குழை பறிக்கும் வழியிலேயே
வீட்டிற்கு சாணமும் சேகரித்து விடுவாள்
களை பறித்து வீடு திரும்பும்
களைப்புற்ற அம்மாவிற்கு
கஞ்சி காய்ச்சிக் காத்திருக்கும்
சிறுமி அவள் பெரும் பொறுப்புக்காரி
ஒரு இடுப்பில் குழந்தையும்
மறு இடுப்பில் குடமும்
ஏந்தத் தெரியும்  நூதன சர்கஸ்காரி
குழந்தையை வளர்க்கும் கடமை சாம்ராஜ்யத்தின்
திணிக்கப்பட்ட மகுடத்தை ஏந்திக் கொண்டு
அரவமற்ற தெருவின் அமைதி கலைத்து
தனியே பாண்டி விளையாடும்
அவளது ஓட்டத்தின் ஏற்ற இறக்கங்களில்
தானும் சறுக்கு விளையாடிக் கொள்ளும்
மெலிந்த போன இடுப்புக் குழந்தை.
பள்ளி செல்ல கொடுப்பினை அற்று
கடந்து போகிற பைக்கட்டுத் தோழிகளைப்  பார்த்து
ஈறுகள் பளிச்சிடக்  கள்ளமின்றி கையசைக்கிறாள் 
அவளது குழந்தை முகத்தின்
கூந்தல் தூசுகளிலும்  பளிச்சிடுகிறது பொன்.